Friday, April 3, 2009

இது எமது போர்! உறவுகள் உயிரைக் காத்து எப்பாடு பட்டேனும் வெற்றி காண வேண்டும்!

ஈழத்தமிழர் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் இன அழிப்புப்போரில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பைக் குழந்தை முதல் குடு குடு கிழம் வரை கொல்லப்படுகின்றனர். இன்னும் பல நூறு பேர் காயப்பட்டு தகுந்த மருத்துவ வசதி மறுக்கப்பட்டு நரக வேதனையால் துடி துடித்து அலறுகின்றனர்.

பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழும் குரல் வானைப் பிளக்கிறது. பெற்ற தாய்க்கு உயிர் இல்லாமாலோ அல்லது உயிர இருந்தும் பால் சுரக்கும் அளவுக்குத் தெம்பு இல்லாமலோ அல்லது செய்வது அறியாமல் அலறி அரற்றுகிறாள்.

இவர்கள் படும் துயரம், இவர்களாகத் தேடிக்கொண்டவை அல்ல. மானம் உள்ள தமிழராகப் பிறந்தது குற்றம். எவருக்கும் அடங்காத சுதந்திர உணர்வோடு வாழத் துணிந்தது குற்றம். யார் தயவிலும் வாழத் துணியாத துணிவுதான் அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது.

தர்மம் தலை காக்கும் என்ற சொல்லில் உள்ள அசையாத நம்பிக்கைதான் அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது. இன்று முழு உலகமும் அவர்களை அழிப்பதையும் அவர்கள் அழிவதையும் பார்த்து சரி பிழை பழி பாவம் கூட கூறாது அமைதி காப்பது எவருக்கும் புரியாத புதிராக உள்ளது.

இன்றைய உலக நாடுகளின் நடைமுறையாக வர்த்தகம் மற்றும் இராணுவ நலன் சார்ந்த தேவைகளுமே உள்ள காரணத்தால் அவை மக்கள் நலன் சார்ந்த நியாயப்பாடுகளைப் புறந் தள்ளியதோடு, தமிழ் மக்கள் இன அழிப்புப் போருக்கு வலுவும் வசதிகளும் வளங்களும் வழங்கி வருகின்றன.

இத்தகைய பின்னணியில் தமிழினம் தன்னைத் தானே காப்பாற்றினால் அல்லாது வேறு வழியின்றி முற்றாக அழிபட்டுப் போகும் நிலை காணப்படுகிறது.

மகிந்தர் யாழ்தேவி சேவையை நீடிப்பதற்கு வவுனியா தொடக்கம் காங்சேன்துறை வரையான மீளமைப்பு அபிருத்தி வேலைகளுக்கு வெளிநாடுகளின் உதவி தேவை எனக் கேட்டுள்ளார்.

27 நிலையங்கள் கட்டுமானங்களில் அம்பாந்தோட்டைத் தொகுதி மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர் எனவும் ஏனைய பகுதி மக்களும் சேர்க்கப்படுவர் என்றும் கூறியுள்ளார். அதிலிருந்து தமிழ் மக்களின் வன்னி நிலம் சிங்களக் குடியேற்றத்துக்கான களமாக மாறுவதும், இதன் பின்னணியில் அதிகரித்த எண்ணிக்கையில் தமிழ் மக்கள்; அன்றாடம் கொல்லப்படும் இரகசியமும் வெளியாகிறது.

இந்தியத் தேர்தலுக்கு முன் போர் முடிவுக்கு வந்துவிட்டால் காங்கிரஸ் கட்சி பாவ மன்னிப்புப் பெற்று விடலாம் என நம்புகிறது. அதிகரித்து வரும் வெளிநாடுகளின் அழுத்தம் தமிழ் மக்களைக் கொன்றொழித்து விட வேண்டும் என்ற அவசரம் அரச படைகளின் செயற்பாடுகளில் வெளியாகிறது.

எனவேதான், அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் சிறுவரைப் பலவந்தமாகப் படையில் சேர்க்க தேசியத் தலைவரும் மகனும் ஈடுபட்டனர் என்றும், அப்பகுதியிலிருந்து உலங்குவானூர்திகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டன என்றும் செய்திகளை வெளியிட்டு, இன அழிப்பை விரைவுபடுத்தி விடும் அவசரம் புலனாகிறது.

எனவே, புலத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு தமது செயற்பாடுகள் பற்றிய மீளாய்வு இத்தருணத்தில் அவசியமாகிறது. தீராத போரினால் தமிழ் மக்கள் பாரிய அழிவுகளைக் கண்டுள்ளனர் என்பது உண்மைதான்.

அதேவேளையில் இலங்கை அரசின் பொருளாதாரம் சிதைவடைந்து படுத்து விடும் நிலைக்கும் வந்து விட்டது. மகிந்தர் அதிபர் ஆன காலம் முதல் நாட்டின் வளங்கள் எல்லாம் போரில் அழிந்து வருகின்றன.

கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வளர்ச்சி இல்லாமை, இறக்குமதிகளின் அதிகரிப்பு என்பவை மறுபுறம். இவற்றிடையே தேர்தல்களை நடத்திப் போர்முனைச் சாதனைகளை வாக்குகள் ஆக்கிவிட வேண்டியும் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் துண்டு விரித்தாயிற்று. எவ்வளவு விழும் என்பது கேள்விக்கு இடமாய் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளின் கருணை ஈழத் தமிழர் பக்கம் சாய்வது போன்ற தோற்றப்பாடு தெரிகிறது. இதற்காகப் புலம்பெயர் தமிழ் மக்கள் இரவு பகல் படாதபாடுபட வேண்டி இருந்தது.

இந்த நிலை கை நழுவிப் போய்விடாது இருக்க மேலும் தீவிரமாகத் தமிழினம் உழைக்க வேண்டியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடாக வன்னித் தமிழ் மக்களுக்கான மருந்து மற்றும் அவசியமான பொருட்களை வெளிநாடுகள் அல்லது ஐ.நா. போன்ற நிறுவனங்கள் கவனிக்காத காரணத்தால் பிரித்தானிய தமிழ் மக்கள் வணங்கா மண் கப்பல் மூலம் எடுத்துச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது ஏற்படுத்தப் போகும் அரசியல் மற்றும் மனிதாபிமான உணர்வலைகளை நினைத்து இலங்கை அரசு கிலி கொண்டுள்ளது அதன் கூலிகளின் எதிர்க்கருத்துகளும் பிரச்சாரங்களும் வானைப் பிளக்கின்றன.

இது போன்ற கப்பல் பயணங்களின் மூலம் தமிழரின் இறையான்மை மற்றும் சுயாட்சி உரிமைகளை கையில் எடுப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிடும் எனக்கருதும் ஆய்வாளர்களும் உள்ளனர். இது போன்ற கப்பல் பயணங்கள் வருங்காலத்திலும் தொடர்வதன் மூலமே ஈழத் தமிழரைக் காப்பாற்ற முடியும்.

எனவே அதற்கான செயற்பாடுகளை இடைவிடாது எல்லா நாடுகளிலும் உள்ள புலம்பெயர் ஈழத் தமிழர் முன்னெடுத்து வெற்றி காண வேண்டும்.

இலங்கை அரசு பொருளாதாரத்தில் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் ஈழத் தமிழர் கையில் இன்று பொருளாதார வளம் உள்ளது. இலங்கையின் மிகப் பெரும் வணிகச் சந்தையாக புலம்பெயர் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

மரக்கறி, உப உணவுப் பொருட்கள், மீன் போன்றவற்றை வாங்குவதன் மூலம் பெருமளவு வெளிநாட்டுப் பணத்தை கொடுக்கும் பொன்முட்டைகள் இடும் வாத்தாக உள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக மிகப் பெருமளவு பணத்தை வீடுகள், வணிக அங்காடிகள் வாங்குவதன் மூலம் சிங்கள தேசத்துக்கு ஏற்றி விட்ட திமிர்தான் இன்று மகிந்த நடத்தும் போராக உருவாகியுள்ளது.

எனவே இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதையும், வாங்கிப் பாவிப்பதையும் நிறுத்துவதோடு அங்குள்ள பண முதலீடுகளை மீளப்பெற்றும் சிங்கள இனவெறி அரசின் வீழ்ச்சிக்கு வழி செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவும் உணர்வுகளும் அங்குள்ள அரசியல் தலைமைகளின் கட்சிசார் நலன்களால் ஆறப் போட்டு ஆற்றல் அழிந்து வீரியம் குன்றி நீர்த்துப் போய்க் கிடக்கிறது.

எத்தனையோ அரிய அன்பு உள்ளங்கள் உயிரைத் தீயில் பொசுக்கியும் பலன் ஏதும் இன்றி விழலுக்கு இறைத்த நீராய் விட்டது. புலத்தில் வாழும் ஈழ மக்களின் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் கவன ஈர்ப்பு நிகழ்வுகள் கல்லில் நார் உரிப்பது போன்ற அனுபவமாய் இருக்கிறது.

உலகின் சில மூலைகளில் சில நிழ்வுகள் சிறிது ஆறுதல் தருவதுபோல் காணப்படினும், அன்றாடம் ஏற்படும் அழிவுகளும் இழப்புகளும் அதிர்ச்சி தருவனவாக உள்ளன.

இந்த இழிநிலைக்கு இந்திய மத்திய அரசின் தலையீடு முக்கியமான காரணி என்பது உலகம் அறிந்த கதையாகி விட்டது.

இந்தியத் தேசியக் கொடியிலே இருப்பதோ தர்மச் சக்கரம், அதன் சுலோகமோ சத்தியமே வெல்லும் என்பதான 'சத்யமே ஜெய" என்ற சொற்கள். இவற்றின் அர்த்தமோ ஆன்ம பலமோ கிலோ என்ன விலை எனக் கேட்கும் அரசியல்வாதிகளின் கையில்.

பாரத புண்ணிய பூமி இன்று பாதகர் கரங்களில் சிக்கியதால் தமிழகத்தில் கூடத் தமிழினம் தன்மானத்தோடும் பாதுகாப்போடும் வாழமுடியாத நிலை. மக்களாட்சி என வாய் கிழியக் கத்தினாலும் இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவை தலைமுதல் கால் வரை விசம் போல் விரவிக் கிடக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஆணையாளர் தேர்தல் களத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தை எவரும் கையில் எடுக்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், அண்ணா தி.மு.க. அதனைத் தனது தேர்தல் கொள்கைப்பட்டியல் போட்டுக் கொண்டது. தேர்தல் ஆணையாளரின் தடை செல்லுபடியாகாதோ என்னமோ இப்போ காங்கிரஸ் கட்சி அதனைத் தனது தேர்தல் கொள்கைப் பட்டியலில் எடுத்துக்கொண்டு விட்டது.

ஆனால் அ.தி.மு.க கூட்டணி நம்புகிறதோ இல்லையோ, சொல்வதைச் செய்கிறதோ இல்லையோ, எதுவும் நடக்கிறதோ இல்லையோ ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக் கூட்டணி, கால் நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த ஊசிப் போன ஊறுகாயைப் பூஞ்சணம் துடைத்து எடுத்தது போன்று 13 ஆம் சட்டத் திருத்தத்தின் கீழ் இலங்கையின் ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு பெற்றுத்தரப் போகிறதாம். ஏற்கனவே வரதராஜப் பெருமாள் ஏறி விழுந்த குதிரை. அதிலே இனி யாரை ஏற்றிப் பார்க்க நினைக்கிறதோ தெரியவில்லை.

அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின் பிழைப்பைக் கெடுப்பதே அதன் நினைப்புத்தான் என்பதை இந்தியா இன்னமும் உணராத நிலைதான் பரிதாபத்துக்கு உரியது.

ஈழத் தமிழன் குண்டு வீச்சினாலும், எறிகணை வீச்சுக்களாலும் உடல் சிதறி, இரத்தம் சதை சிதறி அழியவும்;, தமிழகத் தமிழனும் உலகத் தமிழனும் கண்ணீர் வடிக்கவும் வைப்பதும் இந்தியாவின் அறியாமையும் அட்டூழியமும் என்பதே உண்மை.

இந்தியா 13 ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் தீர்வு எனக்கூறினாலும் இலங்கையின் சுகாதார அமைச்சர் சிறிபால டீ சில்வா அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியாவின் தேவை முடிந்து விட்டது.

இனித் தீர்வு பற்றி மகிந்த அரசும் சிங்கள மக்களும் மட்டுமே தீர்மானிக்க முடியும். வேறு எந்தக் கொம்பனுக்கும் அது பற்றிய முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது என அடித்துச் சொல்லி விட்டார்.

தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் உண்மை நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்பதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை. ஆனால், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இவர்கள் யார் தீர்வு காண்பதற்கு? அத்தகைய தகுதி இன்னமும் இந்தியாவுக்கு இருக்கிறதா? இருக்க முடியுமா?

ஈழத் தமிழினத்துக்குச் செய்ய வேண்டிய கருமாதி எல்லாம் இந்தியா செய்தாகி விட்டது. இனியும் ஏதாவது செய்ய வேண்டும் என எவரும் நினைத்தால் சொல்லி அழைத்தால் ஊர் உலகத்தோடு ஒருவராக வந்து வாழ்த்தரிசி போடலாமே அல்லாது வேறு எந்தப் பந்தமோ சொந்தமோ இந்தியாவுக்குக் கிடையாது.

ஆட்சி மாற்றமும் கொள்கை மாற்றமும் கண்டு ஈழ விடியலுக்கு ஒத்தாசை செய்யும் நல்ல மனம் இருந்தால் அதன் பின்பே எதுவும் வைக்க முடியும். அதற்காக தமிழக மக்களின் பந்தமும் சொந்தமும் அற்றுப் போய் விடாது. எமது வாழ்வும் தாழ்வும் தமிழக மற்றும் உலகத் தமிழரின் வாழ்விலேயே தங்கி உள்ளது.

நன்றி:
- த.எதிர்மனசிங்கம் -
நிலவரம்

0 Comments: