விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றிப் பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்குரியதொரு பொருளாக இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் குழப்பம் அடைவதற்குச் சில காரணிகள் இருக்கவே செய்கின்றது.
சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால்- இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்கள்; அவர்கள் வலிந்த தாக்குதல்களில் ஈடுபடும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதே ஆகும்.
இது குறித்து அண்மையில் பேசியிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளில் 9,000 பேரைக் கொன்றுவிட்டதாகவும்; இன்னமும் 4,000-5,000 வரையிலான புலிகளே இருப்பதாகவும் தெரிவித்திருந்ததோடு, விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் வலுவை இழந்துவிட்டதாகவும், அவர்களினால் இனி வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இராணுவத்தரப்புத் தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக்கொண்ட விமர்சகர்களினது மதிப்பீடானது விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டனர் என்பதே ஆகும்.
அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இராணுவ ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது யுத்தத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறுவதெல்லாம், வன்னிக் களமுனையில் வெற்றிகளைக் குவித்துவரும் இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் என்ற இராணுவப் பேச்சாளரின் அறிவிப்புக்களும், விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டதாகவே சில இராணுவ விமர்சகர்கள் முடிவிற்கு வருவதற்குக் காரணமாய் உள்ளது.
இதனைத் தவிர வேறு சில இராணுவ ஆய்வாளர்கள் களமுனைகள் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
அதாவது, மன்னார் களமுனையில், விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் காட்டிய எதிர்ப்பைக் காட்டுவதில்லை. ஆகையினால் புலிகள் பலவீனப்பட்டுவிட்டது ஊர்ஜிதப்படுத்தப்படத்தக்கதே என்கின்றனர்.
இவர்கள், மன்னார் மாவட்டத்தில்-மடுவை இராணுவம் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட படை நடவடிக்கையை எதிர்த்து ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்ட விடுதலைப் புலிகள் அதற்கு அப்பால் குறிப்பிடத்தக்க அளவில்- அதாவது மடுப் பிரதேசத்திற்காகப் போரிட்டது போல் போரிடவில்லை.
குறிப்பிடத்தக்க அளவான நிலப்பரப்பை பெரும் எதிர்ப்புக்காட்டாது விட்டு வெளியேறியுள்ளனர். இது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டதையே காட்டுகின்றது எனத் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறாக விமர்சகர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டதாகக் கூறுகையில், ஒரு தரப்பினர்- பெரும்பாலும் நடுநிலைமையான ஆய்வாளர்கள் சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்களைக் கொண்டும் சரி, களமுனையின் நிலவரத்தையும் கொண்டும் சரி விடுதலைப் புலிகளை மதிப்பிடுதல் வரலாற்றுத் தவறாகிவிடும் எனத் தெரிவிக்கின்றனர்.
இவர்கள், விடுதலைப் புலிகளின் குண இயல்புகளைக் கொண்டே இதனை மதிப்பிடவேண்டும் எனவும், ஆனால் அது ஒரு இயலுமான காரியம் அல்ல எனவும் தெரிவிக்கின்றனர். இதற்குக் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் உதாரணம் காட்ட முற்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அல்ல எனத் தெரிவிக்கும் அவர்கள் அவ் இயக்கமும், அதன் தலைமையும் 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றைக் கொண்டது என்பதோடு, இரு நாட்டு இராணுவங்களோடு போரிட்டுள்ளதோடு- தற்போதைய நெருக்கடியைவிட மோசமான நெருக்கடியிலும் வெற்றிகரமாகப் போரிட்ட அமைப்பு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இவர்களின் மதிப்பீட்டின்படி, விடுதலைப் புலிகள் இயக்கமானது தனக்கான போர் யுக்தியைத் தானே வகுத்துக்கொள்ளும் அமைப்பாகும். எவரிடமும் கடன் வாங்கியோ எவரின் அழுத்தத்திற்கு உட்பட்டோ அது தனது போர் யுக்தியை அமைத்துக்கொண்டதும் இல்லை மாற்றிக்கொண்டதும் இல்லை.
சிறிலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்து விடுதலைப் புலிகளில் 70 வீதத்தினரை அழித்துவிட்டோம், 90 வீதத்தினரை அழித்துவிட்டோம் எனப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு புலிகளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், சரணாகதி அல்லது சாவு என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை எனப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதும், விடுதலைப் புலிகள் யுத்தத்தை தமது திட்டத்திற்கும், யுக்திக்கும் ஏற்பவே நடத்தினர்.
ஜெயசிக்குறு நடவடிக்கை ஆரம்பித்து சில நாட்களில் புளியங்குளம் கைப்பற்றப்படும் என எதிர்பார்த்திருந்த சிறிலங்கா இராணுவத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அதனைச் சாதிக்க முடியாது போனது. மாறாகப் புலிகள் புளியங்குளத்தை விட்டுத் தாமாகப் பின்வாங்கியபோதே இது சாத்தியமாகியது. கனகராயன்குளத்திலும், ஏன் மாங்குளத்திலும் கூட அதுவே நடந்தது.
அதாவது, கிளிநொச்சி நகரை ஓயாத அலைகள்-02 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக்கொண்டதும் - மாங்குளத்தை விட்டுப் புலிகள் வெளியேறி இருந்தனர் என்பதே நிஜமானதாகும். அவ்வேளைகளில் களமுனையில் இருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அது நன்கே தெரிந்திருக்கும்.
ஆகையினால், விடுதலைப் புலிகள் ஒரு பிரதேசத்தில் தீவிர எதிர்ப்புக் காட்டுவதும் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கிக் கொள்வதும் அவர்களின் போரியல் யுக்தியின்பாற்பட்டதானதாக இருக்குமே ஒழிய புலிகள் பலவீனப்பட்டுவிட்டதன் அடையாளமாக இதனைக் கொள்வதென்பது- தவறானதொரு முடிவாகவே இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு அவர்கள் மற்றொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2006 இல் இராணுவம் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாக இராணுவத் தரப்பாலும், அரச தரப்பாலும் பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஆனால் ஒரு மாத காலத்தில் மடுப்பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொள்ளமுடியும் என ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை ஒரு வருடம் கடந்த நிலையிலேயே சாத்தியமானதும் - அதுவும் விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்தைவிட்டு அகன்ற பின்பே சாத்தியமானது எனத் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சிறிலங்கா இராணுவம் வன்னிக்களமுனையில் எதிர்பார்த்த அளவில் சாதிக்கவில்லை என்று இராணுவத்தின் இழப்பு ஒரு வாதத்திற்குரியதாக மாறியுள்ளது என்றும் ஆய்வாளர்களில் ஒருதரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
அதாவது, வடக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியைச் சூழ இராணுவம் நான்கு முனைகளில் ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்டு வருகின்றபோது மன்னார்க் களமுனையில் பெரும் இழப்புக்களின் பின்னர் கண்டுள்ள ஓரளவு முன்னேற்றத்தைத் தவிர வேறு முனைகளில் அதனால் சாதிக்கமுடியாது போனது மட்டுமல்ல ஓரிரு முனைகள் குறித்து அதனால் சிந்திக்கவே முடியாது உள்ளது என்கின்றனர்.
குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதாவது, வடபோரரங்கில் சிறிலங்காப் படைத்தரப்பு கையறு நிலையில் இருப்பதாகவும் தமது வலிந்து தாக்குதல் என்பதைவிட விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்தே அவை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மணலாற்றுக் களமுனையைத் திறந்த இராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பினும்- குறிப்பிடத்தக்கதான முன்னேற்றத்தை அதனால் எட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் பொறிவெடிகளையும் கண்ணிவெடிகளையும் தாண்டி முன்னேற முடியாத நிலையிலேயே அவை உள்ளன.
வவுனியாக் களமுனையிலும் படையினரால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டமுடியவில்லை. பாலமோட்டை போன்ற சில கிராமங்களிலேயே ஒரு வருடத்திற்கு மேலாக அவை போரிட்டவண்ணமுள்ளன.
இதேவேளை 2007 இன் முதற் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வடக்குக் களமுனைகளில் இராணுவம் குறிப்பிடத்தக்கதானதொரு அளவு இழப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து இராணுவத்தரப்பில் இருந்தும், அரச தரப்பில் இருந்தும் சரியான புள்ளி விபரங்களோ, பொருத்தமான புள்ளி விபரங்களோ வெளியிடப்படுவதில்லை.
இவ்விடயத்தில் அரச தரப்பும், இராணுவத் தரப்பும் உண்மையான தகவல்களை வெளியிடாதது மட்டுமல்ல, முரண்பாடான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக எருக்கலம்பிட்டி கடற்படை முகாமை கடற்புலிகள் தாக்கி அழித்தபோது அதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது, கடற்படைத் தரப்போ ஆறு கடற்படையினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியிட்டிருந்தன. இது இழப்புக் குறித்து சிறிலங்காத் தரப்பு வெளியிடும் புள்ளி விபரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இதனைத் தவிர இறந்த படையினரின் தொகைக்கும் காயமடைந்த படையினருக்கும் இடையிலான விகிதாசாரத் தொடர்பு பொருத்தப்பாடற்றதாயுள்ளது. யூன் மாதத்தில் 112 படையினர் கொல்லப்பட்டும் 789 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்ற விகிதாசாரம் போரில் கொல்லப்படும் காயமடையும் வீரர்களின் சர்வதேச மதிப்பீடுகளுக்கு மாறுபாடானதாகவே உள்ளது. இருப்பினும், காயத்தின் எண்ணிக்கை அதிகம் என்ற அளவில் கூட படையினருக்கான சேதம் பெரிதாக இருப்பதனை இப்புள்ளி விபரங்கள் உறுதி செய்பவையாகவே உள்ளன.
இவை ஒருபுறம் இருக்க, வன்னிக் களமுனையில்- குறிப்பாக மன்னார்க் களமுனையில் அண்மையில் இராணுவத்தினருக்குச் சாதகமானதாகத் தென்படும் களமுனையின் போக்கானது விடுதலைப் புலிகளின் போர் யுக்தியின் ஒரு பகுதி எனவும் சில இராணுவ ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.
அதாவது, இராணுவத்தைப் பரந்து விரிய அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் செறிவைக் குறைக்கவும் - அதன்மூலம் தமது வலிந்த தாக்குதலுக்கான சாதகமானதொரு சூழ்நிலை ஒன்றை உருவாக்கவும் முடியும் என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர் எனவும் அவர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.
இந்தவகையில் தற்பொழுது சிறிலங்கா இராணுவ ஆய்வாளர்கள் மட்டத்தில் விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றி பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா என்பது குறித்து பலமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால், விடுதலைப் புலிகளின் வரலாறு அதன் தலைமைத்துவத்தின் இராணுவ மதிநுட்பம் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டியது போன்றவற்றை மதிப்பீடு செய்ய முற்படுபவர்கள் பெரும் சமர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உண்டு என நம்புகின்றனர்.
அதாவது, விடுதலைப்புலிகள் பதுங்குகின்றார்கள் என்றே கொள்கின்றனர்.
நன்றி: வெள்ளிநாதம் (11.07.08)
Sunday, July 13, 2008
புலிகள் பதுங்குகின்றார்களா?
Posted by tamil at 6:56 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment