Saturday, November 10, 2007

நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும்

-அருஸ் (வேல்ஸ்)-


தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது.

எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் Tactics) முற்றிலும் வேறுபட்டவை.

அரசு விடுதலைப் புலிகளின் கனரக ஆயுத வளங்களையும், படைக்கட்டமைப்பையும் அழிக்க முனையும் அதேசமயம், அதிக சிரமமற்ற, பூகோள ரீதியில் தனக்கு சாதகமான நிலப்பரப்பையும் அதிகளவில் கைப்பற்ற முனைந்து நிற்கின்றது. இந்த நிலங்களின் கைப்பற்றல்கள் தென்னிலங்கையில் பிரசாரத்திற்கு அரசிற்கு உதவக்கூடியவை.

ஆனால், விடுதலைப் புலிகளை பொறுத்த வரை அரசின் நோக்கங்களில் இருந்து தமது ஆயுத மற்றும் படைக்கட்டுமானங்களை பாதுகாத்தல், அரசின் போரிடும் வலுவை அழித் தொழித்தல், அதன் பொருளாதாரத்தை சிதைத்தல் என்ற உத்திகளின் அடிப்படையில் நகர்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் அரசினதும், விடுதலைப் புலிகளினதும் சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த போதும். மாவிலாறு தாக்குதலை தொடர்ந்தே பாரிய மோதல்கள் ஆரம்பமாகின. தற்போது பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர் நடைபெற்று வருவதாக கொள்ளப்படுகின்ற போதும் அதன் ஆரம்பப் புள்ளியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் ஆரம்பமாகிய மாவிலாற்றுச் சமரையே கொள்ள முடியும்.

மாவிலாறை கைப்பற்றிய பின்னரும் அரசின் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. கிழக்கிலங்கை குறிவைக்கப்பட்டது. அதிக படை வலு, அதிக சுடுவலுக் கொண்டு கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் கடுமையான விமானத் தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானங்களையும், கனரக ஆயுத வளங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு அடைய நினைப்பது:

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை குறைத்து அவர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது.

- சாதகமற்ற களங்களில் விடுதலைப் புலிகளை சமருக்கு இழுப்பதன் மூலம் அவர்களின் போரிடும் வலுவை அழித்துவிடுவது.

- தென்பகுதியில் தனது அரசியல் உறுதிப் பாட்டை உருவாக்குவது.

- சமதரப்பு என்ற நிலையில் இருந்து விடு தலைப்புலிகளை ஓரங்கட்டுவது.

இந்த திட்டங்களின் அடிப்படையில் தான் அரசின் நடவடிக்கைகள் முனைப்பாக்கப்படுகின்றன.

ஆனால், விடுதலைப் புலிகளின் போரியல் உத்திகள் வேறுபட்டவை. அதாவது, அரச படையினருக்கு சாதகமான களங்களை தவிர்ப்பது, அரச படைகளின் போரிடும் கூர்முனைகளை முதலில் மழுங்கடிப்பது பின்னர் முழு அளவிலான போரின் மூலம் வெற்றி கொள்வது. இவை தான் விடுதலைப் புலிகளின் உத்திகள்.

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வரும் உக்கிர சமரின் தன்மையும் அதைத்தான் பிரதிபலிக்கின்றன.

அரச படையினரை பொறுத்த வரையில் தரைப்படையில் அவர்களின் போரிடும் வலிமை மிக்க படையாக 53 ஆவது படையணியே இருந்து வருகின்றது. அதற்கு அடுத்த நிலையில் 55 படையணியும் முன்னனிப் படையணியாக உள்ளது. இந்த இரு படையணிகளும் தான் ஜெயசுக்குறு படை நடவடிக்கையின் காதாநாயகர்கள். இறுதியில் தீச்சுவாலை நடவடிக்கையில் இந்த இரு படையணிகளும் கண்ட தோல்விதான் இலங்கை இராணுவத்தின் ஒட்டுமொத்த தோல்வியாக இராணுவ வல்லுனர்களால் நோக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 53 ஆவது படைப்பிரிவு வான் நகர்வு பிரிகேட் (Air Mobile Brigade), இரு சிறப்பு படை றெஜிமென்ற், இரு கொமோண்டோ றெஜி மென்ற், சினைப்பர் பிரிவு, தொழில்நுட்ப பிரி கேட் ஆகியவற்றை கொண்ட படையணியாகும். இந்த படையணிக்கு அமெரிக்க கிறீன்பரட் படைப்பிரிவின் பயிற்சிகளும், நவீன வசதிகளும் வழங்கப்படுவதுடன், இந்த படையணியில் உள்ள ஒவ்வொரு கொமோண்டோ படை வீரனினதும் பயிற்சிகள், ஆயுதங்களுக்கு என ஏறத்தாழ 5 மில்லியன் ரூபாய்களும் செலவிடப்படுகின்றன.

இதை வலிந்த தாக்குதல் படையணி என்றும் சொல்வதுண்டு. எனினும் 53 ஆவது படையணிக்கு ஏற்படும் இழப்பு சாதாரண காலாட் படையணிகளின் இழப்புக்களை விட இராணுவத்தின் பலத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடியது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் நாள் முகமாலையில் ஆரம்பித்த சமரில் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு இந்தப் படையணியாகவே இருந்தது. அன்று 53 ஆவது படையணி கடும் சேதங்களை சந்தித்தது. ஏறத்தாழ 400 வீரர்களை இழந்ததுடன் 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் ஒக்டோபர் 11 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நடைபெற்ற சமரிலும் 53 ஆவது படையணி ஏறத்தாழ 300 வீரர்களை இழந்ததுடன், 800 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் சில நூறு படையினர் அங்கவீனர் ஆகினர்.

மேற்கூறப்பட்ட இரு முகமாலைச் சமர்களிலும் 53 அவது படையணிதான் முன்னணியில் நின்றது, ஆனால், விடுதலைப் புலிகளும் அதன் போரிடும் வலுவை அழிப்பதில்தான் ஆர்வம் காட்டியுள்ளனர். அதாவது, இந்த படையணியை அழிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை அவர்கள் ஒருபோதும் தவற விடுவதில்லை.

பெப்ரவரி 14 ஆம் நாள் மீண்டும் கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படையணியின் தலைமையகம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியதால் ஒரு லயன்ஸ் கோப்ரல் அந்த இடத்திலேயே கொல்லப்பட, புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் தொழில் நுட்ப பிரிகேட்டின் தளபதியான லெப். கேணல் ராப். நுகேரா படுகாயமடைந்தார், மேலும் லெப்.கேணல் சுமித் அத்தப்பத்து, மேஜர் ஹரேன்ரா பீரீஸ் ஆகியோரும் காயமடைந்தனர். கடுமையாக காயமடைந்த லெப். கேணல் நுகேரா பின்னர் மரணமடைந்தார்.

இந்த தாக்குதலின் போது 53 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சிறீநாத் ராஜபக்ஷவும் மற்றுமொரு அதிகாரியும் மயிரிழையில் உயிர்தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் கட்ட ஈழப்போரிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் இந்த படையணி சந்தித்த நிலையில் இராணுவத் தலைமைப்பீடம் அதற்கு உறுதுணையாக மற்றுமொரு தாக்குதல் வலுமிக்க விசேட படையணியை உருவாக்க திட்டமிட்டது.

நடந்துவரும் நான்காம் கட்ட ஈழப்போரில் 3 பிரிகேட்டுகளைக் கொண்ட 57 ஆவது படையணி உருவாக்கப்பட்டது. 53 ஆவது படையணியை தவிர ஏனைய 8 படையணிகளிலும் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சிறந்த வீரர்களுக்கு, சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு அதிக தாக்குதல் வலுமிக்க படையணியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் எஸ்.ஆர்.மனவதுகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியும் 57 படையணியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. அரசிடம் உள்ள இந்த இரு சிறந்த தாக்குதல் படையணிகளில் விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியான வன்னியின் வடக்கு முனையில் 53 ஆவது படையணியும், தெற்கு முனையில் 57 படையணியுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு வலிமை மிக்க படையணிகளுக்கு அடுத்தபடியாக விடுதலைப் புலிகள் அழிக்க நினைப்பது இராணுவத்தின் கவசப் படையைத் தான். ஒக்டோபர் 11 ஆம் நாள் முகமாலையில் நடந்த சமரில் இராணுவத்தின் கவசப்படை பேரிழப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.

அதாவது விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இராணுவத்தின் வலிமை மிக்க இந்த படையினரையும், அவர்களின் வலிமையான ஆயுத தளபாடங்களையும் அழித்தொழிப்பதில் தான் குறியாக உள்ளனர்.

இராணுவத்திற்கு அடுத்தபடியாக கடற்படையின் வலிமையான ஆயுதங்களும், படையினரும்தான் விடுதலைப் புலிகளின் குறியாக இருந்து வருகின்றது. கடந்த 15 மாதங்களில் நடைபெற்ற சமர்களில் கடற்படையினர் தமது கள முன்னனிப் படகான டோரா பீரங்கிப் படகுகளில் 07 படகுகளை இழந்துள்ளதுடன், முதன் முதலாக டோராப் படகின் மாலுமிகளும் பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு சிறு கடற் புலிகளின் படகை எதிர்கொள்வதானாலும் இரு டசின் டோரக்களை பயன்படுத்துகின்றது கடற்படை. அண்மையில் முல்லைத்தீவில் நடந்த கடற்சமரில் 23 டோராக்கள் பங்கு பற்றியது தெரிந்திருக்கும்.

16.10.06 அன்று ஹபரணையில் கடற்படையின் தொடரணி ஓய்வெடுக்கும் மையம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் சொற்ப நேரத்தில் கடற்படை சந்தித்த பேரழிவாகவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது. அத்துடன் 18.10.2006 அன்று காலை காலித்துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது.

அரசின் தற்போதைய படை ஒழுங்குபடுத்தல்களில் அதன் படைகளின் பெரும் பலம் கடற்படையின் விநியோக வழிகளில் தான் தங்கியுள்ளது. எனவே கடற்படையினரின் போரிடும் வலுவில் ஏற்படும் மாற்றம் இராணுவத்தின் போரிடும் தன்மையில் நேரடியான பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

இலங்கையின் விமானப்படையை கருதினால் கடந்த மார்ச் 26 ஆவது நாள் வரையில் அது அதிக இழப்புக்களை சந்திக்கவில்லை. தனது விமானப்படையை நவீனமயப்படுத்தும் நோக்கத்துடன் அரசு அண்மையிலும் நான்கு மிக் - 27 ரக விமானங்களை கொள்வனவு செய்திருந்தது.

மேலும் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பெருமளவிலான வான் தாக்குதல்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகளை பொறுத்த வரையில் வான்படையின் தாக்குதல்கள் போர்க்களங்களில் அதிக மாற்றத்தை உண்டு பண்ணுவதில்லை. உதாரணமாக தீச்சுவாலைச் சமர், கடந்த ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நிகழ்ந்த முகமாலைச் சமர் என்பவற்றை குறிப்பிடலாம்.

எனினும் மக்களின் உயிர், உடைமைகளுக்கும், அவர்களின் உளவியல் உறுதிகளிலும் அதிக பாதிப்புக்களை விமானக்குண்டு வீச்சுக்கள் ஏற்படுத்துவதுண்டு.

மார்ச் 26 ஆம் நாள் கட்டுநாயக்க வான் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த உளவியல் தாக்க வேறுபாட்டை மாற்றியுள்ளதுடன் இலங்கை வான்படையையும் ஒரு இக்கட்டான கட்டத்துக்குள் தள்ளியுள்ளது. வான்புலிகளின் தாக்குதல் போரில் ஒரு புதிய பரிணாமமாகக் கருதப்படுகிறது.

மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் காலித்துறைமுகம் மீதான தாக்குதல், ஹபரணையில் நடந்த தாக்குதல், கட்டுநாயக்காவில் நடைபெற்ற வான் தாக்குதல்கள் என்பன இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியவை.

அதாவது, விடுதலைப் புலிகளின் போர் உத்திகள் வேறு, அரசின் போர் உத்திகள் வேறு. அரசின் போர் நடைமுறைகள் அதனது அரசியல் நலன்களையும் சார்ந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. கைப்பற்றப்படும் பிரதேசங்கள் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்றோ அல்லது அதனை பாதுகாக்க தேவையான படைபலம் தொடர்பாகவோ கருத்திற்கொள்ளாமல் அரசியல் களத்தில் அவை சூடான செய்திகளாக்கப்படுகின்றன.

நடந்துவரும் போரில் விடுதலைப் புலிகள் அரசுக்கு போட்டியாக ஒரு சிறு நிலப்பரப்பை தன்னும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. மேலும், அரசின் வலையிலும் சிக்கி தமது படை யணிகளை சிதைத்துக் கொள்ளவுமில்லை. ஆனால், அரசின் முக்கிய படையணிகளையும், வலிமையான ஆயுத வளங்களையும், கேந்திர முக்கியத்துவமிக்க தளங்களையும், பொருளாதாரத்தையும் அழித்தொழிப்பதில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 15 மாதங்களாக நடந்து வரும் மோதல்களை கவனித்தால் இது புரியும். அதாவது தமக்கு சாதகமான களங்களில் இராணுவத்தின் போரிடும் கூர்முனைகளை அழித்துவிட்டு ஒரு பெரும் சமரை ஆரம்பிப்பது புலிகளின் திட்டமாக இருக்கலாம்.

அரசை பொறுத்த வரையிலும் இது ஒரு இக்கட்டான நிலைதான். ஏனெனில் அரசினால் வைக்கப்படும் பொறிகளில் இருந்து விடுதலைப் புலிகள் விலகி விலகிச்செல்வதும், அதன் முன்னணி படையணிகள் மற்றும் ஆயுத வளங்களை குறிவைத்து அவர்களை அழித்து வருவதும் பாரிய நெருக்கடிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.

0 Comments: