Friday, September 5, 2008

மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை"

வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன.

தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்கள் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள்.

புலிகளை முடிப்பதற்கு நாள் குறித்தார்கள். பிரபாகரனை பிடிப்பதற்கு நாள் குறித்தார்கள். வன்னியை வளைத்துப்போடுவதற்கு நாள் குறித்தார்கள்.

ஆனால், இவை எல்லாமே எந்தக்கட்டத்தில் தற்போது உள்ளது என்று கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் அரசை கேட்டால் அதற்கான விடையும் புலிகளிடம்தான் உள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றுமுழுதாக வல்வளைத்து வித்தியாசமான முற்றுகைக்குள் கொண்டுவரும் நோக்குடன் மன்னார் பகுதியூடாக பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட அரச படைகள், வன்னியின் மேற்குப் பிரதேசத்தை இரண்டு துண்டுகளாக தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன.

இதன்படி, அரச படைகளின் 57 ஆவது டிவிசன் அணிகள் வன்னியின் மேற்குப் பகுதியின் நடுப்பிரதேசங்களில் தாக்குதல் நடத்த, 58 ஆவது டிவிசன் படையணி வன்னியின் மேற்கு கடற்கரையோரமாக பூநகரி நோக்கிய ஏ-32 நெடும்பாதையில் முன்னேறிச்சென்றது.



இந்த இரண்டு அணிகளில் 58 ஆவது டிவிசன் அணி அடம்பனில் ஆரம்பித்து கரையோரப்பகுதியாக விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் வரை சென்று முழங்காவில் வரை சென்றது.

அதேவேளை, 57 ஆவது டிவிசன் அணிகள் மேற்கு பிரதேசத்தின் வயிற்றுப்பகுதியில் மடு, பாலம்பிட்டி, மூன்றுமுறிப்பு, பெரியமடு, நட்டாங்கண்டல், கல்விளான், துணுக்காய் சென்று மல்லாவி வரை சென்று அதன் ஒரு அணி அக்கராயனிலும் போய்நின்று கொண்டது.

இந்நிலையில், கைப்பற்றிய பிரதேசங்களை தக்கவைப்பதற்கு சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்த சகல படைகளையும் துடைத்து எடுத்துக்கொண்டு வந்து வன்னியின் மேற்கு பகுதியில் தூவிவிட்டுள்ள அரச படைகள், கடந்த முதலாம் திகதி பூநகரியை கைப்பற்றுவதற்காக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாச்சிக்குடாவை பிடிப்பதற்கு இருபெரும் திட்டங்களுடன் ஆயத்தமாகின.

அதாவது, முழங்காவில் வரை சென்ற 57 ஆவது டிவிசனுக்கும் துணுக்காய் பகுதியை வல்வளைப்பதற்காக முன்னரே அக்கராயன் வரை சென்ற 58 ஆவது டிவிசன் படையணிக்கும் கடந்த சில வாரங்களாக வவுனியா சென்ற இராணுவ தளபதி சரத் பொன்சேகா அளித்த விசேட திட்டம் இது.

அதாவது, 57, 58 ஆகிய டிவிசன் அணிகள் தாக்கவேண்டிய புலிகளின் முன்னணி காவலரண்கள் மேற்கில் கடற்கரையிலிருந்து நாச்சிக்குடா, முழங்காவில், நாகபடுவான், வன்னேரி, அக்கராயன் என்று ஏ-9 வீதியை நோக்கி கிழக்கு நோக்கி நீண்டிருந்தது.

புலிகளின் இந்த அரணை எப்படியாவது உடைப்பதன் மூலம் நாச்சிக்குடாவை கைப்பற்றுவது அல்லது நாச்சிக்குடாவை தக்கவைத்திருக்கும் புலிகளின் தொடர் அணியை இரண்டாக பிரிப்பது, அதனைத் தொடர்ந்து பூநகரியை தாக்கி பிடிப்பது என்பதுதான் இராணுவத்தின் திட்டம்.

இதுவரை இதற்காக நான்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவும் பலனளிக்காத நிலையில், தற்போது தெளிவான - விரிவான - திட்டமிடலுடன் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது.

இதற்காக 58 ஆவது டிவிசனின் உயர்வலு கொண்ட கொமாண்டோ படையணிகளான சிறப்பு தாக்குதல் அணி - 1, சிறப்பு தாக்குதல் அணி - 2 ஆகியவை தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டன.



கடற்கரையிலிருந்து நாகபடுவான் வரையிலான பத்து கிலோமீற்றர் தூரம் கொண்ட புலிகளின் முன்னரங்கை எந்த இடத்திலாவது உடைத்து உட்புகுந்து கொள்ளும் இந்த அணிகள் அங்குள்ள புலிகளின் அணிகளை எப்படியாவது முற்றுகைக்குள் கொண்டுவந்து தாக்குவது என்றும் -

அந்தவேளையில், ஏனைய படையணிகள் முன்னேறி நாச்சிக்குடாவை கைப்பற்றுவது என்பதும்தான் படையினரின் முதற்கட்ட திட்டமாக இருந்தது.

இதற்காக முழங்காவில் மாதா கோவில் முன்பாக உள்ள படையினரின் காவலரண்களிலிருந்து தாக்குதலை ஆரம்பிப்பது என்று வகுக்கப்பட்ட திட்டத்தின்படி நடவடிக்கை ஆரம்பமானது.

மதியம் தாண்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது சமர். வான் வழியாக அரச படைகளின் கிபிர் மற்றும் எம்.ஐ.- 24 ஆகியவை தாக்குதல் ஆதரவை வழங்க, விசேட பயிற்சி பெற்ற கொமாண்டோ தாக்குதல் அணிகள் புலிகளின் முன்னரங் நிலைகள் மீது சரமாரியான தாக்குதல்களை தொடங்கின.

அப்போதுதான் புலிகளின் எதிர்ச்சமர் ஆரம்பித்தது. ஐந்தாவது தடவையும் புலிகள் தம்முடன் சரிக்கு சரி நின்று மோத மாட்டார்கள் என்றும் தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களில் போல இந்த காவலரணையும் புலிகள் பின்வாங்கி சென்றுவிடுவார்கள் என்ற மன உறுதியுடனும் அரச படைகள் கடும்சமர் புரிந்தன.

இரவில் தாக்குதலை ஆரம்பித்தால் வான்படையின் உதவி நேர்த்தியாக கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்பதால் பகலில் இந்த வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

மணிக்கணக்கில் நடைபெற்ற சண்டையில் புலிகளின் காவலரண்கள் இந்தா விழுந்து விடும் இந்தா விழுந்து விடும் என்ற நம்பிக்கை படையினருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. தாம் முன்னர் கைப்பற்றிய பிரதேச வெற்றிகள் அவர்களுக்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அரச படையினரின் சடலங்கள்தான் கொத்துக் கொத்தாக விழ ஆரம்பித்தன.

புலிகளின் சரமாரியான எதிர்த்தாக்குதல் படையினரை நிலைகுலைய வைத்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தமது திட்டத்தை கைவிடத்தீர்மானித்த படையினர் தமது சகாக்களின் உடலங்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

58 ஆவது டிவிசன் படையணி தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் நெறிப்படுத்தலுக்கமைய களமுனை தளபதிகள் தமது படையினரின் உடலங்கள் எக்காரணம் கொண்டும் புலிகளின் கைகளில் சிக்கவிடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

அன்று இரவு முழுவதும் படையினரின் உடலங்களை எப்படியாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் படையினர் கடுமையாக போராடினர். இயலுமான வரையில் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, அதிகாலை 2 மணியளவில் பெரும் இழப்புக்களுடன் தாக்குதலை நிறுத்திக்கொண்டனர் படையினர்.
தாக்குதல் தொடர்பாக பேசவல்ல ஒருவர் தெரிவிக்கையில் - 'உடலங்களை தூர இருந்து முட்கம்பிகளை போட்டு இழுத்தாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்று ஓர்மத்துடன் அரச படைகளின் கடைசி மணி நேர சண்டை நடைபெற்றது" - என்றார்.

புலிகள் மேற்கொண்ட முறிடிப்புத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த தாக்குதல் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னரே ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த அடுத்த திட்டத்தை செயற்படுத்த இராணுவ தலைமைப்பீடத்திலிருந்து உடனடியாக கட்டளை பறந்தது.

எனவே, அக்கராயன் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த 58 ஆவது டிவிசன் படையணி புலிகளின் அடுத்த தொடர் முன்னணி காவலரணை தாக்கி உள் நுழைவதற்கு ஆயத்தமானது.



முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவின் விசுவாசியான இந்த டிவிசன் தளபதி ஜகத் டயசுக்கும் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒருவித முறுகல்நிலை இருந்துவருகின்றபோதும், துணுக்காய், மல்லாவி என படைத்தரப்பால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படும் பிரதேசங்களை கைப்பற்றியதால், இவர் தலைமையிலான படையணி மீது படைத் தலைமைக்கு எப்போதும் எதையும் சாதிக்கும் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாக நிறையவே இருந்தது.

இந்த படையணியின் முக்கிய கொமாண்டோ அணிகள் அடுத்த தாக்குதலுக்கு தயாராகின. வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையிலான சுமார் நான்கு மைல்கள் நீளமான புலிகளின் முன்னணி அரணை உடைத்து புலிகளை முற்றுகைக்குள் கொண்டு வரும் திட்டத்துடன், அதிகாலை 5 மணிக்கு சமர் ஆரம்பமானது.

இந்த தாக்குதலில் எப்படியாவது வெற்றியடைவது என்ற திட்டத்துடன் படையினரின் அணிகள் கடும் சமரை ஆரம்பித்தன. ஆர்.பி.ஜி., லோ உட்பட கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேறிய படையினரின் இந்த தாக்குதலில் ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும்.

அதாவது, யுத்த களத்தில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளாக இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த 'லோவுக்கு" மேலதிகமாக இந்த சமரில் முதல் முறையாக 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் பாகிஸ்தான் தயாரிப்பிலான புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை இந்த சமரில் அரச படைகளினால் முதன்முறையாக வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.

எதிரி மீதான தாக்குதலுக்கு இலக்கை வகுத்து அதனை தாக்குபவரின் திறன் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையையே இதுவரை காலமும் அரச படைகள் பயன்படுத்தி வந்தன. ~லோ" எனப்படும் இலகுரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை உட்பட மூன்றாவது தலைமுறை ஆயுதங்கள் சகலதும் இந்த பட்டியலில் அடங்கும்.

ஆனால், இந்த ஆண்டின் முற்பகுதியில் பாகிஸ்தானிடமிருந்து கொள்வனவு செய்த 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் இந்த புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைக்கு இலக்கிற்கான கட்டளைகளை இலத்திரனியல் முறை மூலம் வழங்கிவிட்டு இயக்கினால் அது தவறாமல் எதிரியின் இலக்கை தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இதற்கு தாக்குபவரின் திறன் அவசியமற்றது.

இந்த ஏவுகணை பாரிய பதுங்குகுழிகள் மற்றும் வலிமையான காவலரண்கள் ஆகியவற்றை இலக்கு பிசகாது அழித்து ஒழிக்கக்கூடியது. தோளில் வைத்தும் தாக்கக்கூடிய வசதிகொண்ட இந்த ஏவுகணை, உலங்குவானூர்தியில் பொருத்தி தாக்குவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா படை மன்னார் பகுதியில் முதன்முறையாக பரிசோதித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டாம் திகதி வன்னேரியில் இடம்பெற்ற தாக்குதலில்தான் முதன்முறையாக தமது வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தது

இதனுடன் இன்னொரு உயர்வலுக்கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான சீனத்தயாரிப்பு 'ஹொங் ஜியான்" எனப்படும் சுடுகலன் மற்றும் கனரக ஆயுதங்களுடன் அரச படைகள் முன்னேறின.

நாச்சிக்குடாவில் தமது தாக்குதலில் முறியடிக்கப்பட்டதால் புலிகளின் விசேட அணிகள் அங்குதான் நிலை கொண்டிருப்பதாக கருதிய படையினர், வன்னேரி - அக்கராயனில் உள்ள புலிகளின் முன்னரணை இலகுவில் உடைத்துவிடலாம் என்று எண்ணியது.

ஆனால், நேரம் செல்ல செல்ல விடயம் விளங்கிவிட்டது. நாச்சிக்குடாவிலும் பார்க்க பாரிய இழப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிய ஆரம்பித்தது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் முன்சென்ற படைகள் மண்கவ்வ தொடங்கின. அடுத்தடுத்து அனுப்பிய அணிகளால், புலிகளின் இலக்கு தவறாத ஏறிகணை தாக்குதலில் எதிர்த்து நின்று சமராட முடியவில்லை.

திடீர் திடீர் என ஒவ்வொரு பகுதிகளினால் எதிர்த்தாக்குதல்களை ஆரம்பித்து, வலிந்த தாக்குதல் மேற்கொண்ட படையினரையே வலையில் விழுத்த ஆரம்பித்த புலிகளின் தொடர் தாக்குதல்களால் படைத்தலைமை நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்தது.

புலிகளின் பகுதிகளுக்குள் சென்று பலியான படையினரின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆனால், நாச்சிக்குடாவில் படையினரின் உடலங்களை கைப்பற்றப்போய் மேலதிக படையினரை இழந்ததால், இந்த தாக்குதலில் உடலங்கள் புலிகளிடம் போனாலும் பரவாயில்லை, இழப்புக்களை குறைத்துக்கொண்டு மீண்டும் தளம் திரும்பலாம் என்ற முடிவுடன், மாலை ஆறு மணியளவில் படை நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பலியான சுமார் 30 படையினரில் 22 பேரின் உடலங்களை புலிகள் மீட்டனர். அத்துடன் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முன்சென்ற படையினர் எப்படியாவது புலிகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடித்து அவர்களது அரணை உடைப்பது என்ற முடிவுடன் போனதால் அவர்கள் கனரக ஆயுதங்களுடன் முன்னேறியிருந்தனர்.

தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட கொண்டு சென்ற பெருந்தொகையான ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

பெரும் இழப்புக்களுடன் படையினரின் இரண்டு திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளபோதும், இதனை படையினரின் நிரந்தர ஓய்வுநிலையாக கருதிவிடமுடியாது.

ஏ-9 பாதையை தொடாமல் வன்னியில் தொடர்ந்து ஒரு படை நடவடிக்கையை செய்து அதில் வெற்றிகாண வேண்டுமானால், அதற்கு படையினரிடம் உள்ள ஒரே இலக்கு பூநகரி மட்டும்தான். அதனை கைப்பற்றி குடாநாட்டுக்கான புலிகளின் அச்சுறுத்தலை முற்றாக இல்லாமல் செய்துவிடுவதே படையினரின் தற்போதைய பாரிய திட்டமாக உள்ளது. அந்த முயற்சியிலிருந்து அரச படைகள் இலகுவில் பின்வாங்கிவிடப்போவதில்லை.

ஆனையிறவை நோக்கிய இலக்குடன் எத்தனை நடவடிக்கையை மேற்கொண்டு முகமாலையில் பெரும் இழப்புக்களை சந்தித்தாலும் அந்த முயற்சியை மேற்கொள்வதில் படையினர் இன்னமும் எவ்வளவு உறுதியாக உள்ளனரோ அது போன்ற ஒரு ஓர்மநிலை தற்போது வன்னியின் மேற்கில் தோன்றியுள்ளது. இதற்கு புலிகளின் தளம்பாத கள உத்திகள் தக்க பாடம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

வலிந்த தாக்குதல் என்பது எதேச்;சையாக எங்கும் ஆரம்பிக்க கூடிய ஒன்று. அதற்கு படை பலமும் ஆயுதபலமும் இருந்தால் போதும். ஆனால், தற்காப்பு தாக்குதலின் வெற்றி எனப்படுவது, சமச்சீரற்ற படைநகர்த்தல், கள உத்திகள் மற்றும் நேர்த்தியான தாக்குதல் எதிர்வுகூறல்கள் ஆகியனவற்றின் அடிப்படையிலானது.

இந்த வகையில் புலிகளின் படைக்குவிப்பும் அவர்களது எதிர்ப்பு வலுவும் எங்கு குவியப்படுத்தப்பட்டிருக்கி��
�து என்ற விடயத்தில் படையினர் தற்போது திக்குமுக்காடிப்போயுள்ளது என்பதே உண்மை.

பாலமோட்டையில் ஒரு வலிந்த தாக்குதல் மேற்ககொண்டால் அங்கு புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. நாச்சிக்குடாவில் ஒரு வலிந்த தாக்குதல் ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. வன்னேரியில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. முகமாலையில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் அதே நிலை.

படைத்தளபதியின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கில் புலிகள் கொன்றொழிக்கப்பட்டால் இந்த பரந்துபட்ட எதிர்த்தாக்குதல்களுக்கான புலிகள் எங்கிருந்து புதிதாக வருகிறார்கள் என்பது அடுத்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேலிய ரம்புக்வலவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இது இவ்வாறு இருக்க, வன்னேரி - அக்கராயனில் படையினர் பயன்படுத்திய புதிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பற்றி களத்திலிருந்து பேசவல்ல ஒருவரிடம் கேட்டபோது -

'புலிகளிடம் உள்ள டாங்கி எதிர்ப்பு ஏவுகணையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்" - என்றார்.

'அப்படியானால், கடந்த இரண்டாம் திகதி சமரில் பாகிஸ்தான் தயாரிப்பான பக்தார் ஷிக்ஹான் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையும் கைப்பற்றப்பட்டளதா" - என்று கேட்க அதற்கிடையில் அழைப்பு அறுந்துவிட்டது

நன்றி - தமிழ்நாதம்

0 Comments: