Sunday, August 26, 2012

உயிரோடு மலர்வளையம் வைக்கும் மகிந்தவின் கொலைக் கலாச்சாரம்!

 - தாயகத்தில் இருந்து எழுவான்
1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களத்தின் ஆட்சியாளர்கள் தமிழர்களை பணயம் வைத்துத்தான் ஆட்சியமைத்தனர். காலப் போக்கில் தமிழர்களின் போராட்டங்களை பணயம் வைத்து ஆட்சியமைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியாளர்களும் சரி ஒரே ஒரு விடயத்தைத்தான் மையப்படுத்தினர்.
இலங்கைத்தீவிலுள்ள சிறுபான்மையினரை அடிமைப்படுத்த அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளில் இன்று மதம், நிலம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மகிந்த அரசாங்கம் ஆட்சி செய்கின்றனர். திசைதெரியாது கரையதிங்கிய சிங்கள இனம் இன்று, பூர்விக நிலங்களில் வாழ்கின்ற மக்களை விரட்டுவதில் சாதனை படைக்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் பாலஸ்தீன மக்களை விரட்டுகின்றார்கள், ஒரு பகுதியில் தான். ஆனால் இலங்கைத் தீவில்  செறிந்து வாழும் தமிழர்களை விரட்டுவதில் கரையதிங்கிய சிங்கள இனம் தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட சிங்கள ஆட்சியாளர்களின் ஆதிக்கப் போட்டியினால், சிறுபான்மை இனத்தின் தமிழ் இளைஞர்கள் தமது உரிமையைப் பெற முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், சிறுபான்மை இனத்தின் போராட்ட வரலாறு தெரியாத வல்லரசுகள் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.
விடுதலையை நோக்கிப் புறப்பட்ட அமைப்பைப் பார்த்தார்களே தவிர, அந்த அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கு தயாராக இருக்கவில்லை. அதன் விளைவுகளை இன்று உலக நாடுகள் சந்திக்கின்றன. தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இன்று பல்வேறு நெருக்குதல்களை கொடுப்பதை இன்று அந்ததந்த நாடுகள் உணர்கின்றன. போர்க்காலத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வாறு கொலைகள், கொள்ளைகள் இடம்பெற்றதோ அதைவிடவும், மிகவும் மோசமான சூழ்நிலைகள் உள்ளதைக் காணலாம்.
பட்டப்பகலில் வீதியால் செல்லும் பெண்களை மறித்து கழுத்தை நெருக்கி கொள்ளையடிக்கின்றனர், சில வேளைகளில் பெண்களை கொலையும் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் எப்பாகத்தில் ஒரு கொலை நடந்தாலும் அதற்கு எந்த விசாரணையும் இல்லை. உடனே விடுதலைப் புலிகளின் தலையில் பழியைப் போட்டுவிடுவார்கள். இதற்கு சிறீலங்காவின் ஊடக அமைச்சு ஒரு அறிக்கையும் வெளியிட்டுவிடுவார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டால், நாட்டில் இடம்பெற்ற கொலைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று கொலைகள், கொள்ளை, சிறுவர் துஸ்ப்பிரயோகம் என அனைத்தும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடுநிசியில் தனிய ஒரு பெண் வீதியால் சென்று தனது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய காலம் இருந்தது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இன்று யாழ், குடாநாட்டில் உள்ள மக்களை சூழ சிறீலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. பயிரை வேலி மேய்வது போன்று, பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட படையினராலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கென்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை.
முன்னர் பர்மா என அழைக்கப்பட்ட மியன்மாரில் படையாட்சி இடம்பெறுவதினால் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பாகவும் படையினர் இரகசியமாக பதுங்கியிருப்பார்கள். இரவு நேரத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் காணாமல் போவதுதான் வழக்கம். அவ்வாறான சூழ்நிலை யாழ் குடாநாட்டில் ஏற்பட்டிருப்பது என்பது தற்போதைய நிலையில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் காட்ட அரசாங்கம் முற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரினதும் மனங்களில் தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்திய வங்ரோத்து அரசியல் ஆட்சியாளர்களினால் இன்று புலிகளின் பேச்சை எடுக்க முடியாத நிலையில், இரவு வேளையில் மலர் வளையங்களை வைத்து தமது ஏகாதிபத்திய ஆட்சியை நடாத்த மகிந்த அரசு முற்படுகின்றது.
கன்னியமான தொழில்களில் ஈடுபடும் நீதியரசர்கள், மருத்துவர்கள், தொழிச்சங்க வாதிகள் என அனைவருக்கும் இன்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. சிலரின் வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, இன்னும் சிலருக்கு கழிவு எண்ணை மற்றும் கல் வீச்சித் தாக்குதல் நடாத்தப்படுகிறது.
மன்னாரில் நீதிவானுக்குப் பாதுகாப்புயில்லை, கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொழிச்சாங்க வாதிகளுக்கு பாதுகாப்புயில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
சிறீலங்காவின் ஆட்சி இன்று மாபியாக்களின் கைகளில் சிக்கிவிட்டது. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிருந்த பகுதிகளை மீட்ட பின்னர் சிறீலங்காவின் அதிபர் மகிந்த தெரிவிக்கையில், இந்த நாட்டை மாபியாக்களின் கையில் விடமாட்டேன் என்றார். அந்த சொல் இன்று தனது குடும்பத்தினருக்கே பொருத்தமாக அமைந்துள்ளது.
சிறீலங்காவின் எந்த நிர்வாகத்துறையை எடுத்தாலும் கையூட்டல் தலைவிரித்தாடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடக்கம் ஓய்வூதியம் வரை நடைபெறுகின்றது. தனது குடும்பத்தினரும், சொந்தக்காரர் மாத்திரம் தான் இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதில் மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இவற்றுக்கெல்லாம் எந்த அரசியல் வாதியினாலும் சரி, எந்த நாட்டினாலும் சரி எதனையும் செய்து விட முடியாது. இனியாவது இனவேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாட்டால் மாத்திரம் இந்த வெறிபிடித்த ஆட்சியாளர்களை துரத்த முடியுமே தவிர வேறு எந்த சக்தியினாலும் எதுவும் செய்ய முடியாது என்பதில் மகிந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்கால மாற்றங்களை அவதானித்தால் புரியும், அங்கு மக்களின் சக்தி மிகப் பெரும் சவாலாக அமைந்தது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு. ஐம்பது வருட ஆட்சி கொண்ட லிபியா அரசாங்கத்தையே மக்கள் புறட்டியெடுத்தார்கள் என்றால் மக்கள் சக்தியின் முன் எதுவும் பொடிப்பொடியாகிவிடும் என்பதற்கு அதுதான் உதாரணம்.
இன்று அதன் ஒரு பகுதியைக் காணக் கூடியதாக இருக்கிறது. சிறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிழப்பக்கு பின்னர் இன வேறுபாடின்றி சில முற்போக்குவாதிகளும் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதை அவதானிக்கலாம்.
சிறீலங்காவில் பாமர மக்கள் தொடக்கம் கல்விமான்கள் வரைக்கம் தமது எதிர்ப்பினை மகிந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றனர். இதனை ஒவ்வொரு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மற்றும் தனியார் துறைகளின் அதிகாரிகள் ஊடாக அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க வெறியினால் அனைத்துத் துறைகளும் ஒழுங்கான வினைத்திறன்கள் பயன்படுத்தப்படாமையினால் படுநட்டத்தில் இயங்குகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக தொழிச்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மகிந்த அரசாங்கத்தின் அஸ்த்தமன் எதிர்வரும் மாதம் 8ம் நாளுடன் தெரிந்து கொள்ளலாம். அதாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஏற்படப் போகும் தோல்வி மகிந்த ஆட்சியின் முதற்கட்ட நகர்வாக அமையும் என்பதை அனைவரும் உணரலாம்.
நன்றி : ஈழமுரசு
http://www.pathivu.com/news/21799/57//d,article_full.aspx

0 Comments: