Thursday, September 11, 2008

செப்டெம்பர் 11 அனர்த்தத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்

இன்று செப்டெம்பர் 11 ஆம் திகதி. "11/ 09' என்று உலகெங்கும் குறிப்பிடப்படும் முக்கிய அனர்த்த நாள்.
உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவின் இதயம் என்று கருதப்படும் நியூயோர்க்கின் நடு மையத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைமாடிக் கோபுரங்கள் அச்சமயம் கடத்தப்பட்டிருந்த இரு விமானங்களால் மோதித் தகர்க்கப்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்தினத்தின் ஏழாம் ஆண்டுப் பூர்த்தியில் நாம் இன்று நிற்கின்றோம்.
சர்வதேச சமாதானத்தை நிலைநாட்டும் தனியுரிமை தனக்கே உரியது என்று கருதி அதனைத் தன்பாட்டில் சுவீகரித்து, "சர்வதேச பொலிஸ்காரனாக'த் தன்னை உலகின் முன் நிறுத்திக்கொண்ட அமெரிக்காவின் சுகந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மையமான "பென்டகன்' மீதும் கடத்தல் விமானத்தினால் தாக்குதல் நடத்திப் பேரழிவை ஏற்படுத்திய நாளின் நினைவுதினமும் இன்றுதான்.
இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் பல விடயங்கள் கட்டவிழ்ந்துவிட்டன.
இந்தத் தாக்குதல்களை அடுத்து "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போர்' என்ற பெயரில் "பிரபஞ்ச யுத்தப் பிரகடனம்' ஒன்றையும் செய்து, உலக நாடுகளின் மீது தனது வல்லாதிக்கத்தைத் திணித்து, பெரும் களேபரங்களை ஏற்படுத்திய அமெரிக்காவின் புஷ் நிர்வாகம், தனது ஏழாண்டு அதிகாரத் திமிர்ப்போக்கின் விளைவாக உலகெங்கும் போர் அனர்த்தங்களை உருவாக்கி, தீர்வு ஏதும் காணாமல் அதிகாரத்தை விட்டு வெளியேறப் போகின்றது.
"பயங்கரவாதம்' நிலைகொண்ட பகுதிகள் என்று தான் குறிவைத்த தேசங்களுக்கு எல்லாம் "லேபிள்' ஒட்டி, அவற்றின் மீது பாய்ச்சல் நடத்திய அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது துருப்புக்களைத் தொடர்ந்து நிலை கொள்ளவும் வைக்கமுடியாமல், வாபஸ் பெறவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இன்று அந்தரிக்கின்றமை வெளிப்படையானது.
உலக நாடுகள் பலவற்றின் மீதும் தமது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துப் பெரும் அட்டகாசம் புரிந்த புஷ் நிர்வாகம், வரலாற்றில் பெருமளவில் மக்களால் வெறுக்கப்பட்ட தோல்விகண்ட அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சி என்ற அவப் பெயரோடு வெளியேறுகின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை அடுத்து, சந்நதம் கொண்டு ஆடிய இந்த ஆட்சி, "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்' என்ற தனது திட்டத்தின் கீழ் கடைசியாக என்னத்தைச் சாதித்துவிட்டுப் போகிறது? பெரும் சர்வதேசக் குழப்பங்களை ஏற்படுத்தியமையைத் தவிர.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை நடத்திய "அல்குவைதா' தீவிரவாதிகளின் தொட்டில் என்று தெரிவித்து, ஆப்கான் மீது பெரும் யுத்தத்தைத் தொடுத்த அமெரிக்கா இன்று அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதா? இரத்தக்களரியையும் கொடூர யுத்தத்தையும் பேரழிவு நாசங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தும் ஒரு சூழலை அங்கு உருவாக்கியமையைத் தவிர, வேறெதையும் அமெரிக்க நிர்வாகத்தால் அங்கு சாதித்துக்காட்ட முடியவில்லை.
அதன்பின்னர், மனித குலத்துக்கு எதிரான பேரழிவு ஆயுதங்களை ஈராக்கின் சதாமின் நிர்வாகம் தயார் செய்து வைத்திருப்பதான அபாண்டக் குற்றச்சாட்டு ஒன்றைத் தன்பாட்டில் சிருஷ்டித்து, சுமத்தியபடி ஐ.நா.வின் அனுமதியைக் கூடக் கோராமல் சர்வதேசக் கருத்தை உதாசீனம் செய்தபடி தன்னோடு அணி சேர்ந்த நாடுகளையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, ஈராக் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டது புஷ் ஆட்சி.
இன்று அங்கும் அதே களேபர கலவர நிலைதான். சட்டம் ஒழுங்கு குழம்பிவிட்டது. தினசரி சாவு, சண்டை, தாக்குதல், மனிதப் பேரழிவு, பெரு நாசம் இப்படி கோரத் தாண்டவத்தில் ஈராக்கும் சிக்கித் திண்டாடுகிறது.
பயங்கரவாதத்தை அடக்கப் போவதாகக் கூறி கிளர்ந்தெழுந்த புஷ்ஷின் ஆட்சி, "சும்மா கிடந்த இங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல' சர்வதேச ரீதியில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளை ஊதிப் பெருப்பித்து, தூண்டிவிட்டு, அதனை விஸ்வரூபம் எடுக்கவைத்த பின்னர் அதனைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யமுடியாமல் கைவிட்டு, வெறும் கையோடு ஆட்சியை விட்டு வெளியேறுகின்றது.
சர்வதேச ரீதியில் புஷ்ஷின் ஆட்சி புரிந்த பெரும் தவறு என்ற குற்றத்திலிருந்து அமெரிக்காவை மீட்கும் பொறுப்பு, புஷ்ஷின் இடத்திற்குப் புதிதாக வரப்போகும் ஒபாமாவின் அல்லது கெய்னின் மீது வீழ்ந்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட இனங்களின், அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியையும், எழுச்சியையும் சரியாக அடையாளம் காணாமல், வெறுமனே எடுத்த எடுப்பில் அதற்கு "பயங்கரவாத' சாயம் பூசி, தனது வல்லாதிக்கத்தால் அதனை மேலும் அடக்க முற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அதனால் இன்று உலகின் முன்னால் தலைகுனிந்து நிற்கின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர், உலக நிலைமையை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவும், அமெரிக்க சமூகமும் இன்று "சர்வதேச குழப்பங்களுக்கு வித்திட்ட தரப்புகள்' என்ற அவப்பெயரைச் சுமந்து பெயர் கெட்டு நிற்கின்றன.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும், அடக்கப்பட்ட மக்களின் மனக் கிளர்ச்சி மற்றும் எழுச்சி குறித்தும் அமெரிக்க ஆட்சி அதிகாரம் தனது வல்லாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளியே வந்து தாராளப் போக்கோடு சிந்திக்காதவரை அந்த ஏகாதிபத்தியம் திருந்துவதற்கு இடமில்லை.

thanks:- Uthayan

0 Comments: