'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின்
சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்ததற்கான விலைகளை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதே படைத்துறை ஆய்வாளர்கள் பலரதும் தற்போதைய கணிப்பாக இருக்கின்றது.
அண்மைக்காலங்களாக சிறிலங்காப் படையினர் மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளிலும் யாழ். குடாநாட்டின் முன்னரங்கப் பகுதியிலும் மேற்கொண்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்ததோடு படையினரின் சடலங்களையும், ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றியுள்ளமையானது, சிறிலங்காப் படையினருக்கு இனிவரும் காலங்களில் சமர்க்களமானது இலகுவாக இருக்கப் போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில மற்றும் சிங்கள வார இதழ்களின் பத்தி எழுத்தாளர்களும் விடுதலைப் புலிகள் தம்மிடம் இருக்கின்ற நன்கு பயிற்சிபெற்ற களப் பட்டறிவுகள் கொண்ட படையணிகளை தற்போது களமுனைகளிலே இறக்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் சிறிலங்காப் படையினர் பலத்த எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்று தமது படைத்துறை ஆய்வுக்கட்டுரைகளிலே தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வாரம் அநுராதபுரத்திலே பொதுமக்கள் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச படையில் இருந்து ஓடியவர்கள், விடுப்பில் சென்றோர் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றோர் போன்றவர்கள் உடனடியாகக் களமுனையில் நிற்கின்ற படையினரின் கைகளைப் பலப்படுத்துவதற்காக மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கின்றார்.
கிட்டத்தட்ட 60,000 வரையிலான சிறிலங்காப் படையினர் படைகளைவிட்டு ஓடியிருப்பதாக தென்னிலங்கையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சிறிலங்காவின் படைத் துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார, 'கடந்த இரண்டு ஆண்டுகளில் படையை விட்டு ஓடியவர்களில் குறைந்தது 12,000 பேர்களையாவது மீள இணைப்பதற்காகவே இந்த இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.
அநுராதபுரம், பொலனறுவை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே படைகளைவிட்டு அதிகம் ஓடுவதாகத் தெரிவித்த நாணயக்கார இவ்வாறு மீளப் படைகளில் இணைவதற்கு மறுப்போர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
இவை எல்லாமே, சிறிலங்கா அரச தரப்பினரும் சிங்களப் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியாக மேற்கொண்ட பின்னகர்வுகளைத் தாம் போரில் வெற்றிபெறுகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டதாலேயே ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் தமது தந்திரோபாய, மூலோபாயச் செயற்பாடுகளுக்கு அமைவாக யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறிய போதும் ஜெயசிக்குறு நடவடிக்கையின்போதும் சிங்களப் பேரின மேலாண்மைவாதிகளும் சிங்கள புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோல்வியடைந்துகொண்டிருக்கின��
�றார்கள் என்றும் அவர்கள் முற்றுமுழுதாக அழியப்போகும் காலம் விரைவில் வந்துவிடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளோ ஒவ்வொரு தடவையும் அனைவரினதும் கணிப்புகளுக்கு மாறாகப் புதிய பலத்துடனும் வீச்சுடனும் நெருக்கடிகளில் இருந்து மீண்டு பாரிய பாய்ச்சல்களை படைத்துறை ரீதியாவும் போராட்ட ரீதியாகவும் ஏற்படுத்தினார்கள். ஆனால் சிங்கள தேசமோ அல்லது அதன் தலைவர்களோ இந்த வரலாற்றுப் பாடத்தினை மறந்துவிட்டார்கள் அல்லது கற்பதற்கு மறுக்கின்றார்கள்.
இதேபோன்ற ஒரு நெருக்கடி சீன விடுதலைப் போராட்டத்தினை மேற்கொண்ட மாவோ சேதுங்கின் படைகளுக்கு ஏற்பட்டபோது, அவர்கள் அதனை எவ்வாறு இந்தத் தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றினார்கள் என்பதை ~சீன வானில் சிவப்பு நட்சத்திரம்| என்ற புத்தகத்திலே எட்கர் ஸ்னோ பின்வருமாறு பதிவுசெய்து வைத்திருக்கின்றார்.
'1933 ஆம் ஆண்டு ஒக்டோபரிலே நான்கிங் அரசானது சியாங் கை சேக் அவர்களின் தலைமையில் சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான தனது ஐந்தாவது போருக்காக அணிகளைத் திரட்டியது. இந்தப்போரிலே ஓராண்டு கடுமையான சமர்களைப் புரிந்த பின்னர் பொதுவுடமைவாதிகள் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் அதுதான் முடிவு என்றும் பொதுவுடமைவாதிகளின் இந்த நீண்ட பயணம் சீனச் செஞ்சேனையின் இறுதி ஊர்வலம் என்றும் கூட நினைத்தனர். அவர்களது நினைப்பு எவ்வளவு தவறானது என்ற உண்மையை இரண்டே ஆண்டுகளில் செஞ்சேனை நிரூபித்தது.
இந்த இரண்டு ஆண்டிற்குள் செஞ்சேனையானது வரலாற்றில் தனக்கு ஈடு இணையற்றதாக ஒருவரும் இல்லை என்பதுபோல, பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுந்து தனது போரியல் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியது. பொதுவுடமை அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறிக்கொண்ட, தனது சுய தம்பட்டத்தை முழுமையாகவும் உண்மையாகவும் நம்பிய கொமிண்டாங்கின் தலைமைத் தளபதியின் உயிர் இறுதியில் பொதுவுடமைவாதிகளின் கையிலே ஊசலாடிக் கொண் டிருந்ததுதான் இதன் நகைமுரண் ஆகும்."
'போரின் ஆரம்பத்திலே பொதுவுடமைவாதிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்றே நான்கிங் ஆட்சியாளர்கள் நம்பினார்கள். எதிரி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கின்றான். அவனால் தப்பித்துப்போக முடியாது. நாளாந்தம் குண்டுவீச்சு, வானத்தில் இருந்து விமானத் தாக்குதல்கள், இயந்திரத் துப்பாக்கிகளின் மூலம் சூடு ஆகியவற்றின் மூலமும், செஞ்சேனை முற்றாக அழிக்கப்படும் என்று பரப்புரை செய்யப்பட்டது. அத்துடன் கொமிண் டாங் திரும்பக் கைப்பற்றிய மாவட்டங்களில் நடத்திய ~சுத்திகரிப்பு| நடவடிக்கைகளின் மூலமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டனர். இந்த ஒரு முற்றுகையின்போது மட்டுமே சூ என்- லாயின் கூற்றுப்படி செஞ்சேனையிலேயே 60,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல பிரதேசங்கள் முழுவதும் மக்களே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன."
இவ்வாறு ஐந்தாவது போரானது பொதுவுடமைவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போது, இந்த நடவடிக்கையானது முற்றுப் பெறாமல் நீடித்து இழுபட்டுக்கொண்டே செல்லத்தொடங்கியது. அத்துடன் செஞ்சேனையின் உயிரோட்டமான படைகளை அழிக்க அது தவறியது. பொதுவுடமைவாதிகள் ஒரு மாநாட்டினைக்கூட்டி அதிலே பொதுவுடமைவாதிகள் கியாங்கியிலிருந்து பின்வாங்கி செஞ்சேனையின் முக்கியமான பலத்தை ஒரு புதிய தளத்திற்கு மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 1934 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் நாள் இந்த நீண்ட பயணம் தொடங்கப்பட்டது.
செஞ்சேனையின் முக்கிய வலிமையாகத் திகழ்ந்த படைகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுவுடமை விவசாயிகளும் இந்தப் பயணத்திலே இணைந்து கொண்டார்கள். அவர்களிடையே முதியோர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பொதுவுடமைவாதிகள், பொதுவுடமை தத்துவத்தை ஏற்காதோர் என அனைவரும் காணப்பட்டனர். அவர்கள் வெளியேறிய இடங்களிலே ஆயுதக் கிடங்குகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டன. தொழிற்சாலைக் கருவிகள், பொருட்கள் எனத் தனித்தனியாகக் கழற்றப்பட்டு இயந்திரங்கள் கோவேறு கழுதைகள் மீதும், கழுதைகள் மீதும் ஏற்றப்பட்டன. மதிப்புடைய, கையில் எடுத்துச் செல்லப்படக் கூடிய பொருட்கள் அனைத்துமே இந்த வியப்பளிக்கின்ற நடைபயணத்தில் எடுத்துச்செல்லப்பட்டன.
