Monday, November 5, 2007

மிகவும் இழிவான நிலைக்குச் சென்றிருக்கும் இலங்கை உள்நாட்டுப் போரின் கொடூரங்கள்

[05 - November - 2007]
கொழும்பு,
ஸ்ரீலங்காவின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா. உயர்பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கு நாட்டில் வன்முறை நாளாந்த நடவடிக்கை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்தபோதிலும் புதிதாக ஆரம்பித்த உள்நாட்டு யுத்தம் வன்முறைகளை மிகத்தாழ்ந்த மட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதிற் சந்தேகமில்லை.

ஒக்டோபர் மாதம் இத்தீவிற்கு மேற்கொண்ட ஒரு சந்திப்பைத் தொடர்ந்து சித்திரவதைகளை எதிர்கொணரும் யூ.என். விசேட பிரதிநிதி மான்பிறெட் நொவாக் இது பரந்தளவில் நடை முறையில் உள்ளதென்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இது நாளாந்த நடவடிக்கை ஆகியுள்ளதென்றும் தனது அறிக்கையொன்றில் கூறியுள்ளார். மேலும், இது பயங்கரவாதம் பற்றி விசாரணை செய்யும் இலாகாவினாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நொவாக்கினுடைய அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் சமரசிங்க ஷ்ரீலங்கா சித்திரவதை சம்பந்தமாக உச்சக்கட்ட சகிப்புத்தன்மையைப் பேணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கத்தினால் அறிக்கை நுணுகி ஆராயப்படுகிறது என்றும், யூ.என். அதிகாரிகளுடன் உரையாடியதற்காக சிறைக் கைதிகளைத் தாக்கிய அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும் கூறினார்.

ஆனால், அரசினது வெளிப்படுத்துகைகளும் சித்திரவதை, மனித உரிமைகள் பற்றிய மறுதலிப்புகளும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக அநுராதபுரத்திற்கு அண்மையில் உள்ள விமானத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலொன்றில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளது நிர்வாணமாக்கப்பட்ட சடலங்கள் அக்டோபர் 23 இல் பொதுமக்களது பார்வைக்கு வைக்கப்பட்டன என அரசாங்கம் கூறியது. பின்னர் இது பற்றிய புகைப்படங்கள் வெளியான பின் விசாரணைக்குக் கட்டளையிடப்பட்டது எனக் கூறிற்று.

கண்கண்ட சாட்சிகள் இந்தச் சடலங்கள் திறந்த ட்றாக்டர் பெட்டியொன்றில் வைக்கப்பட்டு விமானத் தளத்திலிருந்து பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் இந்த ட்றாக்டர் பெட்டியைச் சூழ்ந்து பொதுமக்கள் அவற்றைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் என்றும் சான்று பகர்கின்றனர்.

`எப்படியாகிலும் இது நடைபெற்றிருக்கக் கூடாது. இது சர்வதேச நடைமுறையை அலட்சியப்படுத்தும் ஒரு பாரதூரமான குற்றமாகும்' என்கிறார் சுனந்த தேசப்பிரிய. இவர் கொழும்பைத் தளமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மன்றத்தைச் சேர்ந்தவர். இதனை அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார்.

தேசப்பிரிய அச்சடலங்களைக் காட்சிக்கு வைத்தமையும் தொடர்பு சாதனங்களை அமுக்க முயற்சிப்பதும் சிவில் உரிமைகள் பரந்த அளவில் மறுக்கப்படுவதை வெளிப்படுத்துகிறது எனக் கூறுகிறார். அவர் மேலும் கூறுவதாவது; கடந்த 20 மாதங்களில் நாம் கண்ணாரக் கண்டது ஒரு பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப் போர் செய்வது என்ற பெயரில் சிவில் உரிமைகள் நசுக்கப்படுவதாகும்.

நொவாக்கினுடைய அறிக்கை கூறுவதாவது `நான் பொலிஸ் நிலையங்களையும் சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டபோது சிறைக் கைதிகளிடமிருந்து பல நம்பகரமான, உண்மையான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். அவர்கள் விசா ரணைகளின்போது பொலிஸ் அதிகாரிகளினால் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி கொடுமையாக நடத்தப்படுவதாகவும் மேலும் வேறு குற்றச் செயல்களுக்கான தகவல்களைப் பெறும் பொருட்டு தாக்கப்படுவதாகவும் முறைப்பட்டுள்ளனர். இதேவிதமான குற்றச்சாட்டுகள் படைத்தரப்பிற்கு எதிராகவும் கூறப்பட்டன.

விசேட பிரதிநிதியினால் போகம்பர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் பற்றிய குற்றச்சா ட்டுகள் ஆகியவை அளவிற்கு மிகுந்த ஆத்திரத்தை ஊட்டியுள்ளன. இக்கைதிகள் நொவாக்கிற்கு இவற்றைச் சமர்ப்பித்தமைக்குப் பழிவாங்கும் நோக்கமே இதற்குக் காரணமாகும்.

இதில் முதலவாது குற்றச்சாட்டு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிக்கெதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதில் சிறைக் கைதிகள் ஒரு மருத்துவ அதிகாரியினால் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது அரச அறிக்கையொன்றில் சொல்லப்பட்டுள்ளது.

நொவாக் யூ.என். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயம் ஒன்று நாட்டிற் திறக்கப்பட வேண்டும் என்றும், அது நாட்டின் மனித உரிமை நிலையை மேற்பார்வை செய்யவும் அதனுள் சிறைக்கூடங்கள் எல்லாவற்றிற்கும் எவ்வித தடைகளுமின்றிச் சென்றுவரும் உரிமை உள்ளடக்கப்படவேண்டும் என்றும் சட்டத்துறை, பொலிஸ் சிறைக்கூடம் ஆகியவற்றிற்கான பொறிமுறை ஆதரவு வழங்கப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

அக்டோபர் மாதத்தில் நாட்டிற்குச் சமுகமளித்த யூ.என். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பரும் தனது காரியாலயம் ஒன்று இலங்கையில் அமைக்கப்பட்டு அதிகரித்துவரும் உரிமை மறுப்புகள் தடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

`பூரண அதிகாரங்களுடன் அமைக்கப்படும் அத்தகைய காரியாலயமொன்று தகவல் துறையிற் காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சில பொறிமுறை ஆதரவை வழங்கும். ஸ்ரீலங்காவின் மக்களது தமது நாட்டிற்கு வேண்டிய உறுதியான புரிந்துணர்வு என்ற அபிலாஷையைப் பூர்த்திசெய்ய அது பெருமளவு உதவும்' என ஆர்பர் கடந்தவாரம் யூ.என்.பொதுமன்றத்திற் கூறியுள்ளார்.

ஆர்பரது வருகைக்குப் பின் அத்தகைய ஒரு காரியாலயம் நிறுவுவதற்கான சர்வதேச ஆதரவு பெருகியுள்ளது. யூ.எஸ். அரச விவகாரங்களுக்கான உப அமைச்சர் நிக்கொலஸ் பேண்ஸ்சும் பௌலாடெபிறி ஆன்ஸ்கியும் ஸ்ரீலங்காவின் ஆர்வலர் சுனிலா அபெயசேகராவை அண்மையிற் சந்தித்தபோது இது பற்றிய அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க அரசசெயலகம் பின்னர் கூட்டத்திற் கூறியதாவது; `உபசெயலாளர் பேண்சும் உபசெயலாளர் டொபிறி ஆன்ஸ்கியும் ஷ்ரீலங்காவின் மனித உரிமைகள் நிலைபற்றித் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இலங்கை அரசு சட்டபூர்வமற்ற கொலைகள், வன்முறை ரீதியிற் கடத்தப்படுதல், சித்திரவதை போன்ற மனித உரிமைகளைச் சீரழிக்கும் செயற்பாடுகளை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையுள்ளது. மேலும் தொடர்புசாதனங்கள் மீது அரச பாதுகாப்புப் படைகளின் தொடர்ந்துகொண்டிருக்கும் தணிக்கையும் விசனமளிக்கிறது'

ஆனால், அபெயசேகரா போன்ற ஆர்வலர்கள் ஸ்ரீலங்காவின் இந்த அவல நிலை விரைவில் முடிவுக்கு வருமென நம்பவில்லை. `என்றுமில்லாதவாறு இது இங்கு உள்ளது. நாங்கள் மனிதாபிமான நெருக்கடி ஒன்றையும் மனித உரிமைகள் சம்பந்தமான நெருக்கடி ஒன்றையும் கொண்டுள்ளோம்' என அவரது விருது அக்டோபரில் அறிவிக்கப்பட்ட பின் அவர் கூறினார்.

ஆர்பர் நாட்டிற்குச் சமுகமளித்த காலத்தில் மனித உரிமைகளுக்கான அமைச்சர்கள் குழுவிலிருந்து ஆலோசகர்களான மூவர் இராஜிநாமா செய்துள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தொடர்ந்து எந்த ஒரு சர்வதேச மனித உரிமைகளுக்கான காரியாலயத்தைத் திறப்பதற்கான அழைப்பை நிராகரித்து வந்துள்ளது. அது இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதிலேயே ஆர்வம் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் இரண்டு தசாப்த காலமாக தமிழ் இராச்சியமொன்றை அமைப்பதற்குப் போரடி வருகின்றனர்.

ஜூலை மாதத்தில் ஸ்ரீலங்கா படைகள் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்டுவிட்டதாகவும் இப்போது வன்னியிற் கவனம் செலுத்துவதாகவும் கூறிற்று. வன்னி தமிழ்ச் சிறுபான்மையினரின் பலம் மிக்க கோட்டையாகும்.

போர் வடக்குக்குத் திருப்பப்பட்ட நிலையில் புலிகள் போர் தெற்குக்கு விஸ்தரிக்கப்படும் என்ற உறுதி மொழியை நிறைவேற்றும் நிலை தோன்றுகிறது. அக்டோபர் 22 ஆம் திகதி ஒரு எல்.ரீ.ரீ.ஈ கொமாண்டோ குழுவினர் அநுராதபுரத்திற்கு அண்மையிலுள்ள ஒரு விமானத்தளத்தை வானூர்திகளின் உதவியுடன் தாக்கி, இராணுவத்தினரின் அறிக்கையின்படி நாலு பயிற்சி விமானங்களையும் மூன்று உலங்கு வானூர்திகளையும் ஒரு உளவு விமானத்தையும் அழித்துள்ளனர்.

10 விமானிகளும் உலங்கு வானூர்தியிலிருந்த நாலு விமானிகளும் கொல்லப்பட்டனர். புலிகளின் கொமாண்டோ குழுவினரில் 20 பேர் மரணமடைந்தனர். இறந்த புலிகளின் பூதவுடல்கள் மரண அறைக்கு எடுத்துச் செல்லும்போது அடுத்தநாள் அநுராத புரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா மீது புலிகள் மேற்கொண்ட இது மூன்றாவது வான் தாக்குதலாகும். முதலாவது மார்ச் மாதத்தில் தலை நகரில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது தாக்குதல் எண்ணெய் குதங்களில் மேற்கொள்ளப்பட்டு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கணிப்பின் பிரகாரம் கால்நூற்றாண்டு காலப்பகுதியில் 70,000 மக்கள்வரை இறந்துள்ளனர். ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் போர் வலுவடைந்த காலப்பகுதியில் இரண்டுமுறை ஜெனிவாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. விடுதலைப்புலிகள் சமாதானம் தமிழ் மக்களுக்கு தனி அரசொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதனால் அவை தோல்வியில் முடிந்தன. 20 மில்லியன் மக்கள் தொகையில் தமிழ் மக்கள் 8.5 வீதமானவர்கள்.

ராஜபக்ஷ அரசு நாட்டைப் பிரிக்கும் எந்த உடன்படிக்கையையும் நிராகரித்ததோடு இந்த முரண்பாட்டைத் தீர்க்க இராணுவத் தீர்வையே நாடுகிறது.

ஆனால், அரசினது கிழக்கிலான வெற்றிகள் வடக்கிலும் தெற்கிலும் போரை விபரிக்கச் செய்துள்ளது என கொழும்பைத் தளமாகக் கொண்ட தேசிய சமாதானப் பேரவையின் ஜெகான் பெரேரா கூறுகிறார்.

தனது இலக்குகளை எட்ட தனது விமானப்படைத் தாக்குதலின் மூலம் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சந்திக்க புலிகள் சங்கற்பம் பூண்டுள்ளனர். `களநிலையை அடிப்படையாகக் கொண்டு நாம் தீர்மானங்களை எடுக்கிறோம். நிலத்தில் நடைபெறுவதுதான் எமது நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது எதிர்ப்பு தாற்பாதுகாப்பாகும்' என்கிறார் ஐ.பி.எஸ். சிற்கு இராசையா இளந்திரையன்.

மனித சேதங்களைத் தொடர்ந்து நடைபெறும் இராணுவ நகர்வுகள் அதிகரிக்கச் செய்யும் என பெரேரா எச்சரிக்கிறார். `சரித்திரம் திரும்ப வருகிறது. இது மக்கள் உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் சேதம் விளைவிப்பதாக அமைகிறது. ஆனால் இராணுவ அரசியற் தலைவர்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து பலன் பெறத்தவறிவிடுகிறார்கள்'.

thinakkural.com

0 Comments: