Saturday, April 25, 2009

சர்வதேச சதியை புரிந்துகொள்வோம்

வரலாற்றில் படித்த கொடூரமான மனிதப் பேரவலங்களுக்கு சற்றும் குறையாத குரூரமான கொலைக்கூத்து படலம் ஒன்று சிறுபான்மை இனம் ஒன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வேளையில் நீதியரசர்களாகவும் - மனசாட்சி உள்ள மனிதர்களாகவும் - மனிதநேயத்தின் மீட்பர்களாகவும் தம்மை கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகமும் அது சார்ந்த பொது அமைப்புக்களும் ஈழத்தமிழரின் இரத்தத்தை இன்னமும் பரிசோதனை செய்துகொண்டு அறிக்கைகளில் அழுது வடித்துக்கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை எனப்படும் நீதி அவை இன்று தன்நேசப் பின்னணியுடனும் அதில் அங்கம் வகிக்கும் அரசுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும்தான் இயங்கும் என்ற உண்மை, வெளிப்படையாகவே தெரியத்தொடங்கிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும் தமது அரசியல், பொருளாதார லட்சியங்களை விட்டிறங்கி வந்து எந்த ஒருநாடும் தவிக்கும் வாய்க்கு தண்ணி கூட தரப்போவதில்லை என்பது இன்றைய நிலையில் ஐ.நா. ஊடாக தெளிவாக விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது.

அப்படியானால், ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் என்பது தற்போது செய்து கொண்டிருப்பது என்ன?.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை முயற்சிகளை சகல பலத்தையும் பிரயோகித்து நசுக்கிவிடுவது என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் இன்று நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது ஏற்றுக்கொண்டாகவேண்டிய உண்மை.

தமிழரின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதம்" என்ற சொல்லிற்கு கீழேயும் -

அங்கு அதற்காக எத்தனை விலையையும் கொடுப்போம் என்று ஆக்கிரமிப்பு சிறிலங்கா படைகளின் கொலைத்தாண்டடிவத்தில் தமது உயிர்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்மக்களை மீட்கிறோம் என்று அதனை 'மனிதாபிமான விவகாரம்" என்ற சொல்லின் கீழேயும் -

ஈழத்தமிழ் மக்களின் சுயஉரிமைப்போராட்டம் என்ற விடயத்தை அடியோடு நசுக்கிவிடுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான சகல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கபடநாடகம்.

'பயங்கரவாதம்", 'மனிதாபிமான விவகாரம்" இந்த இரண்டு சொற்களையும் தவிர்த்த ஏதாவது உருப்படியான - காத்திரமான - அறிக்கைகளையாவது, தமிழ்மக்களின் கரிசனைகொண்டுள்ளதாக தன்னை காண்பிக்கும் இந்த சர்வதேச சமூகம் இதுவரை விடுத்திருக்கிறதா? அல்லது அதனை ஒட்டி நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று சித்தரிக்கும் சர்வதேச சமூகம், கொத்துக்குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றுகுவித்த சிறிலங்கா அரசை அழைப்பதற்கு என்ன சொற்பதம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அது தனிவாதம். அதனை விட்டுவிடுவோம். ஏனெனில் அதனை இப்போது வாதிப்பதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

ஈராக்கில் இரசாயன ஆயுதமிருப்பதாக படையெடுத்து கடைசியில் தன்முயற்சிக்கு பாடைகட்டிய அமெரிக்கா, இன்று சிறிலங்காவில் அவ்வாறு ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றால் உண்மையை ஆராய்வதற்கு ஒரு சுயாதீன விசாரணை குழுவையாவது களத்துக்கு அனுப்பியிருக்கலாமே? அது செய்வதற்கே கையால் ஆகாத அமெரிக்காவின் புதிய அரசின் 'அறிக்கை தலைவி" ஹிலாரி - ஆங்கிலத்தில் என்னென்ன துயரமான வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனையையும் தனது ஒவ்வொரு அறிக்கைகளிலும் பயன்படுத்தி ஒப்புக்கு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார். இந்த ஒப்பாரி திருகோணமலைக்கான 'திருக்கூத்து" என்பது ஒருவரும் புரியாத விடயமல்ல.

இதேபோலத்தான் பிரிட்டனும் ஏனைய நாடுகளும் கூட. இந்தியாவின் கக்கத்தில் இருந்துகொண்டு கொட்டமடிக்கும் சிறிலங்காவை எதிர்க்க பிரிட்டனுக்கு அச்சம். ஏனெனில், இந்தமாதிரியான சூழ்நிலையில் சிறிலங்கா விடயத்தில் வெளிப்படையாக ஏதாவது செய்யப்போய் அது இந்தியாவுடன் முறுகலை ஏற்படுத்த, அதுவே 100 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் கொண்ட தனது பிரமாண்டமான வர்த்தக சந்தையை இழக்கவைத்துவிடும் என்ற அச்சம் பிரிட்டனுக்கு.

இந்த முத்துமாலையின் வழியேதான் சர்வதேச சமூகத்தின் மனக்கணக்கு பயணிக்கிறது. போதாக்குறைக்கு தற்போதைய உலக பொருளாதார நிலைவரமும் வெளிநாடுகளை இப்படியான முடிவுடன் மட்டும் நின்றுகொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. அதுவும் ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுள்ள பெரும் துர்ப்பாக்கிய நிலை.

இந்தமாதரியான ஒரு சூழ்நிலையில் - தமது இந்த கையாலாக தன்மையை வெளிப்படையாக காண்பிக்க முடியாத நிலையில் - சர்வதேச சமூகம் எனப்படுவது தந்திரமாக காய்களை நகர்த்தி, தமிழரின் விடுலைப்போராட்டத்தை பயங்கரவாதம், மனிதாபிமான விவகாரம் என்ற இரட்டைச் சொற்களுக்குள் சறுக்கி விழுத்திவிட்டு, தாம் தமது தார்மீக கடமையிலிருந்து தப்பிக்க பார்க்கின்றன. முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை ஒரு மூச்சுப்பிடித்து எல்லோரும் சேர்ந்து அமுக்கிவிட்டால் அழித்துவிடலாம் என்ற கணக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பார்க்கிறது.

அதற்காக அவை சிறிலங்கா அரசுடன் பேரம் பேசியே இந்த போர் நடைபெறுகிறது என்பதையும் தமிழ்மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு தூக்கியெறிந்ததும் இந்த சர்வதேச சமூகத்தின் ஆசிர்வாதத்துடன்தான். யுத்தத்தை ஆரம்பித்ததும் இந்த சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன்தான். சிறிலங்கா அரசுக்கு சகல உதவிகளையும் வழங்கி இந்த வருட ஆரம்பத்துடன் இந்தப்போரை முடித்துவிடவேண்டும் என்று இந்த பன்னாட்டு சமூகம் கட்டளையிட்டது.

ஆனால், உலகம் பூராகவும் கிடைத்த உதவிகளைக்கொண்டு சண்டையிட்டும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரலும் முடியப்போகிறது போர் முடிவுக்கு வந்தபாடில்லை. சிறிலங்கா அரசோ சர்வதேச சமூகமோ எண்ணியதைப்போல விடுதலைப் புலிகளை அவ்வளவு எளிதாக தோற்கடிப்பது சாத்தியப்படவில்லை. நாட்கள் செல்ல செல்ல - மனிதப்பேரவலங்கள் கூடக்கூட - வெளிநாடுகளுக்கு உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்ததே தவிர, தாங்கள் நினைத்த காரியங்கள் எவையும் களத்தில் நடைபெறவில்லை. சப்பாத்துக்குள் அகப்பட்ட குறுணிக்கல் போல இந்தப்போர் அனைத்துலகத்துக்கும் தொடர்ந்தும் நெருக்குதலை கொடுத்தவண்ணமுள்ளது.

இதனால் சீற்றமடைந்துள்ள வெளிநாடுகள் தற்போது சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. அவை என்னமாதிரியான அழுத்தமென்றால், போரை உடனடியாக முடிக்கும்படியான அழுத்தம் ஆகும். என்ன விலை கொடுத்தாவது நிலங்களைக்கைப்பற்றி, விடுதலைப் புலிகள் இனி இல்லை என்ற செய்தியை உலகம் நம்பும் வகையில் ஒரு சூழ்நிலையை உருவாக்கும்படியே இந்த பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இது பலருக்கு ஏற்றுக்கொள்ள இயலாத விளக்கமாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை.

விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு ஒவ்வொரு காலகட்டத்தில் உலகம் வௌ;வேறு வகையான வியூகங்களை கையிலெடுத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் - 21 ஆம் நூற்றாண்டில் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற படலம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் - எழுச்சிபெற்ற விடுதலைப் போராட்டத்தை - வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஒத்துவராது என்ற கணிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச சமூகம் தருணம் பார்த்து தூக்கியுள்ள கடைசி காண்டீபம்தான் தற்போது நடைபெறுகின்ற கபட நாடகம்.

சர்வதேச சமூகத்தின் முயற்சிகளின் ஒரு அங்கமாக, புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. தமது உறவுகளின் உரிமைக்காக அவர்கள் எழுப்புகின்ற தொடர்ச்சியாக குரலை இந்த நாடுகள் வேண்டுமென்றே கணக்கிலெடுக்காது விட்டு, புலம்பெயர்ந்து வாழும் மக்களை, இனியென்ன செய்வது என்றதொரு மனதளவில் சளைப்புநிலைக்கு தள்ளிவிடுவது என்ற காரியங்களையும் தந்திரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுதான் தமிழ்மக்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம்.

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை காலநீட்சியின் அடிப்படையில் நசுக்கிவிடுவது என்றும் அதற்கான குரலை சளைக்க வைத்துவிடுவது என்றும் திட்டமிட்டு செயற்படும் பன்னாட்டு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு எமது மக்கள் எடுபடப்போகிறார்களா?

தமிழ்மக்கள் சந்தித்துள்ள இந்த வரலாற்று காலகட்டத்தில் - முப்பதாண்டு கால விடுதலைப்போர் ஆதிக்க சக்திகளின் அரசியல் சாணக்கியத்தில் அகப்பட்டு அழிந்துவிடப்போகிறதா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழன் ஒவ்வொருவனும் தம்மை தாமே கேட்கவேண்டிய கேள்வி இது. ஏனெனில் தமிழரின் போராட்டம் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட முழுமையாகவே புலம்பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் வந்துவிட்டது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய வரலாற்றுப்பொறுப்பு இந்த மக்களின் கைகளில்தான் உள்ளது.

இன்று அந்தக்கடமையை தவறவிட்டுவிட்டால், வரும் சந்ததி எம்மை பழிக்கும். எமக்கு என்றொரு நிலம் இருந்தது.

எமக்கென்றொரு அடையாளம் இருந்தது. அவை அனைத்தும் எமது பாட்டனார் காலத்தில் சர்வதேச சதியால் அழிக்கப்பட்டது. விடுதலை வேட்கையற்ற எமது மூதாதையர் எமக்கு அடிமைப்பட்ட இனம் என்ற பெயரையே விட்டுச்சென்றிருக்கிறார்கள் - என்று அவர்கள் எம்மை பழிக்கும் நிலை வேண்டுமா?

இது ஒவ்வொரு தமிழனும் தன்னை தானே கேட்கவேண்டிய கேள்வி.

அப்படியானால், இந்தப்போராட்டத்தின் வெற்றிக்கு வழியென்ன?

சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்தும் ஒரு விடயத்தை தெளிவாக - உறுதியாக - எடுத்துக் கூறவேண்டும்.

எவ்வளவு பெரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தினாலும் - எவ்வளவு பெரிய யுத்த வெற்றிகளை சிறிலங்கா அரசுக்காக நீங்கள் பெற்றுக்கொடுத்தாலும் - விடுதலைப் போராட்டம் என்பது தமிழ்மக்களின் ஆன்மாவில் கலந்த ஒன்று.

அதனை இந்த யுத்த வெற்றிகள் தீர்மானிக்கப்போவதில்லை. எமது இனத்துக்கு ஏற்பட்ட அழிவுக்கு இந்த சர்வதேச சமூகம் அழுது கண்ணீர் வடித்து கட்டுப்போட்டவுடன் அவர்களுக்கு நிரந்தர விடிவு கிடைத்திடப்பொவதில்லை. அவர்களின் பேரப்பிள்ளைகளுக்கு நீங்கள் திரும்பச்சென்று மருத்துவம் பார்க்கும் நிலை வரக்கூடாது என்றால் அதற்கு ஒரு தீர்வு வேண்டும். அதுதான் தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமை.

இரசாயன ஆயுதங்களையும் கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி சிறுபான்மை இனம் ஒன்றை கொலை புரியும் அரசின் ஆட்சியின் கீழ் அந்த இனம் நிம்மதியாக வாழும் அல்லது அந்த அரசு அந்த சிறுபான்மை இனத்தை சீரும் சிறப்புமாக பராமரிக்கும் என்றெல்லாம் சர்வதெச சமூகம் நினைக்குமானால் அதனைவிட முட்டாள்தனதான முடிவு வேறொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளையும் தமிழ்மக்களையும் முதலில் பிரிப்போம் பின்னர் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கொடுப்போம் என்று சர்வதேசம் போடும் மனக்கணக்கெல்லாம், தற்போதைய சிறிலங்கா நிலவரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதற்கு எடுக்கும் முயற்சிகளே ஆகும்.

போன்ற உண்மையை தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்கு ஓயாமல் எடுத்துக்கூற வேண்டும். பரந்துபட்ட பிரசார நடவடிக்கைகளும் மக்கள் எழுச்சியும் அவற்றில் இம்மியும் சளைக்காத நிலையும்தான் வெளிநாடுகளுக்கு ஒரு முடிவை எடுக்கும் நிலையை நோக்கி தள்ளும். அந்தந்த நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எமது போராட்டத்தினதும் எமது மக்கள் அவலங்களதும் சரியான - தெளிவான - புரிதல்கள் ஏற்படுத்தப்படவேண்டும். தமிழரின் போராட்டம் உலகமயமாக்கப்படும் வேகம்தான் விடுதலையை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக திகழப்போகிறது.

வெளிநாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல மக்கள் எழுச்சியும் அதன் தொடர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைத் தேருக்கு அச்சாணியாக உள்ளது. சகல சதிகளையும் முறியடிக்கும் பலம் ஒவ்வொரு தமிழனதும் கைகளில் உள்ளது. முடிவெடுங்கள்.

- ப.தெய்வீகன் -

0 Comments: