Friday, November 16, 2007

பிரார்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது!

-நக்கீரன் (கனடா)-

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார்.

உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

சித்தர்களும், முக்தர்களும் மரணம் இயற்கை என்றார்கள். பிறப்பு எப்படி இயற்கையோ அதே போல் பிறந்தவை யாவும் இறப்பதும் இயற்கை என்றார்கள்.

ஞானிகளும், யோகிகளும், சித்தர், முக்தர், ஞானிகள், யோகிகள், முனிவர்கள் எல்லோரும் சாவை புறங்காண எதை, எதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மோனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். ஆனால் சாவை வெல்ல முடியவில்லை.

'புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமநுஜர் எல்லோருமே மாண்டு போனார்கள். நான் மட்டும் பார் மீது சாகாதிருப்பேன்" என்று பாரதி முழங்கினார்.

'காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்"

என்று காலனுடன் வீரம் பேசினார்.

நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்! (பாரதியார் சுயசரிதை)

என்றான். ஆனால் 'மரணத்தை வெல்வது எப்படி?" என்று உபாயம் சொன்ன மகாகவி பாரதி கூட அந்த மரணத்தை வெல்ல முடியவில்லை! தனது முப்பத்தொன்பதாவது அகவையில் அந்தக் காலன் என்;ற பாவி அவரைக் கூட்டிச் சென்றான்.

சாவு மனிதனுக்கு உலகம் தொடங்கிய காலம் தொட்டே ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் அவிழ்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் (மறு) பிறப்பு உண்டா? உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே! (சித்தர் பாடல்கள்)

எது எப்படியோ இறந்தவர் யாரும் மீண்டு வந்து இந்தக் கேள்விக்கு இதுவரை விடை சொல்லவில்லை!

மனிதன், உலகம், அண்டம், கடவுள் இவற்றுக்கு இடையில் உள்ள உறவை விளக்க எழுந்த வேதாந்தங்களும் சித்தாந்தங்களும் இந்தச் சிக்கலான முடிச்சை அவிழ்க்க மனிதனால் எழுதப்பட்டவையே. மனிதனை நம்ப வைக்க அவை கடவுளால் அருளப்பட்டன எனப் புனைந்துரைத்தார்கள். கடவுளால் அருளப்பட்டிருந்தால் ஒரு சமயம், ஒரு கடவுள், ஒரு வேதம், ஒரு சித்தாந்தம் மட்டுமே இருந்திருக்கும்.

மனிதர்களை விட்டுவிடுவோம். ஒரு போர் வீரனுக்கு எப்படியான சாவு நேர வேண்டும்? வள்ளுவர் அதற்கு விடை அளிக்கிறார்.

புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. (அதிகாரம் 78 படைச்செருக்கு (குறள் 780)

தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து அரசன் கண்கள் நீர்பெருகப் போரில் உயிர்நீக்கப் பெற்றால் அந்கச் சாவு இரந்தாவது பெற்றுக்கொள்ளும் தகுதியுடையது என்பது இக்குறளின் பொருளாகும்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் திருவள்ளுவர் சொல்லும் சாவை இரந்து பெற்றுள்ளார். அதற்கு தேசியத் தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தமிழ்ச்செல்வனது சாவுக்கு இரங்கி வெளியிட்ட இரங்கலுரை சான்றாக அமைந்துள்ளது.

'தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன்.

இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்."

'எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன்" என்ற வார்த்தைகள் தேசியத் தலைவர் பிரி;கேடியர் தமிழ்ச்செல்வன் மீது வைத்திருந்த ஆழமான அன்பையும் பாசத்தையும் பறைசாற்றுகிறது. பதினேழாவது அகவையில் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்ச்செல்வன் 23 ஆண்டுகள் தலைவரின் அரவணைப்பில் இருந்தார்.

இயக்கம் என்ற பல்கலைக்கழகத்தில் புடம் போடப்பட்டு வார்த்து எடுக்கப்பட்டார். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனங்களை மட்டும் அல்ல உலகளாவிய தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட வீரனாகவும் இராசதந்திரியாகவும் தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

பேச்சு மேடையில் அவர் புன்னகை பூத்த முகத்துடன் வீற்றிருந்த காட்சியைப் பார்த்துப் பூரிப்படைந்தோம். பெருமைப்பட்டோம்.

வீரச்சாவைத் தழுவிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் புகழ் உடல் உரிய மதிப்போடு புதைகுழியில் விதைக்கப்பட்டுவிட்டது. மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். கவிஞர்கள் சொற்பூக்கள் தொடுத்து பாமாலை கட்டினார்கள். வீரவணக்கக் கூட்டங்களில் மக்கள் கடல் அலையெனத் திரண்டு தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் இவை மட்டும் போதுமா?

தமிழினம் இனவெறி பிடித்த ஒரு சிங்கள- பவுத்த ஆட்சியின் கீழ் அகப்பட்டுத் தவிக்கிறது. எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களையும் இன்னல்களையும் இடர்களையும் நாளும் பொழுதும் சந்தித்துக் கொண்டு இருக்கிறர்கள்.

தென் தமிழீழத்தில் இடம்பெயர்ந்த 300,0000 இலட்சம் மக்களில் பாதிப்பேர் இன்னும் மீள் குடியமர்த்தப்படவில்லை. குறிப்பாக மூதுர் கிழக்கில் உள்ள சம்பூர், தோப்பூர், பாட்டாளிபுரம், நல்லூர் போன்ற 12 ஊர்களைச் சேர்ந்த சுமார் 14,000 மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் மரங்களின் கீழும் வீதி ஓரங்களிலும் தற்காலிக கொட்டில்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊர்கள் சிங்களப் படையால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாடு திறந்தவெளி சிறைச்சாலையாக சிங்கள இராணுவத்தினால் மாற்றப்பட்டுள்ளது. உயிரைக் காப்பாற்ற மக்களே முன்வந்து தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு நீதிமன்றங்களை நாடி ஓடுகிறார்கள்.

'வட-கிழக்கில் நாளாந்தம் 5 பேர் கொல்லப்படுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள். கடந்த சனவரி மாதம் தொடங்கி ஓகஸ்ட் மாதம் வரை இலங்கையில் 14 மனிதவுரிமை மற்றும் சமய தொண்டர்கள் காணமல் போயுள்ளார்கள். இதே காலப்பகுதியில் 662 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 540 பேர் காணாமல் போயுள்ளார்கள். 25 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள். 43 குழந்தைகள் காணாமல் போயுள்ளார்கள்" இவ்வாறு சட்டம் மற்றும் அவை டுயற யனெ ளுழஉநைவல (டுளுவு) என்ற அமைப்பு மனிதவுரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஆட்சித்தலைவர் ஆணையத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.

எனவே எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் தங்களது மனித வளத்தையும் பொருள் வளத்தையும் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் வீணாக்காமல் எங்கள் மக்களை சிங்கள - பவுத்த இனவாத கொடிய அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற ஒருமுகப் படுத்த வேண்டும்.

விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

தாயகக் கனவுகளை நெஞ்சினில் ஏந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது தோழர்களும் எங்கள் நெஞ்சில் கடலும் காற்றும் வானும் மதியும் உள்ளவரை நீடித்து நிலைத்து இருக்கும்.

இந்த மாவீரர்களுக்கு நாம் எழுப்பப் கூடிய மிகப் பெரிய நினைவாலயம் அவர்கள் கண்ட தமிழழீழக் கனவை நினைவாக்குவதுதான். அதைச் செய்து முடிக்க நாங்கள் ஒவ்வொருவரும் சூளுரைப்போம்!

0 Comments: