Sunday, April 5, 2009

எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும்

எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி.
புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள்.

வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும்

போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை.

அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை.

பெப்ரவ? 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்களில் போர் முடிவிற்கு வருமென்கிற செய்தி மூன்று வாரங்களில் எல்லாமே முடிந்து விடுமென்கிற அனைத்துலக வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜீ.எல். பீ?ஸின் தற்போதைய காலக் கெடுவுடன் நீண்டு செல்கிறது.

போர்க் களம் சொல்லும் புதிய செய்திகளால் கால அட்டவணைகள் பெருத்துச் செல்வதனை அவதானிக்கலாம்.

இனப்படுகொலையால் பெருக்கமடையும் புதை குழிகளையிட்டு கவலையடைவதாக பாசாங்கு செய்யும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், புதிய காரணிகளைத் தேடிக் கண்டு பிடிப்பதில் தமது காலத்தை விரயம் செய்கின்றன.

போரை நிறுத்தக் கூடாதென்பதில் இவர்கள் எல்லோருக்கும் ஒருமித்த கருத்தெõன்று உண்டு. பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் இந்த வார நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆற்றிய இலங்கை குறித்த தனது உரையில் சில விடயங்களை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

"விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு. பயங்கரவாதத்தை வேரோடு களையும் பொறுப்பு அரசிற்கு உண்டு. வன்னி மக்கள் சுதந்திரமாக வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும்' என்றார் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்.

தேள் கொட்டிய திருடன், தனது வலியை வெளியில் தெரிவிக்க இயலாதபோது புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்கிற காட்சிப் படிமங்களே சர்வதேசக் கவிதையெங்கும் நிறைந்து கிடக்கும்.

கொழும்பில் பேச்சுவார்த்தை முடிந்த கையோடு புதுடில்லிக்குச் சென்று விளக்கவுரை கூறுவதுதான் நோர்வேயின் முன்னைய நடைமுறை வழக்கு.

தற்போது நடைபெறும் நேரடி உரையாடல்களுக்கும் சில பின்புல கலந்துரையாடல்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆகவே இனப்பிரச்சினை குறித்து சர்வதேஅளவில் மேலோங்கியிருக்கும் அவதானிப்பும் அக்கறையும் ஒரு விடயத்தினை சுற்றி குவிமையமடைந்திருப்பதனை அவதானிக்கலாம்.

அதாவது, வன்னியில் நிகழும், மக்கள் அவலச் செய்தியினை இருட்டடிப்புச் செய்வதற்கு மனிதக் கேடய விவகாரத்தை ஒரு வகையான திசை திருப்பும் உத்தியாகக் கையாள, இந்த மேற்குலகச் சக்திகள் முனைவதாக உறுதியாகக் கூறலாம்.

மக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ளார்கள் என்றுதிரும்பத் திருப்ப வலியுறுத்துவதன் ஊடாக தம்மால் தலையிட முடியாததொரு தர்மசங்கடமான நிலையில் இருப்பதாகக் கூறி இப்பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்ல இவர்கள் விரும்புகிறார்கள்.



இவ்வகையான கருத்துக்கூறும் நிலை நீடிக்கும் கால இடைவெளியில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்களென்றும் இவர்கள் கற்பிதம் கொள்கிறார்கள்.

ஜோன் ஹோம்ஸ் தொடக்கம் நவநீதம் பிள்ளை வரையான ஐ.நா. வின் உயர்நிலை அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வரையான ஆட்சியாளர்களும் புலிகளின் சமர்கள வலுநிலை பலவீனமடைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதை அவர்களின் "மனிதக் கேடய' கூக்குரல்களிலிருந்து புரியலாம்.

"களங்கள்' மாற்றமடையும் வாய்ப்புக்கள் இருப்பதனையும் இப்பெருமக்கள் புரிய ஆரம்பித்துள்ளார்கள்.

யதார்த்த பூர்வமற்ற "ஆயுத ஒப்படைப்பு' விவகாரம், அரசியல் தீர்வொன்றிற்கான அடித்தளத்தை இடப்போவதில்லை. உண்மை நிலை வரத்தைக் கண்டறிய ஐ.நா. சபையின் உயர் நிலைக் குழுவொன்றினை அனுப்புமாறு விடுதலைப்புலிகள் விடுக்கும் வேண்டுகோளினை சர்வதேசம் கருத்தில் கொள்ளவில்லை.

கற்பனையில் கதை கூறுவது ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு கைவந்த கலை. ஈராக்கில் அழிவு ஆயுதங்கள் இருப்பதாக முன்பு பல சோடிப்புக்களை இவர்கள் முன் வைத்தது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இடத்திற்கு இடம் இப்புனை கதைகள் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.

ஆகவே பூகோள அரசியலில் ஏற்படும் மாறுதல்களை உள்வாங்கி, புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜீ 20 உச்சி மாநாடு உணர்த்துகிறது.

வறிய நாடுகளின் மேய்ப்பராக சர்வதேநாணய நிதியம் (imf) அமெரிக்க கூட்டுக்களால் இனங்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிமிர்விற்கு சீனாவின் பண உதவி தேவைப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரத்தை மேற்குலக நாடுகள் கொண்டு செல்லுமாவென்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் புதிய அணுகு முறைகள் புகுத்தப்பட வேண்டும்.

மக்கள் சக்தியினை சரியான திசையில் அழைத்துச் செல்ல, போராட்ட வடிவங்கள் குறித்த தெளிவான வரலாற்றுப் பார்வையும் அவசியம்.



நன்றி:
சி.இதயச்சந்திரன்
வீரகேசரி வாரவெளியீடு

0 Comments: