Monday, April 27, 2009

வன்னிக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாட்டின் சூத்திரம் இதுதான்!

வன்னியில் இன்று தமிழ்மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், அவலங்கள், துன்ப துயரங்கள் சொல்லுந்தர மன்று.சர்வதேசத்தின் கண்களுக்கு அவற்றை மூடி மறைக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆளுந் தரப்பால் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.மக்கள் பேரவலம் கொடூரமாய்க் கட்டவிழும் யுத்தக் களமுனையை ஒட்டிய பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள், மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள், ஐ.நா.முகவர் அமைப்பினர் எனப் பல தரப்பினரும் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அல்லது கடுமையான கட்டுப்பாடு இந்த உள்நோக்கப் பின் னணியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் பரகசியம்.

மோதல் பகுதிகளுக்கு சுயாதீன வட்டாரங்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள், ஊடக இயக்கங்கள், சர்வதேச சமூகம் உட்பட்ட பலம் வாய்ந்த தரப்புகள் வற்புறுத்தியும் கூட, "பாதுகாப்புக்கு முன்னுரிமை" என்ற காரணத்தைக் காட்டி, அக் கோரிக்கைகளை நிராகரித்து வந்திருக்கின்றது இலங்கை அரசுத் தலைமை.
மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இத் தடையின் தாற்பரியம் என்னவென்பதை இப்போது நிகழ்ந் துள்ள ஒரு சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

மோதல் இடம்பெறும் பிரதேசங்களை ஒட்டிய பகுதிகளுக் குச் சென்றுவர அனுமதிக்கப்பட்ட ஒருவர் மூலம், தமிழகத்தில் பற்றிக்கொண்ட ஒரு சிறு நெருப்புப் பொறி "ஒரு முழுக்காடே வெந்து தணிந்தது" போன்ற பெரும் அக்னிச் சுவாலைப் பிரதிபலிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. ஓர் அதிரடி அரசியல் நிலை மாற்றத்தை ஏற்படுத்தும் சூறாவளி சர்ச் சையையே அது உருவாக்கியிருக்கின்றது.

இந்தியாவைச் சேர்ந்த தமிழில் சரளமாகப் பேசும் ஆற்றலுள்ள சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, "வாழும் கலை" பயிற்சி மையம் உட் படப் பல்வேறு இந்து சமயக் கட்டமைப்புகள் மூலம் ஆத்மீகப் பணி யாற்றி வருபவர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு டன் நெருங்கிய தொடர்பாடலைக் கொண்டவர் என மதிக்கப் படுபவர். ஜனாதிபதி ராஜபக்ஷ சகோதரர்களில் சிலர் தமது மனை வியர் சகிதம் சுவாமிஜியிடம் "வாழும் கலைப் பயிற்சி" பற்றிய தியானங்களைப் பயின்று வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. ஜனா திபதி ராஜபக்ஷவிடம் இவருக்கு நேரடியாக அதிக செல்வாக்கு இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, அரசுத் தலைமையிடம் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வன்னிக்குச் சென்று, அங்கு இடம்பெயர்ந்து, வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பேரவலப்படும் லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நேரில் சந்தித்தார். அந்த மக்களின் இழி நிலைமை பற்றிய உண்மைகளை நேரில் கண்டறிந்த அவர், அவற்றை வீடியோப் படமாக்கவும் தவறவில்லை.

அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி, இலங்கையில் தமக்குக் கிடைத்த அனுபவத்தை சத்தம் சந்தடியின்றி ஓர் அரசியல் பிரமுகரிடம் பகிர்ந்து கொண்டமை பெரும் அதிரடி அரசியல் மாற்றத்துக்கே வழி செய்திருக் கின்றது.

"வாழும் கலைப் பயிற்சி நிறுவுநர் காட்டிய வீடியோப் படங்களைப் பார்த்து நான் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். இதுவரை தெரியாத பல உண்மைகளைக் கண்டறிந்து பெரும் வேத னையில் உறைந்து போயுள்ளேன்"" என்று அகில இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா பகிரங்கமாகப் பெரு விசனத்தோடு வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஈழத் தமிழர் விடயத்தில் சற்றுத் தூக்கி எறிந்து நடக்கும் போக்குடன் செயற்பட்டு வந்த செல்வி ஜெயலலிதாவை, இந்த ஒரு வீடியோக் காட்சி அதிரடியாக மாற்றிவிட்டது என் பதைத் தமது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பகிரங்கமாகக் கூறிய கருத்துகள் வெளிப்படுத்தியி ருக்கின்றன.

"இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அத்தனை தூரம் அடிமைகள் போல கைதிகள் போல மிகக் கேவலமாகவும், கொடூரமாகவும் அவர்கள் அங்கு நடத்தப்படுகின்றனர்"" எனக் குமுறியிருக்கின்றார் ஜெயலலிதா.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்ற ஒரே முடிவுக்கு வந்துவிட்ட இந்தியத் தலைவர்களின் பட்டியலில் இப்போது ஜெயலலிதாவும் இணைந்துகொண்டு அதைப் பகிரங்கப்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை காலமும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிபோல ஈழத் தமிழருக்குத் தனித் தேசம் கிடைத்தால் மகிழ்வோம் என்று மட்டுமே கூறிவந்தவர் ஜெயலலிதா. இப்போது அந்த நிலைப் பாட்டை அ.தி.மு.க. தலைவி மேலும் தீவிரமாக்கி விட்டார்.
தமது அ.தி.மு.க. ஆதரவுடன் புதிய இந்திய மத்திய அரசு அமையுமானால் தங்கள் சொல் கேட்கும் மத்திய ஆட்சி ஏற்ப டுமானால் தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கையைத் தாம் எடுப்பார் என்றும், அதுவே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பு மூலம் தனி ஈழத்தை மட்டுமே ஒரே தீர்வாகக் கருதும் வைகோ, டாக்டர் இராமதாஸ், திருமாவளவன், விஜயகாந்த் போன்ற தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் களின் பட்டியலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் இணைந்து கொண்டுவிட்டார்.
இத்தகைய அதிரடி அரசியல் நிலைப்பாடு மாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியது இந்திய ஆத்மீகத் தலைவர் சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவருக்குக் காட்டிய வீடி யோப்படம்தான்.
இலங்கை அரசுத் தலைவருடனான தனிப்பட்ட நட்புறவுடன் வன்னி சென்று மீண்ட ஓர் ஆத்மீகத் தலைவரின் ஒரு சிறிய விஜயமே இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியு மாயின், சுதந்திரப் பார்வையாளர்கள் அங்கு சென்று வருவதற் கும், உண்மையைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதற்கும் கட் டுப்பாடின்றி அனுமதிக்கப்படுமானால் நிலைமை என்னவாகும்?

பொய்கள், புளுகு உரைகள், பித்தலாட்ட அறிக்கைகள், முழு வெற்று வேட்டுப் பிரகடனங்கள் போன்றவை மூலம் உலகின் முன் வன்னி நிலைமை குறித்துக் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் மாயவலைக் கோபுரம் அடியோடு தகர்ந்து உண்மை அம்ப லமாகிவிடாதா?
வன்னி நிலைமையைக் கண்டறியும் விஜயங்களுக்குத் தடை விதிக்கும் கட்டுப்பாட்டின் சூத்திரம் இதுதான்!

"இறைமையுள்ள ஒரு நாட்டின் உள் விடயங்களில் தான் தலையிட முடியாது" என்ற சுயாதீன கைவிலங்கை சர்வதேசம் தனக்குத் தானே பூட்டிக்கொண்டு நின்றால் இத்த கைய பேரவலக் கொடூரங்களுக்கு வழி சமைத்துக் கொடுக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதைத் தவிர வேறு வழியேயில்லை.

நன்றி

உதயன்

0 Comments: