Tuesday, November 6, 2007

வான்வழி விழுந்த அடி, சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி

02.11.2007அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி 6.00 மணியளவில் வான்வழி விழுந்த அடி, எங்கள் நெஞ்சிலே விழுந்த அடியாக அனைவரையுமே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிங்கள வான்படையின் கோரத்தாக்குதல் மேற்கொண்ட குண்டு வீச்சில், வீரச்சாவினை அணைத்துக் கொண்டுள்ள என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும். அமைதியையும் மனித உரிமையையும் மதிக்கும் உலக மனித சமுதாயத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . மரணத்தை தழுவிக்கொண்ட போராளிகளுக்கு கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கங்களையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தலைவரினதும், தமிழ்மக்களினதும் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த அரசியல் துறைப் பொறுப்பாளரை கொன்றதன் மூலம், இலங்கை அரசானது தனது கொடுரமான இனவாத முகத்திரையைக் கிழித்து உலக அரங்கிற்கு தனது சுயருபத்தைக் காட்டிவிட்டது. இந்த அடி சமாதானத்துக்கு விழுந்த அடி.
சமாதான வழியிலோ, பேச்சுவார்த்தை முறையிலோ இலங்கை அரசுக்கு அக்கரை இல்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதோடு, சமாதான முயற்சிகளுக்கு சாவுமணி அடித்துள்ளது பெளத்த இனவாத சிங்கள அரசு.
இந்த அடி நிச்சயமாகச் சமாதான முயற்சிகளுக்கு நேரடியாக விழுந்த பேரடி.

பேசித் தீர்க்கச் சொல்லும் சர்வதேசம், இப்படுகொலைக்கு சொல்லும் பதில்தான் என்ன?
சமாதான முயற்சிகளுக்கு தமிழ்ச்செல்வன் அவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைகளுக்கு கைகுலுக்கி நின்ற சர்வதேச சமூகம், அவரின் மரணம் தொடர்பாக எந்த அறிக்கையை முன்வைக்கப்போகின்றது?
உத்தியோக பூர்வமாக எதை முன்வைக்கப்போகின்றது?

சமாதானப் பேச்சுக்கு நாம் எப்போதும் தயார். சமாதானக் கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன வென சர்வதேசத்தை ஏமாற்றி வரும் இலங்கையரசை சர்வதேசம் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றது
வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், அரசியல் வாதிகளிடம் மட்டுமன்றி, உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர் தமிழ்ச்செல்வன் அவர்கள். இலங்கை அரசியலில் அதிகம் பேட்டி காணப்பட்டவர் என்று சொல்லுமளவுக்கு அரசியல் ரீதியில் பிரபலமான தமிழ்ச் செல்வன் அவர்களைக் கொன்று, சமாதானத்திற்கு குழிதோண்டிய அரசு, தமிழ்ச்செல்வன் அவர்களின் கொலையை அனைத்து மக்களுக்கும் எதிரானவர் என்றும் பயங்கரவாதி என்று பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களில் செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.
சர்வதேசத்தின் விஜயங்கள் இவற்றுக்கு என்ன கூறப்போகின்றது? காத்திருப்போம்.

தமிழ்ச்செல்வன் அவர்கள் போர்க்களமாயினும் சரி, அரசியல் களமாகிலும் சிறப்புற இயங்கி, தலைவனின் தளபதியாக, வலது கையாக பலம் சேர்த்தவர். முகத்திலே புன்னகையுடன் பேச்சிலே ஒரு வீச்சுடனே தமிழினத்தை நிமிரச்செய்த திறமை அவருக்குண்டு. போராட்ட விரிதளத்தின் சகல திசையெங்கும் கால்பதித்து மூழ்கி எழுந்த செல்வன் அவர்கள்.
மிகுந்த மதிநுட்பத்துடனும், ஆளுமையுடனும், அரசியல் இராசதந்திரமுடனும் சிரிப்பு என்னும் அழகிய புன்னகை ததும்பும் முகத்துடன், சர்வதேசமெங்கும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை உலகறிய செய்த ஒரு உன்னதமான போராளி.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்
1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்
1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.
"ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.


2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
அத்தோடு மறைந்த அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த இடத்தை தனது ஆளுமையால் நிரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தை களைத் திறம்பட நடத்திய நாயகன் தமிழ்ச்செல்வன் அவர்கள்.

இந்த மாபெரும் பெரும் இழப்பால் எல்லோருடைய இதயங்களும் எமது தேசம் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சினில் எழுவதைத் தடுக்கமுடியாது. இதுபோன்ற அதிர்ச்சிகள் விடுதலையின் அவசியத்தை அடிக்கடி எமக்கு நினைவுபடுத்தி கொண்டிருக்கின்றன .

தேசிய விடுதலைப்போராட்டத்தில் இழப்புகள், இன்னல்கள் ஏற்படுவது சகஜம். இழப்புகள் எங்கே அதிகமாக இருக்கின்றதோ. அங்கே அதைத் தொடர்ந்து தாக்கதல்கள் அகோரமாய் இருந்ததை வரலாறு காட்டிவிட்டுப்போய் இருக்கின்றது.
இழப்புகளைக்கண்டு துவண்டுவிடக்கூடாது. அதைப்பற்றிக் கலங்கிக் துவண்டு கொண்டிருப்பதில் பயன் ஏதும் ஏற்படப்போவது இல்லை. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சிங்கள பேரினவாத அரசு மேலும், மேலும் தொடர்ந்து தாக்குதலகளை நடத்தத்தான் போகின்றது. குண்டுகளை போடத்தான் போகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவர்களது அத்தியாயம் முடிந்து விட்டாலும் வரலாறு தொடரவே போகிறது. தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் தேசியக் கனல் ஒளிர அதனை விடியல் முடிவை நோக்கி முன்னெடுப்பார்கள் என்பது உறுதி .அவர்களின் உயிர்த்தெழுகையில் இன்னும் ஆயிரம் பல ஆயிரம் தமிழ்ச்செல்வங்கள் உருவாகுவார்கள் என்பது உறுதி.

மாவீரர்கள் எதற்காக தங்களை விதைத்துக் கொண்டார்களோ அந்தப்போர் முனையில் இதுபோன்ற அதிர்ச்சிகள் வந்தாலும், லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், திட்டங்கள் மேலும் உற்சாகத்துடன் தொடர்ந்திட, இணைந்த கரங்கள் மேலும் பலம் பெற்றிட போராட்டம் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும்.
தலைவரின் வழிநடத்திலில் எமது விடுதலைப்புலிகளின் போரியல் சமநிலையில் புலிகளின் கைகள் ஒங்கியே இருக்கின்றன.
இழப்புகளைச் சாதனையாகக்கும் வித்தை தெரிந்த தலைவரின் கரங்களைப் பலப்படுத்த, புலம்பெயர்ந்தவர்கள் நாம் எம்மாலான வழிமுறைகளை பின்பற்றி அவற்றுக்கு உறுதுணையாய் இருப்போமாக.

தமிழீழ உறவுகளைக் காக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், தமிழர் தாயக விடுதலையே தீர்வு என்பதை முழுமையாக ஏற்று, அதற்காக ஒற்றுமையாகவும், மனஉறுதியுடனும் விரைந்து செயற்பட புலம்பெயர்ந்த தமிழர்களின் இணைந்த கரங்கள் வலுப் பெற இந்த சமயத்தில் உறுதி கொள்வோம்.

தமிழீழத் தேசபக்தர்களும், விடுதலை விரும்பிகளும் அமைதியாகத் தங்கள் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்தி இறந்த மாவீரர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

யாழ்இணைய செய்தி அலசல்

0 Comments: