Saturday, November 3, 2007

அ'புர விமானப் படைத்தளம் மீதான தாக்குதலின் பின்னரான தென்னிலங்கை அரசியல் உணர்வுகள்

"அரசாங்கம் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. அதேவேளை, புலிகள் இயக்கம் முன்வைக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் இணங்கமாட்டாது. அவ்வாறு அரசாங்கமும் எத்தகைய நிபந்தனையையும் விதிக்கமாட்டாது. புலிகளைத் தோற்கடிப்போம் என அரசு ஒருபோதும் கூறவில்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்போம் என்றே கூறி வருகின்றது. அவர்கள் சமாதானத்திற்கு வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், புலிகளின் எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் பயந்துவிடவில்லை. சமாதானம் நீண்ட தூரத்தில் இல்லை. அது மிகவும் கிட்டிய தூரத்திலேயே உள்ளது". இவ்வாறு ஜனாதிபதியின் பிரதம ஆலோசகரும் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு 30.10.2007 அன்று அளித்துள்ள விஷேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அதே தினத்தன்று சேர் ஜோன் கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, "விரைவில் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில்; "அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் படி அரசியல் தீர்வு யோசனைகள் மூலம் சமாதானத்திற்கான சகல முனை முயற்சிகளும் எடுக்கப்படும்" எனவும் உறுதியளித்தார்.

இவ்வாறு ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு பற்றிக் கருத்துக் கூறுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவும் `நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக உள்ளது' என்ற செய்தியை சர்வதேசத்தின் காதுகளில் விழுமாறு கூறியிருந்தார். கடந்த 22.10.2007 அன்று அநுராதபுர விமானப் படைத் தாக்குதல் இடம்பெற்ற மறுதினம் வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹோகண "அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது" எனக் கூறி இருந்தார்.

ஜனாதிபதியும் அவரது கொள்கை வகுப்பாளர்களும் வெளியிட்ட மேற்படி கருத்துகள் இலகுவில் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. ஏனெனில், இவர்கள் வெளியிட்ட கருத்துகளுக்குரிய காலச் சூழலை வைத்தே நோக்க வேண்டி உள்ளது. அதாவது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் யால பகுதியிலும் அநுராதபுரத்திலும் இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்பே மேற்படி பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு சமாதானம் பற்றிய கருத்துகள் அரசாங்கத்தின் மேல் மட்டத்திலிருந்து வெளிவந்திருப்பது கவனத்திற்குரியதாகும். இத்தகைய கருத்துகள் விரிவடைந்து செயல்பூர்வமாக நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகத்திற்கும் கேள்விக்குமுரிய ஒன்றாகும். ஆனால், கிழக்கின் மீட்பு, கப்பல்கள் மூழ்கடிப்பு போன்ற வெற்றி விழாக்களுக்கும் யுத்த முரசறைதல்களுக்கும் பின்பு இவ்வாறு கருத்துரைத்திருப்பது கவனத்திற்குரிய ஒன்றாகும். ஆனால், அவற்றை வைத்து மிகைப்படுத்தப்பட்ட வகையில் விடயங்களை அணுகவும் முடியாது.

சர்வகட்சி மாநாடு என்பது பொய்யாய் கனவாய் பழங்கதையாகி ஒரு மூலையில் ஒதுக்கிவைக்கப்பட்டமை யாவரும் அறிந்த ஒன்றேயாகும். எனினும், ஜனாதிபதியின் உரையையும் ஏனையோரின் கருத்துகளையும் காணும்போது, அந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஏதோ வகையில் மருந்து மாத்திரை வழங்கும் முயற்சி இடம்பெறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றாலும் முழுமையாகவும் சுயமாகவும் சர்வகட்சி மாநாட்டின் மூலம் எழும்பி நடக்க முடியுமா என்பதும் அப்படி நடந்தாலும் அரசியல் தீர்வு என்ற சாதனையை நிகழ்த்த முடியுமா என்பதும் கற்பனைக்கு அப்பாலான விடயமாகவே காணப்படுகின்றது.

ஏனெனில் யுத்தத்தின் மூலம் பயங்கரவாதம் எனக் காட்டப்படும் தேசிய இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே பேரினவாதச் சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அண்மைய அநுராதபுரத் தாக்குதலானது இராணுவத் தீர்வாளர்களுக்கு எதிர்மாறான செய்தியையே வழங்கியுள்ளது. அதனால், அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ள பேரினவாத யுத்தப் பிரியர்கள் தாக்குதலின் தீவிரத்தையும் இழப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதனை ஒரு தற்காலிகப் பின்னடைவு என்றே சொல்லிக்கொள்கின்றார்கள். இவ்வார முற்பகுதியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நேர்காணலின் போது வெளியிட்ட கருத்துகள் இராணுவ முனைப்பையே சுட்டிநின்றன. முன்பு போன்று வீராப்புடன் அவரால் பேசமுடியாத போதிலும் வடக்கின் மீதான தாக்குதல்கள் தொடரும் என்ற தொனிபடவே கருத்துரைத்தார். அதேவேளை, அரசியல் தீர்வை மறுக்காது வடக்கு, கிழக்கின் நிலைபற்றியும் ஒருவகை இராணுவக் கண்ணோட்டத்துடனேயே பதிலிறுத்தார்.

அவ்வாறு தான் ஜே.வி.பி.யும் அநுராதபுரத் தாக்குதல் பற்றி வெளியிட்ட ஒரு அறிக்கையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது. அந்த அறிக்கையில், புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியது. ஆனால், ஏற்பட்ட இழப்புகளுக்கு எவ்வித பதிலையும் கூறத் தயாராக இல்லை. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் யுத்தப்பாதையில் செல்லுமாறு தூண்டுதல் கொடுத்து வந்த ஜே.வி.பி., தனது தவறான கொள்கையின் விளைவுகளுக்கு உரிய பதில் கூறமுடியாத கையறு நிலையில் உள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையும் ஊழல் மோசடியும் தான் பொருட்களின் விலை உயர்வுக்கும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புக்கும் காரணம் எனக்கூறி வருகிறது ஜே.வி.பி.. ஆனால், தொடரும் யுத்தமும் அதற்கு ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாக்களும் வாழ்க்கைச் செலவுக்கு ஒரு காரணம் என்பதைக் காண ஜே.வி.பி.மறுக்கும் விந்தையைக் காணமுடிகிறது.

உண்மையில், ஜே.வி.பி.இரட்டை வேடம் போட்டு நிற்கிறது. இனப்பிரச்சினையில் யுத்தம் வேண்டும் என்கிறது. அரசாங்கத்தை தூண்டி ஆதரிக்கிறது. அதேவேளை, பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சம்பள உயர்வுப் பிரச்சினையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் சார்பாக நிற்பது போன்று காட்டிக் கொள்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு பிரச்சினையிலும் சந்தர்ப்பவாதமாகவும் இரட்டை அரசியல் வேடத்துடனும் நடந்து கொள்வதையே தனது நிலைப்பாடாக ஜே.வி.பி.கொண்டுள்ளது.

மற்றொரு பேரினவாத வெறிகொண்ட துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்திற்கு யுத்த உச்சாடனம் ஓதிவரும் கட்சியாகும். அண்மைய நாட்களில் அவர்கள் உச்சத்தொனியில் முழக்கமிடவில்லையாயினும், இராணுவத் தீர்வு பற்றிய அவர்களது நிலைப்பாடு எவ்வகையிலும் குறைந்து விடவில்லை. அவர்களது வீச்சு பெருமளவிற்கு குறைந்து காணப்படுவதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகை கொண்ட ஆடம்பரக் கார்கள் பெற்றமையும் விற்பனை செய்த விவகாரம் அம்பலத்திற்கு வந்தமையுமாகும். அவ்விடயத்தில் இடம்பெற்ற விவாதங்களும் விமர்சனங்களும் பௌத்த துறவற வாழ்வின் இலட்சணத்தை பொதுமக்கள் கண்டு கொள்ள வைத்தது. ஒரு புறத்தில் யுத்த மனோ நிலையை மக்களுக்குப் போதித்துக் கொண்டு அதன் மறைவில் துறவறத்திற்கு அப்பாலான ஆடம்பர வாழ்வை வாழ்ந்து கொள்வதை மக்கள் தரிசிக்கும் நிலை உருவாகியது. இந்நிலை அக்கட்சிக்குள்ளும் பௌத்த மத உயர் பீடங்களிலும் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளமை ஹெல உறுமயவைப் பாதித்துள்ளது.

இவ்வாறு யுத்தப் பேரிகை முழங்கி வந்த பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் மத்தியில் தளர்வும் சோர்வும் காணப்படுகின்றன. அநுராதபுரத் தாக்குதலும் இழப்பும் இராணுவத் தந்திரோபாயத்தில் மட்டுமன்றி பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுநூற்றி அறுபது கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எடுத்துக் கூறியுள்ளது. மேலும், இழந்த விமானங்கள் உலங்கு வானூர்திகளுக்கான புதிய கொள்வனவுக்கு எத்தனை ஆயிரம் கோடி செலுத்தப்பட வேண்டி வருமோ என்பது பொருளாதாரத்தில் பலத்த இழப்பாகவே இருக்கப்போகின்றது. இதற்கான விலையைச் செலுத்தப் போவது இந்நாட்டு மக்களாகவே இருப்பார்கள். வாய்ப்புகளும் வசதிகளும் பெற்ற பெரு முதலாளிகளும் பண முதலைகளும் தமது பைகளில் இருந்து கோடி கோடியாகக் கொடுக்கப்போவதில்லை. சாதாரண மக்களிடம் இருந்து கறந்து கொள்ளும் நிகழ்வே மேன்மேலும் அதிகரிக்கப்போகின்றது. அதற்காக பயங்கரவாதத்தினதும் நாட்டின் இறைமையினதும் பெயரால் மக்கள் தமது இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளே ஆளும் தரப்பின் தலைமைகளிடமிருந்து வரப்போகும் செய்தியாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதியும் வாணிப நுகர்வோர் அமைச்சரும் கோதுமை மா முதல் பால்மா வரையான சகல பொருட்களினதும் விலை உயர்வுகளை நியாயப்படுத்தி வருவதைக் காணமுடிகின்றது. இதே பாதையில் எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்திற்குப் பின்பும் பொருட்களின் விலைகள் பலமடங்காக உயர்த்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது. அதன் மூலமே இழக்கப்பட்ட விமானங்கள், உலங்கு வானூர்திகள் வாங்க முடியும்.

இத்தகைய ஒரு சூழலிலேயே யுத்தத்திற்கான குரலைச் சிறிது தாழ்த்தியும் அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை, சமாதானம் பற்றி சற்று உயர்த்தியம் கூறப்படுகிறது. இதனை யதார்த்தம் கூறும் உண்மைகளைக் கண்டு கொண்டதன் விளைவு என்று கொள்ள முடியுமா? அல்லது இந்தியாவையும் ஏனைய சர்வதேச சமூக நாடுகள் என்பனவற்றைச் சமாளிக்கும் ஒரு தந்திரோபாயம் என்று காண முடியுமா? இவ்வாறு சிந்திப்பதற்குக் காரணம், ஆளும் பேரினவாத முதலாளித்துவ வர்க்க சக்திகள் இதுவரை பட்டறிவுகளுடன் கூடிய யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு நீதியான நியாயமான வழிகளில் செயல்பட்டது கிடையாது என்பதனாலேயே ஆகும்.

கடந்த முப்பது வருடகால தேசிய இனப்பிரச்சினையின் யுத்த களத்திலே வெற்றி, தோல்விகள், இழப்புகள், அழிவுகள் இரு தரப்பிலும் மாறி மாறி வந்துபோய் உள்ளன. ஆனால், இறுதி வெற்றியை அல்லது தோல்வியை எவராலும் தமதாக்கிக் கொள்ள முடியவில்லை. கிழக்கின் மீட்பு, கப்பல்கள் மூழ்கடிப்பு என்பனவற்றின் மூலம் யுத்தகளப் பந்து புலிகள் தரப்புக்கு அரசாங்கத் தரப்பால் உதைத்து அனுப்பப்பட்டது. அதன் மூலம் தாம் வெற்றிபெற்று நிற்பதாகக் கூறிக்கொண்ட நிலையில் இருந்த அரசாங்கப் பக்கத்திற்கு யால, அநுராதபுரத் தாக்குதல்கள் மூலம் புலிகள் பந்தை மறு உதைப்புக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.இந்நிலையில், ஜனாதிபதியும் அரசாங்கமும் அப்பந்தை அரசியல் தீர்வுக்காக நகர்த்தப்போகிறதா? அல்லது இராணுவத் தீர்வுக்கு உதைக்கப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்பதை விட மக்களுக்கு வேறு மார்க்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றே கூறுதல் வேண்டும்.

காலகண்டன்


thinakkural

1 Comment:

கானா பிரபா said...

பதிவுக்கு நன்றி