இந்தப் பயணத்தின்போது செஞ்சேனையானது தம்மை மீள ஒழுங்கமைப்பதிலும் படையினர் தமது பாதைகளில் குறுக்கிட்டாலோ அல்லது படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு பாதைகளை ஏற்படுத்த வேண்டிய தேவையேற்பட்டலோ அதனை மிக விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் மேற்கொண்டனர்.
டாடு ஆற்றைக் கடக்கும்போது செஞ்சேனையானது தாமதங்களைச் செய்தாலோ அல்லது கவனயீனமாக இருந்தாலோ முழுப்படையும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அவ்வாறு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே டாடு ஆறு அமைந்திருந்தது. இதே பள்ளத்தாக்குகளில்தான் இளவரசர் சிடா காய் தலைமையிலான ஒரு இலட்சம் போர் வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டிலே புகழ்பெற்ற ட்செங் குவோ பான் தலைமையின் கீழ் இருந்த மஞ்சு படையினரால் நாற்புறமும் சுற்றிவளைக்கப்பட்டு முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டனர். இந்த வரலாறு பற்றி செஞ்சேனை வீரர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
அதாவது, இளவரசர் சிடா காய் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது விலை மதிப்பற்ற அவரது கால தாமதம்தான். டாடுவின் கரையை வந்தடைந்த இளவரசர், சி அரச வாரிசாக உதித்த தனது மகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மூன்று நாட்கள் படை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது தாமதித்தார். அவர் தனது படைகளுக்கு வழங்கிய மூன்று நாட்கள் ஓய்வு என்பது அவருக்கு எதிராகத் தாக்குதலை ஒரு முனைப்படுத்த அவரது எதிரிகளுக்கு வாய்ப்புக்களை வழங்கியது. அதுவே அவரினதும் அவரது படைவீரர்களினதும் முழுமையான அழிவிற்கு இட்டுச்சென்றது.
எனவே சீனச் செஞ்சேனையினர் தமது நடவடிக்கைகளிலே எதுவித தளர்வுகளையோ தாமதங்களையோ ஏற்படுத்தாமல் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் தமது மூலோபாய தந்திரோபாய ரீதியிலான திட்டங்களுக்கு அமைவாக, செயற்பட்டதன் காரணமாகத் தமது படைகளை மீளக் கட்டமைத்துக்கொண்டு மக்கள் படைக்கட்டுமானங்களின் உதவியுடன் பாரிய ஒரு படையணியாக எழுச்சிபெற்று முழு சீனத் தேசத்தையுமே கடுங்கோன்மை அரசிடம் இருந்து மீட்டெடுத்தார்கள்.
இந்த வரலாற்று உதாரணங்கள் சொல்லுகின்ற செய்திகள் இதுதான். எந்தப் பெரிய படைபலத்துடன் ஆக்கிரமிப்பாளர்கள் போரிலே ஈடுபட்டு மக்களின் மீது சொல்லொணாத் துன்பங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினாலும், அடக்குமுறைக்கு உட்பட்ட மக்கள் அனை வரும் ஒன்றுபட்ட சக்தியாக ஒரு தலைவனின் அணியிலே ஆக்கிரமிப்பாளர்களை எதிர்ப்பதற்கு தயாராகும்போது ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருமே இறுதியில் பாரிய அழிவு களையும் தோல்விகளையும் சந்திப்பார்கள். வியட்நாம், ஆப்கானிஸ்தான், சீனா, எரித்திரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்கள் இதனையே வரலாறாகப் பதிந்து வைத்திருக்கின்றன.
நன்றி: -எரிமலை-
வெள்ளிநாதம் (15.08.08)
Friday, August 15, 2008
அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன?
Posted by tamil at 9:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment