Monday, July 7, 2008

இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா?

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது.
"இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின்ன ணியோடு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
""இந்திய சீனப் போரின் போதும், இந்திய பாகிஸ் தான் போரின்போதும், இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டையே சிங்கள அரசுகள் எடுத்திருந்தமை வரலாறு. அப்போதெல்லாம் ஈழத் தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஆனால் இப்போது ஈழத் தமிழர் தமது சொந்த விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுகின்றதே......? அதை நிறுத்தி எமது விடுதலைப் போராட் டத்துக்கு ஆதரவாகவே அது செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.'' என்று நடே சன் கூறியிருக்கின்றார்.

புலிகள் தரப்பிலிருந்தும் ஈழத் தமிழர்கள் பக்கத்தி லிருந்தும் விடுக்கப்படும் இத்தகைய வேண்டுகோள் புதுடில்லியின் காதில் ஏறுமா என்பதே கேள்வி.

ஆனால் தனது தற்போதைய பதவிக் காலத்தின் அந்தத்தில் தான் ஆட்சியில் நீடிப்பதே உறுதியில்லை என்ற நிலையில் அரசியல் செல்வாக்கு வறுமையில் சிக்கி அல்லாடித் தள்ளாடிக் கொண்டிருக்கும் தற்போதைய மன்மோகன்சிங் அரசின் காதில் இந்தக் கோரிக்கை விழுவதோ அதை சாதகமாக அது பரிசீலித்து வலிமையான நடவடிக்கைகளில் இறங்குவதோ சாத்தி யமேயற்ற விடயங்கள் என்பதை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி விட்டன.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்வதா, இல்லையா என்ற "இரண்டுங் கெட்டான்' நிலையில் தவித்துப்போய் நிற்கும் மன்மோகன் அர சால், இலங்கை விவகாரத்தில் நீதியின்பால் நியாயத் தின்பால் நின்று தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது என்பது திண்ணம். அதற்கான அரசியல் பற்றுறுதியும், துணிச்சலும், திடசங்கற்பமும் மன்மோகன் அரசிடமோ, அதற் குள் அதிகாரம் மிக்கவராக இன்று விளங்கும் சோனியா காந்தியிடமோ இல்லவே இல்லை என்பதும் தெளிவு.

தேவையானால், அண்மையில் தான் கொழும்புக்கு அனுப்பிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு போன்ற, செல்வாக்குள்ள குழுக்கள் மூலம் கொழும்புக்கு வாய் மூலமாக "டோஸ்' கொடுக்கும் வேலைகளைப் புதுடில்லி செய்து பார்க்கலாம். அதற்கு அப்பால் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து அதனை வழிக்கு வரப் பண்ணும் அல்லது பணியவைக்கச் செய்யும் எந்தச் செல்வாக்கோ, தைரியமோ, ஆளுமையோ இன்றைய புதுடில்லி அரசுத் தலை மைக்கு அடியோடு கிடையவே கிடையாது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

தனது இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளோடு கொள்கை ரீதியாகப் பகைத்துக்கொண்டு தன்னுடைய அரசையே ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியாது தடுமாறும் புதுடில் லித் தலைமை இலங்கை விவகாரத்தில் நீதியைக் கையில் தூக்கிக் கொண்டு, நியாயத்தை நிலைநிறுத்தப் புறப்பட் டால் அது "மூஞ்சூறு தான் போகக் காணோமாம், அதற் குள் விளக்குமாற்றையும் தன்னோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டதாம்' என்ற மாதிரியாகிவிடும்.

எனவே தற்போதைய புதுடில்லி அரசிடம் இருந்து தமிழர்கள் நீதி, நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்ப தில் அர்த்தமில்லை.

எனினும், இலங்கை விடயத்தில் மன்மோகன்சிங் அரசின் கையறு நிலைமை குறித்து இந்தியாவில் இவ் வருட முடிவில் அல்லது அடுத்த வருட முற்பகுதி யில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் அமோக வெற் றியீட்டி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்ற பாரதீய ஜனதாக்கட்சியின் சார்பில் அதன் தென்னிந்தியப் புலனாய்வுப் பிரிவு சென் னையில் அவசர அவசரமாகக் கூடி ஆராய்ந்திருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைமை குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.
* வடக்கில் தமிழர்களை அழிக்க இலங்கைப் படை கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈழத் தமிழர் களின் கைகளைப் பலப்படுத்துவது.

* அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் சமஷ்டிமுறைத் தீர்வை ஆதரிப்பது.

இவையே அந்த முடிவுகள் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
ஆக, அடுத்த வருடத்துக்குள் வரப்போகின்ற இந்தியப் பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு விடிவு தருவதாக அமையக்கூடும். இந்த நவம்பரில் அமெரிக்காவில் நடை பெறும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவும், இலங்கை போன்ற நாடுகளில் தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இன மக்களுக்கு மீட்சி தர வழி செய்வதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு அடுத்த வருடத்தோடாவது மீட்சி கிட்டலாம் என்ற நப்பாசையை நம்பிக்கையை இந்திய, அமெரிக்கத் தேர்தல்கள் தருவனவாக உள்ளன என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லலாம்.


thanks uthayan

0 Comments: