"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி' வன்னி மக்களைத் துவைத்தெடுக்கத் தயாராகிவிட்டது போலும் மஹிந்த அரசு.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசிக்கும மக்களை அங்கிருந்து உடன் வெளியேறி விடவேண்டும் என்று அறிவித்ததன் மூலம் அண்மையில் அவர்களுக்கு "அச்சுறுத்தல் வைத்தியம்' செய்ய முயன்றது அரசுத் தரப்பு.
அந்த எத்தனம் அதிகம் எடுபடவில்லை. அந்த மக்கள் தங்களது தாயக மண்ணை விட்டு வெளியேற முன்வரவில்லை. அரசு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறவில்லை.
இதனால் ஆட்சிப்பீடம் ஆத்திரமடைந்திருக்கின்றது போலும். அதனால்தான் "அச்சுறுத்தல் வைத்தியம்' சரிவராத நிலையில் அடுத்து "அதிர்ச்சி வைத்தியம்' என்ற காயை அது கையில் எடுத்திருக்கின்றது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து சகல உள்நாட்டு, வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும், அவற்றின் பிரதிநிதிகளையும் உடன் வெளியேறி விடுமாறு அரசு விடுத்திருக்கும் அறிவிப்பே இந்த "அதிர்ச்சி வைத்திய' முயற்சிதான்.
தமிழரின் வன்னித் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போர் காரணமாக அங்கு மிகப் பாரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் தத்தமது வீடு வாசல்கள், நிலபுலன்கள், சொத்துகள், உடைமைகள், கால்நடைகள் போன்றவற்றை இழந்து கையில் அகப்பட்ட பொருட்களோடு ஏதிலிகளாக அலையும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கிறது. மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்க இடமின்றி, காடுகளிலும், மர நிழல்களிலும், தற்காலிகக் கொட்டகைகளிலும் படுத்துறங்கும் பேரவலம் அவர்களுக்கு நேர்ந்திருக்கின்றது.
தொடர்ந்து இலங்கை அரசு மூர்க்கமாக முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகள் காரணமாக மேலும் புதிதாக ஏதிலிகள் பட்டியலில் ஆயிரக்கணக்கானோர் தினசரி சேர்ந்துவரும் நிலையிலேயே
அதனால் நேர்ந்துள்ள மனிதப் பேரவல நிலையை ஓரளவேனும் சமாளித்து, அந்த அகதிகளின் அவசர அவசிய தேவைகளை விரைந்து கவனிக்கும் மனிதநேயப் பணியாளர்களின் சேவைக்கும் நிரந்தர வேட்டு வைத்திருக்கின்றது கொழும்பு அதிகார வர்க்கம்.
வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற தொண்டுப் பணியாளர்களின் உதவி உச்சமாகத் தேவைப்படும் சமயத்திலேயே அச் சேவையை முற்றாகத் தடைசெய்யும் கொடூர செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது கொழும்பு.
யுத்தத்தின் இடையில் சிக்கும் மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகள் கிட்டுவதை உறுதிப்படுத்துவது யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாகும். அந்த மனிதாபிமான உதவிகள் அந்த மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடுப்பது அடிப்படை மனித உரிமைகளையும் சர்வதேச யுத்த விதிகளையும் மீறும் செயற்பாடாகும்.
அதுவும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஒன்பதாவது அமர்வு நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியிருக்கும் சமயத்தில், இவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முக்கிய மனிதாபிமானப் பணியைத் தடுத்து நிறுத்தும் அத்துமீறலை அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் கொழும்பு நிர்வாகம் முன்னெடுத்திருக்கின்றமை அதிர்ச்சி தருவதாகும்.
ஒருவகையில் பார்த்தால் இந்த "செருக்குப் போக்கு' ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் செயற்பாட்டிற்கே சவால்விடும் நடவடிக்கை என்பதும் கவனிக்கத்தக்கது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை முற்றாகக் கைப்பற்றும் போர்வெறித் தீவிரத்தில் இருக்கும் கொழும்பு, அந்த இலக்கை அடைவதற்காகத் தனது படை நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக ஆரம்பித்திருக்கின்றது. ஷெல், பீரங்கி, மோட்டார் தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் கண்மூடித்தனமாக நடக்கின்றன. குடிமனைகள் இலக்கு வைக்கப்படுகின்றன. அரசுப் படைகளின் யுத்த சந்நதம் இன்னும் தீவிரமடையும்போது இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்கள் கேட்டுக் கேள்வியற்ற அளவில் பரந்து விசாலமாக மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படலாம் என்ற பீதி தமிழர்கள் தரப்பில் உண்டு.
இந்தப் பின்புலத்திலேயே
அப்பிரதேசங்களில் இருக்கும் உள்ளூர், வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும் அவர்களது பிரதிநிதிகளையும் அத்தரப்பினருக்கு உரிய பாதுகாப்பைத் தங்களால் உறுதிப்படுத்த முடியாது என்று கையை விரித்து, அதன் காரணமாக அத்தரப்புகளை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு அரசுத் தரப்பு உத்தரவிட்டிருக்கின்றது.
சர்வதேசத்துடன் நம்பகரமான தொடர்பாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களைக் கொண்ட தொண்டர் நிறுவனங்களை வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவது, யுத்தத்தின் பெயரால் அப்பிரதேசம் மீது கட்டவிழப்போகும் கண்மூடித்தனமான இலக்கற்ற பேரழிவு நாசத் தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் வெளிப்பட இடமளிக்காமல் மூடிமறைக்கும் முஸ்தீபாகவும் இருக்கலாம் என்ற அச்சம் தமிழர்களுக்கு உண்டு.
வன்னியில் உள்ள அப்பாவி மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் கூடத் தனக்குத் தார்மீகப் பொறுப்பும், கடமையும் உண்டு என சர்வதேசம் கருதுமானால், அதை நிறைவு செய்வதற்கான முக்கிய மான தருணம் இப்போது அதற்கு வந்துவிட்டது என்பதே நிலைமை.
தற்சமயம் வன்னியைப் பேரழிவுக்குள்ளாக்கி, ரணகளமாக்கத் திட்டமிட்டு செயற்படும் கொழும்பை, அந்தக் கொடூரத்தை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்க விடாமல் தடுப்பதன்மூலம் தனது கடமையை சரிவர ஆற்ற சர்வதேசம் முன்வரவேண்டும்.
thanks:-Uthayan
Wednesday, September 10, 2008
மனித நேயப் பணிகளுக்கும் ஆப்பு வைக்கும் அராஜகம்!
Posted by tamil at 6:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment