Monday, November 26, 2007

அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள்

'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.

வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.

கையூட்டு, அமைச்சுப்பதவி என்பனவற்றைக்காட்டி ஆசையூட்டி ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டமை ஒருபுறமென்றால் மறுபுறம் கடத்தல்கள், உயிர்ப்பயமுறுத்தல்கள் என மகிந்தவின் ஆட்சிக்கே தனித்துவமான படுபாதகச் செயற்பாடுகளிலும் அது ஈடுபட்டது.

இந்த வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், எமக்கு ஆதரவாக இருந்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என மகிந்த ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தது. இது மகிந்த ஆட்சியின் ஒரு மறைமுகமான மிரட்டலாக இருந்தது. அதாவது எம்மை எதிர்த்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்பதே அதன் கருத்தாக இருந்தது.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்கள், அலுவலகங்களுக்கான பாதுகாப்பை நீக்கி ஒட்டுக்குழு மூலமாக நேரடியாகவே அவர்களது குடும்பத்தினர், உறவினரை எச்சரித்தது.

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அவர்களின் மருமகன் ஒட்டுக்குழு வினரால் கடத்தப்பட்டு கனகசபை அவர்கள் வாக்களிப்பிற்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டார்.

இதேவேளை ஏனையோரும் கூட பெரும் உயிர் அச்சுறுத்தலின் மத்தியிலேயே பாராளுமன்றத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னைய நாட்களில் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறையினர௼br />? விசாரணைக்கெனத் திடீரென அழைத்தனர். இதுவும் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அரச அதிகாரிகள் மூலமான மிரட்டலாகவே அமைந்தது.

இவ்வாறு பெருமளவு பணம், பல்வேறு வகை மிரட்டல்கள், தொடர்ச்சியான அழுத்தங்கள் என மகிந்த ஆட்சி பல தகிடுதத்தங்களை மேற்கொண்டு வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றது. எவ்வாறாயினும் மகிந்த ஆட்சிக்கு இந்த வாக்கெடுப்பு விடயத்தில் அச்சம் நிலவியே வந்தது. இந்த அச்சத்தை உருவாக்குவதில் முழுவெற்றி ஐ.தே.க.வுக்குக் கிடைத்திருக்கிறது.

வரவு-செலவுத்திட்டம் தொடர்பான வாக்களிப்பில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்ட போதிலும் பாராளுமன்றத்தில் அதனது நிலை இப்பொழுது உறுதியடைந்துவிட்டது. எனக் கூறிவிடமுடியாது. ஏனெனில் அங்குள்ள நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் நிலைமை மோசமடைந்து விட்டது என்றே கூறவேண்டும்.

ஏனெனில் முக்கியமானதொரு பலப் பரீட்சைக்களத்தில்- ஆளும் கட்சிக்கு வெளியே இருந்தாலும் பலமாகவிருந்த-ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு எதிராக நடந்துகொண்டு விட்டது. இவ்வாறு ஒரு நிலைமையை உருவாக்குவதிலும் ஐ.தே.க. வெற்றி பெற்றுவிட்டது.

ஜே.வி.பி. என்னதான் கூறிக்கொண்டாலும் அரசுக்கு எதிராக நடந்துகொள்ளாது என்ற நம்பிக்கையை மகிந்த ராஜபக்ச கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தன.

ஒன்று ஜே.வி.பி. ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டால் ஆட்சி கவிழ்ந்து பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்க வேண்டிவரும் என்பது, இரண்டாவது அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலையை எடுக்கமாட்டாது என்பது, மூன்றாவது இந்த வரவு-செலவுத்திட்டம் போரை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்க்க முடியாது என்பது.

இதனை விட ஜே.வி.பி.யிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை நயத்தாலும் சிலரை பயத்தாலும் மகிந்த பணிய வைத்திருந்தார். ஜே.வி. பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை ஜே.வி.பி. ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதன் காரணமாகவே சந்திரிகா அம்மையாரும் சரி மகிந்தவும் சரி கையிலெடுக்கவில்லை.

அதேவேளை அதன் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவின் மோசடி ஒன்று குறித்த கோப்புக்களை மகிந்த கைவசம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை ஜே.வி.பி.யில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் மகிந்த சிறிது வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதை நந்தன குணதிலகவின் நடவடிக்கை வெளிப்படுத்துகின்றது.

எனவே ஜே.வி.பி. ஆட்சியை எதிர்க்காது என மகிந்த எதிர்பார்த்திருந்த போதும் ஜே.வி.பி. எதிர்த்து வாக்களித்துவிட்டது.

எனினும் கூட ஜே.வி.பி. இந்த விடயத்தில் இரண்டு முரண்பாடான விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறது.

ஒன்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், மோசடிகள் அதனைவிட விலைவாசி ஏற்றம் என்பவற்றால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த ஆட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவாக இருப்பது தனது எதிர்காலத்திற்குப் பாதகமானது என நினைக்கின்றது.

ஆட்சியைவிட்டு விலகியிருந்தால் மகிந்த ஆட்சி சந்திக்கவிருக்கும் தோல்வியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இரண்டாவது நிலையை எட்டுவதே அதனது திட்டமாகும்.

அதேவேளை மகிந்த ஆட்சி நடத்துகின்ற யுத்தத்தையும் எதிர்ப்பது போன்ற தோற்றப் பாட்டையும் அது விரும்பாததால் இவ்விடயத்தில் அது தந்திரமாகவே நடந்து கொள்கின்றது.

இரண்டாவதாக மகிந்தவின் ஆட்சி இப்போதைக்குக் கவிழ்ந்து விடாமல் இருக்கவேண்டும் என்பதிலும் அது கவனம் செலுத்துகிறது. எனவே வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அது என்ன செய்யப் போகின்றது என்பதைப் பல்வேறு குழப்பகரமான செய்திகளை வெளியிட்டு இறுதியில் எதிர்த்து வாக்களித்திருக்கின்றது.

வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு முடி வடைந்த பின்னர் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து இதனைப் புலப்படுத்துகிறது. ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை ஒரு வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தால் நிச்சயமாக அரசு கவிழ்ந்திருக்கும,; ஜாதிக ஹெல உறுமய கூட எதிர்த்து வாக்களித்திருக்கும், ஹக்கீம், தொண்டமான் ஆகியோர் கூட எதிர்த்திருப்பார்கள் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

எனவே ஜே.வி.பி. இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் முடிவெடுக்கும் போது சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ஆட்சி செல்வாக்கு இழந்து வருவதாக மதிப்பிட்டுள்ளது என்பதை உணரமுடியும். எனவே தான் அது அரசை எதிர்க்க முடிவு செய்திருக்கின்றது. எனினும் இந்த நிலையிலும் கூட தனது சுயநலத்திற்காக மகிந்த அரசைக் காப்பாற்றி யிருக்கிறது என்பதும் வெளிப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் அதனது தேசப்பற்றுக்கு மாசு கற்பிக்க ஆட்சியாளர்கள் முயல்வர் என்பது அதற்குத் தெரியும். அதற்காகவே. அது வரவு-செலவுத்திட்டத்துடன் சிறிதும் தொடர்பில்லாத நான்கு நிபந்தனைகளை முன்வைத்தது. இந்த நிபந்தனைகள் அரசாங்கம் முற்று முழுதாக யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதாக இருந்தது.

இப்பொழுது சோமவன்ச அமரசிங்க வரவு-செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விடயங்களாக அரசாங்கம் சித்திரிக்க முனைவது தவறானது. அதலபாதாளத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் நாட்டினை வலுவான நிலைக்கு ராஜபக்ச அரசாங்கம் இட்டுச்செல்வதற்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை அதற்கு இன்ன மும் 25 நாட்கள் உள்ளன என்கிறார்.

அவர் 25 நாட்கள் எனக்கூறுவது எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பையாகும். இந்த 25 நாட்களுக்குள் பல அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாகவும் அப்போது தேசபக்தர்கள் யார்? என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதனை இப்போது மிரட்டும் சந்தர்ப்பம் மகிந்தவின் கையிலிருந்து ஜே.வி.பி.யின் கைக்கு மாறிவிட்டதாகவும் கொள்ளலாம். அதேவேளை மகிந்த ஆட்சிக்கு மீண்டும் அழுத்தத்தை ஐக்கிய தேசியக்கட்சி உருவாக்கியுள்ளது. 19 ஆம் திகதி வாக்கெடுப்பில் அரசாங்கம் சந்தித்த அழுத்தத்தை விடவும் ஜே.வி.பி. இப்போது ஆட்சிக்கு எதிராகத் திரும்பிவிட்ட நிலையில் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் இ.தொ.கா, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பனவற்றின் மீது இப்பொழுது எவரும் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை.

எனவே மீண்டும் ஜே.வி.பி.யை வழிக்குக் கொண்டுவரவே மகிந்த ஆட்சி முயல்கின்றது. இதற்கு மறைமுகமாகச் செய்ய வேண்டியவை ஒருபுறமிருக்க வெளிப்படையாகச் செய்பவை சிலவும் உள்ளன. அவற்றின் வரிசையில் புலிகள் மீதான தடை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடை, சிறுவர் பாதுகாப்பு நிதியம் மீதான விசாரணை என ஆளும் கட்சி அறிவிப்புக்களை ஜே.வி.பி.யின் கோரிக்கைக்கு இணங்க விடுப்பது போலக்காட்டிக்கொள்கிறது. அதேவேளை வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அடுத்தவருடம் யுத்தம் செய்ய நிதியிருக்காது என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஜே.வி.பி.யின் தேசப்பற்றை உரசிப்பார்த்திருக்கிறார்.

இவ்வாறு பார்க்கையில் மீண்டும் 25 நாட்களுக்கு சிறிலங்கா அரசியலாளர்கள் வரவு-செலவுத்திட்டம் தொடர்பான கயிறிழுத்தலில் தீவிர கவனம் செலுத்துவர் என்பது வெளிப்படுகின்றது. அதுமாத்திரமல்ல இது முடிவடைவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

2004 ஏப்ரலில் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்காவின் இப்பாராளுமன்றம் சபாநாயகர் தெரிவிலேயே பெரும் குழப்பங்களைச் சந்தித்தது. இக்குழப்ப நிலை தொடர்கின்றது. இன்னும் தொடரும் என்றே கூறமுடியும்.

இனப்பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு காணும் முயற்சி ஒன்றைச் சர்வதேசம் ஆரம்பித்த நிலையில் அதனைக்குழப்பும் முயற்சிக்குக்கிடைத்த ஆரம்ப வெற்றியாகவே இந்தப் பாராளுமன்றம் அமைந்தது.

'தேசப்பற்றாளர்களால்" நிரம்பிய இந்தப் பாராளுமன்றத்தில் இவர்கள் அனைவரதும் தேசப்பற்றுக்கள் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் மக்களிடம் 'வரவு-செலவுத்திட்ட விவாத அரங்குகளை நீங்கள் தவறாமல் பார்வையிட வேண்டும்" எனக்கோரியது. ஆனால் அவ்வாறு பார்க்கத்தேவையில்லாமல் வெளியிலேயே பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதேவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தான் விதைத்ததை அறுத்துக்கொண்டிருக்கிறது.
-வேலவன்-

நன்றி: ஈழநாதம்

0 Comments: