Tuesday, April 21, 2009

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!

நாட்டின் முக்கிய அத்தியாவசிய சேவைகளை ஆற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இலங்கை மின் சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங் கைத்துறைமுக அதிகாரசபை ஆகிய மூன்று நிறு வனங்களும் மக்களுக்குரிய பிரதான அத்தியாவசிய சேவைகளுடன் சம்பந்தப்பட்டவை.

மேற்படி மூன்று நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை விதிமுறை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் இந்த வரு டத்தில் வழங்கப்படவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். தமது பக்கத்தில் எந்தவித கறுப்புப்புள்ளியும் இல்லாதிருந்த போதும், சம்பள உயர்வை அடுத்தவருடமே வழங்க முடியும் என்று ஜனாதிபதி (நிதி அமைச்சரும் அவரே) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்று பணியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது; குற்றஞ்சாட்டப்படுகிறது.

நாட்டுக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கும் தமது சம்பளத்தை அதிகரிக்கவேண்டிய வேளையில், அத னைத் தவிர்க்கும் முடிவை அரசாங்கம் செய்ததாலேயே வேலை நிறுத்தத்தில் குதித்திருப்பதாகப் பணியாளர் காரணம் கூறுகிறார்கள். அந்த வகையில் அவர்களின் போராட்டம் நியாயமானது. எவரோ பின்னால் நின்று அரசக்கு எதிராகச் செய்யப்படும் சதி என்று வழமைபோல பூசிமெழுக முடியாதது.

தனியார் நிறுவனங்கள், சிறு வர்த்தக நிலையங்கள் தானும் தமது பணியாளர்களின் வருடாந்தச் சம்பள உயர்வை தவறாது வழங்கவேண்டும் என்பது அரசாங்கம் வகுத்துள்ள முக்கிய சட்டவிதி. அப்படியிருக்க மக்கள் சேவையாற்றும் மூன்று பிரதான நிறுவனப் பணியாளர்களின் சம்பள உயர்வை நிறுத்துவது நியாயமற்றது; சட்டவிரோதமானதும் கூட.
நாட்டுக்காகக் கஷ்டப்பட்டு உழைக்கும் எமது சம்பளத்தை அதிகரிக்க இந்த அரசுக்கு விருப்ப மில்லை. ஆனால், அமைச்சர்களோ முழு அளவில் சம்பள உயர்வைப் பெறுகிறார்கள்; அனுபவிக்கிறார்கள் என்று மூன்று நிறுவனங்களினதும் பணியாளர்கள் வெதும்புகிறார்கள். அவர்கள் கூறுவதில் எவ்வித தப்பையும் எவரும் காணமுடியாது.

சம்பந்தப்பட்ட பணியாளர்களின் உழைப்பில்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. கடந்த இரண்டு வருடங்கள் சம்பள உயர்வு இல்லை. இந்த வருடத்தில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்திருப்பர். தமது செலவினங்களைச் சமாளிக்க ஓரளவேனும் வழிபிறக் கும் என்று நம்பியிருந்திருப்பார்கள். அது கிடைக்காது அரசாங்கம் "அதிரடி வைத்தியம்" செய்தால் அவர்கள் பாடு அதோ கதிதான். மொத்தத்தில் இது ஒரு மனிதா பிமானப் பிரச்சினை.

அரசாங்கம் இதனை அந்தக்கண் கொண்டு பார்த்து நியாயம் செய்யவில்லையெனில் பாதிக்கப் படுபவர்கள் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களது பணியாளர்களின் குடும்பங்கள் மட்டுமா? நாட்டின் சகல மக்களும்தான்! அதனால் இறுதியில் நாட்டின் பிரதான சேவைகள் ஏதோ ஒரு வகையில் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு.

பணியாளர்களின் சம்பள உயர்வை நிறுத்தும் அளவுக்கு நாட்டின் நிதி நிலமை அதள பாதாளத்துக்குச் சென்றுவிட்டது என்ற துக்ககரமான நிலைமையையே மூன்று பிரதான நிறுவனப் பணியாளர்களின் சம்பள உயர்வு நிறுத்தம் எடுத்தியம்புகிறது. "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே " என்பது பழமொழி. இப்போது வந்திருக்கும் மணியோசையைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்ற யானை வந்து நாட்டை நாட்டு மக்களை அவர்க ளின் பொருளாதாரத்தை, துளாவி அடித்துத் துவம்சம் செய்யப்போகின்றது என்பதற்கான சமிக்ஞை இது.

நாட்டின் பொருளாதாரம் வருமானம் இந்தளவு அடிநிலைக்கு வருவதற்கான பிரதான காரணங்களில் முதன்மை வகிப்பது அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக நடத்தும் போர் என்பதனை திரையை மூடி இலகுவில் மறைத்துவிடமுடியுமா, என்ன? போர், போரின் வெற்றி என்ற மூடுபாகைகளால் நாட்டின் நாட்டு மக்களின் பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல் வதை மறைத்துவிட முடியாது. அவ்வாறு செய்வதானாலும் கூட, அது மிகக்குறைந்த காலத்துக்கேசாத்தியம். பாதிப்புப் பாதிப்புத்தான் என்ற திண்ம நிலை உறைநிலை வந்தபின்னர் அதனைச் சரி செய்து நிமிர்த்தி எடுப்பதற்கு எத்தனையோ வருடங்கள் செல்லும்!

தொடர்ந்தும் வெளிநாட்டுக் கடன்களிலும் நிதியுதவி என்ற பிச்சைகளிலும் தான் நாட்டின் பொருளாதாரம் தங்கு நிலையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமும் கஷ்டங்களும் உண்டாகும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள 1.9 பில்லியன் டொலர் கடனுக்கு எந்த நிபந்தனைகளையும் ஏற்கமுடியாது என்ற செருக்கான பேச்சுக்கள் நாட்டு மக்களுக்கு சோறு போடுமா என்பதும் விநயமாக நோக்கப்படவேண்டிய ஒன்றே.

நன்றி
- உதயன் -

0 Comments: