Saturday, August 25, 2012

இனிமேல் இரணைமடு யாருக்கு?-வன்னிமகன்



Saturday, August 25, 2012, 4:56தமிழீழம்

இரணைமடு யாருக்கு? ஏழை விவசாயிகளுக்கா? சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கா? இத்தகைய கேள்விகள்தான்

தற்போது தமிழ் மக்கள் மனங்களெங்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய சொத்தில் யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்களுடைய சொத்தை யார் யாரோ தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சொத்துக்குரியவர்கள் மட்டும் வயிற்றில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு படுக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இரணைமடுக் குளத்தினதும், குளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயக் குடும்பங்களினதும் பரிதாபகரமான நிதர்சனம். இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள்ளே அமைந் துள்ளபோதும் அதன் பயன்பாடும், நிர்வக நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றது.

குளத்தின் உருவாக்கம், அதற்கான காரணம் குறித்தெல்லாம் பேச நாம் விரும்பவில்லை. தற்போது குளத்தை அடிப்படையாக வைத்து நடாத்தப்படும் அரசியல் குறித்தும், காரசாரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாதம் குறித்துமே நாம் பேச விளைகின்றோம். இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள செய்திகள் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.இதனையே முன்னிறுத்திக்கொண்டே கிளிநொச்சி மக்களுக்கே போதாமலிருக்கும் நிலையில் யாழ்ப்பாண மக்களுக்கு எப்படி நீரைக்கொண்டு செல்லமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. நியாயமான கேள்விதான். யாரும் மறுக்கமுடியாத கேள்வியும் கூட. ஆனால் அதை பிரதேசவாதமாக யாரும் முன்னெடுக்கவேண்டாம். அறிவியல் ரீதியாக நடைமுறைச்சாத்தியமான வழிகளுக்கூடாக அதனை அணுகலாம். அது பற்றி விரிவாகவும் பார்க்கலாம்.இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிகளாகும்.

இறுதியுத்தத்தின் போது எறிகணைத் தாக்குதலினால் நீர் வெளியேற்றுப் பாதையின் கதவு ஒன்று சேதமடைந்திருந்தது. மற்றொன்று அணைக்கட்டுகள் நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் தளர்வடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த முறை பருவமழையின் போது 32அடி தண்ணீரை சேமிக்ககூடியதான நிலையிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த உள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்குள் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்க, நீர்வரத்தும், நீர்மட்டத்தின் உயர்வும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் குளத்தின் ஒரு புறத்தில் தற்போது இராணுவ பயன்பாட்டிலுள்ள விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை மற்றும் இராணுவத்தினர் அமைத்திருக்கும் தங்குமிடங்களுக்கும் நீரினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என இராணுவத்தலைமை அச்சங்கொண்டது.

இதன் தொடர்ச்சியாகவே குளத்தின் நீர் மட்டத்தை 5அடி தொடக்கம் 6அடி வரை குறைக்க வேண்டும் என இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். ஏனெனில் குறித்த இரணைமடு தளமே தற்போது வன்னிக்கான கட்டளை மையமாகவும் இருந்து வருகின்றது.

வன்னி முழுமையாக கைப்பற்றப்பட்டதும் ஜனாதிபதி தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்ததும் இதே இரணைமடு தளத்திலேயேயாகும்.இங்கு தங்கியுள்ள இராணுவ அதிகாரிகளது உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பொறுப்புவாய்ந்த சிவில் அதிகாரிகள் பெருமளவு நீரைத்திறந்து விட்டனர்;. அந்த நீர் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பல இடங்களில் தேங்கி நின்றிருந்தமை மக்கள் அனைவரும் அறிந்தவொரு விடயமே. இதனை அதிகாரத்திலுள்ள சிலர் பூசி மெழுக முற்பட்டாலும் அதுவே மாற்றமில்லாத உண்மையாகும். மேலும் இதற்கு மக்களிடம் சாட்சிகளும் நிறையவே இருப்பதை அந்த அதிகாரிகள் புரிந்து கொண்டால் சரி.

இன்று 4ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை நிலம் எரிந்து கருகிப் போயுள்ளதற்கும் அதனை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக கண்ணீரோடு நிற்பதற்கும் குளத்துநீர் திறந்துவிடப்பட்டமையே காரணமாகும். நாங்கள் நாய்களைப் போல் எங்கு அடிவிழுந்தாலும் பின்காலை தூக்குவதில்லை. வீழ்கின்ற எச்சில் துண்டங்களுக்காக பொய்களை விற்பவர்களுமில்லை. துப்பாக்கி முனை ஆட்சியில் வேலிக்கு ஓணான் சாட்சியாக அதிகாரிகளை அழைத்து வந்து பொய்ச் சாட்சியமளிக்க அச்சுறுத்துபவர்களுமில்லை.

நடந்தது இதுதான் இதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் சாட்சிகளும் இருக்கின்றது என்பதை அவர்கள் அனைவரும்; புரிந்து கொண்டால் சரி.இந்த விவகாரத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கலாம் இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கென சுமார் 8ஆயிரம் ஏக்கர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இரணைமடுக் குளத்திலிருந்த 28அடி நீரை வைத்துக் கொண்டுதான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட 8ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமானளவு வயல்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி கூடுதலாக விதைத்தவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களும், பதவி நிலைகளில் உள்ளவர்களுமாவர். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியின் அரசியல் வாதிகளது துணையுடனேயே இவர்களால் இவ்வாறு பயிரிட முடிந்தது. இவ்வாறு மேலதிகமாக விதைக்கப்பட்டுள்ளமை பற்றி தாங்கள் அறியவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர்.

எனினும் விவசாய அமைப்புக்களது கடுமையான எதிர்ப்புக்கள் காரணமாக அதுபற்றி விசாரிப்பதற்கு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஆளுந்தரப்பு அரசியல் வாதிகளதும், ஆளுந்தரப்புக்கு எடுபிடிகளாக இயங்கும் கட்சி அரசியல் வாதிகளதும் அழுத்தங்களே காரணமாகும். இதனைப் பயன்படுத்தி அதிகாரிகளும் உரிய நடவடிக்களை மேற்கொள்ளாது அனுமதியின்றி நெல் விதைத்தவர்களிடம் எதையாவது பெற்றுக்கொண்டு அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்களா, கிளிநொச்சியில் முக்கியமான பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒன்றரை நீர்ப்பங்கை வைத்துக் கொண்டு அதிகளவு நிலத்தில் விவசாயம் செய்திருக்கின்றார்.

அதனை அறிந்து கொண்ட கமக்கார அமைப்பு மேலதிக விதைப்பிற்கான தண்ணீரை வழங்க மறுத்தபோது அந்த அதிகாரி ஒரு தொலைபேசி அழைப்புத்தான் கொடுத்தாராம், அடுத்த சில மணிநேரத்தில் போதுமானளவு தண்ணீர் மேலதிகமாக விதைக்கப்பட்ட நிலத்திற்கு வழங்கப்பட்டது. குறித்த அதிபர் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த நீரை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை. இது ஒன்று மட்டுமல்ல இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அனுமதியின்றி நெற்செய்கையில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு கொள்வதுடன், அனுமதியுடன் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு குளத்துநீர் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாறாக அங்கு தங்கியிருந்து கட்டைப்பஞ்சாயத்து அரசியல் செய்யும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்குப் பயந்து அல்லது அவர்களது கைப்பொம்மையாக இருந்தவாறு அனுமதியின்றி நெல்விதைத்தவர்களுக்கு நீர் வழங்குவதுடன், அனுமதிபெற்று நெற் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு நீர் வழங்காது அவர்களது வயல்கள் அழிவடையவும் காரணமாக இருந்துள்ளனர்.

கடந்தசில தினங்களுக்கு முன்னர் நீர்பாசனத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நிர்ணயிக்கப்பட்ட ஏக்கருக்கும் அதிகமானளவு நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஊடகமொன்றிற்குத் தெரிவித்த கருத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிரச்சினையொன்று வருகின்றபோது மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டு தான் தப்பிக்க முயன்றிருக்கின்றார். மக்கள் பொறுப்பற்று நடந்திருக்கின்றார்கள் என கூறியிருக்கின்ற அந்த அதிகாரி அதற்காக தமது தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கூற மறந்துவிட்டார் .

அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குளறுபடிகள் காரணமாக ஒட்டுமொத்தமாக 4ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த நெல் அழிந்து போயிருக் கின்றது. ஏற்கனவே 2010 ம் ஆண்டு சிறுபோக விதைப்பிற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை மக்கள் இன்னமும் மீளச் செலுத்தாத நிலையில் வங்கி அதிகாரிகள் பொலிஸாருடன் விவசாயிகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலையில் இவ்வாண்டும் சிறுபோகம் எரிந்து நாசமாகிப் போனால் அந்த விவசாயிகளின் நிலை என்ன? விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்யுமா? அல்லது பயிர் அழிவுக்கான நஸ்ட ஈட்டை வழங்குமா? எதுவுமே கிடையாது. எனவே வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு மக்களை குற்றம் சாட்டுவதை அதிகாரிகள் முதலில் கைவிடவேண்டும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி இருந்தபோதும், இவ்வாறான வறட்சியும், அளவுக்கதிகமான மழைவீழ்ச்சியும் இருந்தது. அப்போதும் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில்தானிருந்தது. ஆனால் அப்போது குளத்துநீரை மக்கள் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் முகாமை செய்தார்கள். இப்போதுபோல் வயல் வரம்புவரை அரசியல் வந்து நிற்கவில்லை. எனவே ஒட்டுமொத்த அதிகாரிகளினது பாராமுகமும், அரசியல் அதிகார மமதையும் சேர்ந்து ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்திருப்பதே உண்மையான கதை.

இவ்வாறாக ஒரு புறத்தில் இரணைமடுக் குளத்திற்கு மேற்பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இரகசியமான இராணுவமயமாக்கல் திட்டங்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக குளத்தின் பெரும்பகுதி நீர் திறந்துவிடப்படுவதனாலும், மறுபுறத்தில் அரசியல் வாதிகளதும், அதிகாரிகளதும் பொறுப்பற்ற செயற்பாடுகளாலும் அப்பாவி விவசாயிகளது நெற்செய்கை பாதிக்கப்படும்போது அதனை மூடி மறைப்பதற்காக பிரதேச வாதத்தை தூண்டி தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

எங்கள் மக்களுக்கே நீரில்லை அதில் யாழ்ப்பாண மக்களுக்கு வேறு நீரைக் கொண்டு செல்ல வேண்டுமா? என சிலர் பிழைப்பு வாதத்திற்கு பிரதேசவாதத்தை கிளப்பிவிடுகின்றார்கள்.மக்கள் ஒருவிடயத்தை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ளவேண்டும், நாங்கள் இன்று இவ்வளவு தூரம் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு, அழிந்து இழிந்துபோயிருப்பதற்கு காரணம் எங்கள் மத்தியிலுள்ள சாதி, பிரதேசவாதம் போன்ற காரணங்களே.

இந்தப் பேய்களை நாங்கள் துரத்தும் வரையில் எங்களை அழிப்பதற்கு வேறுயாரும் தேவையில்லை. ஒரு கட்டத்தில் நாங்களாகவே அழிந்துபோவோம்.நாம் பிரச்சினைகளை சரியாகவும், யதார்த்தபூர்வமாகவும் அணுகவேண்டும். பிரச்சினைகளுக்கான காரணம் வேறு எங்கோ இருக்கின்றது. அதை நாங்கள் சரியாக புரிந்து கொண்டாகவேண்டும், குறிப்பாக பருவமழையின் போது மேலதிக நீரைத் திறந்துவிடும்படி இராணுவத்தினர் கேட்டதுங்கூட இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையில் ஒரு பிரச்சினையினை தோற்றுவிப்பதற்காக கூட இருக்கலாம். உண்மையில் இரணைமடு தமிழருக்கானதே.
http://www.tamilthai.com/newsite/?p=13736

0 Comments: