Friday, February 29, 2008

வெறும் வாயை மெல்லுவோருக்கு கிடைத்த `ஒருபிடி அவல்'

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வழிவகுத்த அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்தும் இந்தியா மீது கண்டனக் கணைகளை ஜே.வி.பி. உக்கிரமாகத் தொடுக்க ஆரம்பித்துள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது நாட்டைத் துண்டாடுவதற்கு வழிகோலிவிடும் என்றும் அதனை முழுமையாக அரசாங்கம் அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க முதற்கொண்டு அதன் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச வரையில் உச்ச ஸ்தாயியில் முழக்கமிட ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை -இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தற்போது வயது 20 ஐத் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் இந்தத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த, அச்சமயம் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி. யும் பின்னர் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபை நிர்வாகத்தில் பங்களிப்பினை வழங்கி வருவது புதிய விடயமல்ல.

ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த விடுவதில்லை என்றே ஜே.வி.பி இப்போது வாதிட்டு வருகின்றது. இவ்வாறு அக்கட்சித் தலைவரும் முக்கிய உறுப்பினர்களும் கண்டனம் தெரிவிப்பதும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை என சூளுரைப்பதும் நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயற்பாடெனவும் இது தண்டனைக்குரியதென்றும் அண்மையில் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் டிலான் பெரேராவும் தெரிவித்திருந்ததையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

சுமார் இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக நாட்டின் சட்டவிதியாக இருப்பதை செவ்வனே அமுல்படுத்தப் போவதற்கு ஏனைய கட்சிகளுடன் கருத்தொருமைப்பாடு காண வேண்டும் என்று கூறுவதும் கூட உண்மையிலேயே விந்தையான விடயமாகும்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் வட கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரே நிராகரித்து விட்ட நிலையில், மாகாண நிர்வாக முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வு முறைமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணையுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் கொள்கையளவிலான இணக்கப்பாடுகளும் ஏற்பட்ட நிலையில் இப்போது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறுவது வேடிக்கையானதும் மக்களைக் குறிப்பாக சிங்கள மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வாக்குவங்கிக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியுமென்ற குறுகிய அரசியல் இலாபம் தேடும் சிந்தனையெனக் கருதுவதைத் தவிர என்னவென்று கூறுவது?

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க வைத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வைத்து பிரிவினையை மேற்கொள்ளும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதென்ற தொனியில் ஜே.வி.பி. புதுடில்லியைச் சாட ஆரம்பித்திருக்கிறது.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகள் ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரலென வர்ணித்து கடுமையாகப் பிரசாரம் செய்து வந்த ஜே.வி.பி. யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது `13 ஆவது திருத்தம்' என்ற விடயத்தைப் பற்றிப்பிடித்து அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை நடத்தப் போவதாக கூறியிருக்கும் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச தேவையேற்படின் வீதிப் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யுத்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான சுமையைத் தாங்கமுடியாமல் மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவதிப்படும் நிலைமை அதிகரித்து வருகையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு வேண்டுமானால் வீதிப் போராட்டங்களில் ஈடுபடுவது பொதுமக்களைக் கவர்ந்திழுப்பதற்கான நடவடிக்கையாகக் கொள்ளமுடியும்.

ஆனால், சிறுபான்மைச் சமூகமொன்றின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் மிகச் சிறியளவிலான நடவடிக்கைகளுக்குக் கூட அவற்றைப் பூதாகாரமாக பெருப்பித்து பூச்சாண்டி காட்டி ஆதாயம் தேட முயற்சிப்போரை நியாயபூர்வமாக சிந்திப்போர் முழுமையாக நிராகரித்து ஒதுக்கி விடுவார்களென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதான அறிவிப்பு வெறும் வாயை மெல்லும் சக்திகளுக்குக் கிடைத்த ஒரு பிடி அவல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.


நன்றி :- தினக்குரல்

0 Comments: