Sunday, August 10, 2008

யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச

குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது எத்தருணத்திலும் குரங்கை நீ எண்ணிப்பார்க்கக்கூடாது!" என்றார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய குடியானவன் தான் விரும்பியவற்றை எல்லாம் பட்டியல் போட்டுக்கொண்டு, முனிவரை நினைந்தவாறு அவற்றை உரத்துக் கூற முற்பட்டான். ஆனாலும், ஒவ்வொரு தடவையும் குரங்கை நினைத்துப்பார்க்கக்கூடாது என்பதே அவனுடைய எண்ணங்களை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தபோதிலும் ~எங்கே குரங்கு வந்துவிடப் போகிறதோ!| என்பதே அவனது சிந்தனையை அதிகம் நிறைத்தது.

இவ்வாறு வேண்டும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய அபார சக்தியைப் பெற்றிருந்த போதிலும், எதிர்மறை உணர்வுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளாமல் அந்த அற்பம் தன்னைப் பீடிப்பதற்கு அனுமதித்ததால், குடியானவனால் அந்த அபார சக்தியின் பயனை எட்டிக்கொள்ள முடியாதிருந்தது. தனக்கு நன்மை பயக்கும் எனத் தெரிந்திருந்தும், அதன் கனிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு எதிர்மறை உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தன்னை இரையாக்கிக்கொள்ளும் இந்த மனித இயல்பு மனிதனை எந்தளவிற்குப் பாதிக்கின்றது?.

ஆரம்பத்திலே மதுக்குவளை (அல்லது போத்தலாகட்டும்!) மனிதனின் கையில் தவழ்கிறது. பின்னரோ மதுக்குவளையின் காலடிக்குள் மனிதன் தவழ்கிறான். இதைப்போலத்தான் எதிர்மறை உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளும்! இதில் எது எதிர்மறை? எது நேர்மறை என யாராவது கேட்கக்கூடும். ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் நீண்டகால அடிப்படையில் அவனது சமூகத்தின் வளர்ச்சியைச் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆகவே, ஒவ்வொரு சமூகத்தினதும் நன்மை கருதிய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுக்கு எதிரான சகலவற்றையும் எதிர்மறை உணர்வுகளாகக் கொள்ளலாம். அந்தி சாய்கிறதே என்பதற்காக 'ஐயைய்யோ! இருள் சூழப்போகின்றதே" என அடித்துவைத்துக் குழறுவதா அல்லது அழகிய அடுத்த நாள் காலைக்காகத் தயாராகுவதா உகந்தது?

சொந்த நாட்டைப் பிரிந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகின் திக்கெங்கும் சிதறி வாழ்ந்த யூத மக்கள் ஒவ்வொருவரும் மூடிய தங்களின் விழிகளுக்குள்ளும் தாயகத்தையே தேடும் கனவுகளால் செதுக்கப்பட்டிருந்தார்கள். அதிலும் அவர்களில் எவருமே பார்த்தறியாத ஒரு தேசம்! தலைமுறை தலை முறையாகப் பரிமாறிக்கொள்ளப்பட்ட அந்தத் தாயகம் பற்றிய கனவுகளே இறுதியில் ஒரு சொந்த நாட்டினை அவர்கள் காணச் செய்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ரஸ்யா என வளங் கொழிக்கும் உலகின் திசைகளெங்கும் வாழ்ந்துவந்த போதிலும் அந்த மத்திய கிழக்குப் பாலைவனம் தான் அவர்கள் ஏங்கிக் கிடந்த தாய்மடி! அதில் ஒருமுறையேனும் கால்பதிப்பதே அவர்களின் கனவாக இருந்தது. அந்தக் கனவையே நாளை மீதான நம்பிக்கையில் தோய்த்தெடுத்து அவர்கள் எழுந்தார்கள். எண்ணெய் வளங்கொழிக்கும் பாரிய அரபு நாடுகள் சுற்றியிருந்தும் அந்தப் பாலைவன இஸ்ரேல் மீதான அவர்களின் காதல் தணியவில்லை. எண்ணெய் வளமே உலகில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தபோதிலும், அந்த வளத்தினால் முழு உலகினதும் தீர்மானங்களை வளைத்துப்போடும் வல்லமையை அரபு தேசங்கள் கொண்டிருக்குமென்ற முற்கற்பிதம் இருந்தபோதிலும், தாயகம் நோக்கிய அவர்களின் ~எக்சோடஸ்| தன் இலக்கிலிருந்து திரும்பவேயில்லை. இயற்கை வளம் என்று சொல்வதற்கு ஏதுமற்ற பாலைவனப் பெருவெளி மீதான அவர்களின் தாகமே, இன்று அமெரிக்கா உட்பட முழு உலகையும் தங்களின் சுட்டுவிரல் ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கக்கூடிய செல்வாக்குடன் கூடிய ஒரு தேசம் கட்டியெழுப்பப்படுவதற்குக் காரணமாகியது.

நான்கு நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்குள் அடிமைப்பட்டிருந்த தமிழர் தாயகம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பிடிக்குள் கொண்டுவரப்பட்ட அதே 1948 இல் தான் இரண்டாயிரம் ஆண்டுகால ஏதிலி வாழ்க்கைக்கு யூத இனம் முற்றுப்புள்ளி வைத்து, தமக்கென ஒரு தாயகத்தை நிறுவிக்கொண்டது.

அதுசரி 2000 ஆண்டுகளாக வாய்க்காத ஒரு வசந்தம் 1948 இல் மட்டும் அவர்களுக்குச் சாத்தியப்பட்டதற்கான உத்வேகத்தை அளித்தது எது? இந்தக் கேள்விக்கான பதில் ஒன்று மட்டுமே: ஆடொல்ப் ஹிட்லர்! நிச்சயமாக இது வலிந்து திணிக்கப்படும் பதிலல்ல! யூதர்கள் தாம் தாம் வாழ்ந்து வந்த நாடுகளிலே தங்களின் தனித்துவத்தை இழந்துவிடாமல் கூட்டுணர்வுடன் சகல துறைகளிலும் முன்னேறிய காரணத்தினால் இயல்பாகவே அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வு அங்கெல்லாம் பரந்திருந்தது.

ஜேர்மனியின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான ஹைனெ ஹைன்றிச் (1797-1856) வழக்கறிஞருக்கான தனது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 1825 இல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டியிருந்தது.

ஏனென்றால் அக்காலத்திலேயே யூதர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த துறைகளில் சட்டமும் ஒன்றாக இருந்தது. இவ்வளவிற்கும் நூற்றுக்கணக்கான சிற்றரசுகளை ஒன்றிணைத்து பாரிய ஜேர்மனிய இராச்சியம் அமைக்கப்பட்டது. 1871 இலேயே! அதாவது, சமூக மட்டத்திலே யூத எதிர்ப்புணர்வு மேலோங்கியிருந்ததும் அதற்குச் சட்டரீதியான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டமையும் ஏற்கெனவே நீண்ட காலமாக இருந்துவந்த ஒன்றுதான்! இந்த வழமைகளை அனுசரித்து வாழ்வதற்கு யூத மக்களும் பழக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும், ஏற்கெனவே வேரோடியிருந்த யூத எதிர்ப்புணர்வினை இனங்கண்ட ஹிட்லர் அதைத் தனது அரசியல் கோட்பாடுகளுக்குள் பிரதானமான ஒன்றாக்கி நிறுவனமயப்படுத்தியபோதுதான், யூதர்கள் மேலும் சகித்திருந்து தம்மினம் அழிந்துபோவதை அனுமதிக்க முடியாதென எண்ணுவதற்குத் தலைப்பட்டார்கள்.

ஆக, ஹிட்லரின் மூர்க்கமான யூத அழிப்பு நடவடிக்கைகளே தனித்தாயகம் ஒன்றே தமக்கான ஒரே தீர்வென்பதை அவர்களை உணரவைத்து, அதற்காக முழு உத்வேகத்துடன் அவர்களை உழைக்கவும் உயரவும் வைத்தது.

இவ்வாறிருக்க தான் சிறுவயதிலே விரும்பியவாறு உண்மையிலேயே ஒரு கலைஞனாக ஹிட்லர் ஆகியிருப்பானெனில், இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உருவாகுவதற்கான புறச்சூழல் ஏற்பட்டிருக்குமா என்பதற்கப்பால், காலங்காலமாகவே பழக்கப்பட்ட நெருக்கடிகளை வழக்கப்படுத்திக்கொண்டு வாழத்தெரிந்திருந்த யூத இனத்தின் எதிர்காலம் இன்றுபோல் மேன்மையுற்றிருக்குமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா நாம்! அதேவேளை 'ஹிட்லர் மட்டும் கலைஞனாக ஆகியிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்!" என்று யூதர்கள் அற்பத்தனமாக ஆதங்கப்படாதபோதிலும், 'இவனை விட அவள் பரவாயில்லை! அவளைவிட முன்னையவன் திறம்" என்றெல்லாம் சிங்களத்தின் பேரினவாதத் தலைமைகளுக்குப் புள்ளிகள் வழங்கும் மடமை இன்னும் எம்மிடையே சிலரிடம் நிலவுவது வேதனைக்குரியது. இதற்கும் அப்பாற்சென்று ~எதிரியே வெல்வான்| என்ற தங்களின் (தன்)நம்பிக்கை(யின்மை)யை வலியுறுத்துவதில் ஈடுபடும் சிலரையும் காணக்கூடியதாக இருக்கின்றது. வால்மீகியின் இராமாயணம் கூறுவதைப் புறந்தள்ளிவிட்டு கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிட ஒழிப்பை நாமே நியாயப்படுத்துவதைப்போலவே, ஆரியர்களால் அசுரர்கள் கொல்லப் பட்டதையெல்லாம் பண்டிகை நாட்களெனப் பாரம்பரியம் பேணுவதைப்போலவே, சுயத்தை விடுத்து அந்நியங்களையே ஓம்பும் இந்த எதிர்மறையான நம்பிக்கை எமக்கு எந்தவிதத்திலும் நன்மைதராது. அப்பர் சுவாமிகள் எப்போதும் உரத்துக்கூறிய ~நமனை அஞ்சோம்!| என்ற அடிகளில் உள்ளவாறே எதிரியும் எம்மைப்போன்ற மனி தனே! எம்மை அழிப்பதில் அவனுக்கிருக்கும் ஆக்ரோசத்தைவிட, தமிழினத்தைக் காப்பாற்றுவதில் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஓர்மம் அதிகமாய் இருக்கவேண்டும்!

ஆகவே, எமது தேசிய இருப்பின் மேன்மைக்கு உதவாத எந்த எதிர்மறையான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நாம் களைந்துவிடவேண்டும். வெற்றிமீது முழு நம்பிக்கை கொண்டவர்களாக அதனை மற்றவர்களுக்கும் ஊடுகடத்தக்கூடியவர்களாக எம் அனைவரினதும் செயற்பாடுகள் அமையவேண்டும். அச்சமே மனிதனை அடிமை ஆக்குகின்றது. அப்படிப்பட்ட அச்சத்திற்கு ஆட்படாதவர்களாகத் துணிவைத் தோழமை கொள்வோம்! ஏற்படும் இன்னல்களெல்லாம் தாயகத்தை நிர்மாணித்துக் கொள்வதற்கான தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்களாக எடுத்துக்கொள்வோம்.

யூதர்களுக்கு ஒரு ஹிட்லர் வாய்த்ததுபோல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மானசீகமான நன்றிகளைக் கூறிக்கொள்வோம். அபார ஆற்றலாக எமக்கு வாய்த்த தேசியச் சூரியனை மட்டும் உள்ளுக்குள் நிறைத்துக் கொள்வோம்! இசைத்தமிழை உலகறியச் செய்த விபுலானந்த அடிகள் யூலியஸ் சீசருக்காக சேக்ஸ்பியர் எழுதிய வசனத்தை அழகுற மொழிபெயர்த்ததிலிருந்து சில வரிகளை சிந்தையில் இருத்திக்கொள்ளலாம்: 'அஞ்சினர்க்குச் சதாமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒரு மரணம்! அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென்று அறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்வேன்! இன்னலும் யானும் பிறந்தது ஒரு தினத்தில் அறிவாய்! இளஞ்சிங்கக்குருளைகள் யாம்! யான் மூத்தோன், எனது பின்வருவது இன்னலெனப் பகைமன்னர் அறிவார்! பேதுறல் பெண்ழூ அணங்கே யான் போய்வருதல் வேண்டும்'

(பேதுறல் பெண் அணங்கே| என்ற அடியினை அது எழுதப்பட்ட காலத்தைக் கவனத்திலெடுத்து மன்னிக்குமாறு வாசகிகள் வேண்டப்படுகிறீர்கள்)

நன்றி: வெள்ளிநாதம்

0 Comments: