அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக்கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் இப் போது கொழும்பு அரசியல் மட்டத்தில் அடிக்கடி சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இருவருமே இப்போது பொது நிகழ்வுகளில் பங்கேற்கின்ற போது வலியுறுத்தி வருகின்ற ஒரு விடயம் இலங்கை அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றை முன் வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
இராணுவ ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும் அரசியல் தீர்வு காணு மாறும் வலியுறுத்தும் வெளிநாட்டுத் தூதுவர்க ளும், இராஜதந்திரிகளும் தென்னிலங்கை அரசி யலில் வெறுப்போடு நோக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இராணுவத் தீர்வு முனைப் புக்கு ஆதரவு வழங்குவோர் அல்லது அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்போர் தேசாபிமானிகள் என்றும் அரசியல் தீர்வுக்கு அமைதித்தீர்வுக்கு வலியுறுத்துவோர் தேசத் துரோகிகளாகவும் பார்க்கப்படுகின்றனர்.
இது உள்நாட்டவர்களுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்களையும் தென்னிலங்கை இப்படித்தான் பார்க்கிறது. புலிகள் இயக்கத்திடம் இருந்து முல்லைத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கூட அமைதித்தீர்வு, அரசியல் தீர்வு ஏற்பட்டு விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இதையேதான் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் அண்மையில், தமது நாட்டு அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பட்ட பாடு போதும். நீங்களாவது சிந்தித்துச் செயற்படுங்கள் என்ற தொனியில் ஆலோசனை கூறப் போக அதையே ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, ஜே.என்.பி. என்பன இலங்கையின் இறைமை மீதான தலையீடு என்று குற்றம்சாட்டின.
இப்போது மீண்டும் அமெரிக்கத் தூதுவரும் ஜேர்மனியத் தூதுவரும் தென்னிலங்கை அரசி யல் சக்திகளிடம் இருந்து நெருக்குதல்களை எதிர்நோக்குகின்றனர். இப்போதைய சிக்கலுக்கு காரணம் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்தே.
இலங்கையில் ஊடக சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் பிளாக் தெரிவித்த கருத்துக்கு விமல் வீரவன்ச கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.
அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்துக்குள் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்கிறார் என்கின்றன இந்தக் கட்சிகள். ஊடக சுதந்திரம் பற்றி வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவிப்பதானால் அது வெளிவிவகார அமைச்சினூடாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கிறார். இலங்கையின் ஊடக சுதந்திரம் பற்றி அமெரிக்கத் தூதுவர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. உலகம் சிரிக்கின்ற அளவுக்கு இலங்கையின் ஊடக சுதந்திரம் கிழிந்து போய்க் கிடக்கிறது.
இப்படியான நிலையில் இதைப் பற்றிய கருத்தை வெளிவிவகார அமைச்சின் ஊடாகத்தான் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனென்றால் இந்தக் கருத்து பொதுப்படையானது. அரசாங்கம் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் கொண்டதல்ல. இதுவே புலிகள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கின்ற கருத்தாக இருந்திருக்குமேயானால் இந்த சக்திகள் அனைத்தும் கைதட்டி வரவேற்றிருக்கும். அதை நாட்டின் இறைமை மீதான தலையீடாக எவரும் பார்க்கமாட்டார்கள்.
அமெரிக்கத் தூதுவர் மீதான வெறுப்பை அதிருப்தியை வெளிப்படுத்தக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாதென்ற நோக்கமே இத்தகைய எதிர்ப்புகளில் இருந்து உறுதியாகிறது. அது போன்றே இலங்கை அரசாங்கம் அமைதி வழித் தீர்வை முன் வைக்கும் என்று தான் ஒரு போதும் நம்பவில்லை என்று சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த் கருத்து தெரிவித்த பின்னர், அவரோடு அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.
லசந்தவின் இறுதிச் சடங்கில் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த் தெரிவித்த கருத்துக் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹன்ன இந்த உத்தியோகபூர்வ கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அப்படி அவர் ஒன்றும் பெரிதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டவும் இல்லை. எவரையும் தாக்கவும் இல்லை.
"இன்று ஒருவர் மௌனித்துள்ளார். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்க வேண்டும். ஆனால் இன்று தாமதமாகிவிட்டது. இன்று மனிதத்துவத்தின் பாரிய உண்மைக் குரலை இழந்து விட்டோம்' என்பதே அவரது சுருக்கமான பேச்சு. ஆனால் இது குறித்து அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற அதிருப்தியானது வெளிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையில் நடக்கின்ற எதையுமே கண்டு கொள்ளக் கூடாதென்ற உண்மையைத் தான் உணர வைத்திருக்கிறது.
இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங்கமும் சரி, தென்னிலங்கை அரசியல் சக்திகளும் சரி ஒன்றை மறந்து விட்டன. இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு சிறிய நாட்டுக்குள் நடக்கின்ற பிரிவினைப் போராட்டம் மட்டுமல்ல. இதற்குள் தமிழ்மக்களின் உரிமை பற்றிய கேள்விகள் நிறையவே இருக்கின்றன. 1980களுக்கு முன்னர் ஜே.ஆர் காலத்தில், சிறிமாவோ காலத்தில் இந்தப் போராட்டத்தை அடக்கியிருந்தால் அப்போது எவரும் மூக்கை நுழைத்துக் கேள்வி கேட்க வந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் உலகம் முழுவதற்கும் இப்போது இந்தப் போராட்டத்தின் பிரச்சினையின் தாக்கங்கள் பரவிப் போய்விட்டன. இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சிறு மாற்றமும் உலகம் முழுவதிலும் எதிரொலிக்கிறது.
இந்தக் கட்டத்தில் இலங்கையின் உள்விவகாரம் பற்றிப் பேசுவதற்கு வெளிநாடுகளுக்கு எந்தத் தகைமையும் கிடையாதென்று கூறமுடியாத நிலை வந்து விட்டது. இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பதற்காக என்று நாடு நாடாக உதவி கேட்டுப் பெற்றுத் தான் போரை நடத்துகிறது. அப்படி உதவிகளை வழங்கிய நாடுகள் கருத்துக்களை தெரிவிக்கத்தான் செய்யும் என்பதையும் அரசாங்கமோ தென்னிலங்கை அரசியல் சக்திகளோ புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.
ஆனால் அரசாங்கத்தினதும் தென்னிலங்கையின் அரசியல் சக்திகளினதும் இத்தகைய போக்கு சர்வதேச ரீதியில் இலங்கையை மேலும் மேலும் தனிமைப்படுத்தவே உதவப் போகிறது.
நன்றி :- வீரகேசரி
Sunday, January 18, 2009
தூதுவர்களுடன் முரண்படும் இலங்கையின் இராஜதந்திரம்
Posted by tamil at 7:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment