Sunday, November 11, 2007

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?

[11 - November - 2007]

-விதுரன்-
வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன.

வடக்கில் புலிகளின் பலமறியாது அரசு, அவசர வெற்றிகளுக்காக படைகளை நகர்த்துகிறது. வன்னியில் முன்னரங்க காவல் நிலைகளிலும் சரி யாழ். குடாநாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலிலும் சரி ஒவ்வொரு பாரிய படைநகர்வும் படையினருக்கு பெருந்தோல்வியாகவே முடிவடைகிறது.

வன்னியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வவுனியா முதல் மன்னார் வரையான முன்னரங்க நிலைகளில் தினமும் கடும் மோதல்கள் நடைபெறுகிறது. புலிகளின் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துக் கொண்டு அவர்களின் பகுதிக்குள் நுழைந்துவிட படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டுவிட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மடுவை கைப்பற்றிவிட பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் புலிகள் மிக இலகுவாக முறியடித்து விட்டனர். ஒவ்வொரு தடவையும் படையினரை ஒவ்வொரு விதமாகத் தாக்கி பலத்த இழப்புகளுடன் பின் வாங்கச் செய்தனர்.

மடுவைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியடையவே, மன்னாரிலிருந்து கரையோரமாகவும் கிளிநொச்சி ஊடாகவும் பூநகரிக்குச் சென்று மன்னாருக்கும் யாழ்.குடா நாட்டுக்குமிடையில் தரைவழிப் பாதையை திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விடத்தல் தீவு நோக்கிய பாரிய படைநகர்வு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது. பல தடவைகள் இதற்காக பாரிய நகர்வுகளை மேற்கொண்டும் ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புகளுடன் படையினர் பின்வாங்கினர்.

கிழக்கில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையான பெரும் பிரதேசங்களில் பாரிய படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது புலிகள் கள நிலைமைக்கேற்ப தந்திரமாகப் பின்வாங்கி படையினரை அகலக் கால் வைக்கச் செய்து அவர்களை எங்கும் பரந்துபடச் செய்தனர். இதனால், தேவையற்ற பெரும் பகுதிகள் உட்பட பெரும் பிரதேசங்களில் படையினர் பெருமளவில் நிலைகொள்ள தற்போது அவர்களுக்கு பெரும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கிழக்கைப் போன்றே வடக்கிலும் பெரு வெற்றிகளைப் பெற்றுவிடலாமென அரசு கருதுகிறது. கிழக்கில் களநிலை மரபுவழிச் சமருக்கு சாதகமில்லையென்பதையும் கிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தும் நோக்கிலேயே அங்கு படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்துவதையும் உணர்ந்த புலிகள், தங்கள் ஆட்களுக்கும் ஆயுதங்களுக்கும் சேதங்களேற்படுவதை தவிர்த்தனர்.

ஆட்களையும் ஆயுதங்களையும் வன்னிக்கு பாதுகாப்பாக நகர்த்துவதற்காக அவர்கள் அங்கு தற்காப்புச் சமரில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால் அரசோ, கிழக்கை தக்கவைக்க புலிகள் கடுமையாகப் போரிடுவதாகக் கருதியது. இந்தக் காலப்பகுதியில் தற்காப்புச் சமரைத் தொடர்ந்தவாறு கனரக ஆயுதங்கள் அனைத்தையும் மிகவும் பாதுகாப்பாக அவர்கள் வன்னிக்கு நகர்த்தியதுடன், அதிக சேதமின்றி ஆட்களையும் அங்கு நகர்த்தியிருந்தனர்.

இதனை உணராத அரசு கிழக்கைப் போல் வடக்கையும் விரைவில் கைப்பற்றிவிடுவோமென தொடர்ந்தும் சூளுரைத்தவாறு அங்கு பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் பலத்த சேதங்களைச் சந்திக்கின்றதே தவிர, படை நகர்ந்ததாகத் தெரியவில்லை.

கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது வடக்கிலும் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டுவோமென அரசு கூறிவந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முகமாலை மற்றும் பளையை முழுமையாகக் கைப்பற்றிவிடும் நோக்கில் மிகப்பெரும் படையெடுப்பை மேற்கொண்டது. ஆனால், இந்தப் படை நடவடிக்கை ஆரம்பமான செய்தி வெளியுலகிற்கு தெரிய முன்னரே அந்தப் படை நடவடிக்கை பெரும் தோல்வியைச் சந்தித்தது.

முகமாலையில் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறிய படையினருக்கு புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனாலும், படையினர் சந்தேகப்படாதளவிற்கு கடும் மோதலில் ஈடுபடுவது போல் பாசாங்கு செய்த புலிகள், குறிப்பிட்ட சில கிலோமீற்றர் தூரம் வரை பின்வாங்கவே டாங்கிகள் சகிதம் படையினர் பெருமெடுப்பில் முன்னேறினர்.

இதன் மூலம் பெரும் பொறியொன்றுக்குள் பெருமளவு படையினரைச் சிக்கவைத்த புலிகள் அதன் பின் நடத்திய அகோர தாக்குதலில் படையினர் அதிர்ந்து போயினர். சில நிமிட நேரத்தில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டனர். மிக அதிகமானோர் படுகாயமடைந்தனர். டாங்கிகள் மற்றும் கனரக வாகனங்களை கைவிட்டு விட்டு பின்வாங்கத் தொடங்கினர்.

தாங்கள் பெரும் பொறியொன்றுக்குள் சிக்குண்டதை சில மணிநேரத்தில் உணர்ந்து கொண்டனர். ஆனால், அதற்கிடையில் 175 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 400 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைய, இரண்டிற்கும் மேற்பட்ட யுத்த டாங்கிகளும் கனரக வாகனங்களும் புலிகள் வசம் செல்ல, படையினர் பழைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.

முகமாலையில் விடுதலைப்புலிகள், பாரிய தாக்குதல் முறியடிப்புத் திட்டத்துடன் எவ்வேளையிலும் மிகவும் தயாராயிருப்பதை பலத்த அடியின் பின்னர் படைத்தரப்பு உணர்ந்து கொண்டது. பாரிய போர்முனைகளில் முன்னணியில் செயற்பட மிக விஷேட பயிற்சிகளைப் பெற்ற கமாண்டோ படையணியின் பெரும் பகுதி இந்தச் சமரில் அழிக்கப்பட்டது. சில மணிநேரத்தில் மிகப் பேரிழப்பென்பதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பட்டாலியன் மீண்டும் களமுனைக்குத் திரும்ப முடியாதளவுக்கு படுகாயமடைந்தது.

இந்தப் பெருந்தோல்வி முகமாலை பகுதியில் மற்றொரு பாரிய படை நகர்விற்கு படையினரை இட்டுச் செல்லவில்லை. எனினும், இந்தப் பெருந்தோல்வியைச் சந்தித்த ஒரு வருடத்தின் பின் கடந்தவாரம் படையினர் இந்தப் பிரதேசத்தில் மீண்டுமொரு முறை பெருந் தாக்குதலொன்றை நடத்தினர். முகமாலையை முழுமையாகக் கைப்பற்றுவதே இந்தப் பாரிய படைநகர்வின் நோக்கமாகும்.

இதன்மூலம் புலிகளுக்கு பெரும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்துவதுடன், முன்னரங்க நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும்போது புலிகளால் அந்தப் பிரதேசத்தில் உடனடியாக பெருந்தாக்குதலை ஆரம்பிக்க முடியாதவாறு செய்வதும் அவர்களது எண்ணமாயிருந்தது.

குடாநாட்டின் மீது புலிகள் எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கவிருந்ததால் அதனை முறியடிக்கும் நோக்கில் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டு புலிகளின் பாரிய தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு கூறியது. கடந்தவருடம் முகமாலையில் ஏற்பட்ட பெருந்தோல்வியை கருத்தில் கொண்டு இந்தத் தடவை படைத்தரப்பு தாக்குதல் திட்டமொன்றைத் தீட்டி அதற்கேற்ப மிகவும் எச்சரிக்கையாக நகர்ந்தது.

தங்கள் பிரதேசத்திற்குள் நுழைந்த படையினரை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற அனுமதித்தே புலிகள், அதன் பின் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டதால் அவர்களது கனரக ஆயுதங்களின் தாக்குதல் கடுமையாக இருக்காதென எண்ணிய படைத்தரப்புக்கு புலிகளின் கடும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஷெல்களும் மோட்டார்க்குண்டுகளும் மழைபோல் பொழியவே படையினர் தடுமாறிவிட்டனர்.

கண்ணிவெடிகள், மிதிவெடிகளை மிக நுட்பமாக புதைத்திருந்த புலிகள், முதலில் அவற்றை வெடிக்கச் செய்யவில்லை. முன்னேறி வந்த படையினரை நீண்ட தூரம் நகரவிட்டு அதன் பின் அவர்கள் மீது ஒரே நேரத்தில் பலத்த ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மழைபோல் நடத்தவே படையினர் பின்வாங்கி ஓடத்தொடங்கினர்.

படையினர் பின்வாங்கிச் செல்லத் தொடங்கியபோது ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதலை தீவிரப்படுத்திய புலிகள், கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை வெடிக்கச் செய்யவே, அதில் பெருமளவு படையினர் சிக்கி படுகாயமடைந்தனர். பின்வாங்கிய படையினர், படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பின்னர் புலிகளுடன் கடும் சமர் புரிய வேண்டியிருந்தது.

அதிகாலை 5 மணியளவில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியிலிருந்து முன்னேறிய படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பால் பலத்த இழப்புகளுடன் காலை 8 மணியளவில் பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். கடந்த வருடம் ஏற்பட்ட பேரிழப்புகளின் அனுபவத்தால் இம்முறை இழப்புகளை சற்று குறைத்துள்ளனர். 11 படையினர் கொல்லப்பட்டும் 103 பேர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பு கூறுகிறது.

ஆனால், 68 படையினர் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்ததுடன், 60 படையினர் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். புலிகளின் பலம் தெரியாது மேற்கொள்ளப்பட்ட தவறான படைநகர்வென ஐக்கிய தேசியக்கட்சியும் பலத்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை எதேச்சையான ஒன்று. ஆனாலும், அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலால் ஏற்பட்ட பேரிழப்பை மறைத்து படையினரதும் தென்பகுதி மக்களதும் மனோபலத்தை அதிகரிக்க அரசு மிகப்பெரும் பிரசாரத்திலீடுபட வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டது.

அதேநேரம், அநுராதபுரம் தாக்குதலுக்கு பதிலாக வடக்கில் எங்கேயாவது பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டு பெருவெற்றிபெற்று படையினரின் ஆற்றலை நிரூபிக்க முயன்ற அரசு, மீண்டும் முகமாலையில் பெருந்தோல்வியைத் தழுவியதன் மூலம் புலிகளின் ஆற்றலை நிரூபிக்க இடமளித்துவிட்டது. இதில் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்பானது வடக்கே உடனடியாக பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு படையினரைத் தள்ளியுள்ளது.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப்போன்ற இந்தச் சிறிய நிலப்பரப்பினூடாக புலிகளை முகமாலையிலிருந்து பின்நகர்த்துவதென்பது சாத்தியப்படாததொன்றென படையினர் உணரத்தொடங்கியுள்ளனர். முகமாலையில் இந்தப் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்ட போது, அது வெற்றிகரமாகத் தொடர்ந்தால் யாழ். கடலேரியூடாக நகர்ந்து பூநகரிக்குள் தரையிறங்கவும் படையினர் திட்டமிட்டிருந்தனர்.

ஒருபுறம் முகமாலையூடாக பளைக்கு முன்னேறும் அதேநேரம், மறுபுறத்தே அதற்குச் சமாந்திரமாக கடல்வழியால் பூநகரிக்குள் பெருமெடுப்பில் தரையிறங்குவதும் படையினரின் திட்டமாயிருந்தது. புலிகளின் ஆட்லறிகளும் மோட்டார்களும், முகமாலையிலிருந்து முன்னேறும் படையினரையே குறிவைத்திருக்குமென்பதால், அவ்வேளையில் பூநகரி நோக்கி மிக உக்கிரமாக ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் மோட்டார் குண்டுகளையும் பொழிந்தவாறு தென்மராட்சி கரையோரத்திலிருந்து சிறிய படகுகள் மூலம் பூநகரிக்குள் தரையிறங்கிவிட படையினர் திட்டமிட்டிருந்தனர்.

புலிகள் வசம் குறிப்பிட்டளவு ஆட்லறிகளும் அதற்குரிய ஷெல்களுமே இருப்பதாகக் கருதி படைத்தரப்பு இவ்வாறு பலமுனைத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்தது. ஒருவேளை, முகமாலை மற்றும் கிளாலியிலிருந்து புறப்பட்ட படையணிகள் புலிகளின் பகுதிக்குள் வெற்றிகரமாக முன்னேறியிருந்தால் பூநகரிக்குள் தரையிறங்க படையினர் நிச்சயம் முயன்றிருப்பர். எனினும், முகமாலை முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதால் பூநகரி நோக்கிய படைநகர்வு குறித்து படையினர் சிந்திக்கவில்லை

ரயாழ். குடாவினுள் பாரிய தாக்குதலை தொடுக்க புலிகள் திட்டமிட்டிருந்த வேளையிலேயே அதனை முறியடிக்கும் நோக்கில் முகமாலைப் பகுதியில் படையினர் பாரிய படை நகர்வை மேற்கொண்டதாக படைத்தரப்பில் சிலர் கூறுகின்றனர். இதனால், முகமாலையில் பாரிய முன்நகர்வென்பதைவிட அந்த முன்நகர்வின் மூலம் புலிகளின் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டு பூநகரிக்குள் தரையிறங்குவதே படையினரின் பிரதான திட்டமாயிருந்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது.
புலிகள் எப்போதும் யாழ்.குடாநாட்டை குறிவைத்திருக்கிறார்களென்பதை அரசு நன்கறியும். இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்பதில் படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர். தற்போதைய நிலையில் குடாநாட்டை செயலிழக்கச் செய்வதாயின் புலிகள் பூநகரி, கல்முனைப்பகுதியிலிருந்து பலாலி மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் மீது ஆட்லறித் தாக்குதலை நடத்துவதன் மூலம் அவற்றை ஸ்தம்பிக்கச் செய்து படையினருக்கான விநியோகங்களை தடுத்துநிறுத்த முடியும்.

ஆனாலும், பூநகரிக்கு அப்பால் யாழ். கடலேரிக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நிலப்பிரதேசமே கல்முனை. இங்கிருந்தே புலிகள், பலாலி மற்றும் காங்கேசன்துறை படைத்தளங்கள் மீது ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்துகின்றனர். இதற்குப் பின்னால் பூநகரியிலிருந்து கூட ஆட்லறி ஷெல்களை ஏவ முடியாது. அங்கிருந்து ஏவும் ஷெல்கள் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் செல்லாது.

கல்முனை கூட பாதுகாப்பற்ற சிறிய நிலப்பரப்பு. இங்கிருந்து புலிகள் ஷெல்கள் சிலவற்றை ஏவிவிட்டு ஆட்லறிகளை பின்நகர்த்திவிட வேண்டும். இல்லையேல், படையினரின் ஆட்லறி ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் புலிகளின் ஆட்லறிகளை பதம் பார்த்து விடும். இதனால் குடாநாட்டுக்குள் புலிகள் நுழையும் போது குடாநாட்டிலுள்ள அனைத்து படைத் தளங்களையும் இறங்குதுறைகளையும் செயலிழக்கச் செய்யும் விதத்தில் தங்கள் ஆட்லறிகளை வசதியாக நிறுத்தி தாக்குதல் நடத்துவதற்குரிய இடங்களை புலிகள் கைப்பற்ற வேண்டும்.

முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் படையினரின் முன்னரங்க காவல் நிலைகளைத் தகர்த்து புலிகள் உள்ளே நுழைந்து கொடிகாமம் வரை முன்னேறி விடுவார்களாயிருந்தால் குடாநாட்டில் உள்ள அனைத்து படைமுகாம்களும் புலிகளின் ஷெல் தாக்குதல் வீச்செல்லைக்குள் வந்துவிடும். இதனைப் படையினரும் நன்குணர்வர். இதனாலேயே முகமாலையிலும் அதற்குப் பின்புறமாயுள்ள எழுதுமட்டுவாள் பகுதியிலும் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை படையினர் மிகவும் வலுவானதாய் அமைத்துள்ளனர்.

கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் முன்னரங்குகள் புலிகளால் தகர்க்கப்படுமானால் அது குடாநாட்டின் வீழ்ச்சியை உறுதி செய்துவிடும். இதனாலேயே கிளாலி மற்றும் எழுதுமட்டுவாள் பகுதி முன்னரங்க காவல் நிலைகளுக்கு அடிக்கடி வெளிநாட்டு இராணுவ நிபுணர்கள் கூட வந்து அதனை எப்படிப் பாதுகாப்பது, புலிகள் அவற்றை ஊடுருவுவதை எப்படித் தடுப்பதென்பது குறித்தெல்லாம் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

குடாநாடு புலிகளிடம் வீழ்வதைத் தடுக்க தற்போது படையினருக்கு இரு வழிகளுள்ளன. ஒன்று புலிகள் கொடிகாமம் வரை முன்னேறுவதைத் தடுப்பது, மற்றையது புலிகள் வசமுள்ள பூநகரிப் பிரதேசத்தை கைப்பற்றுவது. முகமாலை எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளை வலுவாக வைத்திருக்கும் படையினர், பூநகரியைக் கைப்பற்றிவிட்டால் புலிகள் முகமாலை மற்றும் பளையில் கூட நிலைகொள்ள முடியாத நிலையேற்படலாம். அது ஆனையிறவை நோக்கிய படைநகர்வுக்குக் கூட வழிவகுக்கலாம்.

இதனால் முகமாலை பகுதியில் சற்று பின்வாங்கினாலும் கூட பூநகரியை இழந்துவிடக் கூடாதென்பதில் புலிகள் மிகவும் கவனமாயிருக்கின்றனர். பூநகரியை தொடர்ந்து தக்க வைப்பதென்பது, குடாநாட்டை கைப்பற்றும் புலிகளின் முயற்சிக்கு ஊக்கமளிக்குமென்பதை விட வன்னிக்குள் படையினர் நுழைவதைத் தடுக்கும் முக்கிய அரணாகவுமுள்ளது.

குடாநாட்டை புலிகள் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக தற்போது அங்கு மேலதிகமாக போர்த் தளபாடங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், விஷேட பயிற்சி பெற்ற படையணிகளும் அனுப்பப்பட்டுள்ளன. குடாநாட்டின் வீழ்ச்சியென்பது புலிகளின் பலத்தை முழு அளவில் கட்டியெழுப்பிவிடுமென அரசு கருதுகிறது. போராட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட அவர்களுக்கு பெருவாய்ப்பாகி விடுமென்பதுடன், மிகப்பெரும் கடல் பிரதேசமும் அவர்கள் வசமாகி விடுமென்பது குறித்தும் படையினர் அக்கறை காட்டுகின்றனர்.

அதைவிட குடாநாடு புலிகள் வசம் விழுமானால் புலிகளின் ஆயுதத் தேவையும் பெரும்பாலும் பூர்த்தியாகிவிடும். அந்தளவுக்கு குடாநாட்டில் படையினர் ஆட்லறிகளையும் பல்குழல் பீரங்கிகளையும் அங்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

அத்துடன், குடாநாடு புலிகள் வசம் வீழ்ந்துவிட்டால் அடுத்த யுத்த முனை வவுனியாவுக்கு மாறிவிடும். அது மிகப்பெரும் ஆபத்தாகிவிடும். இவற்றையெல்லாம் உணர்ந்துதான் அரசும் படைத் தரப்பும் குடாநாட்டை பாதுகாக்கவும் வன்னிக்குள் நுழையவும் குடாநாட்டினுள் களமுனையொன்றை திறக்க முற்படுகின்றனர்.

பாராளுமன்றில் யுத்த பட்ஜட்டை சமர்ப்பிக்கும் போது, முகமாலையைப் படையினர் கைப்பற்றிவிட்டதாக வெற்றிச் செய்தியை அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி பெரிதும் விரும்பியிருந்தார். எனினும், அது கைகூடவில்லை. மாறாக கடந்த தடவை போன்று இம்முறையும் முகமாலையில் படையினர் பேரிழப்பையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.

அநுராதபுரம் தாக்குதலுக்குப் பின்னர் படையினருக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு இதுவாகும். எனினும், தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது இந்தப் பெரும் பின்னடைவுகளை மறைக்க அரசுக்கு பெரிதும் உதவியுள்ளது. ஆனாலும் மேற்படி இரு தாக்குதல்களிலும் ஏற்பட்ட இழப்புகளும் பின்னடைவுகளும் படைத்தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

முகமாலையில் கடந்த வாரம் படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதலானது, புலிகளால் யாழ். குடாநாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலேற்பட்டுள்ளதை உணர்த்தியுள்ளது. குடாநாட்டை புலிகள் கைப்பற்றுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அரசும் படைத்தரப்பும் தற்போது தீவிரம் காட்டுவதை இது நன்குணர்த்துகிறது.

இந்தச் சமர்வெடித்த மறுநாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா குடாநாட்டுக்கு அவசர விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளார்.

புலிகளின் மாவீரர் வாரம் நெருங்குகையில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து விடலாமென்பதால் அதனைத் தடுப்பதற்காக படையினர் வடக்கே தினமும் கடும் தாக்குதல்களைத் தொடுக்கும் நிலையேற்பட்டுள்ளது.

0 Comments: