Thursday, January 22, 2009

இராணுவ நடவடிக்கை வெற்றியின் பின் அரசியல் தீர்வு எனும் பூச்சுற்றல்

இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராகக் குரூரமாகக் கட்டவிழ்ந்த அரச ஒடுக்குமுறையின் பெறுபேறே இலங்கை இனப்பிரச்சினை.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய பௌத்த - சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்குடைய சகல அரசுகளினதும் அடக்குமுறைச் செயற்பாடுகளின் வரலாற்றுப் பிறப்பே இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தோற்றுவித்துள்ள இந்த இனப்பிரச்சினையின் மூலமாகும்.
இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக - நீதி வேண்டி - சுமார் மூன்றரை தசாப்த காலம் அஹிம்சை வழியில் போராடிய தமிழினம், அந்த மார்க்கத்தில் இந்த நோய்க்கு மருந்து கிட்டாத பின்னணியிலேயே ஆயுதப் போராட்டம் என்ற மருத்துவத்தை நாட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு உள்ளானது.
இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை, சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் வகையில், அவர்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவதே இங்கு பிரதான நோயாகும்.
அந்த நோய்க்கு மருந்து செய்தால் பிரச்சினை தீர்வுக்கு வந்துவிடும்.
அந்த நோயின் குணங்குறியாகவே, ஆயுதப் போராட்டம், வன்முறைக் கலாசாரம், பலவந்தப் பிரயோகம் என்ற விளைவுகள் சமூகத்திலிருந்து வெளிப்பட்டன.
ஆனால் நோய்க்கு விரைந்து மருந்து செய்ய வேண்டிய இலங்கைத் தீவின் அரசோ, நோயின் மூலம் குறித்து சட்டை செய்யாமல் - அந்த மூலப் பிரச்சினைக்கு மருத்துவம் செய்வதை விடுத்து - குணங்குறிக்கு மருத்துவம் பார்க்க முயல்கின்றது.
அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையே இலங்கை இனப்பிரச்சினை என்று காட்ட முனையும் இலங்கை அரசு, அதன் வாயிலாக இங்கு இனப்பிரச்சினைக்கு மூலமாக இருக்கும் - ஈழத் தமிழரின் பிரதான இனப்பூசலையே மூடி மறைக்க முயல்கின்றது.
இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் வலுவாக இருக்கும் ஆயுத பலத்தை சிதறடித்து நாசமாக்கி விட்டால், இலங்கை இனப்பிரச்சினையைத் தனக்கு விருப்பமான முறையில் கையாண்டு, தமிழர் தரப்பை நிரந்தரமாக அடக்கி விடலாம் எனக் கனவு காணும் கொழும்பு, அதற்கேற்ப காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் இனப்பிரச்சினை என ஒன்றுமில்லை என்பது போலவும் -
தான் ‘பயங்கரவாதமாக’ சித்திரித்திருக்கும் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, சிதறடித்து, நாசப்படுத்தி விட்டால் அதன் பின்னர் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இலங்கையில் இல்லை என்ற மாதிரியாகிவிடும் என்பது போலவும் காட்ட முனைகிறது கொழும்பு.
அப்படிக் கொழும்பு போடும் படத்தைக் கயிறாக விழுங்கி ஏற்றுக் கொள்கின்றது இந்தியத் தரப்பும்.
இலங்கையில் தனது ‘வெற்றிகரமான’ இராணுவ நடவடிக்கைச் செயற்பாட்டின் பின்னர், அரசியல் தீர்வுக்கான மார்க்கங்களை கொழும்பு அரசு முன்னெடுக்கும் என்ற தோரணையில் கொழும்பிலிருந்து வெளியிடப்படும் தகவல்களும் -
அத்தகைய தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டு, விழுங்கிக் கொள்ளும் புதுடில்லியின் போக்குப் பற்றிய செய்திகளும் -
இந்த நிலைமையைத்தான் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில், தமிழர் தரப்பின் ஆயுத பலத்தை அடக்கி, ஒடுக்குவதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபா நிதியைக் கொட்டிக் கொடுத்து, முழு நாட்டையுமே பெரும் பொருளாதார சுமைக்குள் ஆழ்த்தி, பெருமளவு உயிர், உடைமை இழப்புகளையும், நாசங்களையும், பேரழிவுகளையும் உருவாக்கி, யுத்த வெறி பிடித்து, சந்நதம் கொண்டு நிற்கிறது பேரினவாதம்.
ஆனால், மறுபக்கத்தில் இனப்பிரச்சினைக்கு மூலமான விடயத்துக்குத் தீர்வு காண்பதில் துளியளவும் முன்னேற்றமில்லை. வெறும் அனைத்துக் கட்சி மாநாட்டு அமர்வுகள், தொண்ணூறு வீதமான விடயங்களில் இணக்கப்பாடு, அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற ஆரவார அறிவிப்புகள் போன்ற ‘காதில் பூச்சுற்றும்’ தடபுடல் பிரகடனங்களைத் தவிர உருப்படியாக ஏதும் நடக்கவில்லை.
அப்படியிருக்க, முழு அளவிலான இராணுவ நடவடிக்கை வெற்றியின் பின்னர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ‘நியாயமான தீர்வு’ காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனக் கொழும்பு கொடுக்கும் கயிறை புதுடில்லி இன்னும் அப்படியே ஏற்று விழுங்கிக் கொண்டிருக்கின்றது.
நொந்து போயிருக்கும் ஈழத் தமிழினம், புதுடில்லியின் இந்த ஏமாந்த சோணகிரிப் போக்குக் குறித்து மேலும் தன்னைத்தானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தவிக்கின்றது.

நன்றி
உதயன்

0 Comments: