Wednesday, August 20, 2008

சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆளும் வர்க்கம் தொடர்ந்து வளைந்து கொடுப்பது தேசத் துரோகம்

கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த ""சன்டே லீடர்' ஆங்கில வார இதழுக்கு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய விலாவாரியான செவ்வியில் ""பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு சிங்கள தீவிரவாதிகளே காரணம்' எனும் விடயத்தினை பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான இரண்டொரு அபிப்பிராயங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகிறது. அதில் முதலாவது அம்சம் வருமாறு; "" நாம் 25 வருட காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். இதனை நாம் இராணுவ அணுகுமுறையினூடாக வென்று விடக்கூடும். பயங்கரவாதத்தினை நாம் தோற்கடிக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதமானது நோயின் அறிகுறி மட்டுமே. அடிப்படைக் காரணம் எதோ அதற்கே பரிகாரம் காணப்பட வேண்டும். தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அடக்கியொடுக்கி வந்தமையே அந்த அடிப்படைக் காரணமாகும். அவர்கள் திரும்பத்திரும்ப நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். 1956 முதல் அவர்கள் சிங்கள தலைமைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். பிரச்சினையை பிசாசுபோல் வளரச் செய்தவர்கள் சிங்கள தீவிரவாதிகளே... உண்மையில் சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.' இங்கே பயங்கரவாதம் என சேனாரத்ன குறிப்பிடுவது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரச் செயற்பாடுகள் என்பது தெளிவாகிறது. ""சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, ""சிறுபான்மையினரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கென அதிகாரப்பகிர்வு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் முறியடித்து நாடு யுத்தத்தில் சிக்குண்டிருப்பதற்குப் பாத்திரவாளிகளாயுள்ள சிங்கள தீவிரவாதிகள்' எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.

சேனாரத்ன தெரிவித்த கருத்துகளின் இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். சமஷ்டி எனும் சொற்பதம் அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்களால் தவறாகப் புரிந்துவைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இதுதான். அதாவது சமஷ்டி முறைமையானது இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நியாயம் நீதியான அரசியல் நிலைப்பாடாக அமையக்கூடியது என முதன்முதலாக தமிழ் அரசியல்வாதிகளாலேயே முன்வைக்கப்பட்டது. அன்று முதல் சமஷ்டி என்பது பிரிவினைக்கு ஒப்பானது என்ற எண்ணம் சிங்கள மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றது. சமஷ்டிவாதிகள் நீண்டகாலத்தின் பின் தனிநாடு அல்லது தமிழீழம் கோரினர். எனவே, சமஷ்டி முறைமையானது ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகள் என்றாவது தனிநாட்டுக்காகப் போர்க்கொடி உயர்த்தக்கூடும் என்ற உட்பயம் இருக்கவே செய்கிறது. ஆனால், சமஷ்டி என்பது ஐரோப்பிய நாடுகளிலோ அண்டை நாடான இந்தியாவிலோ விரும்பத்தகாத ஒன்றல்ல. அவை இலங்கையின் அனுபவத்தைச் சந்திக்காத படியால் கூடுதலான விட்டுக்கொடுப்பு மனப்பாங்குடன் அதனை அதிகாரப்பகிர்வு என்ற கருத்தியலாகக் கையாள்வதற்குரிய பக்குவத்தினைக் கொண்டிருக்கின்றன.'

சிங்கள தீவிரவாதிகள் செய்துள்ள நாட்டுத்துரோகம்

இங்கே கவனிக்கப்படவேண்டியது யாதெனில், அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஷ்டி என்பதை முற்றிலும் தவறாகப் புரிந்துவைத்துள்ளனர் என்றாலும் கூட சிங்கள தீவிரவாதிகள் சிங்கள பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்டுவந்த விசமத்தனமான பிரசாரமே அதற்குக் காரணமாகும். 10 விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையிலான சிங்கள தீவிரவாதிகளுக்கு இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் வளைந்து கொடுத்து வந்துள்ளன. நிச்சயமாக அதன் காரணமாகவே நாட்டின் சமாதானம், சுபீட்சம் மற்றும் ஒட்டுமொத்தமான முன்னேற்றத்திற்கு பலத்த குந்தகம் ஏற்பட்டுவந்துள்ளதை முதலாளித்துவ பிற்போக்குவாத ஆட்சியாளர் கிஞ்சித்தும் பொருட்படுத்துவது கிடையாது. இதுவே நாட்டுக்குச் செய்யப்பட்ட பெரிய துரோகமாகும்.

பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கிலேயே செல்வநாயகம் சமஷ்டி முறைமையை முன்வைத்தார்

சமஷ்டி முறைமையானது தமிழ் அரசியல்வாதிகளாலேயே முதன்முதலாக முன்வைக்கப்பட்டது என்பது தவறாகும். முதன்முதலாக 1926 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவாலும் பின்பு 1947 இல் கண்டியில் சிங்களத் தலைவர்களாலுமே அது முன்வைக்கப்பட்டது. 1949 இல் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே தமிழர் சார்பில் அக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தால் சமஷ்டி முறைமை கோரப்பட்டது. என்றாவது ஒருநாள் நாடு பிரிந்து போவதைத்தவிர்க்கும் நோக்கிலேயே அக்கோரிக்கையை பிரேரிக்கத்தலைப்பட்டதாக செல்வநாயகம் அன்று சூளுரைத்திருந்தார். ஆனால் சிங்கள தீவிரவாதிகள் சமஷ்டி முறைமையை இடையறாது அழுங்குப்பிடியாக எதிர்த்தமையால் அரசாங்கங்களும் தத்தம் ஆட்சியை தக்கவைப்பதற்காக அரசியல் உறுதியின்றி அவர்கட்குத் தலை வணங்கிச் செயற்பட்டு வந்தமையால், 1976 இல் தமிழ் தலைமைகள் தனிநாட்டுக்காகப் போராட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டன. அதுவும் வெறுமனே சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எட்டக்கூடியதல்ல என்ற நிலையில் அன்றைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் 1977 இல் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மற்றும் 1981 இல் யாழ்.நூல் நிலையம் அரச தரப்பினரால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டதும் மற்றும் இன்னோரன்ன சூழ்நிலையில்தான் தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தினை வெகுஇலகுவாக மறந்துவிட்டது மட்டுமல்லாமல், சின்னாபின்னப்பட்டிருக்கும் நாட்டை ஒருங்கிணைக்கும் வகையிலான ஆக்கபூர்வமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே ஆட்சியாளர் பயங்கரவாதத்தை துடைத்தெறியப்போவதாக பறைசாற்றி வருகின்றனர்.

மரணித்துவிட்ட 13 ஆவது திருத்தம் பற்றி பேசி அர்த்தமில்லை

இந்த நிலையிலேயே அமைச்சர் சேனாரத்ன தான் அமைச்சர் நாற்காலியில் வீற்றிருந்தாலும் கூட ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) மற்றும் தேசபக்த தேசிய முன்னணி (கNM) போன்ற அமைப்புகள் தன்மீது தொடுத்துவரும் கடுமையான தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்செய்யப்பட வேண்டுமென தான் உருகி உழைப்பதாகக் கூறியுள்ளார்! அவ்வாறாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தின் ஊடாக மனமாற்றமடைந்து சமஷ்டி முறைமையை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடுவார்கள் என சேனாரத்ன கூறியிருப்பது வேடிக்கையாயுள்ளது. 13 ஆவது திருத்தமானது வடக்கு, கிழக்குக்கென சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வு அடங்கலானதோ தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காத்திரமான சுயாட்சி அதிகாரம் கொண்டதாகவோ இல்லை. அதுமட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கை சிங்கள தீவிரவாதிகளின் விருப்பத்திற்கேற்ப நீதித்துறையை நாடித் துண்டாடிய பின் முற்றாக மரணித்துவிட்டதாகிய 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பதை சேனாரத்ன போன்றோர் புரிந்துகொள்ளட்டும்.

நாராயணன் கோத்தபாயா கருத்துக்கள்

சென்ற வாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிங்கப்பூர் ""ஸ்றெயிற்ஸ் ரைம்ஸ்' இதழுக்கு வழங்கியிருந்த செவ்வியில் ""தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரில் இலங்கை (அரசாங்கம்) வெற்றியீட்டினாலும் கூட, தமிழ் மக்கள் அரசாங்கம்பக்கம் இல்லாத படியால் யுத்தத்தில் வெற்றியடைய முடியாது. தமிழர் கொண்டுள்ள கடுமையான விரக்தியையும் வெறுப்புணர்வையும் சகல இலங்கையர்களும் கருத்தில் எடுக்கவில்லை. தமிழருக்கு கூடுதலான அதிகாரங்களை பகிர்ந்தளித்து அவர்கள் இலங்கை அரசின் ஒரு பகுதியினர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்' எனக் கூறிவைத்தார். நாராயணன் தெரிவித்த மேற்குறித்த கருத்துகள் தொடர்பாக இந்திய தேசிய செய்திச்சேவை (ஐஅNகு) மையம் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வினவிய போது, ""நாராயணன் கூறியதில் எதிர்மறையானது ஒன்றுமில்லை. ஜனாதிபதி என்றும் கூறி வந்ததையே நாராயணன் தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ""பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்' என தனது கருத்தை கூறியுள்ளார். கோத்தாபய மேலும் கூறியதாவது; ""கடந்த 25 30 வருடங்களாக தமிழ் சமூகத்திற்கு கொழும்பு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை' என்பதாகும்.

உண்மையில் கடந்த 6 தசாப்தங்களாக தமிழருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 1957 இல் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் 1965 இல் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் குறிப்பிட்ட சிங்கள தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டவை இரு உதாரணங்கள் மட்டுமே. அத்தோடு, நின்றுவிடாது தமிழ் தலைமைகள் மேற்கொண்டு வந்த சாத்வீகப் போராட்டங்களும் 1960கள் முதல் அரச படைபலம் கொண்டு பட்டவர்த்தனமாக நசுக்கப்பட்டு தமிழரை அழித்தொழிக்கும் கட்டம் வந்துவிட்ட நிலையிலேயே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தி போராடத் தலைப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. எனவே, இலங்கை அரசுதான், அந்த இயக்கம் 1980களில் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்தது எனும் யதார்த்தத்தினை ஆட்சியாளர் எவராயினும் நிதானமாக புரிந்துகொள்வது அவசியமாகும்.

கோத்தாபய தனது மேற்குறித்த செவ்வியில் மேலும் ஒரு முக்கியமான கருத்தினை கூறிவைத்துள்ளார். அதாவது ""இறுதியில் நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்று சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் என்று. நாம் முதலில் இலங்கையர், அதன் பின்னரே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று சிந்திப்பதற்கு தலைப்படுகின்றோமோ அன்றுதான் எமது வெற்றி நாள்' என்பதாகும்.

இது உண்மைதான். ஆனால், குறிப்பாக பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் படிப்படியாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் தலைதூக்கி வந்தபடியால் முரண்பாடுகளும் கசப்புணர்வுகளும் மேற்கிளம்பி தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசியவாதம் வலுப்பெற்றெழுந்தது. மறுபுறத்தில் இலங்கையின் பல்லினத் தன்மையை மனதிற்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என சிந்தித்து மதச்சார்பின்மைக் கொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் என்றோ காணப்பட்டிருக்கும் எனலாம்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கண்ட கனவு

இதனை எழுதும்போது 1920/ 1930 களில் பிரபல கல்விமான் ஹன்டி பேரின்பநாயகத்தின் வழிகாட்டலில் செயற்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (ஒஙுஇ) அமைப்பின் வரலாறு ஞாபகத்திற்கு வருகிறது. அவ் அமைப்பானது சிங்கள, தமிழ் ஒற்றுமைக்காகவும் பொதுவான இலங்கை தேசிய அடையாளத்திற்குமாக விடாப்பிடியாக சலிக்காது உழைத்து வந்தது. பல வருடாந்த அமர்வுகளை நடத்திவந்தது. வருடாந்த அமர்வுகளின்போது உரையாற்றுவதற்கு தென்னிலங்கையின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வருடாவருடம் அழைக்கப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் முன்னெடுத்து வந்த சீரிய பணிகளை பண்டாரநாயக்க தவிர மற்றைய தலைவர்கள் குறிப்பாக அன்றைய இடதுசாரித் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். மற்றும் தென்னிலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட கல்விமான்களுள் அன்று ஆனந்தா கல்லூரியின் அதிபராய் இருந்தவராகிய பி.டீ.எஸ்.குலரத்தின மிகத் தலைசிறந்து விளங்கியவர். உண்மையில் இரு வருடங்களுக்கான அமர்வுகளில் தலைமை தாங்கும் கௌரவம் குலரத்தினவுக்கு வழங்கப்பட்டது.

1956 இல் நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கப்பட்டது

துரதிஷ்ர்டவசமாக குறிப்பாக 1956 இல் பண்டாரநாயக்க அரசாங்கத்தால் ""தனிச் சிங்களம்' சட்டம் இயற்றப்பட்டு நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனவாதம் தலைவிரித்தாடிய நிலையில் ஹன்டி பேரின்பநாயகம் பெரிதும் மனமுடைந்துபோனார். அதாவது இரு தசாப்தங்களாக நாட்டின் ஒற்றுமைக்காக அயராது உழைத்து வந்தவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிட்டதே என்ற ஆழ்ந்த கவலை யாழ். இளைஞர் காங்கிரஸ் முன்னோடிகள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கைக்கு சுதந்திரம் வேண்டுமென ""பூர்ண சுவராஜ்' எனக் கோஷமிட்டு இளைஞர் காங்கிரஸ்தான் முதன்முதலில் போர்க்கொடி உயர்த்தியது. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ 60 ஆவது சுதந்திர தினத்தில் ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான முன்னுதாரணமான விடயங்களை சம்பிரதாயமாகக் கூறுவதைக் காட்டிலும் சிங்கள மக்கள் மத்தியில் அயராது பிரசாரப்படுத்த வேண்டுமல்லவா?

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஐக்கியதேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கழுத்தறுப்புப் ப&

நன்றி :- வ.திருநாவுக்கரசு
தினக்குரல்

0 Comments: