Sunday, January 25, 2009

ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றி டில்லி அறிவுஜீவிகளுக்கு எதுவுமே தெரியாது

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் கலையரசன் தினக்குரலுக்கு பேட்டி
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

""ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள், இன்று அந்த இனமே அழிந்து போகும் நிலைக்கு எரிமலையாக வெடித்திருக்கும் அரசுப்போர் பற்றி எல்லாம் இங்குள்ள அறிவுஜீவிகளுக்கு எதுவுமே விளக்கமாகத் தெரியாது. அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை என்று கருதப்பட்டாலும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு வடிவங்களில் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். இலங்கைத் தமிழர்களுக்காக தெற்கில் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் உரத்த குரலில் கோரிக்கை எழுப்பிவரும் அதேநேரம், வடக்கில்டில்லியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுபட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள், விளக்கக் கூட்டங்கள் நடத்தி போர்க்கொடி உயர்த்தி அரசின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறார்கள். ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்கள் குறித்து டில்லி மேல்தட்டு மக்கள் விபரமாக அறிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பிரசுரங்கள், நூல்கள் வெளியிட்டு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்றோம். டில்லியிலுள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்ட உணர்வின் வெளிப்பாடு இது' என்று டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆவு மாணவர் ஆறுமுகம் கலையரசன் "தினக்குரலு'க்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறைகொண்டு பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று பங்கேற்றுவரும் ஆ.கலையரசனின் குடும்பம் திராவிடர் இயக்க பாரம்பரியத்தில் அதிக ஈடுபாடு கொண்டது குறிப்பிடத்தக்கது. அரசியல், சமூக துறைகளில் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவு மேற்கொள்ளும் இவர், ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அங்கு நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் உடனடியாக அங்கு போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் டில்லியில் கடந்த சில மாதங்களாக நடைபெறும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்களில் முன்னின்று மாணவர்களை ஒன்று திரட்டிய பெருமையும் பெற்றவர். தனிப்பட்ட முறையில் பல்வேறுதுறை பிரமுகர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் பின்னணியை ஆதாரங்களுடன் விளக்கிவரும் ஆ.கலையரசன் இதுவரை வெளிவராத பரபரப்பான தகவல்களை "தினக்குரலு'க்குத் தெரிவித்துள்ளார். மாறுபட்ட நிலைப்பாட்டுடன் சத்தமின்றி இலங்கையிலிருந்து வந்த அகிலன் கதிர்காமர், சிவமோகன் சுமதி ஆகியோரின் கருத்துகளுக்கும் வரதராஜப் பெருமாளின் திடீர் விஜயத்துக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கிடைத்த "வரவேற்பு' குறித்தும் இச்சந்திப்பில் அலசப்பட்டது. இச்சம்பவங்கள் எல்லாம் இப்பொழுதுதான் வெளிச்சத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஆ.கலையரசனுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஒரு நேர்காணல்.

நீங்கள் பல்கலைக்கழக மாணவன். ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணம் என்ன?

நான் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே சமூக நீதியில் மிகவும் அக்கறை கொண்டவன். எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் துருவித் துருவி விளக்கம் கேட்பேன். இப்பழக்கம் கல்லூரி, பல்கலைக்கழகம் என்று வளர்ந்துவிட்டது. ஈழத் தமிழர் பற்றி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் செதிகள், கட்டுரைகள், புகைப்படங்களைப் பார்த்து மிகவும் நொந்து போவேன். அவர்கள் பற்றிய உண்மை நிலை அறிய விரும்பி பலருடன் தொடர்பு கொண்டேன். அந்த நாட்டின் அரசியலமைப்பைப் படித்தேன். அவர்களது பிறப்புரிமை, மறுக்கப்படும் உரிமைகள், ஆயுதம் ஏந்தக் காரணம் பற்றி எல்லாம் அறிந்த நான் அங்கு நடப்பது இனப்படுகொலை என்று முடிவு செதேன். அவர்களது உரிமைப் போராட்டத்துக்கு பெரும்பங்காற்ற நினைத்து செயல்பட்டு வருகின்றேன். யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி பல மாணவர்களையும் அமைப்புகளையும் ஒன்று திரட்டி டில்லியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றோம். கடந்த 24ஆம் திகதி இந்திய பாராளுமன்றம் முன்பாக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. யுத்தநிறுத்தம் கோரி டில்லியில் முதன்முதலில் பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மறக்க முடியாது.

ஈழத் தமிழர் இன்று அனுபவிக்கும் கொடுமைக்கு என்ன காரணம் என்பதை டில்லியில் பிரமுகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா?

அறிவுஜீவிகளுக்கே எதுவும் தெரியாத நிலையில் பிரமுகர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் என்ன புரியப்போகிறது? இதில் மாற்றம் ஏற்படுத்த புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். "எங்கள் சரித்திரம்' எனும் பெயரில் பதினெட்டுப் பக்க நூலை வெளியிட்டிருக்கின்றோம். தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்துவிட்டது. இதனை ஹிந்தி மொழியில் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம். இப்பிரசுரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைகள், அங்கு என்ன நடக்கிறது, பறிக்கப்பட்ட உரிமைகள், கட்டாயத்தின் பேரில் தூக்கப்பட்ட ஆயுதங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆண்டு வாரியாக குறிப்புகள் மூலம் இடம்பெற்றுள்ளன. இதனைப் படிப்பவர்கள் ஈழத் தமிழரின் பிரச்சினைகளை நன்கு அறிய முடியும்.

மாணவர்களைக் கூட்டி போராட்டங்கள் நடத்தும் நீங்கள், தனிப்பட்ட முறையில் பிரமுகர்களை சந்தித்து விவாதித்தீர்களா? அவர்களின் கருத்துகள் எப்படி இருந்தது?

பொதுவாக, இலங்கையிலிருந்து இங்கு வரும் பல தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்களை அவசியம் சந்திப்பேன். இவர்களுடன் ஈழப்பிரச்சினை தொடர்பாக வருவோரையும் சந்திப்பேன். அண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூகப் போராளி, "புக்கர்' பரிசுபெற்ற எழுத்தாளர் அருந்ததிரா, பா.ஜ.க.அரசியல் சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெட்மலானி ஆகியோரை சந்தித்து கருத்துகள் கேட்டேன். அமைதி திரும்ப போர்நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்திய அருந்ததிரா, இவ்விடயத்தில் இந்தியா உதவும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று என்னிடம் கேட்டது அவரது உள்ளக் கருத்தை உணரக்கூடியதாக இருந்தது. ராம்ஜெட் மலானியைச் சந்திக்க சென்றபோது, இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கமும் வந்திருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி நிறையத் தெரியாது என்பதை ஒத்துக்கொண்ட அவர் பல விபரங்களையும் கேட்கவே, இலங்கை அரசியல் அமைப்பு 13ஆவது திருத்தம் மற்றும் ஈழத் தமிழர் பற்றிய குறிப்புகளை சிவாஜிலிங்கம் உதவியுடன் சேகரித்து நகல் எடுத்து ஒரு "பைல்' தயாரித்து அவரிடம் கொடுத்தேன். அதனைப் பெற்றுக்கொண்ட அவர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவேன் என்று உறுதி அளித்திருந்தார். இவை தவிர, ஈழத் தமிழர்கள் விடயத்தில் உண்மைகளை மறைக்கும் கலந்துரையாடல், விவாதங்கள், கூட்டங்களில் அவசியம் கலந்துகொண்டு உரையாற்றுவேன்.

அந்த அனுபவங்கள் பற்றி...?

நான் பயிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிக்கடி கருத்தரங்குகள், சிறப்புரைகள் நடைபெறும். சில சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழக நிர்வாகமே இவற்றை நடத்துவதுண்டு. இலங்கையில் அரசு, ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை மீறியதைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டை விளக்கும் முகமாக டில்லியிலுள்ள இலங்கைத் தூதரின் கூட்ட மொன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நானும் சில தமிழ் மாணவர்களும் கூட்டம் நடைபெறுமிடத்துக்கு முன்கூட்டியே போயிருந்தோம். தூதர் வந்தார். கறுப்புக்கொடி காட்டினோம். திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பினோம். கடைசிவரை அவரைப் பேசவிடவில்லை. திரும்பிப் போவிட்டார். இவ்வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இலங்கையிலிருந்து அகிலன் கதிர்காமர், சிவமோகன் சுமதி ஆகிய இருவர் சிறப்புரையாற்ற பல்கலைக்கழகம் வந்திருந்தனர். இலங்கைப் பிரச்சினையைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் இது ஒரு தேசியப் பிரச்சினையே இல்லை என்றும் ஒரு குழுவுடன் அரசு மோதுகிறது. விரைவில் இவர்களை அரசு காலி பண்ணிவிடும் என்றும் கூறி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டனர். இவர்களது சிறப்புரையைக் கேட்க பத்துப்பேர் மட்டுமே வந்திருந்தனர். இதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து இலங்கையின் முன்னாள் வட க்கு, கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், வரதராஜப் பெருமாள் சிறப்புரையாற்றுவார் என்ற எந்தவொரு செதியும் வெளிவராமல், வந்தார் சென்றார். பல்கலைக்கழக நிர்வாகமே ஒழுங்கு செதிருந்த இக்கூட்டத்தில் அவர்கள் நான்கு பேருடன் வேறு ஆறுபேர் அமர்ந்திருந்தனர். புலிகளுக்கு இராணுவத் தீர்வு, மக்களுக்கு அரசியல் தீர்வு என்பது வரதராஜப் பெருமாளின் முக்கியமான கருத்தாக இருந்தது. அவர் வெளியேறிய பின்னர்தான் இப்படி ஒருவர் வந்துபோன செதி வெளியில் பரவியது.

இம் மூவரின் திடீர் விஜயம், கருத்துப் பரிமாற்றம் பற்றி பல்கலைக்கழக மாணவர் வட்டா ரத்தில் என்ன பேசிக் கொண்டார்கள்?

இது ஒரு திட்டமிட்ட செயல்பாடு என்றும் பலமான பின்னணி இருக்கிறது என்றும் பொதுவாகப் பேசப்பட்டாலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை திசைதிருப்பும் திட்டமாகவும் இந்திய அரசை ஓரளவு திருப்திப்படுத்தும் நோக்கமாகவும் வடிவமைக்கப்பட்டது புலனாகிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கருத்தில்கொண்டு இப்படியொரு பிரசார தந்திரத்தை இலங்கை அரசு கைக்கொண்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மத்தியில் இதுபோன்ற அரச, முயற்சிகள் எதுவுமே பலிக்காது. மக்கள் ஆதரவும் இருக்காது!

நன்றி:-
தினக்குரல்

0 Comments: