வன்னி மக்களின் உள்ளக இடப்பெயர்விற்கு மத்தியில் இராணுவத்தின் பெருமெடுப்பிலான படை நகர்வுகளும் தொடர்கின்றன.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைககள் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இடம்பெயர வைத்துள்ளன.
துண்டுப் பிரசுரங்களுக்கூடாக வவுனியாவை நோக்கி நகருமாறு அம்மக்களுக்கு அன்பான வேண்டுகோளும் விடுக்கப்படுகிறது. ஆயினும் அரசாங்கத்தின் பிரசுரப் பொறிக்குள் அகப்படாமல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கியே மக்கள் நகர்கின்றனர்.
எறிகணைகளால் அடித்துப் பணிய வைக்கும் தாக்குதல்களால் மக்கள் சோர்வடையவில்லை.
பொருளாதாரத் தடை என்கிற பேரினவாத மேலாண்மை அழுத்தங்களும் இடம்பெயர்ந்த மக்களிடம் நுண்ணிய அசைவைக் கூட ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் கிளிநொச்சி நகரிற்கு தென் மேற்குத் திசையிலுள்ள யூனியன் குளம் மற்றும் ஒட்டுப்புலம் நோக்கி அரச படைகளால் எறிகணைகள் ஏவப்பட்டன. இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிமாகத் தங்கியிருந்த இடைத்தங்கல் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவ்வெறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதேவேளை 30.08.2008 ஆம் திகதி சனிக்கிழமையன்று கிளிநொச்சியிலிருந்து 7கி.மீ தூரத்திலுள்ள புது முறிப்பு கிராமம் மீதும் இராணுவத்தினரால் நீண்ட தூர எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலில் ஒரு மாதக் குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட ஐவர் மிகப் பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.
உடல் சிதறி உயிரிழந்த இம் மழலைகளின் உயிரற்ற வெற்று உடல்களை ஐ.நா சபையின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் தமிழ் நெற் இணையத்தளத்தில் பார்வையிட்டிருப்பார்கள்.
தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமெனச் சிங்கள தேசத்திற்கு அரசியல் பாடம் நடாத்திய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பார்த்திருப்பார்.
வன்னியில் ஜனநாயகத்தை நிலை நாட்டத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாதத்திற்கு ஆலோசனை வழங்கும் துணைப்படைத் தலைவர்களும் சொந்த மக்கள் சாதல் கண்டு சிந்தை இரங்காமல் நாணிக் கோணியிருப்பர்.படை நகர்வுகள் எவ்வாறு இருந்தாலும், தமிழ் மக்கள் மரங்களின் கீழ் ஏதிலியாக வாழ்ந்தாலும், உலக மகா ஜனநாயகத்தை காப்பாற்ற, தேர்தலை நடத்துங்களென்பதே அமெரிக்க, இந்திய வேண்டுதல்.
வடக்கை முழுமையாக கைப்பற்றுவதற்கு ஒரு வருடம் தேவையெனக் கூறியவாறு, யாழ் குடாவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
யுத்தமும், தேர்தலும் சமாந்தரமாகப் பயணிக்கும் உத்தியை தற்போது பிரயோகிக்கும் இன்றைய அரசாங்கம் வல்லரசுகளின் மீது மனித உரிமை சங்கங்கள் செலுத்தும் அழுத்தங்களை திசை திருப்புமென எடை போடுகிறது.
தேர்தல் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் அழியவில்லையென்று உலகம் நம்புமென சிங்கள தேசம் சிந்திக்கின்றது. கடன் பெறுவதற்கு பயன்படும் தேர்தல்கள், மக்களின் அவலங்களை மூடி மறைக்கவும் உபயோகிக்கப்படுகிறதென கூறிக்கொள்ளலாம்.விடுதலைப் போராட்டமும் இன அழிப்பு நிலையும், இருபெரும் முரண் அடையாளங்களாக இலங்கையில் இனங்காணப்படுகின்றன.
இவை தவிர குடாநாட்டிற்குரிய இராணுவ விநியோகப் பாதையை, அது தரை வழிப்பாதையாக இருந்தாலென்ன அல்லது கடல்வழிப்பாதையாக இருந்தாலென்ன தடையரண்கள் அற்ற நிலையை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உண்டு.
ஏற்கனவே திருமலை கடற்படைத் தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல் கடல் பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது.மிஞ்சியுள்ள ஒற்றைப் பாதையாக பூநகரி சங்குப்பிட்டியை தெரிவு செய்வது தவிர்க்க முடியாத போர் உத்தியாக அரசாங்கத்துக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வடக்கு மக்களை விடுவிப்பதற்காக என்றுகூறி, இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.இடப்பெயர்விற்குள்ளான தமிழ் மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளற்ற இந்த அவல நிலை, அதனை உருவாக்கியோர் சர்வதேச போர் குற்றம் சுமத்தப்படும் ஏது நிலையினை உருவாக்கும்.
அதேவேளை விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கச் சுத்தியலை தூக்கப்போவதாக சொன்னவர்களும் 12 கி.மீ தூரத்தில் நிற்பதாக அக்கராயன் கனவில் மிதந்தவர்களும், நாச்சிக்குடா இழப்புக்களை மூடி மறைக்க முடியாமல் திணறுகின்றனர்.
விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் கடந்த திங்களன்று நிகழ்ந்த நாச்சிக்குடா முறியடிப்புச் சமரில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 51 பேர் படுகாயமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த செவ்வாயன்று நடைபெற்ற பாரிய சமரில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 50 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.அக்கராயனிற்கும் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இத்தாக்குதல் நடைபெற்றது.
உருக்குலையாத இராணுவத்தின் 19 சடலங்கள் புதன்கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ஐ.சி.சி.ஆர்.சி.) ஓமந்தைக்கு அனுப்பப்பட்டன. வியாழனன்று மேலும் 11 சடலங்கள் ஐ.சி.ஆர்.சியிடம் கையளிக்கப்பட்டன.
அரச படைகள் மேற்கொண்ட இப்பூநகரி நோக்கிய நகர்வில் பல்குழல் எறிகணைகள், எம்.ஐ.24 ரக யுத்த உலங்கு வானூர்திகள், ஆட்டிலெறிகள், மிகையொலி குண்டு வீச்சு விமானங்கள் யாவும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. புலிகளின் தற்காப்பு நிலையானது முறியடிப்பு பரிமாணத்தை எட்டி ஊடறுக்கும் நிலைக்குரிய காலத்தையும் களத்தையும் நோக்கி அசைகிறது.
மாற்றீட்டுப் பாதையென்பது புதை குழிகள் நிறைந்த மரணப்பாதையென்பதை பூநகரி நகர்வில் தெரிய வரலாம்.
இதேவேளை, கிழக்கிலும் அதிர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்ட எல்லைப் புறத்திலமைந்த உகந்தைக்கு அருகாமையிலுள்ள சன்னாசி மலையடியில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வழிமறிப்புத் தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டு இருவர் காயமுற்றுள்ளனர்.
அங்கு கிளைமோர் தாக்குதல்கள் தினச் செய்தி ஆகிவிட்டன. வடக்கோடும் கிழக்கு வெளிக்கும் காலமும் இணைந்து வருவது போல் தெரிகிறது.
[நன்றி- சி.இதயச்சந்திரன் வீரகேசரி]
Monday, September 8, 2008
புதைகுழியாகும் பூநகரிப் பாதை
Posted by tamil at 2:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment