Thursday, January 8, 2009

போர் வெறி முனைப்பு மேலும் தீவிரமடையும் சூழ்நிலைப் போக்கு

இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு என்பதற்குச் சாத்தியமேயில்லை. அமைதி வழியிலான அரசியல் தீர்வு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் கலந்துரையாடி இணக்கத்துக்கு வரவேண்டிய வேளை வந்துவிட்டது.

- இவ்வாறு நான்கு முக்கிய நாடுகள் தமது கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றன.

இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளே இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.
ஆனால் அரசியல், வாழ்வியல் உரிமைகள் கோரித் தமிழர்கள் நடத்தும் சுதந்திரப் போராட்டத்தை ஆயுதப் பலாத்காரம் மூலம் அடக்கி விட வேண்டும் என்ற வெறியில் இராணுவ நடவடிக்கைத் தீவிரத்தில் முனைப்பாகச் செயற்படும் தென்னிலங்கையின் பௌத்த - சிங்கள ஆட்சிப் பீடத்தின் காதுகளில் இந்த முக்கிய நான்கு நாடுகளின் கோரிக்கை விழப் போவதில்லை. அந்த வேண்டுகோளை உதாசீனப்படுத்தி, புறக்கணித்து விட்டுத் தனது போர் வெறித் தீவிரத்தில் கொழும்பு முனைப்பாக ஈடுபடும் என்பதில் சந்தேகமேயில்லை.
சர்வதேசத்தின் காதுகளில் பூச்சுற்றுவதற்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற கபட நாடகத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் மஹிந்தரின் அரசு, அதை வைத்துக்கொண்டே மேலும் காலத்தைக் கொண்டிழுத்து, தனது இராணுவ நோக்கத் திட்டத்தை - காரியத்தை - முன்னெடுத்து வருகிறது; தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

கிளிநொச்சி வெற்றியை அடுத்து, இனப்பிரச்சினையில் தமிழர்களின் பேரம் பேசும் வலுவான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பைச் சிதறடித்து, சின்னாபின்னமாக்கி, சிதைத்து, அழிக்கலாம் என்று முழு அளவில் நம்புகின்றது மஹிந்தரின் தலைமை. அதனால் புலிகளை அழித்தொழிக்கும் தனது இராணுவ நோக்கு எய்தப்படும் வரை அவரது அரசு யுத்தத்தை நிறுத்தப்போவதோ, சமரசத் தீர்வு குறித்து சிந்திக்கப்போவதோ கிடையாது என உறுதியாக நம்பலாம்.

கிளிநொச்சியை இழந்து, இராணுவ வலுச் சமநிலையைக் கோட்டைவிட்டு, பலவீனமானவர்கள் போல புலிகள் அமைப்பினர் காணப்படுவதால், அவர்களுடன் அமைதிப் பேச்சு நடத்தி, இணக்கத்தீர்வுக்கு வர முயலுங்கள் என்ற கோரிக்கை - வற்புறுத்தல் - இந்திய மற்றும் மேற்குலகத்திடமிருந்து தமக்குத் தொடர்ந்தும் அந்த நாடுகளின் பல மட்டங்களில் இருந்தும் வரும் என்றும் எதிர்பார்க்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அத்தகைய நெருக்குதலை - அழுத்தத்தை - சமாளிப்பதற்காகவே ‘புலிகள் மீதான தடை’ என்ற புதிய அஸ்திரத்தைப் பயன்படுத்த முனைகின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.
கடந்த ஆண்டின் முற்பகுதியில், புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை முறிக்க வேண்டாம் என சர்வதேச நாடுகள் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தபோது, அதைப் புறக்கணித்து, உதாசீனம் செய்தபடி யுத்த நிறுத்தத்தைத் தள்ளுபடி செய்தார் இலங்கை ஜனாதிபதி.
அதுபோல இவ்வாண்டின் ஆரம்பத்திலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கும் ஆயுதத்தைத் தூக்கிப் பிடித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதன் மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய்களை விழுத்த அவர் திட்டமும் தீட்டியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு தடை விதித்தால் -
ஒன்று - தனது பக்கத்தில் இருக்கும் பௌத்த - சிங்களத் தீவிரவாதிகளை அதன் மூலம் வளைத்துப் போட்டு அவர்களது முழு ஆதரவைத் தாம் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஜனாதிபதியின் கணிப்பீடு.

அடுத்தது - தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகளுடன் சமாதானத் தீர்வு குறித்தோ, சமரசம் பற்றியோ பேசுமாறு இந்தியா உட்பட எத்தரப்பும் அல்லது எந்த நாடும் தன்னை வற்புறுத்த முடியாது என்பது தமக்கு அடுத்த சாதகமான விடயம் என்று ஜனாதிபதி மஹிந்தர் எண்ணுகிறார்.

இந்தக் காரணங்களால் புலிகள் மீது தடை விதிப்பது அரசுத் தலைமையின் அடுத்த - அவசர அவசரமான - நடவடிக்கைத் திட்டமாக இருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுத்து, அது தொடர்பாக ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் கொழும்பை வற்புறுத்தினாலும் கூட -
ஈழத் தமிழர்களுக்குத் தமது கௌரவமான வாழ்வு மற்றும் உரிமைகள் தொடர்பாகக் கிளர்ந்தெழுந்து பேரம் பேசுவதற்குப் பின்னணி வலுவாக இருக்கும் ஆயுத பலத்தை சிதைத்து, அழித்து, அவர்களின் உரிமைக் குரலின் முதுகெலும்பை நசுக்கி, அடக்கும் ஒரே வெறியில் தீவிரமாக இருக்கும் கொழும்பின் காதுகளில் சமரசத் தீர்வுக்கான சர்வதேசத்தின் அழுத்தம் - கோரிக்கை - விழப்போவதேயில்லை.

ஆகையால் புலித்தடையும், போர்வெறித் தீவிரமுமே இனியும் தமிழர் தேசத்துக்கு எதிராகக் கட்டவிழும் என்பதை உறுதியாக நம்பமுடியும்.

நன்றி :- உதயன்

0 Comments: