Friday, February 8, 2008

ஓராண்டிற்குள் யுத்தத்திற்கு முடிவு கோத்தபாயவின் தடுமாற்றம்

இவ்வாண்டிற்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனப் பிரகடனப்படுத்தி வந்த சிறிலங்கா அரச தரப்பு, அதற்கான தாக்குதலை - அதாவது, வன்னிப் பகுதி மீதான தாக்குதலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்தாக்குதல்களை வடக்கில் பல முனைகளிலும் நாளாந்தம் நடாத்தி வருகின்றது. மன்னார், மணலாறு, யாழ். குடாநாடு ஆகிய பிரதேசங்களில் முனைப்புப்படுத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களில் தீவிரம் பெற்றவையாகவும் உள்ளன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்த பிரகடனங்கள் வெளியிடப்படாது விட்டாலும் சிறிலங்கா அரச தரப்பும் சரி, இராணுவத் தரப்பும் சரி இதனை ஊர்ஜிதம் செய்யத் தவறவில்லை.

குறிப்பாக, சிறிலங்காவின் முப்படைகளின் தளபதியான சனாதிபதி மகிந்த ராஜபக்ச, இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இதனைப் பகிரங்கமாக அறிவிப்புச் செய்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இப்படை நடவடிக்கையானது மூன்று திசைகளில் இருந்து பல முனைகளில் மேற்கொள்ளப்படு கின்றது. இதில் தென்மேற்கில் மன்னார் மாவட் டத்தில் பல முனைகளில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருவதோடு, மணலாறு, யாழ். குடாநாடு அதாவது, தென்கிழக்கு, வடக்கு முனைகளில் மன்னாருடன் ஒப்பிட்டு ரீதியில் குறைந்தாலும் மோதல்;கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, கடந்த வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் மோதல்கள் இடம்பெறாத நாட்கள் இல்லை என்றே கொள்ள முடியும். அத்தோடு, பலமுனைகளிலும் குறிப்பாக, பரப்பாங் கண்டல், முள்ளிக்குளம், பெரிய பண்டிவிரிச்சான், பாலைக்குழி, அடம்பன், சின்னப்பண்டிவிரிச்சான் எனப் பலமுனைகளிலும் மோதல்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முனைகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளும் இடம்பெற்றதுண்டு.

சிறிலங்கா இராணுவத்தின் இப்படை நடவடிக்கைகள் கடந்த காலத்தில் வடக்கில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதான பாரிய படை நடவடிக்கைகள் போன்றல்லாது சற்று வேறுபட்டதாக உள்ளது. அதாவது, பல படையணிகளை (டிவிசன் துருப்புக்களை) ஒன்றாக இணைத்து பாரிய நகர்வுகளை மேற்கொள்ளும் தந்திரோபாயத்தில் இருந்து சற்று மாறுபாடானதாகவுள்ளது.

அதாவது, ஒரு ரிவிரச போன்றோ, ஒரு சத்ஜெய போன்றோ அன்றி ஒரு ஜெயசிக்குறு போன்றோ பாரிய அளவில் துருப்புக்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பதைத் தவிர்த்தது. குறைந்தளவு அதாவது, சில பற்றாலியன் துருப்புக்களைப் பெரும் சூட்டாதரவுடன் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது இராணுவத்தின் தந்திரோபாய மாகவுள்ளது.

இத்தகையதொரு நிலைக்குக் கடந்த காலப் பட்டறிவும் புதிய எதிர்பார்ப்புக்களும் கூடக் காரணமாக இருக்கலாம். அதாவது, தமது தரப்பிற்கு ஏற்படக்கூடிய பாரிய உயிரிழப்பைத் தவிர்க்கவும், விடுதலைப் புலிகளுக்கு நாளாந்தம் உயிரிழப்பை ஏற்படுத்தி புலிகளைப் பலமிழக்கச் செய்யலாம் என்பதான எதிர்பார்ப்பும் காரணமாக இருக்கலாம்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இதனை ஊர்ஜிதமும் செய்திருந்தார். அவரின் திட்டத்தின்படி நாளாந்தம் 10, 15 புலிகளைக் கொல்வதன் மூலம் புலிகளைப் பலமிழக்கச் செய்து தோற்கடித்து விட முடியும் என்பதாகும்.

ஆனால், இத்திட்டமானது, விடுதலைப் புலிகள் இதனை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதைப் பொறுத்ததாகவே அமையத்தக்கதாகும். ஏனெனில், சரத் பொன்சேகாவின் திட்டமானது தற்பொழுது பிசுபிசுக்கத் தொடங்கிய தொன்றாகிவிட்டது.

அதாவது, புதிய தாக்குதல் திட்டத்தின் மூலம் இதுவரையில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியை அவரால் ஈட்ட முடியாது போயுள்ளது. இது விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் யுக்திகளை எதிர்கொள்ளும் தந்திரோபாயத்தைக் கண்டறிந்து கொண்டுவிட்டனர் என்பதன் வெளிப்பாடே ஆகும்.

மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறிலங்காப் படைத்தரப்பு புதிய தந்திரோபாயத்தின் அடிப்படையில் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளுக்கு சராசரிக்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை மறுக்கப்பட முடியாததொன்றுதான். ஆனால், தற்போது சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக மன்னார் களமுனையில் சிறிலங்காப் படைத்தரப்பு எதிர்பார்ப்பிற்கு மீறியதான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றதென்பது வெளிப்படையானது. இதன் வெளிப்பாடே களமுனைத் தகவல்களை வெளியிடாது மூடி மறைத்துவிடச் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இதனால், பல நடவடிக்கைகளைக் கூட அது வெளியில் கூறாது விட்டுள்ளது.

இந்த வகையில் புதிய தந்திரோபாயமானது விடுதலைப் புலிகளைச் சிறிது சிறிதாக அழித்தல் என்பது மாற்றமடைந்து சிறிலங்காப் படையணிகளைச் சிறிது சிறிதாகச் சிதைத்தல் என்பதாகியுள்ளது. அதாவது, புதிய தந்திரோபாயமானது நிலத்தைப் பெருமளவில் மீட்டுத் தராததோடு இராணுவத் தரப்பிற்கு இழப்பை அதிகரிப்பதொன்றாகியும் உள்ளது.

அதிலும் குறிப்பாக, உயிரிழக்கும் படையினருக்கும் அதிகமாக படுகாயமடையும் படையினரின் தொகையும் அதிகரித்துள்ளது. அதாவது, களம் திரும்ப முடியாத படையினரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவுள்ளது.

இந்த வகையில், வடக்கில், சிறிலங்காப் படைத்தரப்பின் தந்திரோபாயம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் இடம்பெற்றுள்ள சில நிகழ்வுகள் சிறிலங்காப் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கொழும்பில், அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள், மொனறாகல மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள், அதற்கு முன்பதாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல்கள் என்பன அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியைக் கொடுப்பதாக மாறியுள்ளது.

சுருக்கமானதொரு விளக்கத்தைக் கூறுவதானால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை மீட்பதா- சாத்தியப்பாடானதா என்பது வேறு விடயம் - அன்றி தென்னிலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவதா என்ற கேள்வியை எழ வைத்துள்ளது.

இந்த விடயத்தில் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வரினும், தெற்கின் பாதுகாப்பை அவர்கள் மூலம் உறுதி செய்ய முடியுமா? என்பது கேள்விக்குரியதொன்றே ஆகும்.

இச்சூழ்நிலையானது யுத்தத்தை இவ்வாண்டிற்குள் முடிக்க முடியுமா? அதாவது அரச தரப்புக் கூறிவருவது போல் விடுதலைப் புலிகளை இவ்வாண்டிற்குள் தோற்கடித்துவிட முடியுமா? என்ற கேள்வியை அவர்களுக்குள் ளேயே எழவைத்தது. இது அரசாங்கத் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சில நாட்களுக்கு முன் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தனது முன்னைய மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டுள்ளதை உணரத்தக்கதாகவுள்ளது.

அதாவது, யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான கால வரையறையை நிர்ணயம் செய்ய முடியாது. ஐந்து சனாதிபதிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடாத்தியுள்ளனர். ஆனால், வெற்றிபெற முடியவில்லை என்பது போன்ற கருத்துக்கள், விடுதலைப் புலிகளை ஒரு வருடத்திற்குள் ஒழித்தே தீருவோம். யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்துவிடுவோம் என்பது போன்ற கருத்துக்களுக்கு மாறானதாகவே உள்ளது.

கோத்தபாயவின் இம் மாற்றத்திற்குக் காரணம் என்ன? கோத்தபாய ராஜபக்ச கூறிக்கொள்வது போன்று சிறிலங்கா ஆயுதப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

அத்தோடு, மேலும் பெருமளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதும் அரசாங்கத்திற்கு நெருக்கடிமிக்க தொன்றானதாக இல்லை. அதாவது ஆயுத தளவாடத்திற்கான நிதி ஒதுக்கீடோ, ஆயுத தளவாடங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களோ ஏதும் இருப்பதாகவும் இல்லை.

அது மட்டுமன்றிக் கோரும் ஆயுதங்களை வழங்குவதற்கும் - கோராமலே வழங்குவதற்கும் சில நாடுகள் இருக்கவே செய்கின்றன. அவ்வாறானால் கோத்தபாய தனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டமைக்குக் காரணம் தான் என்ன?

அதாவது, வடக்கில் எதிர்பார்த்த வெற்றியை, எதிர்பார்த்த காலப்பகுதிக்குள் எட்ட முடியவில்லை என்பதினாலா? அதாவது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரமாகவுள்ளதினாலா?

இல்லாதுவிடில், களமுனையில் இராணுவத் தரப்பிற்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புக்கள் கடந்த காலத்தைப் போன்று அவர்களின் மனநிலையைப் பாதிக்கத்தொடங்கியுள்ளதினால஼br />?? அதாவது கிழக்கைப் போன்று இல்லாது களமுனை இராணுவத்தினரின் மன வலிமையைப் பாதித்துள்ளது என்பதினாலா?

அன்றி விடுதலைப் புலிகளின் யுத்த தந்திரோபாயங்கள் எவ்வகையாக அமையக்கூடும் என்ற சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளமையினாலா? அதாவது, யுத்தம் இலங்கைக்கானதாக மாற்றம் அடைவதற்கான சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றுள்ளதினாலா?

சுருக்கமாகக் கூறுவதானால், இரண்டு காரணிகள் கோத்தபாயவின் இத்தகைய மாற்றத்திற்குக் காரணமாக இருத்தல்கூடும்.

1. எதிர்பார்த்த வகையில் இராணுவத் தந்திரோபாயம் வடக்கில் வெற்றி அளிக்காமல் போனமை

2. விடுதலைப் புலிகளின் தந்திரோபாயம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள சமிக்ஞைகள்.

ஆனால், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாண்டிற்குள் யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்படும் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவே தெரிகின்றது.

இதனை வெளிப்படுத்துமாப் போன்ற தாகவே 'அடுத்த இராணுவத் தளபதிக்கு யுத்தத்தை விட்டுச் செல்லப்போவதில்லை" என்ற அவரது கூற்று அமைந்துள்ளது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இத்தகையதொரு நிலைப்பாட்டுடன் இருப்பதற்குச் சிலவேளை வேறு காரணங்களும் இருத்தல் கூடும்.

அதாவது, இவ்வாண்டின் இறுதியில் ஓய்வுபெற வேண்டிய அவர் படைத்துறை வெற்றி மூலம் தனது பதவிக்காலத்தை நீடிக்க முற்படலாம். அன்றி பதவி துறந்து செல்கையில் சிங்களவர்களின் நாயகனாகச் செல்ல முற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் வலுவடைந்த பின்னர் இராணுவத் தளபதிகள் வெற்றி வீரர்களாகப் பதவி துறந்து சென்றதில்லை என்பதே நிதர்சனமாகும்.

இத்தகையதொரு நிலையில், தற்பொழுது எழும் கேள்வியானது சிறிலங்காப் படைத்துறை தற்போதைய யுத்த தந்திரோபாயத்தையே தொடர்ந்து கைக்கொள்ளப்போகின்றதா? அன்றி மாற்றுத்திட்டம் ஒன்றைக் கைக்கொள்ளக்கூடுமா? என்பதே ஆகும்.

கடந்த காலத்தில் சிறிலங்கா அரசு விடு தலைப்புலிகளுடனான போரை எதிர்கொள்ளஃ வெற்றிகொள்ள பல வழிகளைக்கையாண்டுள்ளது. படைத்துறை கட்டுமானங்கள், கட்ட ளையிடும் அதிகார மையங்கள் என்பவற்றை மாற்றுதல், ஒருங்கிணைத்தல், தாக்குதல், தந்திரோபாயங்களை மாற்றுதல் எனப் பல வழிமுறையைக் கையாண்டுள்ளது. ஆனால், யுத்தத்தில் தான் வெற்றிபெற முடியவில்லை.

அதாவது, கோத்தபாய ராஜபக்ச ஐந்து சனாதிபதிகளால் யுத்தத்தில் வெற்றிபெற முடியவில்லை எனக்கூறியது சரியே ஆயினும், உண்மையில் ஐந்து சனாதிபதிகளால் மட்டுமல்ல, யுத்தத்தை வழிநடத்திய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், ஆயுதப்படைகளின் தளபதிகள் என எவராலுமே யுத்தத்தில் வெற்றி பெறமுடியவில்லை என்பதே நிதர்சனமானதாகும். இது கோத்தபாயவிற்கு ஓரளவு புரியத் தொடங்கி விட்டது போல் இருப்பினும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புரிய மறுக்கின்றார். அதாவது வரலாற்றையும் யதார்த்தத்தையும் அவர் ஏற்கத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.

நன்றி -ஜெயராஜ்-

0 Comments: