Monday, August 27, 2012

தோற்றுப் போனவனின் தொடர் தூக்கம்


essay
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து பக்ஸில் பறந்து வந்தது அந்தக் கடிதம். தங்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள மாநாட்டின் பெயரில் ஈழம் என்கின்ற சொற்பதம் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. அதை நீக்கிய பின் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னெடுப்பதே உசிதமாகும்.


எனும் சாரப்பட ஆறேழு வரிகளுக்குக் குறைவான அம்மடல் "தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம்'' எனப்படும் டெசோவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. இந்தச் சலசலப்புகளின் பின் ஒரு வாரம் கழித்து இராணுவப் படைப்பிரிவொன்றின் வருடாந்த அணி வகுப்பு விழாவொன்றினையொட்டி உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி, ""ஈழத்துக்கான முன்னெடுப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.

 இது எம்மை ஓய்வெடுக்க விடும் செய்தியல்ல'' என்று உறைப்பாக உசுப்பேத்தினார். தன் வீரர்களை இந்தியாவோ, இலங்கையோ இரண்டு மத்திய அரசுகளையும் அவ்வப்போது அலறடிக்கும் இந்தச் சொல்லான "ஈழம்' உண்மையில் அர்த்தப்படுவது "இலங்கை'' என்பதையே!

முகமாலையின் தமிழ்ப் போராளிகளின் எல்லைக் காவலரண் ஒன்றின் முன்புறமாக அழகு படுத்தப்பட்டிருந்த, வெற்று ரவைக் கூடுகளினால் எழுதப்பட்டிருந்த "உ'' திடீரென ஒருநாள் காணமல் போனது எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த நிகழ்வுக்கு இன்றைக்கு அகவை பத்தினை அண்மிக்கின்றது. L.T.T என்று மட்டும் மீள் குறுவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக "தமிழ் ஈழம் என்று பகுத்துப் பாவிப்பதனை விடுத்து, ""தமிழீழம்'' என இணைத்து கையாள்வதனை உறுதிப்படுத்தவே அந்த "ஈ' எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

 இலங்கை என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்தாக SL என பரவலாகப் பாவிக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா என எழுதப்படும் ஆங்கில எழுத்துக்களிடையே "வலிந்த' இடைவெளி எதுவும் விடப்படுவதில்லை என்பதை நினைவூட்டுவது இவ்விடத்தில் சாலப் பொருந்தும்.

ஆக மேற்கூறிய சண்டப்பிரசண்டர்களின் மூலம் வந்தடையக்கூடிய தெளிவு ஈழம் எனும் சொல் இலங்கை முழுவதையும் அர்த்தப்படுத்தும் என்பதனாலேயே ""தமிழர்களின் இலங்கைப் பகுதிகள்'', தமிழர்களின் ஈழமாக "தமிழீழமாக' சொற்சுருக்கத்திற்கும், எண்ண விரிவுக்கும் உட்படுத்தப்பட்டன என்பதேயாகும். எண்பதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கப்பட்ட "டெசோ'' அமைப்பின் புத்துயிர்ப்பினை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி மீண்டும் கையிலெடுக்க ஏக காரணம் அவரது சுயநல அரசியல் சண்டித்தனம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லைத்தான்.

 ஆனால் தன் அரசியல் எதிரியான ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பற்றிப் பேச வைக்கும் அழுத்தத்தை மறைமுகமாக ஏற்படுத்திய சால்பு கருணாநிதியினுடையது.

"அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நிகழ்த்த திட்டமிட்டது'', ""மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் நேரில் கையளிக்கத் துணிந்தது'' போன்ற மிரட்டல் முடிவுகள், சிங்களப் பேரினவாதத்தின் இரத்த அழுத்தத்தை இன்னுமின்னும் எகிறவே செய்துள்ளன. இந்திய இலங்கை தமிழின உணர்வுகளில் மெல்லிதாக இழையோடிருக்கும் கருத்துவேற்றுமைகளில் அவ்வளவாக "ஊறித்திளைக்காத'' சர்வதேசங்களின் பார்வையில், இதுவும் கூட இன்னுமொரு இன விடுதலைக்கான எழுச்சித் தீர்மானமாகவே நோக்கப்படும்.

 உண்மையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மீது ""பனிக்கண்டனம் கொட்டும் மாயை'', ""சரிந்து போன மாநில வாரியாக செல்வாக்குக்கான புனரமைப்பு '', கட்சி மீது கண்டபடி பாய்ந்துள்ள ஊழல், நில அபகரிப்பு புகார்களுக்கான திசை திருப்பல் என பல்நோக்கங்களை உள்ளே பொதிந்திருப்பதே "டெசோ' சுக்கல் சுக்கலாக கிழிந்து போன தனது இறுதிக்கட்ட அரசியல் முகமூடியினை கோர்த்து மறு சீரமைக்கும் தனிப்பட்ட முயற்சிகளை மற்றவர்களின் உழைப்பினால் சாதிக்க எண்ணும் முதிர் சாணக்கியனின் எதுகை மோனை மிதக்கும் பேச்சுக்களுக்கு இலகுவில் மயங்கிவிடாத கூட்டம்  தமிழகத்தில் கருக்கொள்ளத் தொடங்கியிருப்பதும் தெட்டத்தெளிவு.

 தமிழீழக் கோரிக்கையைத் தீர்மானமாகக் கொண்டுவருவதில் இருந்து டெசோ அமைப்பினர் பின் வாங்கிய போது, " வடகிழக்குத் தமிழர் தாயகப் பூமிகளை தமிழரின் தேசிய வாழிடமாகவும், ஈழத்தமிழர்களை தனித்தேசிய இனமாகவும்' எண்பிக்கும் தீர்மானங்களையாவது நிறைவேற்றுங்கள் என உறுதியான எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுள் கொளத்தூர் மணி, சீமான், விடுதலை  இராஜேந்திரன், தி.இராம கிருஷ்ணன் ஆகிய உண்மை உணர்வாளர்கள் முதன்மையானவர்கள்.

 தமது எதிர்ப்புக் குரல்களை கருணாநிதி அசட்டை செய்வதைக் கண்டு தனியான "தமிழீழ மாநாடு' ஒன்றினை நடத்தும் நோக்கில் திரண்ட கூட்டத்தில் "ஈழத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகளாக எவர் "டெசோவுக்கு வந்தாலும் எதிர்ப்போம் ' என்று மிரட்டி வைத்தவர்களும் அவர்களே தான்.

இன்றைய தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வேகமாக நிராகரிக்கப்பட்டமைக்கு மேற்கூறிய தமிழக இன உணர்வாளர்களின் எதிர்ப்பினை சமாளிப்பதில் இருந்த சவால்கள் மட்டுமே காரணம் என்று நம்புவோமானால் எம்மைப் போல் முட்டாள்கள் வேறெவருமே இருக்கமுடியாது.

"தமிழீழம் கோரும் தீர்மானம்'' நிறைவேற்றப்படாது என்பது, அழைப்புக் கிடைக்கப் பெற்ற காலப்பகுதியில் தெரிந்திருக்குமேயானால் இந்த மாநாட்டிலும் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் எனும் பெயரிலான பொம்மைகளைப் புகைப்படங்களில் பார்க்கும் வாய்ப்பு யாவருக்கும் வாய்த்திருக்கலாம். டாக்டர் விக்கிரமபாகு கருணரட்ணவின் துணிச்சலின் மிகக் குறைந்த சதவீதமேனும் எம்மவர்களில் எவருக்கும் எழவில்லை என்பதற்கு டெசோவின் இந்த வருட மாநாடு முடிவடைந்த பின்னாலும் நீடிக்கும் அறிக்கை மௌனமே நேரிய சாட்சி!

"முந்தைய மாதம் கூட தமிழகத்துக்கு விஜயம் செய்தோமே? கருணாநிதியின் சுயநல அரசியல் மாநாடு என்பதால்தான் கலந்து கொள்ள மறுத்தோம் '' என்று நல்ல பெரிய இன செவ்வரத்தைப் பூ எடுத்து எம் காதுகளில் சொருகி விட எத்தனிப்பவர்களின் கால்களைக் கட்டிப் போட்ட இன்னொரு கயிறு "ராஜ பக்ஷே'க்களின் மீது அண்மை நாள்களாக வலுப்பெறத் தொடங்கியுள்ள குருட்டு விசுவாசமேயன்றி வேறில்லை.

தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பற்றினும் மீறிய பெரிய நம்பிக்கைகளை வெகு சுலபமாக போட்டுடைக்கும் அழுகுணித்தனம் எம்மவர்களால் இன்னுமின்னும் தொடர்கின்றது. நோய்வாய்ப்பட்டதனால் இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன்னிரு கண்களிலும் முற்றாக பார்வையிழந்த போதும், இன்றும் தமிழ் மாணவனாக தொடரும் தீவிர இன மொழிப் பற்றாளரான கோவை மாவட்டம் துடியலூர் வாசி தமிழறிஞர் "ஞானி' அவர்கள் செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இலங்கையின் இனவழிப்புத்துயர் இடம்பெற்ற சூட்டோடு இடம்பெறுவதைக் கண்டு மனம்வெதும்பி கருணாநிதிக்கு கைப்படக் கடிதம் எழுதிய பழுத்த தமிழுணர்வாளர். நடைப்பயிற்சி போகும் பொன்மாலைப் பொழுதொன்றில், "நாம் அவன் குடி! கூப்பிட்டால் போயே ஆக வேண்டும்.

ஆனால் ஈழத்திலிருந்து எவரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன். குறிப்பாக பேராசிரியர்.... அவர்கள் நிச்சயம் அழைப்பை நிராகரிப்பார்கள், உடல் நிலையை காரணம் காட்டியாவது!'' இன்றைக்கும் காதுகளில் மெல்ல மீளொலிக்கும் மேற்படி வார்த்தைகளை ""பாய்ஞ்சு விழுந்து'' பொய்யாக்கியது எம் அளவு கடந்த மொழிப்பற்று.

""அவர் வந்தார் குழுவோடு! வென்றார் திடலோடு! உண்டார் வெண்பொங்கலோடு'' என்று தனது டயரியின் அந்த ஜூன் மாதத்துப் பக்கங்களில் புளுகிவைத்திருக்கக் கூடும் கருணாநிதி.

முதல் மாநாட்டின் போது அழைப்பை ஏற்றுக்கொண்டமையிலும், நேற்றய மாநாட்டின் போது அழைப்பை நிராகரித்தமையிலும் எமது இயலுமைகளை மேவிய "இன எதிரியின் தலையீடுகளால் சூழப்பட்ட அசிங்க அரசியல்' மாற்றுக் காரணமாக மறைந்திருப்பது என்றாவதொரு நாள்  தமிழக உண்மை உணர்வாளர்களால் அறியப்படும் போது, எங்கே கொண்டு போய் வைக்க எம் முகங்களை? முடிந்துபோன தமிழனின் அவலங்களை காலகாலமாக தோண்டியெடுத்து தமது வாக்குப் பொக்கற்றுக்களை நிரப்பிவிட முடியும் என்ற மூடிய சிந்தனைக்குள் தேர்தல்களை சந்திக்கும் அசட்டுத் துணிச்சல், ""மக்கள் பிரதிநிதிகள்'' என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்பவர்களின் "களஉழைப்பை' களவாடித் தின்று விட்டது தான் நிஜம். நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதாகவும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களான எஞ்சியவர்கள் எல்லோரும், ""கடுமையான போட்டிப் பரீட்சைகள்"" மூலம் பதவிக்கு வந்தவர்கள் போலவும் வீம்புக்கு வாளாவிருப்பது, நிச்சயமாக இன்னுமொரு தெரிவில் "பழையன கழிந்து, புதியன புகவே' வழி செய்யும்.

"அடித்துக் கொலை செய்யப்பட்ட அரசியல் ஏதிலிகளின் சாவுக்கு எதிரான போராட்டங்கள்', "வாழ்வாதாரமான தமது சொந்த நிலங்களை மீட்க அந்தரிக்கும் வீதிப் போராட்டங்கள்', "சுயாதீனமான இயல்புவாழ்வுக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களை அறவழி எதிர்க்கும் நிகழ்வுகள்' உட்பட சாதாரணமாக பிரதேச மட்டத்தில் கூட மக்கள் கருத்தறியும் சிறு கூட்டங்களைக்கூட முன்னெடுக்கவோ, மக்களைத் திரட்டவோ, கருத்துக்களைக் கொண்டு சேர்க்கவோ, மாதமொரு முறையாவது கலந்து பேசவோ மறுக்கும் பிடிவாதக்காரர்களான மாகாண, மாநகர, பிரதேசசபை உறுப்பினர்களும் கூட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகுதிக்குள் வருபவர்கள் தானே?

"நேற்றய வெற்றி' எமதில்லை என்று தெரிந்த பின்னரும் உழைப்பில் குறைந்து, உறக்கம் நிறைந்தபடி தொடரும் எம் வரும் நாள்களின் வர்ணம் கருமை சூழ் இருள் தவிர வேறில்லை! ஆங்கில அரச ஊடகம் ஒன்றில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உரை முதன்மைச் செய்தியாக வார்க்கப்பட்டிருந்த வார்த்தைகள் எமக்கும் இறுகப் பொருந்துகின்றன. Eelam Proposals Still Alive We Are Not Suppose To Rest'
""ஈழத்துக்கான பரிந்துரைகள் இன்னும் உயிர்ப்புடன் ஓய்ந்தவர்களாக நாம் கருதப்படக்கூடாது'' ஆழ்ந்துறங்கும் தமிழன் ஒவ்வொரு வனையும் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவே படுகின்றன இவை.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7611934927454907

0 Comments: