Sunday, August 17, 2008

பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்

'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார்.

சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார்.

எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும்.

தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் கட்டுக்கோப்பைப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு தட்பவெப்ப மாற்றங்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். படைய விஞ்ஞானத்தில் பின்வாங்கல் றிற்ரிறீற் (Retreat) (Retreat) எனப்படுகிறது.

முன்னேறித் தாக்குவது எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்குப் பின்வாங்குதலும் முக்கியமானது. றிற்ரிறீற் நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைவாக நடத்தப்படுகிறது. சிதறி ஓடுவது றிற்ரிறீற் ஆகமாட்டாது. அதையொரு இராணுவத் தந்திரோபாயமாகவும் கணிப்பிட இயலாது.

பெருவிலை கொடுத்துப் பெற்ற வெற்றியால் பயன் இல்லை. அப்படியான வெற்றி கண்ணை விற்றுச்சித்திரம் வாங்குவதற்கு நிகரானது. சிறந்த வீரர்களை இழந்து பெற்ற வெற்றியைப் பைறிக் விக்ரறி (Pyrric Victory) என்பார்கள்.

உண்மையில் அப்படியானதொரு வெற்றி வெற்றியல்ல. எப்பிறுஸ் (Epirus) நாட்டின் மன்னன் பைறுஸ் (Pyrrus கி.மு.319 -கி.மு.272) ரோமாபுரிக்கு எதிராகச் சிசிலியிலும் இத்தாலியிலும் தொடர்ச்சியாகப் போராடினான்.

அஸ்கூலம்(Asculum) என்ற போரில் அவன் பெருவெற்றி ஈட்டினான். ஆனால் இந்தப் போரில் தனது தலைசிறந்த முன்னணி வீரர்களை இழந்துவிட்டான். மரணித்த வீரர்களை எண்ணி அவன், 'இந்த மாதிரி இன்னுமொரு வெற்றிபெற்றால் நாம் தொலைந்தோம்" என்றான். ஒரு பைறிக் விக்ரறியிலும் பார்க்கப் பின்வாங்குவது உத்தமம்.

ஒரு படைத் தலைவனின் முக்கிய கடமை எதிரிக்கு அதியுச்ச உயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு தனது படையணியின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி அதன் கட்டுக்கோப்பை குலையாமல் வைத்திருப்பதாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இனங்கள் நடத்தும் விடுதலைப் போரில் உயிரிழப்பை இயன்றளவு குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு மனித அலைப் போர்முறை (Human Wave Warfare) சரிவராது. குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை வைத்துக்கொண்டு போரியல் தந்திரோபாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

தரை அமைவின் முக்கியத்துவத்தை இவ்விடத்தில் குறைத்து மதிப்பிட முடியாது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு ஆகிய இரண்டும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை.

தரை அமைவு என்றால் மேடு, பள்ளம், வெட்டைவெளி, அடர்ந்த காடு, பாலை நிலம் என்பன உள்ளடங்கும். தீர்மானிக்கும் வலு தரை அமைவுக்கு உண்டு.

(Terrain is Decisive) என்பது படைத் துறைக் கோட்பாடு. தரை அமைவு பொருத்தமில்லாது விட்டால் பின்வாங்கு அல்லது விலகிவிடு என்பது பொதுவிதி. இதை அசட்டை செய்தால் பெரும் விலைகொடுக்க நேரிடும்.

பின்வாங்கிச் செல்லும் போது எதிரியால் மறக்க முடியாத மின்னல் அடியைக்கொடுத்துச் செல்வதைப் பார்த்தியன் சொட் (Parthian Shot) என்று சொல்வார்கள்.

கஸ்பியன் கடலுக்குத் தென் கிழக்கில் இருந்த பார்த்தியா (Parthia) என்ற பழைய நாட்டின் வில் அம்பு ஏந்திய குதிரைப் படைவீரர்கள் ஒரு விசேட தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார்கள். இதைத் தான் பார்த்தியன் சொட் என்கிறார்கள்.

களத்தை விட்டுவெளியேறும் போது குதிரை முதுகில் இருந்த படியே உடலைத் திருப்பி இரு கைகளாலும் அம்பை வில்லில் பொருத்தி எதிரி மீது எய்வார்கள். குதிரை வீரனின் முழங்காலால் செலுத்தப்பட்டு குதிரை ஓடிக்கொண்டிருக்கும். களத்தைவிட்டு வெளியேறுவது போல் பாசாங்குசெய்தபடி எதிரி மீது அம்புகளைப் பொழிவார்கள்.

உண்மையிலேயே களத்தில் இருந்து பின்வாங்கும் போதும் அப்படிச் செய்வார்கள். இரண்டும் பார்த்தியன் சொட் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சொற்றொடர் இன்றும் பாவனையில் இருக்கிறது.

நவீன ஐரோப்பிய வரலாற்றில் பின்வாங்கல் தந்திரோபாயத்தை மிகத் திறமையாகக் கையாண்டவர் என்று ரஷ்யத் தளபதி மிக்கெயில் குட்டு சோவ் (Mikhail Kutuzov 1745 - 1813) குறிப்பிடப்படுகிறார்.

ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தனது திட்டத்திற்கும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ரஷ்யா பெரும் தடங்கலாக இருக்கும் என்று நெப்போலியன் பொனாப்பாட் தீர்மானித்தார். ரஷ்யாவைக் கைப்பற்றுவதற்காக 600,000 வீரர்கள் அடங்கிய பெரும் படையை 1812 இல் அவர் வழிநடத்திச் சென்றார்.

ரஷ்யத் தளபதி குட்டுசோவ் அப்போது 67 வயதினராக இருந்தார். 29 வயதில் துருக்கியப் படைகளோடு மோதியபோது ஒரு கண்ணை இழந்துவிட்டார். அவரை ரஷ்யப் படைத்தளபதி நிலைக்கு உயர்த்திய ஜெனரல் அலெக்சாந்தர் சுவரோவ் (Alexander Suvor0v) குட்டுசோவை தந்திரத்தில் நரி என்று வர்ணித்தார்.

1812 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரஷ்யா மீதான தாக்குதலை நெப்போலியன் தொடங்கினார். தான் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட அந்தப் பெரும்படையை முகாமைத்துவம் செய்வது பெரும்பாடாக இருந்தது.

உணவு வழங்கல், மருத்துவ வசதி என்பன சிறிது காலத்தின் பின் தட்டுப்பாடு நிலையை அடையத் தொடங்கின. பெரும் எண்ணிக்கையில் குதிரைகள் கொண்டுவரப்பட்டதால் குதிரைகளுக்கான உணவும் பெருமளவில் குறைந்துவிட்டது.

குட்டுசோவ் ஒரு வித்தியாசமான போர்முறையைத் தொடக்கினார். தாக்குவதும் பின்வாங்குவதுமாக அவர் நெப்போலியன் படைகளை வெகுதூரம் நாட்டிற்குள் கொண்டுவந்து விட்டார். ஒரு இறுதி வெற்றியைப் பெற நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது கிடைக்கவில்லை. குட்டுசோவின் கீழ் நிலைத் தளபதிகளுக்குத் தங்கள் தலைவனின் நடைமுறை பெரும் புதிராக இருந்தது.

ஆனால் மிகக் குறைந்த அழிவுகளோடு ரஷ்யப் படைகள் பின்வாங்கிச் கொண்டிருந்தன. தந்திரோபாயமாகத் தப்பிச் செல்லும் எதிரிப் படையைத் துரத்திச் செல்லும் நிலையில் பிரெஞ்சுப் படைகள் இருந்தன. இது வெறும் கால விரயத்தை ஏற்படுத்தியது..

நெப்போலியனின் இந்தப் படையெடுப்புப் பற்றிய ஆய்வுகளும் வரலாற்று ஆவணங்களும் குட்டுசோவ் நடைமுறைபடுத்திய போர் முறையை வானளாவப் புகழ்கின்றன.

வேறு விதமான போர்முறை படுதோல்வியில் முடிந்திருக்கலாம் என்றும் அவை கூறுகின்றன. குட்டுசோவின் கட்டளைக்கு அமைவாக பின்வாங்கு முன் இயற்கை வளங்களையும், குடியிருப்புக்களையும் ரஷ்யர்கள் தீயிட்டு அழித்தார்கள். இதனால் நெப்போலியனின் படைகளுக்குக் கிடைத்ததை உண்ணவும் சூறையாடவும் வசதி ஏற்படவில்லை.

ரஷ்யப் படைகள் பின்வாங்கியபோது ரஷ்ய மக்களும் கிராமம் கிராமமாக படைகளுக்குப் பின்னால் இடம்பெயர்ந்தனர். பெரும் மனித அவலம் ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அதுபற்றிக் கவலைப்பட அரசோ அமைப்போ தயாராக இல்லை.

பொறொடினோ (Borodino) என்ற தூங்கு மூஞ்சிக் கிராமத்தில் நெப்போலியனின் படைகளோடு நேருக்கு நேராக மோதுவதற்கு குட்டுசோவ் செப்டம்பர் 1812 இல் தயாரானார்.

1805 ஆம் ஆண்டில் அவுஸ்திரிய ரஷ்யக் கூட்டுப்படைகளை நெப்போலியன் ஒஸ்ரலிற்ஸ் (Austerlitz) களத்தில் புறமுதுகு காட்டச் செய்தார். ஒஸ்ரலிற்ஸ் இப்போதைய செக் குடியரசில் இருக்கிறது. ஒஸ்ரலிற்ஸ் போரில் ரஷ்யப்படைகளின் தளபதியாகக் குட்டுசோவ் இருந்தார்.

'மீண்டும் ஒஸ்ரலிற்ஸ் சூரியன் உதயமாகிவிட்டது" என்று நெப்போலியன் பொறொடினோப் போர் தொடங்குமுன் சொன்னார். 'என்னுடைய போர்களில் எல்லாவற்றிலும் மிகக் கொடியது" என்று பொறொடினோப் போர் முடிந்தபின் நெப்போலியன் சொல்லுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இருபகுதிக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. ஆனால் ரஷ்யப் படைகள் முற்றாக அழியாமல் தலைநகர் மொஸ்கோவுக்குத் தப்பிச்சென்றன. துரத்திச்சென்ற நெப்போலியனின் படைகள் மொஸ்கோவைக் கைப்பற்றின.

கிறெம்லின் (Kremlin) எனப்படும் அரச பீடக் கட்டடத் தொகுதிக்குள் நெப்போலியன் நுழைந்தார். இறுதிச் சண்டை மொஸ்கோவில் நடக்கும் என்று இருபகுதியினரும் நினைத்தார்கள். ஆனால் குட்டுசோவ் என்ற நரி பின்வாங்குதல் தொடரும் என்று கட்டளை பிறப்பித்தார். அத்தோடு தலைநகர் மொஸ்கோவைத் தீயிட்டுப் பொசுக்கும்படி கட்டளையிட்டார். இந்த எதிர்பாராத விளைவு பிரெஞ்சுப் படைகளுக்குப் பேரிடியாக வீழ்ந்தது. நெப்போலியன் தங்கியிருந்த விடுதியில் தீ பற்றிக்கொண்டது. அவர் உயிர்தப்பியது அதிர்ஷ்டமாகக் கருதப்பட்டது. அந்த நேரம் பார்த்துக் கடும்காற்று வீசியது.

கொழுந்துவிட்டு எரியும் மொஸ்கோவில் தங்குவது பிரெஞ்சுப் படைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. துருப்புக்கள் களைத்து விட்டன, குதிரைகள் வலுவிழந்துவிட்டன, ரஷ்ய எல்லையைக் கடந்து 120 மைல் வந்தாயிற்று, தொடர்புப் பாதைகள் சிதைந்துவிட்டன, வெடிபொருட்களும் தீர்ந்துவிட்டன.

ரஷ்யப் பனி கொட்டும் அச்சம் தோன்றியது. பீற்றர்ஸ்பேர்க்கில் தங்கியிருந்த சார் அலெக்சாந்தருடன் ஒரு அமைதி உடன்படிக்கையைச் செய்ய நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது நிறைவேறவில்லை. நிலைமை படுமோசமாக மாறியது.

ஒக்ரோபர் 19 ஆம் நாள் பிரெஞ்சுப் படைகள் வெளியேறத் தொடங்கின. பின்வாங்கும் பிரெஞ்சுப் படைகளைத் துரத்தும் நடவடிக்கையை ரஷ்யப் படைகள் தொடங்கின.

பயங்கரமான ரஷ்யக் குளிர் பரவியபோது உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமது குதிரைகளை பிரெஞ்சுப் படைகள் உணவாக்கினர். அதன் பின் இறந்த படையினரின் தசையை வெட்டி நெருப்பில் வாட்டி உண்டனர். இதைப் பிரெஞ்சுப் படையெடுப்பு பற்றிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நெப்போலியனின் படுதோல்வி உறுதியாகி விட்டது. இனித் தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர் பனிச்சறுக்கு வாகனத்தில் ஏறிக்கொண்டு (Ice Sled) தலைநகர் பாரிஸ் வந்து சேர்ந்தார்.

பின்வாங்குதல் வரலாற்றில் மிகப் பெரிய கண்ணீர்க் கதையாக இந்தப் படையெடுப்பு முடிந்தது. 600,000 பேர் கொண்ட பெரும் படையில் 100,000 இற்கும் குறைவானோர் உயிர் தப்பிக் கரைசேர்ந்தனர்.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு பின்லாந்தில் நகர விரிவாக்கத்திற்காக ஒரு பாரிய குழி தோண்டப்பட்டபோது 1812 ஆம் ஆண்டு ரஷ்யப் படையெடுப்பில் பங்கு பற்றிய பிரெஞ்சுப் படையினரின் எச்சங்கள் மீட்கப்பட்டன. பின்லாந்து ரஷ்யாவின் அயல் நாடு.

வரலாறு மீண்டும் வரும் என்கிறார்கள். புதிய வடிவத்தில் அது வருவதால் அடையாளம் காண்பது கடினம். வந்து சென்ற பின்பு அடையாளம் காண்பது சுலபம்.

நெப்போலியன் விட்ட பெருந்தவறை 130 வருடங்களுக்கு பின்பு ஜேர்மன் சர்வாதிகாரி ஆடொல்ப் கிட்லரும் விட்டார். ரஷ்யத் தாக்குதலுக்கு கிட்லர் நான்கு மில்லியன் துருப்புக்களைப் பயன்படுத்தினார்;.

மனித வரலாற்றில் இந்தப் பெரிய எண்ணிக்கையில் ஒரு பெரும் படையாவது தாக்குதலில் ஈடுபடுத்தப்படவில்லை. 3,350 போர் தாங்கிகள், 7000 ஆட்லறிகள், 2000 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இழுவைப் பணிக்காக 600,000 குதிரைகளும் கொண்டு செல்லப்பட்டன.

ஜுன் 1941 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேசன் பார்பரோசா Barbarossa) என்று பெயரிடப்பட்ட இந்தப் படையெடுப்பு சனவரி 1943 இல் தோல்வியுடன் முடிவுற்றது. குட்டுசோவைப் பின்பற்றிய மார்சல் சுக்கோவ் (Zhukov) பின்வாங்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தி ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்தினார்.

நன்றி: -அன்பரசு-வெள்ளிநாதம் (15.08.08)

0 Comments: