Thursday, August 30, 2012

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்


essay
பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்!
செந்தூரி

"ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம்
பூச்சாண்டியும் கடவுளும்
கொக்குப் போகும் பருத்திப்பூக்கள், நகங்களில் விழுந்தால்
உடைகளாய் மலர்வதைப் போலொரு
சுவாரசியம், பெரியவர்களின் பொய்களில்
"சாமி கிட்ட இருக்கா உன் அம்மா'
என்பதை மட்டும் மறுக்கிறது குழந்தை
"அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா?
எனும் எதிர்க் கேள்வியுடன்!''

உன்னிப்பின் உச்சமாய் எம்மை நாமே திருத்தி எழுதிக்கொள்கின்றபோது, நடுத்தரம் கடந்துவிட்ட வயது, அனுபவம், ஆளுமை, அதிகாரம் போன்ற பெயரிலுள்ள யாவையுமே சுலபமாக எம்மை ஏய்த்துவிடும் வழக்கத்தை தொடர்வது கடிதினும் கடிது.

 ஆனால் சுதாகரிக்க மறக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துளிகளி லும், பின்னந்தலை தொடங்கி பிட்டமூடாக புறக்குதிக்கால் வரையிலும் "மூட்டாள்கள் நீங்கள் '' என்று கண் தேடா இடங்களில் முத்திரை குத்துவது சில பெரியோர்களின் பீடுடைத்த இயல்புகளில் ஒன்று!
ஈழத்தின்  இசைப் பாரம்பரியம் கொஞ் சம் "தனிமைகளுடன்' கூடிய தவத்துவ மானது.

 போரும், தொடர்பாடல் குறைவும் எம்மூரின் கலைஞர்களையும், கலைப் பண்புகளையும் தனித்துவமானதாகவும், விளம்பரக் குறைவுடன் கூடிய கேள்வி நிரம்பலுடையதாகவும் வைத்திருந்தது எனவும் ஊகிக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே "ஆலையில்லா ஊரின் சர்க்கரைக்குபிரதியிடும் இலுப்பைப் பூக்கள்'' அல்ல என்பதும் உறுதி.

சர்வதேச தரம், புதுமை விருப்பம், புத்தாக்க நுணுக்கம், கடும்பிரயோக பயிற்சி என்பன மூலம் மேடையாற் றுகைகளும் இணைக்கலைகளும் சற்றும் "சோடை' போகாமல் சுற்று வேலிகளுக் குள் வீற்றிருந்தன என்பதை எடுத்த எடுப்பில் எவருமே வெட்டிப் பேசிவிட முடியாது.  ஆனால் இன்றைய வடபுலத் தமிழர்களினால் உட்படும் ரசிகர்கள் என்கின்ற அவதானிகளை எம் பெரியோர் கள்  அந்தக் கவிதைக் குழந்தையின் எத் தனத்தில் ஏமாற்றத் துணிந்தது எங்ஙனம் நியாயமாகும்?

இவ்வருடத்துத் தைப்பொங்கல் திருநாளின் அதிகாலை ஆறுமணி தொடக்கமான அரைமணிநேரத்துக்கு, இந்தியத் தொலைக்காட்சியும், உலகத்தமி ழர்களின் "ரிமோட்' விரல்களில் அதிகம் அடிபடும் அலைவரிசையுமான "சன் ரீவி' யில் நாதஸ்வர இசை பொழியும் அற்புதமான வாய்ப்பை அநாயாசமாக பெற்ற ஈழத்து இளம் மேதை ஒருவனின் அறச்சீற்றத்தை "அட!அதுக்கென்ன'' வென்று பூசிப் பொய் மெழுகியிருக்கின்றது எம் கலையுலகம்!

 துள்ளிசைப் பண்ணும், உச்ச தாளக் கூட்டமும், சாந்தத்தை மீறிய ஆரவாரமும் கொண்ட கேரளத்துச் செண்டை மேளமும், போர்முனையில் பயன்படும் பேரிகைக் குழல்களும், "போ' புறமென்று தள்ளியதை அருளொழுகும் விழிகளால் வேடிக்கை பார்த்தான் நல்லை நாயகனும் தன் வீதிகளில்!

"நாம சகஜம் ' கொண்ட எமக்கேயான கடல்கடந்த பெருமைகளை தன் விரல்களிலும், குரல்வளையிலும் சிறுகச் சிறுகச் சேமித்து இசைஞானம் பெற்ற மண்ணின் "பாலகனை' ஒதுங்கிநில் ஓரமாய் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் எம் பண்பாட்டுப் பொரி வாய்களுக்கு?

"சிங்காரி மேளம்' என்கின்ற புறப் பெயரினால் சுட்டப்படுகின்ற அவ்வகை வாத்தியங்கள் தமிழிசைக் கேற்ற சாந்த இயல்புடையவை அல்ல என்பதும், திருமுறை போற்றுகின்ற சைவப் பாரம் பரியத்திற்கு நேரெதிர்ப் பண்புள்ள ஆரியப் பழமைக்குரியவை என்பதும் தெரியாதவர்களா எம் பெரியவர்கள்?

தென்னிந்தியாவில் தமிழக இந்துக் கோயில்களின் மூன்றாம் வெளி வீதிகளுக்கு கூட அனுமதிக்கப்படாதவர்களை ஆரத்தழுவி ஆராதித்ததில் என்னென்ன "உள்குத்துகள்' என்பது ஆறுபடையப் பனின் பன்னிரு விழிகளின் மூடிய இமைகளுக்கும் சமர்ப்பணம். சுற்றுப்பிர காரம் முழுவதும் சற்றுக் கவனித்தவர்கள் நிச்சயம் இனங்கண்டிருக்க முடியும், செண்டை மேள இசையினது ஆரோகணமும், கலைஞர்களினது அசைவும் உடல் மொழியும், கண்டியச் சிங்கள நடன மற்றும் இசைக்கலைஞர்களினது இசைவையும் அசைவையும் இறுக ஒட்டியிருந்தமையை!

சென்னை விமான நிலையம் வரை வந்த மனோ "ஈழத் தமிழச் சகோதரர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்ற படி திரும்பியிருக்கின்றார். ஹரிகரனின் இசைநிகழ்வுக்கான மெகா விளம்பரங்கள், தவிர்க்க முடியாத காரணமென திருத்தி எழுதி நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடைய எவரையும் இலங்கை அரசாணைக்குள்ளான நிகழ்வுகளுக்கு இலகுவில் அனுமதித்து விடாமல், கண்ணுக்குள் எண்ணையூற்றிய தமிழக உறவுகளையும் மீறி, "உன்னி' எப்படி ஓரமாய் பாய்ந்து திரும்பியது? "நல்லூரின் ஆன்மிகப் பெருவிழா' என்கிற ஒற்றைச்சொல், எதிர்ப்புக் குரல்களை அடக்கியிருக்கும், அனுமதித்திருக்கும் என்பதே எம் எண்ணம்! உண்மையும் அதுதான்!

ஆனால் நல்லூரானின் பெயர் சொல்லி நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் தனித்த ஏற்பாட்டாளர்கள் "வடமாகாண சபையினர்' என்பதும், நல்லூர் திருவிழாவை காரணம் காட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியக்கலை விழாவொன்றின் அங்கமே, இது எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே."DIVINE ECSTASY''என்ற  தலைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே காணப்பட்டது.
 
திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதனை விநியோகிப்பதை கருத்தில் கொண்டு அச்சிடப்பட்டதே தவிர சாதா ரண இசை ரசிகர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படவில்லை.

"நிச்சயம் வருவார்கள்'' என்ற துணிச்சலுடன் அலர் மேல் வள்ளியையும், உன்னி கிருஷ்ணனையும், ரி.எம். கிருஷ்ணாவையும் அழகுறு புகைப்பட அழைப்பிதழில் அச்சிட்டவர்கள் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடம் நல்லூரின்  "சங்கிலியன் தோப்பு '

 ""புதிதாக ஏதாவது உருவாக்கி வைத்திருப்பார்களோ'' எனும் பிரமை பிடரியில் அறைய ஆர்வத்தோடு காத்திருந்தால், ஏற்பாடுகளின் போதே தெரிந்தது ""கிட்டுப்பூங்கா'' என்று அழைப்பதில் அவர்களுக்கு தொடரும் "தீட்டு'. அவ்விடத்தை "சங்கிலியன் தோப்பு ' என்று சிலாகிக்க வைத்திருக்கின்றது. எவனாவது எதிர்க் கேள்வி கேட்டாலும் கூட, "பாருங்கள் தமிழ் மன்னனான சங்கிலியனை மறுதலிக்கின்றார்கள்'' என்று முகாரியில் முடித்து நாவடக்கம் செய்யும் முன்னேற்பாட்டுடன் எம் தமிழ்த் தேசிய மூக்கில் குத்தியிருந்தார்கள்.

துப்புரவாக்குதல் என்கின்ற பெயரில் "இடித்துத் துடைத்தழிக்கப்பட்ட' கொவ்வைச் செவ்வாயும் குழந்தை மனமும் கொண்ட போராளியொருவனின் நினைவிடத்தையும், பூங்காவையும்  நீளமறந்து விட்டு நிலத்தில் அமர்ந்திருந்தோமா இல்லையா? கொஞ்சம் உண்மை சொல்லுங்கள் அன்பர்களே!

அன்றைக்கு உங்களை விழிமூடி வாய்திறக்க வைத்த "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! '' என்கின்ற வரிகள் அட்சர சுத்தப் பொய் இல்லையா?
யாழ்ப்பாணத்தின் சுவாசமாய், பல்லின உயிர்ப்பரம்பலோடிருந்த பழைய பூங்காவினை, இயற்கைச் சிதைவினுக்குள்ளாக்கி மனித நடமாட்டம் மிகுந்த "கொங்கிறீட்' கல்லறையாக வர்ணம் பூசி வைத்த ஏமரா மன்னனும், எடுப்பார் பாவை அமைச்சர்களும் , "உள்நோக்கம் எதுவுமே இல்லாத நல்லெண்ணத்துடனேயே, முத்திரைச் சந்தியில் இருந்த பூங்காவைத் துப்புரவுபடுத்தி கச்சேரி வைத்து எம் கலையார்வத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார்கள்'' என்பதை எத்துணை சுலபமாய் நம்பிவிட்டோம் நாம்.

பம்பாய் வெங்காயம் பாய்ந்திறங்கி உள்ளூர்க் காய்களை ஊசிப்போக வைத்தால், எதிர்க் கேள்வி கேட்கச் சம்மேளனம் இருக்கின்றது. ரம்புட்டானோ, மங்குஸ் தானோ வீதிகளில் நிறைந்து தேன் கதலியையும் ஊர் முந்திரிகையையும் விளை நிலத்திலேயே வெட்டிப்புதைக்க வைத்தால், மனுப்போட சங்கம் இருக்கின்றது. ஆனால் "பாலக்காடுகளின் படையெடுப்பி னால் இம்முறை மண்மூடிப் போன ஈழநல்லூரின் பண்டைத் தனித்துவத்தைப் பாதுகாக்க கலைக் குடும்பத்தின் எந்தச் சங்கமும் கதவைத் திறக்காத மர்மத்துக்குப் பதிலென்ன?

அளவுப் பிரமாணக் குறைவினால் ஐந்து மாதக் குதிரைக் குட்டியில் சங்கிலியனை ஏற்றி உட்கார வைத்து "செத்தும் மிருகவதை செய்யும் மாண்புறு மன்னனாய்' எம்முன்னோனை பழி சுமக்க வைத்த ஆர்வக் கோளாறுகளே நயினையின் கோபுர வாயிலில் கற்பனைக்கு மீறிய தொந்தி சுமக்கும் காவற் பெண்களின் தோற்றத்தால் திராவிடரெல்லோரும் அரக்கர்கள் என்று பூடகம் பேசும் கற்சிலைகள் இன்னும் பல கோயில்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பது, கண்ணிருக்குமிடத்தில் இரு புண்களை நீவிர் சூடியதால் வந்த வினைப் பயனே!

"இறக்குமதிச் சரக்கு'' எதுவுமே இல்லாமல் ஈழத்து இளைஞர்களின் தனி முனைப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் எண்கோண நீர்த்தடாகத்தை நோக்கி இன்னமும் பத்திரிகை வெளிச்சங்கள் பாயாதிருப்பது துர்ப்பயன்!

"யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள பண்பாடு, கலாசாரம், மரபுரிமை போன்றவற்றுக்கான வரைவிலக்கணங்களில் உள்ள "தேசிய இனம் ஒன்றினது' என்கின்ற சொற்களை எடுத்தெறிந்து விடுங்கள் தயவுடன். அர்ச்சனைக்கு சமஸ்கிருதம், ஆடலுக்கு மராட்டியம், பாடலுக்கு கர் நாடகம், பின்னணிக்கு மலையாளம் , தொழிலுக்கு ஆங்கிலம், ஆட்சிக்கு சிங்களம், அவலத்தில் "ஐயோ' வென்று அலற மட்டும் தானே ""தமிழ்'' எமக்கு?
மிக்க நன்றிகள் கவிஞர் இளையநிலா  ""அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா? ''

என்று உற்றுக் கவனித்து கேள்வி  கேட்காத ஈழத்தமிழனின் ஊமைக் குளத்தில் நீங்கள் தூக்கிப் போட்ட ஒற்றைக் கல்லுக்கு! அறுதுயில் கலையாயோ ஆண்ட என்னினமே?
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3909235230299092

0 Comments: