[07 - November - 2007]
விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 22.10.07 இல் அநுராதபுரம் விமானத்தளம் மீது நடாத்திய தாக்குதலானது மிகப் பெரிய அழிவையும் அதிர்ச்சியையும் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது எனும் யதார்த்தத்தினை யாரும் மறுத்துவிட முடியாது. எனினும் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையென அரச தரப்பினர் தம்மைத் தேற்றிக்கொண்டனர். அத்தோடு விமானப்படை வலுவிழக்கவில்லயெனக் கூறி அதனை நிரூபிக்கும் பிரயத்தனங்களுக்காகவே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததுபோல கிளிநொச்சி மீது விமானக்குண்டு வீசப்பட்டபோது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். மேலும், ஐந்து போராளிகள் அச்சமயம் கொல்லப்பட்டனர். அது அரசாங்கத்திற்கு அரிய பிரசாரப் பரிசாக அமைந்துவிட்டது. தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்துக் கொல்லப்பட்டாரென அரச தரப்பில் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அது தவறென ஏற்கனவே சில அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. அந்தக் குண்டு வீச்சுத் தொடரில் வீடொன்று தரைமட்டமாக்கப்பட்டு சில பொதுமக்கள் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அதுபோலவே பல மாதங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்திருந்த வீடொன்று தரைமட்டமாக்கப்பட்டதுடன் அவ்வீட்டுக் குடும்பத்தினரும் முற்றாக அழிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமெடுத்தனர்.
தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை அநுராதபுரம் விமானத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்தியிருந்த தாக்குதலை ஈடுசெய்துள்ளதென்ற தோரணையில் அரச தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களும் ஒவ்வொருவராக ஒழித்துக்கட்டப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். பேரினவாத அரச தரப்பினர் இவ்வாறாக இராணுவ முனைப்பில் அதீத ஆர்வம் காட்டி மார்தட்டுவது ஒன்றும் புதிய விடயமல்ல.
அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக செயலாற்றியவராகிய லலித் அத்துலத் முதலி குண்டு வீச்சு விமானங்களில் தானும் உற்சாக மேலீட்டினால் பயணித்து வந்தவர். 1987 இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினை எதிர்த்தவர். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் விடுதலைப் புலிப் போராளிகளான புலேந்திரன், குமாரப்பா மற்றும் சிலர் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு இந்திய அமைதிகாக்கும் படையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு வரவேண்டுமென அத்துலத் முதலி அடம் பிடித்தவர். சம்பந்தப்பட்ட போராளிகள் அதனை அடியோடு நிராகரித்து எல்லோரும் சயனைட் உட்கொண்டு மரணத்தை தழுவிக் கொண்டனர். அந்த கொந்தளிப்பான நிகழ்ச்சியானது போராட்டத்துக்கு வலுவூட்டியதே தவிர மழுங்கடிக்கவில்லை.
பிரேமதாச ஆட்சிக்காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவராகிய ரஞ்சன் விஜேரத்ன, ஜே.வி.பி.யினரின் இரண்டாவது கிளர்ச்சியின் போது அவர்களில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தது போல விடுதலைப் புலிகளையும் பதம்பார்த்து விடலாமென எண்ணினார். "எனது படையை கண்டால் அவர்கள் நடுங்குவார்கள். சிறுநீர் கழித்துவிடுவார்கள், காற்சட்டைகளை நனைத்து விடுவார்கள் என்றெல்லாம் வீராப்பு பேசியவர் யாழ்ப்பாணத்தில் பரல் குண்டுகள்" அடங்கலாக கடுமையான குண்டு வீச்சுகள் நடத்துவதற்கு காலாய் இருந்தவர்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் கேணல் அனுருத்த ரத்வத்த பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டவர்.விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு கங்கணம் கட்டி நின்றவர். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழரை விடுவிக்க வேண்டும் என்பதே அவரின் தாரக மந்திரமாயிருந்தது!. இராணுவ சீருடை அணிந்து அடிக்கடி களமுனை சென்று வந்தவர். 1996 அக்டோபரில் யாழ்ப்பாணப் பாதையைக் கைப்பற்றுவதற்கு வழிசமைத்தவர். அது தொடர்பாக சந்திரிகா தலைமையில் வெற்றி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தனக்கென `ஜெனரெல்' பட்டத்தையும் தட்டிக்கொண்டார். சந்திரிகா மாமனாருக்கு அதனை மனமுவந்து வழங்கியிருந்தார்.
பின்னர் அ 9 பாதையைக் கைப்பற்றுவதற்கு ஜெனரல் ரத்வத்த மேற்கொண்ட `ஜயசிக்குறு' (வெற்றி நிச்சயம்) நடவடிக்கை 13 மாதங்களின் பின் படுதோல்வியில் முடிந்தது. அதன் பின்னரும் ஆனையிறவு முகாம் வீழ்ச்சி அடங்கலாக பல பாரிய பின்னடைவுகளை சந்திரிகா அரசாங்கம் சந்தித்தது வரலாறு. சுருங்கக் கூறின் 1994 இல் சந்திரிகா அரசாங்கம் ஆரம்பித்து வைத்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் சுமார் 6 மாத காலத்தில் முறிவடைந்தகையோடு `சமாதானத்திற்கான யுத்தம்' ஆரம்பிக்கப்பட்டதன் விளைவாகவே மேற்கூறிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அதாவது தமிழ் மக்களினதும் அமோக ஆதரவோடு தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்றவகையில் சற்று பொறுமை காத்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வேண்டுமென எண்ணவேண்டியதை விடுத்து விடுதலைப்புலிகளை இராணுவரீதியாகத் தோற்கடித்து விடலாமென்ற எண்ணமே அன்றும் மேலோங்கி நின்றது.
தமிழ்ச்செல்வன் கொலை தொடர்பான உலகளாவிய உணர்வலைகள்
தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டது விடுதலைப்புலிகளுக்கு ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. அவரின் கொலையானது சர்வதேச ரீதியில் பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. அவர் 1994 முதல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எல்லா சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்தவர் என்ற ரீதியிலும் கடந்த பல வருடங்களாக கிளிநொச்சியிலும் அடிக்கடி பல்வேறு இராஜதந்திர பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடல்கள் நடத்தியவர் என்ற ரீதியிலும் பல்வேறு மட்டங்களில் நன்கு பதியப்பட்டவர். எனவேதான் அவரின் கொலை தொடர்பான அறிக்கைகளும் அனுதாபச் செய்திகளும் ஊடகங்களில் நிறைந்து காணப்படுகின்றன.
இந்தவகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ்ச் செல்வனை நினைத்து வெகு நேர்த்தியான இரங்கல் கவிதையொன்றினை புனைந்துள்ளார். கலைஞர் கருணாநிதி காலத்துக்கு காலம் வேடம் போடுவது வழக்கமே. தற்போதைய இரங்கல் செய்தியானது தமிழ்நாடு அரசாங்கத்தின் மக்கள் தொடர்புத் துறையினால் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மீது பலத்த கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் தலைமையிலான தி.மு.க. அரசாங்கத்தைக் கலைத்துவிடவேண்டுமென மத்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார். விடுதலைப்புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதாகும். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாகையாலும் கருணாநிதி இந்திய அரசியல் யாப்பினை மீறியுள்ளார் என்பதே ஜெயலலிதாவின் வாதமாகும். இதன் காரணமாக கருணாநிதி வாலைச் சுருட்டியுள்ளாரென அறியக்கிடக்கிறது.
ஜெயலலிதாவின் எதிர்ப்பு ஒரு புறமிருக்க கருணாநிதியின் இரங்கல் கவிதை கண்டு யாரும் மயங்கிவிட வேண்டியதில்லை. ஏனென்றால் தமிழக மாநில அரசாங்கமோ மத்தியில் மன்மோகன் சிங் அரசாங்கமோ இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தை திரும்பிப்பார்ப்பது கிடையாது. எனவே கருணாநிதி மற்றும் மன்மோகன்சிங் மீது தமிழர் தரப்பினர் ஏதாவது நம்பிக்கைவைப்பதில் ஒரு வித பிரயோசனமும் இல்லை. மாறாக இந்திய இடதுசாரிகளின் குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி போன்ற முன்னணித் தமிழர்களின் ஆதரவை நாடுவதே சாலச்சிறந்ததாகும்.
அன்று முதல் எந்தவொரு அரசாங்கத்திடமும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான துணிச்சலோ, ஆற்றலோ இருக்கவில்லை. காலம் கடத்தி ஆட்சியைத்தக்க வைப்பதற்கான யுத்தமாகவே காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.
இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் என்றும் திறந்தே இருக்கின்றன என அல்லும் பகலும் கூறி வருகிறது. அண்மையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவப்பயிற்சிக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையில்;
நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வருவதே எமது குறிக்கோள் எனவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ( APRC)மூலம் இதனைத் துரிதப்படுத்தவுள்ளது என்றும் கூறியுள்ளார். இது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்கான யுக்தியே ஒழிய வேறொன்றல்ல. APRC முன் வைக்கக்கூடியதான எந்தவொரு குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்தைத் தானும் புறந்தள்ளுவதிலேயே குறியாயிருந்து கொண்டு உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கி எல்லாக் காலத்திலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.
அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான APRC யானது தனது தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பதற்கு பல தடவைகள் ஒரு மாத அல்லது இரண்டு மாத அவகாசம் கோரி வந்துள்ளது. தற்போது அதன் கதவு 2 மாதத்திற்கு முற்றாக இழுத்து மூடப்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக ஜே.வி.பி.யின் தயவை வேண்டியே அரசாங்கம் இந்த விடயத்தை ஆறப்போட்டுள்ளது. அந்தளவுக்கு அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாயுள்ளது என்பது தெளிவு.
இதனிடையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் , சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷவையும் முன்பு ரத்வத்த கூறியது போலவே தமிழரை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதே தமது நோக்கம் எனவும் அவ்வாறு தற்போது விடுவிக்கப்பட்ட கிழக்கு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து அபிவிருத்தியையும் அனுபவிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு வடக்கு மக்களையும் விடுவித்துவிட்டால் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்பது தான் மகிந்த சிந்தனை போலும். பல்வேறு தரப்பினர் இராணுவத் தீர்வை விடுத்து தமிழர் அபிலாசைகளை ஏற்று அரசியல் தீர்வு காண்பதிலேயே ஈடுபட வேண்டும் என வழங்கிய ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. கடைசியாக அண்மையில் இலங்கை வந்திருந்தவராகிய உலக வங்கியின் முகாமைத்துவ இயக்குநர் கிறேம் வீலரும் அரசியல் தீர்வையே வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளை முடித்துக் கட்டிவிடலாமென்ற நப்பாசை நாட்டை மேலும் படுகுழியில் தள்ளப்போகிறது. தமிழ்ச்செல்வன் கொல்லப்படுவதற்கு முன்னரும் காலத்துக்காலம் கிட்டு, சங்கர் போன்ற பல முக்கிய தலைவர் கொல்லப்பட்டனர். அதன் காரணமாக விடுதலைப் புலிகளின் வீரியம் குறைந்துவிட்டதென எண்ணுவது தவறு. யுத்தமானது பெருவாரியான அரச வளங்களை விழுங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, பரந்துபட்ட மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இன்னும் எத்தனை காலம் பொறுமை காப்பார்கள் என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் நிச்சயமாக வந்துவிட்டது.
-வி.திருநாவுக்கரசு-
தினக்குரல்
Wednesday, November 7, 2007
தமிழ்ச்செல்வனைப் பலியெடுத்த விமான குண்டுவீச்சும் அரசாங்கத்தின் பிரசாரமும்
Posted by tamil at 8:44 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment