"தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்' என்றொரு பேச்சு மொழி நம் மத்தியில் உண்டு.
அதனை நடைமுறையில் இலங்கை மக்கள் இப் போது நேரடியாகவே கண்டறிந்து பட்டுணர்ந்து வருகின்றார்கள்.
அண்ணன்தம்பி இருவர் மாத்திரமல்லர். நான்கு சகோதரர்கள் அணியே நாட்டை நாசப்படுத்தித் துவம்சம் செய்து வருகின்றமையைக் காண்கிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் உட்பட நாட்டின் முழு ஆட்சி அதிகாரமுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம். பெயருக்கு நாடாளுமன்றமும் அமைச்சரவையும் வரவுசெலவுத் திட்டத்தின் கீழான எழுபது வீத நிதியைக் கையாளும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிட மும், ஏனைய ராஜபக்ஷ சகோதரர்களிடமுந்தான் உள்ளன.
நல்லாட்சி, நீதியை நிலைநாட்டுதல், பக்கச் சார்பற்ற நிர்வாகம், ஊழல்முறைகேடுகளை ஒழித்தல் போன்ற நன்னோக்கு இலக்குகளை அடையும் எண்ணத்தில் அரசமைப்புக்கு 17 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட் டது. நல்லாட்சியை நெறிப்படுத்துவதற்காக அந்தத் திருத்தத்தின் மூலம் பல்வேறு ஆணைக் குழுக்களை அமைக்க வழியும் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் எல்லாக் கட்சிகளினதும் இணக்கத் துடனேயே அந்தஅரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது நாடாளு மன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரச் சிறகுகளை வெட்டுவதாக அந்த அரசமைப் புத் திருத்தம் இருந்ததால், அதனை அப்போதே முழுமூச்சில் ஆதரித்து வரவேற்றார் ராஜபக்ஷ.
ஆனால் இன்று அவரே ஜனாதிபதி. இச் சமயத்தில் அந்த அரசமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால் தமது அதிகாரம் செல்வாக்கு வெட்டப்படும், தனது சர்வாதிகார போக்கின் வீரியம் குறைக்கப்படும் என்ற காரணத்தால் அத்திருத்தத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் இடக்குப்போட்டு அதனை முடக்கு கின்றார் அவர்.
அரசமைப்பு கவுன்ஸில் ஒன்றை ஸ்தாபிக்கும் படி அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் வலியுறுத்துகிறது. அப்படி அரசமைப்புக் கவுன்ஸில் இயங்கத் தொடங்கி னால் தேர்தல், நீதித்துறை, காவல் (பொலிஸ்) துறை, அரச கணக்காய்வுத்துறை ஆகியவை தொடர்பான வழிகாட்டு அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த சுயாதீன ஆணைக்குழுவிடம் போய்விடும். இந்த நான்கு துறைகளினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளை நியமித்து அவர்களை வழிகாட்டும் அதிகாரம் ஜனாதி பதியிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும். இதனால் இத் துறைகளை தம் விருப்பப்படி நடத்திச் சீரழிக்கும் வாய்பை ஜனாதிபதி இழந்துவிடுவார்.
இதன்காரணமாகவே அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு ஆள்களை நியமித்து அதனை முறைப்படி இயங்கவைக் காமல் காலத்தை இழுத்தடித்து வருகிறார் ஜனாதிபதி.
ஜனாதிபதியின் இந்த விட்டேத்தியான போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் தடவை யாக, ஜனாதிபதி ஒருவரின் பெயர் குறிப்பிட்டு, அவரை பிரதிவாதியாகப் பிரேரித்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ள தோடு, ஜனாதிபதிக்கு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வும் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்துக்கான விண்ணப்பம் மூலம், நியாயம் நிலைநாட்டப்பட்டு, அதன் வாயிலாக அரசமைப்புக் கவுன் ஸில் இயங்க வைக்கப்படுமாயின், அதனால் ஜனாதிபதி யின் சர்வாதிகாரத்தில் கணிசமான இடிவிழ வாய்ப்புண்டு.
அப்படி இல்லாதவரை "மஹிந்த அண்ட் பிறதர்ஸ்' கூட்டுக் கம்பனியின் நாட்டை குட்டிச்சுவராக்கும் திட்டம் வெற்றிகரமாகவே தொடர்ந்து அரங்கேறும்.
தென்னிலங்கையில் சகல ஒப்பந்த வேலைகளை யும் திட்டங்களையும் தீர்மானிக்கும் பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தவின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம்.
கிழக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்கள் என்ற பெயரில் சகல நிதிச்செலவினங் களை யும் கையாளும் அதிகாரம் இளைய சகோதரரும், ஜனாதிப தியின் ஆலோசகரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷவிடம்.
பாதுகாப்பு, யுத்தம் ஆகியவற்றின் பெயரால் நாட்டைச் "சுத்தும்' அதிகாரமும் பொறுப்பும் மற்றொரு தம்பியான கோத்தபாய ராஜபக்ஷவிடம்.
இப்படி சகோதரர்களின் சர்வாதிகாரம் நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளிவிடும்.
அதிலும் பாதுகாப்புத் துறையில் கோத்தபாயவும், அரசி யலில் பஸிலும் பண்ணும் அதிகாரத்தனத்துக்கு அளவே இல்லை.
போதாக்குறைக்கு, இந்தச் சகோதரர்கள் அணிக்கு காவடிதூக்கியபடி மேர்வின் சில்வா போன்ற தரப்புகள் பண்ணும் அட்டகாசங்கள்.
இந்த அரசியல் அராஜகங்களைப் பார்க்கும் போது "தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிர சண்டன்' என்ற முதுமொழி "அண்ணன் அரசாண்டால் தம்பி சண்டப்பிரசண்டன்!' என்று மாறிவிட்டதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இந்த அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, நெறிப்ப டுத்தும் அரசியல் வரன்முறைகளை நடைமுறைப்படுத்த விரைந்து செயற்படுத்த இலங்கை தவறுமானால் நாடு முற்றாகச் சீரழிவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.
நன்றி - உதயன்
Sunday, August 10, 2008
அண்ணன் அரசாண்டால் தம்பி சண்டப் பிரசண்டன்!
Posted by tamil at 2:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment