Sunday, January 11, 2009

கருணாநிதி முன்னெடுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு

இதுவரை ‘தமிழ்’, ‘தமிழன்’ என்று தமிழின் பெயரால் அர சியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும் பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணா நிதி-இந்தத் தள்ளாத வயதிலாவது-தமது கடைசிக் காலத்திலாவது-ஈழத்தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம் பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிர தம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்தி விட்டது.

ஆனால் பயன்தான் ஒன்றும் விளையவில்லை.
இவ்விடயத்தில் தமிழகத்தை வழிப்படுத்தி, தமிழகத் தின் ஒட்டு மொத்தக் கருத்தை நெறிப்படுத்தி, ஈழத்தமி ழருக்காக ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்தாக வேண்டிய, தமிழக முதல்வர், அதற்குப் பதிலாகக் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றார்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினா மாச் செய்வர் என்ற மிரட்டல் அறிவிப்பை முன் னெடுத்தவர் இந்தக் கலைஞர் கருணாநிதிதான். புதுடில்லிக்கு இரண்டு வாரக் காலக்கெடுவைக் கொடுத்து, அதனடிப்படையில் தமிழக எம்.பிக்களின் இராஜினாமாக் கடிதங் களை வாங்கித் தனது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு காலத்தை இழுத்தடித்த கலைஞர், பின்னர் தமது ஏற்பாட்டில் முன் னெடுக்கப்பட்ட பதவி விலகல் எச்சரிக்கைத் தந்திரத்தில் இருந்து தாமே ‘பல்டி’ அடித்தார்.
அந்தப் பதவி விலகல் காலக்கெடு கடந்து இரண்டரை மாதங்களாகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.

திரும்பவும் அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடில்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு, இந்திய வெளிவிவகார அமைச் சர் விரைவில் இலங்கை விரைவு என்ற அறிவிப்பு என நாட கங்களை அவர் அரங்கேற்றினார். பலன் ஒன்றுமில்லை.

வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் எனத் தமிழக முதல்வர் அறிவித்தும் ஒன்றரை மாதங்களாகி விட்டன. அதுவும் நடக்கவில்லை.
இப்போது சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், தமது வெளிவிவகார அமைச்சரை விரைவில் கொழும்புக்கு அனுப்புவார் எனத்திரும்பவும் உறுதிமொழி அளித்தார் என்று மீண்டும் உலகத்தமிழர்களின் காதில் பூச்சுற்றப்படுகின்றது.

அடுத்த பெப்ரவரி மாதம், ‘சார்க்’ அமைப்பை ஒட்டிய ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பு வரவுள்ளார். அதுவரை விடயங்களை இழுத்தடித்துவிட்டு, ‘சார்க்’ மாநாட்டு அமர்வுக்காகக் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்தை, தமது வற்புறுத்தலின் பேரில்-ஈழத்தமிழர் விடயத்தை ஒட் டிப் பேசுவதற்காக-மேற்கொள்ளப்படும் விஜய மாகக் காட்ட முனைவார் கலைஞர். அப்படித் திரும்பவும் பூச்சுற்றப்படும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். அந்த நிகழ்வில் கலைஞர் கருணாநிதியும் கலந்து கொண்டார்.
பிரதமரை வைத்துக் கொண்டு அங்கு உரை நிகழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரம் குறித்து வாயே திறக்கவில்லை. அவர் அப்படி என்றால், இந்தியப் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே போனார்.

பக்கத்து நாட்டில்- அயலில்- இலங்கைப் படைகளின் படையெடுப்பால் ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படும் பேரவலம் குறித்து ஒரு வார்த்தை பேசாத இந்தியப் பிரத மர், காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால்-ஈழத்தமிழர்களைப் போன்று-யுத்தப் பேரவலத்தில் சொல்லொணாக் கஷ்டங் களை அனுபவிக்கும் பலஸ்தீன மக்கள் குறித்து அங்கு நீலிக் கண்ணீர் வடித்தார்.
பிரதமரை வைத்துக் கொண்டு ஈழத்தமிழர் விவகாரத்தைப் பகிரங்கமாக எழுப்புவதற்குத் திராணியற்ற கருணாநிதி-
ஈழத் தமிழர்களுக்காக கொதித்தெழுந்துள்ள தமிழகத் தின் உணர்ச்சிப் பிரவாகத்தை தமது தந்திர நடவடிக்கை கள் மூலம் மழுங்கடித்துவரும் தமிழக முதல்வர்-
ஈழத்தமிழர் விவகாரத்தில் எதுவுமே செய்ய இயலாத தமது கையாலாகத்தனம் குறித்து தமிழகத்தில் எழுந்துள்ள சீற்றத் தைத் திசைதிருப்புவதற்காக அந்த இயலாமைக்காகத் தானும் கவலைப்படுகின்றவர் போல "இதன் பிறகும் இந்த அரசு (தமிழக அரசு) இருக்கத்தான் வேண்டுமா?" - என்று அப்பாவி போல பொதுக்கூட்டம் ஒன்றில் வினா எழுப்பியிருக்கின்றார்.
இந்தப் பின்னணிகளைப் பார்க்கும்போது இவ்விடயத்தை ஒட்டி ‘ஆனந்த விகடன்’ தனது ஆசிரிய தலையங்கத்தில் எழுப்பிய சந்தேகம்தான் ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எழுந் திருக்கின்றது.

"புலிகளை நாங்கள் முழுவதும் ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களை திசை திருப்பும் வகை யில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத் துங்கள்" என்று மத்திய அரசோடு எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருக்கின்றதோ ஸ்ரீலங்கா அரசு என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.

நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கின்ற தமிழக ஆளும் கட்சி, இந்த விடயத்தில் எள்முனையளவு கூட எதையும் சாதிக் கவில்லை என்பதுதான் மனவேதனையளிக்கும் நிதர் சனமாகும்.

-இப்படி ஆனந்த விகடன் எழுப்பும் சந்தேகமே உலகத் தமிழினத்தின் சந்தேகமுமாகும்.
இந்தப் பின்புலத்தில் தமிழக முதல்வர் தமது அரசு குறித்து எழுப்பிய அதே கேள்வியை மீண்டும் அரசிடம் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்க விரும்புகிறோம்.

"இதன் பிறகும் உங்கள் அரசு இருக்கத்தான் வேண் டுமா, கலைஞரே.....?"
கையாலாகாத்தனத்தோடு- பதவிக்கதிரைக்கு டேற் றிக்கொண்டு-தள்ளாத வயதிலும் அதிகாரத்தில் தொடர அவாக் கொள்வது அபத்தம்......! இல்லையில்லை...... பேரபத் தம்......!


நன்றி ;-
உதயன்

0 Comments: