Saturday, November 17, 2007

புலிகள் பற்றி அணுகுண்டு பேச்சு?

புழல் சிறையில் புயல் முழக்கம்!


‘போதும் சிறைவாசம்... வெளியே வந்துவிடு தம்பி’ என்று ‘பொடா’வில் ஜெ. அரசால் அடைக்கப்பட்டிருந்த வைகோவிடம் வேண்டுகோள் வைத்தவர் கருணாநிதி. இன்று அதே புலி ஆதரவு கோஷத்துக்காக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரே வைகோவை சிறையில் அடைக்கும் நிலை!பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு வைகோ சிறை செல்வது, இது இருபத்தைந்தாவது தடவை! வைகோவின் சிறை சரித்திரத்தில் இது சில்வர் ஜூப்ளி! தமிழகம் முழுக்க இருக்கும் சிறைகளில் அலுமினியத் தட்டுகள் ஒழிக்கப் பட்டு, அனைத்துக் கைதிகளுக்கும் சில்வர் தட்டுகள் 2004&ம் வருடம் கொடுக்கப்பட்டது. அப்போது வைகோ பொடாவில் வேலூர் சிறையில் இருந்தார். ஒன்றாம் எண் பொறிக்கப்பட்டிருந்த முதல் சில்வர் தட்டு வைகோவுக்குத்தான் கொடுக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு’ சார்பில் கடந்த 12&ம் தேதி மதியம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் போலீஸ் அனுமதி மறுப்பையும் மீறி திரண்டனர். பேரணியை தடை செய்வதாக அறிவித்ததோடு போலீஸ்,

வைகோ பேச இருந்த மைக் ஒயரைத் துண்டித்தது. ம.தி.மு.க&வின் தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போலீஸ் அதிகாரிகளோடு அரைமணி நேரம் அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குவந்து சேர்ந்த வைகோவும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், அவரை சுற்றிக் கூடியிருந்த தொண்டர்களைக் கலைந்து போகச் சொல்லி போலீஸ் விரட்டியடித்தது. ‘தொண்டர்கள் மீது கைவைத்தால் இங்கே தேவையில்லாத சட்டம்&ஒழுங்கு பிரச்னை வரும். அதற்கு நீங்கள் தயாரா?’ என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருந்தபோது, அனை வரையும் கைது செய்வதாக அறிவித்தது போலீஸ். அதன்பிறகு வைகோ, நெடுமாறன் உட்பட ஐந்நூறு பேரை புழல் சிறையில் அடைத்தது.

தற்போது சிறைக்குள் இருக்கும் வைகோவின் நடவடிக்கைகள் சலசலப்பைக் கிளப்பியிருப்பதாகத் தகவல்கள் வர... என்ன நடக்கிறதென்று விசாரணையில் இறங்கினோம்.

புழல் சிறை கட்டி முடிக்கப்பட்டு, வைகோ கைதாகி அங்கு போவது இதுதான் முதல் முறை. ‘நல்லாத்தான் கட்டியிருக்காங்க...’ என்றபடியே உள்ளே சென்ற அவரிடம் அங்கிருக்கும் வார்டன்கள் இரவு படுத்துக் கொள்ளத் தலையணை கொடுத்திருக்கிறார்கள். ‘அதெல்லாம் வேணாம்ங்க... சிறையில நான் எப்பவும் தனியா எந்த வசதியையும் செஞ்சுக்கறதில்லை. சட்டப்படி என்ன கொடுப் பீங்களோ கொடுங்க... போதும்’ என்று சிறையில் வழங்கப்படும் ஒரு போர்வையை மட்டும் வாங்கிக்கொண்டு சிறையின் மூன்றாம் தொகுப்புக்குச் சென்றார் வைகோ.

மறுநாள் 13-ம் தேதியிலிருந்து சிறையில் தன் பாணி அரசியலைத் துவக்கினார் வைகோ. தன்னோடு கைதான அனைவரையும் காலையிலேயே அழைத்த வைகோ, ‘‘இன்னிக்கு சாயங்காலம் இங்கேயே ஒரு பொதுக்கூட்டம் போடலாம். எல்லோரும் பேசலாம். தனி யாக வகுப்புகளும் நடத்தலாம்’’ என்று சொல்லி அனுப்பினார்.

காலையில் அனைவரும் வரிசையில் சாப்பாட்டு தட்டுகளோடு நிற்க, வைகோ தனது உதவியாளர்கள் துரை மற்றும் அடைக்கலத்தோடு சிறையைச் சுற்றி வாக்கிங் கிளம்பினார். சற்று லேட்டாக வந்த வைகோவிடம், ‘உங்களுக்கு சாப்பாடு இங்கேயே வந்துடும். நீங்க வரிசையில நிக்க வேணாம்’ என்று சிறை நிர்வாகத்தினர் சொல்லி யிருக்கிறார்கள். ‘இப்படியெல்லாம் வசதி செஞ்சு கொடுத்தா நாம ஜெயிலுக்குள்ள மீட்டிங் போட மாட்டோம்னு நினைக்கறாங்க. அவங்க சூழ்நிலை அப்படி’ என்று தன் சகாக்களிடம் சொல்லிய வைகோ, ‘எனக்குன்னு எந்த தனி மரியாதையும் வேணாங்க. என்னால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஜெயில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாங்க மீட்டிங் போட்டுக்கறோம். நீங்களும் வந்து கலந்துக்கங்க. இங்க உங்களுக்கு எதிரா நான் செயல்படுறேன்னு நினைக்க வேணாம்’ என்று ஜெயில் அதிகாரிகளை அனுப்பிவிட்டு, வரிசையில் நின்று காலை சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டார்.

வைகோவின் சிறை நடவடிக் கைகள் எல்லாம் சுடச்சுட முதல்வர் கருணாநிதிக்கும் போயிருக்கிறது. புழல் சிறையே ஆவலோடு எதிர்பார்த்த வைகோவின் மாலை நேரக் கூட்டம் துவங்கியது. முதலில் பேசிய வைகோ,‘‘இங்கிருக்கும் முதலமைச்சர், சுப.தமிழ்ச் செல்வனுக்காக இரங் கல் கவிதை எழுதி அனுதாபத்தைத் தெரியப்படுத்துகிறார். அது அவருடைய தமிழ்ப் பற்றைக் காட்டுகிறது. ஆனால், நாங்கள் எங்கள் அனுதாபத்தைக் காட்ட அறவழியில் பேரணி போக அனுமதி கேட்டால், அது மறுக்கப்படுகிறது. ஏதாவது பேசிவிடுவோம் என்று மைக்கின் ஒயர்களை கட் செய்கிறார்கள். மைக் இல்லாமல் நான் பேசுவதை ஒரு காவல்துறை உயர் அதிகாரி தனது செல்போன் மூலம் எங்கோ ரிலே செய்தார். நாங்கள் வன்முறையில் ஈடுபடு பவர்கள் அல்ல. கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம். ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு ஆயுதம் கொடுக்கும் இந்திய அரசைக் கடுமையாகக் கண்டிக் கிறேன். கண்டனத்தையும், அஞ்சலியையும் செலுத்த இருந்த எங்களை சில போலீஸார் திட்டமிட்டே கைக்கூலி வேலை பார்த்துக் கலைத்தார்கள். எங்கள் கட்சியின் வழக்கறிஞர்களை அடித்து, இழுத்துச் சென்றார்கள்’’ என்று பேசி உணர்ச்சி வசப்பட்டவர்,

‘‘உலகத்தில் பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன்... பழகியிருக்கிறேன். ஆனால், எல்லோருக்கும் மேலே என்னைக் கவர்ந்த ஒரு தலைவர் பிரபாகரன்தான். உலகமே வியக்கும் வண்ணம் தனது ராணுவ பலத்தையும், அதன் மதிநுட்பத்தையும் காட்டிக் கொண்டேயிருக்கும் அவர், மிக விரைவில் தனித் தமிழ் ஈழம் காண்பார். அந்த ஈழம் வல்லரசாக சில ஆண்டுகளிலேயே உருப்பெறும். குண்டு மழைக்கு நடுவிலும் புலிகள் தங்கள் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்போதுதான் அணுசக்தி ஒப்பந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தனி ஈழம் அமைந்தால் அணுசக்தியிலும் அவர்கள் உலகின் முன்னோடிகளாக இருந்து வல்லரசாக உருப்பெறுவார்கள்’’ என்று புலிகளுக்குப் புகழாரம் சூட்டுவது போல தனது வழக்கமான அணுகுண்டு பேச்சை எடுத்து விட்டிருக்கிறார் வைகோ.

நெடுமாறன் பேசும்போது, ‘‘சென்னையில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்தபோது என்னிடமும், வைகோவிடமும் மிகவும் நெருங்கிப் பழகுவார். அவர் முகத்தில் தவழும் புன்னகையின் மதிப்பு இங்கு பலருக்குத் தெரியாது. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி இல்லாததற்கு ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்’’ என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். சிறைக் கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன், ஜீவன், மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் திருமாறன் உள்ளிட்ட அனைவரும் புலிப்பேச்சை உரக்கவே முழங்கியிருக்கிறார்கள்.

மாலை நேரங்களில் கூட்டங்களைக் கூட்டி சிறையை கலகலக்க வைத்த வைகோ, பகல் நேரத்தில் உலக வரலாறு, அடிமைப்பட்டு பிறகு விடுதலை அடைந்த நாடுகளின் வரலாறுகளைத் தன் சகாக்கள் மத்தியில் முழங்கியிருக்கிறார். கூடவே சிறையின் அனுமதி பெற்று ஸ்காட்லாண்ட் விடுதலையைச் சித்திரிக்கும் ‘பிரேவ் ஹார்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை சிறையில் திரையிட ஏற்பாடு செய்தார். பழ.நெடுமாறனின் உடல்நிலையை அவ்வப்போது விசாரித்தபடியும் இருந்தார். அப்படி விசாரித்த அவரிடம் நெடுமாறன், ‘‘உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா, அமெரிக்காவுல இருந்து வந்திருக்கற என்னோட மருமகளும் பேரன்களும் 15&ம் தேதி அமெரிக்கா போறாங்க. அவங்களை விமான நிலையத்துல வந்து வழியனுப்புறேன்னு சொல்லியிருந்தேன். ஆனா, போக முடியாம இங்க சிறைக்கு வந்துட்டேன். பேரப்பசங்க நான் வரலைன்னு கொஞ்சம் கண்ணைக் கசக்குவாங்க’’ என்று தழுதழுத்தபோது, அவருக்கு வைகோ ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

வைகோவுடன் கைதானவர்களில் எந்தக் கட்சியையும் சேராதவர் நரிக்குடியைச் சேர்ந்த கண்ணன். கைநிறைய சம்பளத்துடன் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், வைகோ மீது பாசமுடையவர், ஈழப் பிரச்னையில் ஈடுபாடுடையவர். சிறைக்குள் அவர் தன் எதிர்ப்பைக் காட்ட உள்ளே வந்ததுமே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவரை சமாதானப்படுத்திச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் வைகோ. ஆனால் கண்ணன் பிடிவாதமாக இருந்ததால், அன்று இரவு வைகோவும் சாப்பிடவில்லை. மறுநாள் காலை வைகோ ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்த பிறகே கண்ணன் மசிந்திருக்கிறார்.

அடுத்து, சிறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று கைதிகளை சந்தித்த வைகோ, ‘‘15&ம் தேதி காலையில எல்லாருக்கும் நம்ம செலவுல ஸ்வீட் கொடுக்கணும், மதியம் சிக்கன் போடணும்’’ என்று கட்டளையிட, நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சிறைவாசிகளுக்கு ம.தி.மு.க. சார்பில் அன்று இனிப்பும், சிக்கனும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழகத்தில் நடந்துவரும் புலி ஆதரவுப் பிரசாரங்கள், வைகோ சிறையில் நடத்திய மினி பொதுக்கூட்டம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் அடங்கிய நீண்ட கடிதத்தை மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலுவும், ஆ.ராசாவும் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் சமர்ப்பித் திருக்கிறார்கள். புழலுக்குள் ஒலித்த புயலின் புலிப்பேச்சுக்கள் அரசியலில் அடுத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ என்பதுதான் இப்போதைய கேள்வி. ‘‘கைது செய்திருக்க வேண்டியதில்லை...’’

அ.தி.மு.க&விலிருந்து தி.மு.க&வுக்கு வந்துவிட்ட சீனியர் அரசியல் தலைவரான க.சுப்புவிடம் வைகோவின் சுதந்திர சிறை நடவடிக்கை பற்றியும் அவரது பேச்சுகள் அ.தி.மு.க&வை பாதிக்காதா என்றும் கேட்டோம். ‘‘சட்டத்திற்குட்பட்டு கருத்துக்களை சொல்பவன் நான். சட்டரீதியாக தவறு என்றால் அதை சுட்டிக்காட்ட தயங்க மாட்டேன்’’ என்று தொடங்கிய சுப்பு, ‘‘தமிழகத்தில் புலிகள் பெயரைச் சொன்னாலே நெருப்பை மிதித்தது போல அலறுகிறார்கள். தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கலாமா கூடாதா என்பதுதான் தமிழகத்தில் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. சட்டரீதியாக பார்த்தால், இறந்துபோன ஒருவருக்கு இரங்கல் தெரிவிப்பதை எந்தவகையில் குற்றமாகக் கருத முடியும்? வைகோவும் நெடுமாறனும் தமிழ்ச்செல்வன் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்துதான் ரோட்டுக்கு வந்தார்களே தவிர, சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்த அல்ல. ஆகவே அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டியதில்லை. இறந்துபோனவர்களுக்காக ஜெயிலுக்குள் அவர்கள் தங்களைச் சேர்ந்த சிலரைக் கூட்டிவைத்துப் பேசினால் அதில் எந்தத் தவறும் இல்லை. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்காகப் பேசி, அதன் தொடர்நடவடிக்கையாகத் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக விளைவுகள் இருக்குமானால்தான் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எமெர்ஜென்சி காலத்திலேயே இப்படி பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும்பொருட்டு ஒரு வழக்கில் மிக தீர்க்கமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம்.

புலிகள் விஷயத்தில் வைகோவுக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள முரண்பாட்டை அவர்கள்தான் பேசித் தீர்க்கவேண்டும். ஏற்கெனவே ஜெயலலிதா ஒருமுறை, ‘வைகோ மக்கள் பிரதிநிதி அல்ல, இந்திய அமைப்பின்பால் நம்பிக்கை கொண்டவர்’ என்றும், ‘அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பேன் என்றும் உறுதி மொழி எடுத்துக்கொண்டவர் அல்ல. இதனால் அவரை விடுதலைப்புலிகள் விஷயத்தில் கேள்விகேட்க முடியாது’ என்பதுபோலவும் கருத்துச் சொல்லி இருக்கிறார். அதனால், விடுதலைப்புலிகள் விஷயத்தைப் பொறுத்த வரையில் ஜெயலலிதாவும்&வைகோவும் இருதுருவங்களில் இருந்தாலும் அதில் தவறில்லை... அதேபோல சிறைக்குள் ‘பிரேவ் ஹார்ட்’ என்கிற படம் போடப்பட்டிருப்பதாக சொன்னீர்கள். அந்தப் படம் தடை செய்யப்பட்ட படமா என்ன? விடுதலையை விவரிக்கும் ஒரு படம், அவ்வளவுதான். அந்தப் படம் போடப்பட்டதிலோ, அந்தப் படத்தைப் பார்த்ததிலோ எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.

http://www.vikatan.com/

0 Comments: