நாடு என்றுமில்லா பொருளாதார நெருக்கடியில் அமிழ்ந்திருக்கும் வேளையில், சப்பிரகமுவா மாகாண வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்துவதின் நோக்கம் எதுவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டியதோர் விடயமாகும்.
இவ்விரு சபைகளுக்குமான ஆயுட்காலம், முடிவடைவதற்கு முன்னதாக அச்சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் 23.08.2008 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
நிறைவேற்று சனாதிபதியாக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சனாதிபதித் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு, உள்ராட்சி, மாகாண சபைகளின் நிர்வாகங்கள் தமக்குச் சார்பானதாக அமைக்கப்படுவதும், தனது ஆட்சியை மக்கள் எவ்வாறு கணிப்பீடு செய்துள்ளார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்கும், இவ்வாறான தேர்தல்களை நடாத்துவது ஒரு மரபுமுறையாக இருந்து வருகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தி முடிக்கப்பட்ட கையுடன், மற்றைய எட்டு மாகாணங்களில், ஆறையும் புறமொதுக்கி விட்டு, சப்பிரகமுவா மாகாணம், வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதன் நோக்கம் எதுவாக இருக்கும் என மக்கள் மனங்களில் ஏற்பட்ட கேள்வி நியாயத்தின் பாற்பட்டதாகும்.
மற்றைய மாகாணங்களில் தமிழர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள், இவ்விரு மாகாணங்களையும் விட கூடுதலாகக் இருப்பதாலும், சிறுபான்மை இனத்தவர்கள் அரச சார்புக் கட்சியான மகிந்த அரசுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக்கள் அருகி இருப்பதைத் தெரிந்து கொண்டதாலும், சிறுபான்மை மக்கள் குறைவாக இருக்கும் இவ்விரு மாகாணங்களிலும் தேர்தலை நடாத்தி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில், தேர்தலை நாடாத்துகின்றது.
இதேவேளை கடந்த சனாதிபதித் தேர்தலிலும் அரசு இவ்விரு மாகாணங்களிலும் ஐ.தே.கட்சியை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தது.
மகிந்த ராஜபக்ச அரசுக்கு, விலைவாசி உயர்வால் மக்கள் படும் துன்ப துயரங்களை, யுத்த பேரிகையையும் கூட்டி இதன்பால் ஈர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது, அதற்கான ஆதரவுத்தளமாக மாகாண சபைகளின் நிர்வாகத்தைத் தனது கைக்குக் கொண்டுவர வேண்டிய தீர்க்கதரிசன எண்ணமும் உண்டு.
ஜே.வி.பி.கட்சியினரால் கொண்டுவரப்பட்ட வேலை நிறுத்தம், உண்மையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பதற்கும் அப்பால், தன்னால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற யுத்த வெறிகளுக்கு ஓர் எதிர்மறைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தேசிய விரோத நடவடிக்கையேயாகும் என்ற நிலையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயமும் உண்டு.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இத்தேர்தல் ஒரு மரணப் பொறியாகவுள்ளது.
கடந்த சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வந்ததற்கு இக்கட்சியின்; தலைமைத்துவப் பலயீனமே முக்கிய காரணம் என்ற முணுமுணுப்புக்கள் இக்கட்சிக்குள்ளும் எழத்தொடங்கியதால், இத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் போது கட்சித் தலைமைத்துவம் ருக்மன் சேனநாயக்கவிற்கு வழங்கப்பட வேண்டுமென்ற பலமான கோரிக்கைகள் எழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
எனவே இக்கட்சி இவ்விரு மாகாணசபைத் தேர்தல்களையும், அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டக்களமாக மாற்றி மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி தேர்தல் முடிவுகள் வெளிவரும் அதேவேளை, அரசாங்கமும் கலைக்கப்பட்ட செய்தி வெளிவரவேண்டும் எனப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருப்பதுடன் மக்களின் கைகளில்தான் சனநாயகத்தைப் பாதுகாக்கும் சக்தி உண்டு எனவும் கூறிவருகின்றது.
மகிந்த ராஜபக்ச அரசு புலிகளைத் தோற்கடிப்போமென்று யுத்த வெறியூட்டப்பட்ட சிங்கள மக்களுக்குப் புலிகள் பலவீனமடையவில்லை, அவர்கள் இராணுவத்தை வலிந்து தாக்க முற்படும் போது யுத்த மாயை கலைந்து விடும் என்பது சாதாரண சிங்கள மக்களுக்கு தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இல்லை.
இதனால் அரசினுடைய பிரச்சாரம் மக்களிடையே பலித்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி வடமத்திய மாகாண சபையின் தலைமை வேட்பாளராக முன்னை நாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானவர், புலிகளுடன் போரிட்டவர் என்ற சிறப்பு மேலாண்மைத் தகைமைகளைக் கொண்டும், இம்மாகாணத்தில் முப்பத்தையாயிரம் குடும்பங்கள் நேரடியாக இராணுவத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையிலும் இப்பதவிக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.
ஜானக பெரேரா இராணுவத் தளபதியாக இருந்த போதிலும், இவர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல எனவும் ஜே.வி.பி. கட்சிக்காரர் மேற்கொண்ட புரட்சியின் போது இக்கட்சியின் உறுப்பினர்கள் பலரைக் கொலை செய்ததில் பெரும் பங்கு வகித்தவர் என்பதாலும் இவருக்கான ஆதரவலை எழுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயமும் காணப்படுகின்றது.
சப்பிரகமுவா மாகாணசபையின் தலைமை வேட்பாளராக ரஞ்சன் ராமநாயக்க என்ற சிங்களத் திரைப்பட நடிகரை ஐ.தே.கட்சி நியமித்துள்ளது. இவரும் சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவைப் போல, கரையோர மீனவ சமுதாயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். இந்தவகையில் இவரது திரைப்பட எழுச்சி கண்டு பீதியடைந்த மகிந்த அரசு, அவரது சமூகப் பின்னணியிலுள்ள தாழ் நிலையையும், எடுத்துக்காட்டி வருகின்றது. ரஞ்சன் ராமநாயக்க சம்பிரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாத போதிலும் சிங்களச் சினிமாவின் சண்டைப்பட வீரனாக நடித்து மக்கள் மனங்களில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர் என்பதால் இவ்வாறான ஒருவரின் நியமனம் வெற்றிக்கு வாய்ப்பாகும் என எண்ணிய ஐக்கிய தேசியக் கட்சி இவரைத் தலைமை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது.
மகிந்த அரசு வடமத்திய மாகாணசபையின் தலைமை வேட்பாளராக பேர்டி பிரேம்;லால் திசாநாயக்க என்பவரையும், சப்பிரகமுவா மாகாண சபையின் தலைமை வேட்பாளராக மதிபால கேரத் என்பரையும் நியமித்த போதிலும், இவ்விருவரும் அவ்வவ் மாகாண மக்களால் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்டதாலும், இவர்களிடமிருந்து புதிய எதிர்பார்ப்புக்களைக் கண்டு கொள்ளமுடியாது என்ற ஆதங்கமும் மக்களிடத்தில் நிலவுகின்றது.
இவ்விரு மாகாணங்களிலும் ஜே.வி.பி.கட்சி மூன்றாவதோர் அணியாகப் போட்டியிடுகின்றபோதிலும் ஆளும் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவுவதாகவும் ஜே.வி.பி. ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அமையலாம் என்ற கருத்துக் கணிப்புடனான ஆரூடமொன்றும் நிலவுகின்றது.
ஜே.வி.பி. அரச அடக்குமுறையையும், விலைவாசி உயர்வையும் முக்கிய பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டுவதுடன் மாகாண சபை முறைமை அதிகாரமற்றதும், ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படும் நிறுவன மென்றும், இதை நிரூபித்துக் காட்டுவதாகவே தாம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறுகின்றனர்.
இடதுசாரிக் கட்சியாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் சிறுபான்மை இனங்களின் பிரச்சினையை அரசியல் ரீதியாக ஆராய முற்படாது இராணுவ ரீதியாக ஒடுக்குதல், அடக்குதல் என்ற பேரினவாதக் கோட்பாட்டை ஆதரித்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட இம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அருகதை உண்டா? என்ற இடதுசாரிச் சிந்தனைகளும் தேர்தல் பிரதிபலிப்புக்களாகக் காணப்படுகின்றன.
இலங்கை அரசியலில் காணப்படும் அடாவடித்தனம், மிரட்டல், காடைத்தனம் போன்ற பாசிசக் கலப்பு சனநாயக வழிமுறை கடந்த பல ஆண்டுகளாகத் தொடருகின்றது. இவ்வழிமுறை ஆளும் தரப்புக்கு பெரும் அனுகூலங்களைக் கொடுத்ததால், ராஜபக்ச அரசும் தனது சண்டித்தன அமைச்சர்கள் மேர்வின் டி சில்வாவை இத்தேர்தலில் களமிறக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி பிரபல்யம் வாய்ந்த இரு புது முகங்களை நிறுத்திய நிலையில், ஆளும் கட்சி சரியான தலைமைத்துவங்களைப் பெற்றுக்கொடுக்கத் திறனற்றும் போயுள்ளது.
ஆயினும் வட மத்திய மாகாண மக்களுக்கு நெல்லுக்கான அதிகரித்த விலையையும் சப்பிரகமுவா மாகாண மக்களுக்கான றப்பருக்குக் கிட்டிய அதிகரித்த விலையையும் சுட்டிக்காட்டி தனது வெற்றிக்கான வாய்ப்பைப் பெற முயற்சிக்கிறது.
ஒரு நியாயமான தேர்தல் என்பது மக்களைச் சுயமாகச் சிந்திக்க வைப்பதன் மூலம் பெறப்படும் முடிவேயாகும். அந்த வகையில் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நடாத்தப்பட்டு வந்த தேர்தல்கள் யாவும் சரியான சனநாயகத் தீர்ப்பைப் பெறத் தவறியதை பல்வேறு தரப்புக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்விரு மாகாணசபைகளின் தேர்தலும், நட்டாமுட்டித் தனத்துடன் ஆரம்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: க.கிருஷ்ணபிள்ளை B.A (Cey)
வெள்ளிநாதம் (10.08.08)
Wednesday, August 13, 2008
சப்பிரகமுவ, வடமத்திய, மாகாண சபைத் தேர்தல்களில் போர் வெறியா? அல்லது பொருளாதாரமா?
Posted by tamil at 8:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment