Thursday, April 9, 2009

வன்னியில் இரத்தக்களரிப் பேராபத்து; தடுத்து நிறுத்தத் தக்கார் யார்...?

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தி, சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அந்த நாட்டின் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.
தாம் மட்டுமன்றி இணைத்தலைமை நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுடன் சேர்ந்தும் இலங்கையில் போரை நிறுத்துவதற்குச் சாத்தியமான வழிவகைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

நோர்வேயின் என்.ரி.பி. செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியில் அவர் இவற்றைச் சொல்லியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் தேவை என்பதனை சமீப காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பல தரப்பு களும் ஏற்கனவே தமது கோரிக்கையாக முன்வைத்து விட்டன.

எந்தக் "கொம்பன்" சொன்னாலும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் அரசாங்கம் மிக உறுதியாக நிற்கிறது; ஆணித்தரமாகக் கூறுகிறது.
அதனை "மேவி" எதனையும் செய்ய முடியாத நிலையிலும், வற்புறுத்திச் செய்விக்க முடியாத பரிதாப நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசம் கையறு நிலையில் உள்ளமை,கறுப்புக்கு மேல் வெள்ளை போன்று மிகத் துல்லியமாகத் தெரி கிறது; துலாம்பரமாகப் புரிகிறது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பின்னணியில் போர் நிறுத்தம் ஒன்றை வருவிப்பதற்கான முயற்சி, கல்லில் நார் உரிக்கும் கருமமே என்பது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே. நோர்வே அமைச்சர் சொல்ஹெய்மின் வாயிலிருந்து வந்த பின்வரும் சொற்கள் அதனையே தொக்கு நின்று உறுதிப்படுத்துகின்றன:இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உலகத்திலேயே தன்னால் இயன்றவரை அதிக மாக உழைப்பது நோர்வே நாடே. அதேவேளை எல்லாத் தரப்புக்களின் கண்டனத்துக்கும் ஆளாவதும் எமது தேசமே.எங்கள் மீதான கண்டனங்கள் வாளிகளிலும் வந்து குவிகின்றன; குப்பைக் கூடைகளிலும் விழுந்து பெருகுகின்றன. நாம் தமது பிரச்சினையில் மிகக் குறைந்தள விலேயே அக்கறை காட்டுகிறோம் என்று தமிழர்கள் குறை சொல்கிறார்கள். அதேவேளை நாம் அளவுக்கு அதிகமாக இது தொடர்பில் செயற்படுகின்றோம் என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது என்று மனம் வெதும்புகிறார் அவர்.

எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளதும் கவலை கொடுத்துள்ளதுமான வன்னியின் மோசமான மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதற் கவனம் தேவை என்பதனை சொல்ஹெய்மும் தமது பேட்டியில் அழுத்திக் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்று உருவாகியுள்ள மனிதாபி மானப் பேரவலம், உலகத்திலேயே மிகமிக மோசமான தாகும். அங்கு போரில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமை ஒருபுறம் இருக்க, அந்தப் பிரதேசத்தில் நடைபெறும் குண்டுத்தாக்குதல் மிகமிகக் கொடுமையானதாகும். அங்கு வாழும் மக்கள் அதிலிருந்து தப்பிக்கொள்வதற்குப்பாது காப்பான வழிமுறை எதுவும் இல்லை பொது மக்கள் தங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசிடம் கேட்டுள்ளோம். அதேபோன்று மோதல் பிரதேசத்திலிருந்து வெளியே செல்ல விரும்பும் பொது மக்களை அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளிடம் கேட்டுள்ளோம். ஆனால் எமது கோரிக்கையை இரு தரப்பினரும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சொல்ஹெய்ம் மனம் நொந்துள்ளார்.

சொல்ஹெய்ம் கூறிய மனிதாபிமான நெருக்கடி பெரும் பூதாகாரமாகி, பேராபத்து நிலைக்கு வந்து கொண்டிருப்பதை இலங்கைக்கு வந்து திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் கலாநிதி வால்ட்டர் கலினும் எடுத்துக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக அவர் இங்கு வந்திருந்தார்.
வன்னியில் பெரும் இரத்தக்களரி ஏற்படும் பேரபாயம் தோன்றியுள்ளது. எல்லா வழிகளாலும் அந்த இரத்தக்களரி உடனடியாகத் தடுக்கப்படவேண்டும் என்று கலாநிதி வால்ட்டர் கலின் ஜெனிவாவில் செவ்வாயன்று வழங்கிய வானொலிப் பேட்டியில் வலியுறுத்தி உள்ளார்.
வன்னியில் மனிதாபிமானப் பேராபத்து, பெரும் இரத்தக்களரியாக உருமாறிக் கற்பனைக்கும் எட்டாத அளவில் தமிழர்கள் செத்துமடிவது தடுக்கப்பட வேண் டும். இதனை இரண்டு தரப்புகளுக்கும் உணர்த்துவதில் ஐ.நா., நோர்வே, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சக்தி யுள்ள நாடுகள் அதிக சிரத்தை யும் கவனமும் எடுத்து வேகத்துடன் செயற்படுவதே இன்றைய தேவை.

அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அதிகாரமும் சக்தியும் மிக்க அமைப்பிடம் வன்னி மக் களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படுவதே இப்போதுள்ள மனிதாபிமானப் பேரவலப் பூட்டை உடனடியாக உடைக்கக் கூடிய திறவுகோலாக அமையும்.

நன்றி
- உதயன் -

0 Comments: