Tuesday, November 27, 2007

பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம் இலங்கைக்கு வேறு நியாயமா?

Posted on : 2007-11-27


உகண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்று முடிந்த பொதுநல நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டைஒட்டி இலங்கை நடந்துகொண்ட குளறுபடித்தனம் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது.
அதேசமயம், பொதுநல அமைப்பு நாடுகள் ஒவ்வொரு தரப்புக்கு ஒவ்வொரு விதமாக மாறுபாடான அணுகுமுறையோடு நடந்துகொண்டமையைப் பார்க்கும்போது அதுவும் கூட நையாண்டி நளினமாகத்தான் தோன்றுகின் றது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
பொதுநல அமைப்பு நாடுகள் தமது கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்த எடுத்த முடிவையும்
அந்த முடிவை ஆரம்பத்தில் ஆதரித்த இலங்கை பின் னர் அதைக் கடுமையாக எதிர்த்தமையையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஆனால், ஜன நாயக விழுமியங்கள் பாதிக்கப்பட்டு, அவசரகாலச் சட்டத் தினால் அடிப்படை மனித உரிமைகள் மிதிக்கப்படும் நாடாக பாகிஸ்தான் மட்டுமே பொதுநல அமைப்பு நாடுகளின் கண்களுக்குப் பட்டது என்பதைத் தான் எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பாகிஸ்தானை இடைநிறுத்தும் பொதுநல நாடுகள் அமைப்பின் தீர்மானத்தை இலங்கை எதிர்த்தமைக்குப் பிர தான காரணங்கள் இரண்டு.
ஒன்று உள்நாட்டு யுத்தத்தில் அந்தரிக்கும் கொழும் புக்கு இராணுவ ஆயுதத் தளபாடங்கள் மற்றும் இராணுவச் சேவை, பயிற்சி உதவிகளை வழங்கிக் கைகொடுத்து வரும் முக்கிய நாடு பாகிஸ்தான்தான். ஆகவே, அந்த நாட்டுக்கு இயல் பாகவே கைகொடுக்க இலங்கை முன்வந்தமை ஆச்சரியப் படத்தக்கதல்ல. அத்துடன், பாகிஸ்தானை பொதுநல நாடு கள் அமைப்பிலிருந்து இடைநிறுத்தும் முடிவை இலங் கையும் ஆதரித்தது என்ற காரணத்துக்காக இலங்கை மீது பாகிஸ்தான் சீற்றம் கொண்டு, இலங்கைக்கான உதவிகளை நிறுத்தத் தீர்மானித்து, பாகிஸ்தான் இலங்கையைக் கைவிடுமானால் கொழும்பின் கதி அம்போதான். ஆகவே, எப்படி யாவது பாகிஸ்தானை தாஜா பண்ணி, சமாளித்து, திருப்தி செய்து, தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கொழும்புக்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதற்காகத்தான் ஆரம்பத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம திசைமாறிச் செயற்பட்டபோதும், பின்னர் இலங்கை ஜனாதிபதி தாமே நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு பாகிஸ்தானுக்காகக் குரல் எழுப்பி, பாகிஸ்தானுடனான உற வைச் சமாளித்துக் கொண்டார்.
அடுத்தது "இனம் இனத்தையே சாரும்' என்ற கார ணத்தில் அமைந்தது. அவசரகாலச் சட்டத்தை நடை முறைப்படுத்தி, ஜனநாயக விழுமியங்களைக் குழி தோண் டிப் புதைத்தமைக்காக பாகிஸ்தான் மீது பொதுநல நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்குமானால் அந்தத் தொப்பி தனக்கும் அளவாக விழும் என்பதால் அடுத்த இலக்குத் தானாகி விடலாமோ என்ற அச்சம் கொழும்புக்கு. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தானைப் பொறுப் பாக நிறுத்தும் நடவடிக்கையிலிருந்து அந்த நாட்டை விடு விக்கத் தலைகீழாக நின்றது கொழும்பு.
கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் பாகிஸ்தானில் நடந்தது என்ன? ஆக, அவசரகாலச் சட்டம் புதிதாகக் கொண்டுவரப்பட்ட விடயம்தான். அதன் கீழ் ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வளவே. அவசரகாலச் சட்டத்தின் கீழ் புதிதாகக் கொலைகளோ, கொடூரங்களோ அங்கு அரங் கேறவில்லை.
ஆனால், இலங்கையிலோ நிலைமை அதைவிட மோசம். இந்த அரசின் ஆட்சி, அவசரகாலச் சட்டம் என்ற தூணில் தான் நீண்ட காலமாகத் தொங்கிக் கொண்டு தொடர்கின்றது.
இந்த அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்
ஆள்கள் கடத்தப்படுகின்றார்கள்; காணாமற்போகச் செய்யப்படுகின்றார்கள்; கடத்திக் கப்பம் அறவிடப்படு கின்றது; சட்ட விரோதக் கொலைகள் கணக்கு, வழக்கின் றித் தொடர்கின்றன. கைதுகளும், தடுத்து வைப்புகளும் எல்லை மீறி நடக்கின்றன. துணைப் படைகளின் அட்ட காசம் அளவு கடந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் பறிக் கப்பட்டுள்ளது. ஊடகங்களும், ஊடகவியலாளரும் கொடூ ரத் தாக்குதலுக்கு இலக்காகும் அவலம் நீடிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களோ அச்சுறுத்தப்பட்டு அவர் களின் நாடாளுமன்றச் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. குற்றமிழைக்கும் சீருடையினரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாதவாறு விசேட சட்ட விலக்களிப்புக் கவசம் வழங் கப்பட்டிருக்கின்றது. பெரும் தொகைப் பணத்திற்கு அரசி யல்வாதிகளை விலைக்கு வாங்கும் "வர்த்தக அரசியல்' நாடாளுமன்றத்தில் கோலோச்சுகின்றது. மொத்தத்தில் இங்கு அவசரகால விதிகளின் கீழ் அராஜக ஆட்சி அரங்கேறுகின் றது.
இவற்றையெல்லாம் இங்கு கண்டுகொள்ளாத பொது நல நாடுகள் அமைப்பின் கண்களுக்கு பாகிஸ்தான் அராஜ கங்கள் மட்டுமே தோற்றுகின்றன.
இந்தச் "சீத்துவத்தில்' பொதுநல அமைப்பு நாடுகளின் அடுத்த அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தை நடத்தும் வாய்ப்பு என்ற கௌரவத்தையும் கொழும்புக்கு வழங்க அந்த அமைப்பு முன்வந்திருக்கின்றதாம்!
ஒருபுறம் பாகிஸ்தான் மீது பாய்ந்துகொண்டு, மறுபுறம் இலங்கைக் கொடூரங்களைக் கண்டும் காணாதது போல பொறுப்பற்று இந்த அமைப்பு செயற்படுவது ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெய்யும் தடவு வதற்கு ஒப்பாகும். பொதுநல நாடுகள் அமைப்பு சகல நாடு களின் விடயத்திலும் ஒரே நீதியைப் பின்பற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
அப்படிப் பின்பற்றுமானால் பாகிஸ்தானுக்கு விதித்த உறுப்பினர் உரிமை இடைநிறுத்தம் என்ற நடவடிக்கையை அது இலங்கை மீதும் பிரயோகித்திருக்க வேண்டும். தவறி விட்டதே!
uthayan.com

0 Comments: