Sunday, September 14, 2008

இறுதி யுத்தமும் இந்தியாவும்

கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நான் இங்கு இந்திய அதிர்ச்சி என்று அழுத்திச் சொல்லுவதற்கு காரணமுண்டு. வழமையாக விடுதலைப்புலிகளின் அதிர்ச்சித் தாக்குதல்களால் கொழும்பு மட்டுமே அதிர்ச்சியடைவதுண்டு.

ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக கொழும்பின் அதிர்ச்சிக்கு அப்பால் இந்தியாவையும் மேற்படி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் அதிர்ச்சிக்கு காரணம், இத்தாக்குதலில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் இயங்கிவரும் பாரத் நிறுவனத்தைச் சேர்ந்த இரு பொறியியலாளர்களும் காயப்பட்டுள்ளதுதான்.

இந்தியா, சிறிலங்கா அரசிற்கு இலகுரக விமானங்களை கண்காணிக்கும் ராடர்களை வழங்கியிருப்பது இரகசியமான ஒன்றல்ல ஆனால் அதனை பராமரிப்பதற்கும், புலிகளின் விமான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் தனது இராணுவ வல்லுநர்களை பயன்படுத்தி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறான இராணுவ ஒத்துழைப்பானது வெறுமனே சிறிலங்கா இராணுவத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது என்பதற்கு அப்பால் புலிகளின் நகர்வுகளை கண்காணித்து அழிக்கும் இரகசிய நடவடிக்கைகளிலும் இந்தியா திரைமறைவில் இயங்கிவருகிறது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இந்திய புலனாய்வுத் துறை விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பது பற்றி எச்சரித்திருந்தது. ஆனால் புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளும் வரை சிறிலங்கா அரசு அதைப் பெரிதாக கருத்தில் எடுக்காதது போன்றே காட்டிக்கொண்டது. பட்டம் கூட அங்கு பிறக்கவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தமது முதல் விமானத் தாக்குதலை மேற்கொண்ட புலிகள், இது வரை ஏழு தடவைகள் வெற்றிகரமாக தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இந்தியா 2005இல் இலகுரக விமானங்களை கண்காணிப்பதற்கான ராடர்களை சிறிலங்கா அரசிற்கு வளங்கியிருந்தது. புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கியதைத் தொடர்ந்து, விமானத் தாக்குதல்களை கவனிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தொடங்கியது.

அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போதைய இராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னைய தாக்குதலுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு தற்போதைய தாக்குதல் இலக்கே ராடர் நிலையமாக இருந்ததுதான்.

அநுராதபுர அதிர்ச்சித் தாக்குதல்களுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கும் பாரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும். எதிர்வரும் மாதங்களில் புலிகள் தமது இதுவரைகால நகர்வுகளில் மாற்றங்களை காட்டலாம். இது சிறிலங்கா இராணுவமும் அறியாத ஒன்றல்ல ஆனால் அவ்வாறான மாற்றங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதில்தான்; தற்போது கொழும்பு பதற்றமடைந்துள்ளது. புலிகளின் குகைக்குள் அகப்பட்டது போன்றதொரு போர்ப் பொறிக்குள்ளே இராணுவம் அகப்பட்டிருக்கிறது.

இந்த பொறியை சிங்களத்தின் படைக்கட்டமைப்பை சிதைக்கும் அழிவுப் பொறியாக மாற்றும் வகையில் புலிகள் தமது தந்திரோபாயத்தை வகுக்கக் கூடும். ஆனால் சிங்களத்திற்குள்ள பிரச்சனை புலிகள் முப்படைத் தாக்குதல்களை பிரயோகிப்பார்கள் என்பதுதான்.

அவ்வாறு புலிகள் முப்படைத் தாக்குதல்களை பயன்படுத்தினால் இராணுவம் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டிவரும். இதனைக் கருத்தில் கொண்டுதான் புலிகளின் விமானத் தாக்குதல்களை மட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவிற்கு இந்தியா உதவிவருகிறது.

இந்தியா, மகிந்த நிர்வாகத்தினரால் புலிகளுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளித்துவருவது வெள்ளிடைமலையாகியுள்ள நிலையில், இந்தியா தற்போதைய யுத்தத்தை தனக்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பமாக கருதுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரையில், அது புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒரு இறுதி யுத்தமாகவே கருதுகிறது. இதில் புலிகளை தோற்கடித்து பூண்டோடு அழித்தொழித்துவிட முடியுமென்று மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்தியாவின் வெளித்தெரியும், வெளித்தெரியாத அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் அடிப்படை, விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் குறிப்பாக பிரபாகரன் தலைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்பதுதான்.

இந்தியாவின் கடந்தகால அணுகுமுறைகளின் போது இது தெளிவாக நிரூபணமான உண்மையும் கூட. அப்படியொரு நிகழ்ச்சிநிரலுடன்தான் தற்போது இந்தியா சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுத்து வருகிறதா என்ற கேள்வி பலரிடம் எழலாம்.

தற்போதைய நிலைமைகளில் இந்த கேள்வி நியாயமான ஒன்றும் கூட. ஆரம்பத்தில் இந்தியா இலங்கையில் ஒரு இராணுவவலுச் சமநிலை நிலவுவதை ஆதரிப்பது போன்றே காட்டிக்கொண்டது. அதே வேளை தனது அண்டைய நாடுகளில் ஒரு முரண் தணிப்பு நிலைமை நிலவுவது தனது பிராந்திய நலனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் தனது ஆதரவு நிலைமையை வெளிப்படுத்தி வந்தது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியா தன்னை காட்டிக் கொண்ட போதும், மகிந்த நிர்வாகம் இந்தியாவின் மேற்படி எதிர்பார்ப்புகளை சீர்குலைக்கும் வகையில் யுத்தவாத அரசியலை மீள் ஒழுங்கமைப்பற்கு கொண்டுவந்தபோது , இந்தியா அதனை கட்டுப்படுத்த முயலவில்லை. மாறாக இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்ற தோரணையில் வெறும் அவதானிப்பாளராகவே தன்னைக் காட்டிக் கொள்ள முற்பட்டது. ஆனால் அதே இந்தியா விடுதலைப்புலிகளின் முன்னோக்கிய நகர்வுகளின் போதெல்லாம் அது குறித்து சிங்களத்தை எச்சரிக்கும் ஆலோசனைகளை வழங்கும் பாத்திரத்தை ஆற்றத் தயங்கவில்லை.

இந்த பின்புலத்தில்தான் விடுதலைப்புலிகளின் விமானப்படை கட்டமைப்பை சீர் குலைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்டிவருகிறது. ஏலவே புலிகளின் கடல்வழி விநியோகங்களை கட்டுப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளுக்கு போதுமான ஒத்துழைப்புகளை வழங்கியது. தற்போது விமானப்படையை இலக்கு வைத்து சிங்களத்தை வழிநடத்த இந்தியா முற்படுகிறது.

புலிகளின் கடற்படை மற்றும் விமானப்படை வளர்ச்சியை அழித்தொழிக்க வேண்டுமென்ற இரகசிய நிகழ்சி நிரலொன்றை இந்தியா நீண்டகாலமாகவே கைக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வோம்.

கடந்த 2006இல் மகிந்த நிர்வாகத்தால் யுத்தம் புதுப்பிக்கப்பட்டபோது அது ஒரு உள்நாட்டு விவகாரம் என்றவாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்தியா, கிழக்கின் இராணுவ வலுவில் ஏற்பட்ட மாற்றங்கள், வடபகுதியில் சிங்களத்தின் சில தூர வெற்றிகள் எல்லாவற்றையும் கொண்டு இதனை தனக்கான ஒரு சந்தர்ப்பமாக கைக்கொள்ள முற்படுவது போல் தெரிகிறது. இந்தியாவிற்கு ஏலவே புலிகள் விடயத்தில் தவறான கணிப்புக்களை மேற்கொண்டு தோல்வியடைந்த அனுபவம் உண்டு. தற்போது இந்தியா என்னவகையான மதிப்பீட்டினைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், களநிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இதில் இந்தியாவிற்கு ஒரு சிக்கலுமுண்டு.

விரைவில் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையிலுள்ள மன்மோகன் அரசு தமது ஆதரவுத்தளங்களில் ஒன்றான தமிழகத்தை இது விடயத்தில் சமநிலைப்படுத்த வேண்டிய பொறுப்பை தாண்டிச் செல்லமுடியாதுள்ளது.

எனவே ஒரு விதமான சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தையே இந்தியா இலங்கை விடயத்தில் கைக்கொண்டு வந்தது. எனினும் தற்போதைய சம்பவம் இந்தியாவின் சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தில் சில நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும். தொடர்ந்து தமிழகம் எவ்வாறு இது விடயத்தில் எதிர்வினையாற்றப் போகிறது என்று பார்ப்போம்.

நன்றி -
தாரகா
தினக்குரல்

0 Comments: