Monday, April 6, 2009

தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர்

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு.

அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம்.

இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம்.

இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது.

பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான்.

பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலத்தை மையமாக கொண்டாலும் தனித்து அதற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல.

இராஜதந்திரம் பேச வேண்டிய நேரத்திலெல்லாம் பேசுவது கிடையாது. பேசப்படுகின்ற விடயங்களிலெல்லாம் அர்த்தங்கள் இருக்காது.

தம்மைச் சுற்றி அராஜகங்கள் தலைதூக்கும் போது அமைதியாக இருப்பதுவும், பொருத்தமற்ற நேரங்களில் தேவையற்ற விடயங்களை கிளறுவதுவும் இராஜதந்திரம்தான்.

இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் விரித்து வைத்திருப்து ஒரு பொறி. அதிலிருந்து மீள்வது கடினம்.

விடயங்களை ஆழமாக அவதானித்து தனது இலக்கில் மிக மிக கவனமாக செயற்பட்டு, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப திறமையாக செயற்பட்டு அவ்வாறான ஒரு பொறியை வைக்கக் கூடியதுவே சிறந்த இராஜதந்திரமாகும்.

தனித்து அரசியலுக்கும், பொருளாதாரத்துக்கும் மட்டுமன்றி வெற்றிகரமான ஒரு போரை முன்னெடுப்பதற்கும் இராஜதந்திரம் துணை நிற்கும்.

மேற்கூறிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இராஜதந்திரப் பொறிதான் 'ஈழப் போர் - ஐஐஐ" இன் முடிவு காலத்தோடு இலங்கைத் தீவை நோக்கி சடுதியாகவும் விரைவாகவும் நகர்ந்தது.

இந்த நகர்வுக்கு பல்வேறு பின்புலங்கள் இருப்பினும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய 'தலைவிதியோடு" தொடர்புபட்டமை முக்கியத்துவமானது.

தமது அவல வாழ்வுக்கு பரிகாரம் கிடைக்கும்: சுபீட்சமான வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, பலஸ்தீன பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் ஒரு 'தேங்குநிலை களமாக" இருந்தமையை சரிவர எடைபோட்ட போதும் 'நல்லதொரு மாற்றத்திற்கான" ஆரம்பப் புள்ளியாக போர் நிறுத்த ஒப்பந்தம் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமக்கு இருக்கிறது, ஆதலால் நல்லதொரு மாற்றத்திற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை நோக்குவோம் என்ற தொனிப்படவே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான தமது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

புதிய உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்ப, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதைலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தினூடாக புலிகள் சவால் நிறைந்த சர்வதேசமயப்பட்ட இராஜதந்திர களத்தை திறந்து வைத்தார்கள்.

அதிலும் கவனிக்கப்பட வேண்டிய பிரதான விடயம் யாதெனில், அந்த சவால் மிகுந்த இராஜதந்திர களத்தில் உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் முக்கிய தரப்புகளாக இருந்தமையாகும்.

இந்தியாவுடனும் அதன் படைகளுடனும் போர் புரிவதற்கு புலிகள் தீர்மானித்த பிற்பாடு எடுக்கப்பட்ட அடுத்;த 'அபரிதமான" ஒரு முடிவாகவே இதனை நோக்க முடிகிறது.

வெற்றி தோல்வியே என்பதற்கு அப்பால், அந்த களம் திறக்கப்பட வேண்டியது, சளைக்காத போராட்டம் அவசியமானது என்பதுடன் அதற்கான ஆத்மபலம் உண்டு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே இதனை கணிப்பிட முடிகிறது.

இந்த வேரோட்டத்தில் முளைவிட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும், சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், புலிகளைப் பலவீனப்படுத்தவும் மேற்கின் விசுவாசியான ஐக்கிய தேசிய கட்சியினால்; மேற்கின் அனுசரணையுடன் முன்னகர்த்தப்பட்டது.

சர்வதேச சமூகம் எனக் கூறப்படுவோருக்கு, ஈரான், ஈராக்குக்கு இணையான எண்ணை வளமோ, அல்லது ஆபிரிக்கா கண்டத்தில் குவிந்துள்ளது போன்ற கனிம வளங்களோ அல்லது கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது போன்ற தமது தேசிய நலனில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய கேந்திர முக்கியத்துவமோ இலங்கைத் தீவுக்கு இல்லை.

ஆனால், அது போன்ற முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்கு இல்லாவிட்டாலும் கூட இலங்கைத் தீவை புறந்தள்ளி வைக்க முடியாத அளவுக்கு கணிசமானதும் அவசியமானதுமான முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்கு உண்டென்பதை எந்தக் கட்டத்திலும் மறுக்க முடியாது.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா என சுழல்கிற 'அமைதிப் புயலின்" சூட்சுமம் இலங்கைத் தீவு ஒதுக்கி வைக்கப்பட முடியாதது என்பதை வெளிப்படுத்துகிறது.

மேற்கூறிய சூட்சுமம், சிறீலங்காவினுடைய ஆட்சியாளர்களுக்கு அதிர்ஸ்டகரமான சாதகத்தன்மையை அள்ளி வழங்குகிறது.

அந்த தன்மையே சிறீலங்கா ஆட்சியாளர்களை எத்தகைய பொருத்தமற்ற தீர்மானங்களையும்;, முடிவுகளையும் எடுக்க தூண்டுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்ற முடிவானாலும் சரி, போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற முடிவானாலும் சரி மேற்கூறப்பட்ட அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, அமெரிக்காவின் ஆசியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முடிந்த வரை புலிகளை பலமிழக்கச் செய்தல் என்ற பொறியுடன் அமெரிக்காவின் ஆதரவுடன் தனது சில அமைச்சர்களுக்கோ நாட்டின் ஜனாதிபதிக்கோ தெரியாமல் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு என்பது இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த திட்டமானது, புலிகளை பலமிழக்கச் செய்தல் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக கூறும் திட்டத்தை விட அபாயகரமானது.

புலிகளுக்குள் குழப்பங்களினூடாக பிளவுகளை உண்டாக்கி பலமிழக்கச் செய்தல் என்ற அவர்களுடைய கன்னி முயற்சி வெற்றி பெற்றது.

அதனூடாக அமைப்பையும் அதன் தலைமையையும் பலவீனப்படுத்துதல் திட்டமாகும்.

அதன் காரணமாக புலிகளே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக் கொள்வார்கள். அதன் விளைவாக அவர்கள் முற்று முழுதாக சர்வதேசத்திலிருந்து ஒரங்கட்டப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் பெருமளவில் காணப்பட்டது.

ஆனால், புலிகள் தொடர்பான எதிர்பார்ப்பு அவர்களின் வேறுபட்ட பிரதிபலிப்புகளால் மீண்டும் ஒருமுறை தவிடுபொடியானது.

ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த மிலிந்த மொரகொட அவர்களும், நவீன் திசநாயக்கா அவர்களும் 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியது தாம்தான் (ஐக்கிய தேசிய கட்சி) என்பதை பிரசார கூட்டங்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர்.

அதற்கான விளைவுகளை ஜனாதிபதி தேர்தலில் அறுவடை செய்து, இன்று அதை வெளிப்படுத்தியவர்கள் கூட இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டு, அதன் தலைமையும் பலவீனப்பட்டு நீண்டகாலமாக காட்டி காத்து வளர்த்த கட்சியின் தனித்துவமும் சிதைவடைந்து, இன்று கட்சியின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், அதிகமான போர் நிறுத்த மீறல்களை தமிழீழ விடுதைலைப் புலிகளே மேற்கொண்டதாக சிறீலங்கா அரசாங்கத்தால் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, தமிழீழ விடுதைலைப் புலிகளுக்கு ஆத்திரமூட்டும் பல சம்பவங்களும் சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

அதில் 2007 நவம்பர் இடம்பெற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலும், மாவீரர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்களும் முக்கியமானவற்றுள் சிலவாகும்.

மேற்குறிப்பிட்ட நிலையில், சர்வதேச சமூகம் தொடக்கம் உள்நாடு வரை தமிழீழ விடுதைலைப் புலிகளே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகும் முடிவை அறிவிப்பார்கள் என்ற எதிர்வுகூறல்கள் நிலவியிருந்தது.

ஆனால், அதற்கு எதிர்மாறாக அரசாங்கமே அத்தகைய முடிவை 2008 ஜனவரி 2 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இது யார் யாருக்கு என்ன செய்தது என்பதை விட அமெரிக்காவை அசௌகரியமடையச் செய்துள்ளது என அமெரிக்கா தெரிவித்த கருத்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்ததனூடாக, தாம் அசௌகரியம் அடைந்துள்ளதை அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் சீன் மக்கோமக் (ளுநயn ஆஉஊழசஅயஉம) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார். "ருnவைநன ளுவயவநள றயள வசழரடிடநன டில வாந னநஉளைழைn".

இராஜதந்திரமென்பது கேவலமான விடங்களை மிக இனிமையான முறையில் சொல்வதும் செய்வதும் (னுipடழஅயஉல ளை வழ னழ யனெ ளயல வாந யௌவநைளவ வாiபௌ in வாந niஉநளவ றயல) என அமெரிக்க பல்துறை அறிஞ்ஞரான ஐசாக் கோல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரை ஒருவர் நெருக்கடிக்குள் தள்ளும் பொறி மிகுந்த இராஐதந்திர களத்தில் யார் வென்றார்கள் என்பது ஒரு புறமிருக்க, 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் சமாதனமும், சுபீட்சமும் மலரும் என எதிர்பார்திருந்த மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாந்து போனார்கள் என்பது கவலையான விடயம்.

இத்தகைய நிலையிலேயே, சர்வதேச உறவுகளுக்கான திணைக்களம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதற்கான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் அவர்களை நியமித்ததனூடாக, சர்வதேச ரீதியாக கணிசமான காலப்பகுதி இடைவெளியாக இருந்த இடத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் காலமறிந்து, உரியமுறையில் நிரப்பியுள்ளார்கள்.

களமும் புலமும் தீவிரமடைந்துள்ள ஒரு காலகட்டத்தில்தான், நோர்வேயின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான திணைக்களத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கும், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்களுக்குமிடையில், தொலைபேசி மூலமான உரையாடல் இடம்பெற்றதையடுத்து சிறீலங்கா அரசாங்கத் தரப்பு மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகளினூடாக அறிய முடிகிறது.

களமுனையில் தொடர்ச்சியான பின்னகர்வுகளில் ஈடுபட்டு வரும் புலிகள், இராஜதந்திர களத்தில் படி நிலை வளர்ச்சியடைந்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவில் தொடரும் இனக்குழும அரசியல் மோதுகை என்பது, என்றுமில்லாததவாறு சர்வதேச சமூகத்தின் 'கவனத்தை ஈர்ந்துள்ளது".

சிறீலங்கா அரசாங்கம் தொடர்பாக மென்மையான நிலைப்பாட்டை எடுத்து வந்த ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் இவற்றின் கூட்டணிகளின் நிலைப்பாட்டில், மாற்று நிலையாக்கம் ஒன்று சடுதியாக ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இதனை 'புதிய மாற்றம் ஒன்றிற்கான ஆரம்பப் புள்ளியாக கருதமுடியும்."

சிறீலங்கா அரசாங்கமோ வன்னிக் களமுனையில் தமது கவனத்தை குவித்திருக்க, புலிகளோ சர்வதேச இராஜதந்திரக் களத்தில் முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சுமார் ஐந்து தாசப்த்த காலங்களுக்கு மேலாக, அணிசேரா கொள்கையில் இருந்த சிறீலங்கா, மேற்குலகம் விரும்பாத ஒரு கொள்கையை கடைப்பிடிக்கப் போய், தனக்கிருந்த ஆதரவை இழந்தது மட்டுமன்றி, தமிழர் தரப்புக்கு சாதகமான சூழலுக்கான 'ஒரு வாசற்கதவை" உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இது தனித்து மேற்குலகின் சிறீலங்கா தொடர்பான கொள்கையை மாற்றியமைக்க வழிகோலியது மட்டுமன்றி, பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்களையும் வௌ;வேறு வடிவங்களில் ஆக்ரோசத்துடன் அணிதிரள வைத்துள்ளது.

'ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு", 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" ஆகியன நீதியை நிலை நிறுத்தி உரிமையை மீளப்பெறுவதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட, 'தமிழ் இளையோர் அமைப்பை" முதன்மையாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

தமது உறவுகள் தமிழர் தாயகத்தில் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதால், வெகுண்டெழுந்த புலம்பெயர் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தத்தை உண்டுபண்ண தொடங்கியுள்ளன.

இவற்றிற்கான சில உதாரணங்களே, கனடா நாடாளுமன்றத்தில் இலங்தை; தீவு தொடர்பாக இடம்பெற்ற அவசர கலந்துரையாடல் மற்றும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத போதும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கத்தீவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை ஆகும்.

இவை போன்ற நடவடிக்கைகளின் வெளிப்பாடே, போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் உடனடியான மனிதாபிமான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உள்ளிட்ட மேற்குலகு அழுத்தம் கொடுத்து வருவதாகும்.

சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பார்க்க, புலிகளை முற்று முழுதாக அழித்து போரை முடிவுக்கு கொண்டு வருவதாக விடுக்கப்பட்ட காலக்கெடுக்கள் அதிகம்.

சிறீலங்காவின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் போன்றோர் காலக்கெடு விதித்து களைத்துப் போன நிலையில், அவர்களின் வரிசையில் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள், புலிகளுடனான போர் இன்னும் மூன்று வார காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், தென்னிலங்கையில் வெளிப்படையாகப் பேசப்படுகின்ற விடயங்களுக்கும், பாதுகாப்பு சபையில் பேசப்படுகின்ற விடயங்ககுக்;கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுவதாக அறியமுடிகிறது.

அதனைத்தான், வன்னிக் களமுனையின் மிகப்பிந்திய களநிலவரமும் வெளிப்படுத்துகிறது.

சமர்களை தொடர்ச்சியாக வென்ற சிறிலங்காப் படையினரால், அவர்கள் நினைப்பது போலவோ அல்லது அவர்களின் அரசாங்கம் எண்ணுவது போலவோ போரினை வெல்ல முடியவில்லை.

புலிகளை நெருக்கடிக்குள் தள்ளிய போர், இப்போது, அதனை முன்னெடுக்கின்ற அரசாங்கத்தையே முட்டி மோதி பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்போகிறமைக்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

களமுனையில் கையோங்குவதால் இராஜதந்திரத்தை வளைத்துப்போடுவதிலும் பார்க்க, இராஜதந்திர நகர்வின் ஊடாக களமுனையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

இதனைத்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நான்கம் கட்ட ஈழப்போரும் கட்டியம் கூறி நிற்கிறது.
- நி.பாலதரணி -

0 Comments: