Sunday, November 25, 2007

இதயச்சந்திரன் எழுதிய ''மாவீரர் தின உரை குறித்து எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகள்''

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போர் ஆரம்பமாகி 30 வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருட மாவீரர் தின உரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய, சுதந்திர தேச உருவாக்கத்திற்கான விடுதலைப் போராட்டம் விரைவு படுத்தப்படுமென்கிற கருத்து நிலையானது இறுக்கமடைந்து அரசியல் வடிவம் பெறப் போகிறது.

அரசுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும், வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிலையை பலப்படுத்த மேற்கொள்ளும் உத்தியெனவும் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே மாவீரர் தின உரை வரையப்படலாம்.

தற்காப்புத் தளத்திலிருந்து விடுபட்டு, தாக்குதல் நிலைக்குத் தம்மை முழுமையாக இணைக்கும் பொழுதே, தேசவிடுதலைப் போரின் இறுதிப் பரிமாண நிலையை விடுதலைப் புலிகள் அடைவார்கள்.

அந்த எல்லைக் கோட்டில் தரித்து நின்றவாறே, வருகிற 27 ஆம் திகதி, சர்வதேசத்திற்கும் சிங்களத்திற்கும் இறுதியான செய்தி சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உதிர்ந்து போன சர்வதேச வலைப்பின்னலிற்குப் பிரதியீடாக, புதிய வலைகளை விடுதலைப் புலிகள் மீது போர்த்துவதற்கு, மேற்குலகிடம் கைவசம் ஏதுமில்லை.

தடை, நிதி முடக்கம், கைதுகள் யாவும் நடந்தேறி விட்டன.

இனி சிங்களத்தை பலப்படுத்துவதே அவர்களுக்கிருக்கும் இறுதிப் பணி.

ஜெயசிக்குறு சமரின் போது 32 நாடுகளுக்கெதிராகப் போராடினோமென விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் முன்பு கூறியிருந்தார்.

இனிவரும் யுத்தம், 50 நாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கலாம்.

எரித்திரிய மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க, ரஷ்யாவுடன் இணைந்து பல வல்லரசுகள் எதியோப்பியாவிற்கு சகல உதவிகளையும் வழங்கின.

தனித்து நின்று, தமது மக்களின் பெரும் பங்களிப்புடன், எதிரியை விரட்டியடித்த வரலாற்றினை இன்று நினைவிற் கொள்வது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

அஸ்மாரா விமானப் படைத்தளத்தை சுற்றிவளைத்தும், இலட்சக்கணக்கான எதியோப்பிய இராணுவத்தினரை சிறைப்படுத்தியும் வீரம் செறிந்த போரினை எரித்தியர்கள் நிகழ்த்திக் காட்டிய வரலாறு மறக்கப்படக் கூடிய விடயமல்ல.

அதாவது, எதிரியால் பலமான நிலையாகக் கருதப்பட்ட பலவீனமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றினை வெற்றி கொள்வதனூடாகவே இச்சமர்கள் வெல்லப்பட்டன.

எரித்திரியப் போராட்டத்திலிருந்து பெறப்படும் படிப்பினைகள், தாயக, புலம் பெயர் தமிழ் மக்களின் உளவுரணை உறுதியாக்கும் என்பதனை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

உலகமே தமிழ் மக்களிற்கு எதிராக எழுந்து நிற்கிறது என்கிற மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டுமாயின் எரித்தி ரிய வரலாற்றினை ஒரு தடவை உற்றுப் பார்த்தால், கலங்கல் நிலை தெளிவடையும்.

தற்போது வருகிற மாவீரர் தின உரையில் உள்ளடக்கப்படப் போகும் விடயங்கள் குறித்து பல ஊகங்களும், எதிர் கூறல்களும் பல ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

தேசியத் தலைவரால் தனியரசுப் பிரகடனம் செய்யப்படலாமென்கிற ஊகத்தை தென்னிலங்கை ஆய்வாளர்களும், இறுதிப் போர் ஆரம்பமாகுமென்ற சர்வதேசத்தை நோக்கிய அறிவித்தல் முன் வைக்கப்படலாமென வேறு பகுதியினரும் கணிப்பிடுகிறார்கள்.

அதேவேளை சென்ற மாவீரர் தின உரையில் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்படலாமென்றும் பேசப்படுகிறது.

புலம் பெயர் நாட்டில் வசிக்கும், மூன்றாவது பார்வை கொண்ட அறிவுஜீவிகள் மத்தியில், சர்வதேசத்தை சீண்டக் கூடிய வகையில் அவ்வுரை அமையாமல் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடருமென்கிற பொதுமைப்படுத்தப்பட்ட செய்தியே சொல்லப்படலாமென்ற எதிர்பார்ப்பும் உண்டு.

பெரும்பான்மையான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, அவ்வுரையில் தெளிவாக வெளிப்படுத்தப்படுமென்பதே சகல புலம்பெயர் மக்களிடையே நிலவும் ஒருமித்த கருத்தாகவுள்ளது.

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் இழப்பானது, தாயக, தமிழக, புலம்பெயர் மக்களிடையே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு விடுதலையை நோக்கிய அதிகரித்த மனவெழுச்சியை உருவாக்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு மாவீரர் உரையில் மிக அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டப்பட்ட தமிழக, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவின் அவசியம் பற்றிய கருத்து நிலை இன்று நிஜமாவதைக் காணலாம்.

அவ்வுரையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் செயலாக்கமடைந்துள்ளன. அதன் நீட்சிப் பரிமாணத்தில் அடுத்த கட்டத்திற்குரிய செய்தி சொல்லப்படுகையில், கடந்த ஓராண்டு காலத்து நிகழ்வுகளின் மதிப்பீடுகளும் உள்ளடக்கப்படும்.

அதேவேளை இலட்சியம் நோக்கி நகர்த்தும், மூலோபாயத்தின் முக்கிய பாகங்களை, வரும் மாவீரர் தின உரை வெளிப்படுத்துமா இல்லையேல் போர் வெறிகொண்ட பேரினவாதத்துடன் இனிப் பேசித் தீர்ப்பதற்கு ஒன்றுமில்லையென சர்வதேசத்திற்கு கூறுமாவென்பதை களநிலையே தீர்மானிக்கும்.

பேச்சுவார்த்தை நடத்தும்படி கூறியவாறு, பேரினவாதத்தை இராணுவ மயமாக்கும் சமாதானக் காவலர்கள், தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சர்வதேச மட்டத்தில் தீவிர பரப்புரை மேற்கொள்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மேடைக்கு அழைப்பதற்கே, விடுதலைப் புலிகள் மீது படை நடவடிக்கை மேற்கொள்வதாக பேரினவாதம் தமது பக்க நியாயத்தை சர்வதேசத்தின் முன் வைக்கிறது.

ஆயினும் இனப்பிரச்சினை குறித்த தீர்வுத் திட்டமொன்றை முன் வைக்குமாறு அழுத்திக் கூறுவதற்கு சர்வதேசத்தால் முடியவில்லை.

அவ்வகையான தீர்வொன்றை ஒருமித்த குரலில் கூறுவதற்கும் சிங்களத் தேசம் தயாரில்லை.

சமாதானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி, கிழக்கை ஆக்கிரமித்த பேரினவாதத்தை கண்டிக்காமல், இன்னமும் பல இடங்களை ஆக்கிரமிக்கும்படி ஆயுதங்களை வழங்கியவாறுள்ளது சர்வதேசம்.

இந்நிலையில் சர்வதேசமோ இல்லையேல் சிங்கள தேசமோ நியாயபூர்வமான அரசியல் தீர்வு எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லையென்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோக கப்பல்கள் அழிக்கப்பட்டு, கிழக்கின் கட்டுப்பாடு அரசிடம் விழுந்ததை பெருமையாகக் கூறிக்கொள்ளும் மேற்குலகத்திற்கு, தீர்வுத் திட்டத்திலோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திலோ எதுவித அக்கறையுமில்லை என்பது புரியப்பட வேண்டிய விடயமாகும்.

ஐ.நா.வின் மனித உரிமை சங்கங்கள் இன அழிப்பினை ஆவணங்களில் சாட்சிப்படுத்த ஓய்வடைந்து விட்டன.

கருணா விவகாரமே அவர்களிடம் உள்ள மனித உரிமை மீறல் குறித்த துரும்புச் சீட்டாக மாறிவிட்டது.

அலன் றொக், ஜோன் ஹோம்ஸ் மற்றும் லூயில் ஆர்பர் தெரிவித்த விடயங்கள் பற்றி எந்த சர்வதேச காவலர்களும் பேசுவதில்லை.

தமது பிராந்திய நலன் முக்கியத்துவம் பெறுவதால் அவ் அறிக்கைகளை உயர்த்திப் பிடித்து வேண்டாத சிக்கலிற்குள் அகப்படுவதை தவிர்த்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வருட காலத்துள், மிக மோசமான அழிவுகளையும், இடம் பெயர்வுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.

கைதுகள், காணாமல் போதல், படுகொலைகளென அராஜகத்தின் உச்ச நிலை முழுமையடைந்துள்ளது. முன்னெப்பொழுதும் நிகழாத, வக்கிர வெளிப்பாடுகளும் பேரினவாதக் கொடூரங்களும் இவ்வாட்சியிலேயே நடந்தேறியுள்ளது.

பாதிப்படைந்து வீழ்ந்தவர் மீது மாடேறி மிதித்தது போல, பயங்கரவாத மென்கிற பரப்புரையை சர்வதேசம் உயர்த்திப் பிடிக்கிறது.

ஆயினும் ஒருமித்த குரலில், ஓரணியில் திரளும் அடக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வலைகள், சகல பேரினவாத இரும்புத் திரைகளையும், வல்லாதிக்கச் சக்திகளின் வலைப் பின்னல்களையும் உடைத்தெறியக் கூடிய மகா சக்தியினை உருவாக்கியுள்ளது.

ஆகவே, தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெகுஜனப் பங்களிப்பு குறித்த புதிய பரிமாணத் தளங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய காலத்தின் அவசியத்தை உணர்த்துதல், ஒவ்வொரு தேசிய உணர்வாளரின் வரலாற்றுக் கடமையாகிறது.

உணர்வுத் தளத்தில் ஒன்றிணைந்தாலும், விடுதலைப் பாதையிலிருந்து விலகி, அந்நியமாகி, மதில் மேல் பயணம் செய்வது, அடக்கு முறையாளர்களிடம் சரணடைவதற்கே வழி கோலும்.

இலக்கு நோக்கிய பயணத்தை வழி நடத்தும் சகல மூல, தந்திரோபாய உத்திகளும் அரசியல் வடிவம் பெறும் உரையே மாவீரர் தினச் செய்தியாகும்.

மக்களின் அவாவினை பட்டவர்த்தனமாக வெளிச்சமாக்கும் போக்கு, சில குறுகிய கால பின்னடைவுகளையும் உருவாக்கலாம்.

இம்மாவீரர் தின தலைமை உரை, சிங்கள தேசத்தாலும், சர்வதேசத்தாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதை கவனித்தல் வேண்டும்.

பொதுவாகவே, எதிரியின் எதிர்வினைச் செயற்பாட்டுத் தயாரிப்பிற்கான கால அவகாசத்தை வழங்குவது போன்ற மயக்க நிலையை கடந்த பல உரைகள் ஏற்படுத்தியிருந்தன.

ஆகவே, இவ்வருட மாவீரர் தின உரையானது இறுதி மையத்தின் அரசியல் பரிமாண ஆழ அகலங்களை விரிவாக முன் வைக்குமென நம்பலாம்.

நன்றி
வீரகேசரி

0 Comments: