Thursday, August 30, 2012

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்


essay
பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்!
செந்தூரி

"ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம்
பூச்சாண்டியும் கடவுளும்
கொக்குப் போகும் பருத்திப்பூக்கள், நகங்களில் விழுந்தால்
உடைகளாய் மலர்வதைப் போலொரு
சுவாரசியம், பெரியவர்களின் பொய்களில்
"சாமி கிட்ட இருக்கா உன் அம்மா'
என்பதை மட்டும் மறுக்கிறது குழந்தை
"அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா?
எனும் எதிர்க் கேள்வியுடன்!''

உன்னிப்பின் உச்சமாய் எம்மை நாமே திருத்தி எழுதிக்கொள்கின்றபோது, நடுத்தரம் கடந்துவிட்ட வயது, அனுபவம், ஆளுமை, அதிகாரம் போன்ற பெயரிலுள்ள யாவையுமே சுலபமாக எம்மை ஏய்த்துவிடும் வழக்கத்தை தொடர்வது கடிதினும் கடிது.

 ஆனால் சுதாகரிக்க மறக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துளிகளி லும், பின்னந்தலை தொடங்கி பிட்டமூடாக புறக்குதிக்கால் வரையிலும் "மூட்டாள்கள் நீங்கள் '' என்று கண் தேடா இடங்களில் முத்திரை குத்துவது சில பெரியோர்களின் பீடுடைத்த இயல்புகளில் ஒன்று!
ஈழத்தின்  இசைப் பாரம்பரியம் கொஞ் சம் "தனிமைகளுடன்' கூடிய தவத்துவ மானது.

 போரும், தொடர்பாடல் குறைவும் எம்மூரின் கலைஞர்களையும், கலைப் பண்புகளையும் தனித்துவமானதாகவும், விளம்பரக் குறைவுடன் கூடிய கேள்வி நிரம்பலுடையதாகவும் வைத்திருந்தது எனவும் ஊகிக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே "ஆலையில்லா ஊரின் சர்க்கரைக்குபிரதியிடும் இலுப்பைப் பூக்கள்'' அல்ல என்பதும் உறுதி.

சர்வதேச தரம், புதுமை விருப்பம், புத்தாக்க நுணுக்கம், கடும்பிரயோக பயிற்சி என்பன மூலம் மேடையாற் றுகைகளும் இணைக்கலைகளும் சற்றும் "சோடை' போகாமல் சுற்று வேலிகளுக் குள் வீற்றிருந்தன என்பதை எடுத்த எடுப்பில் எவருமே வெட்டிப் பேசிவிட முடியாது.  ஆனால் இன்றைய வடபுலத் தமிழர்களினால் உட்படும் ரசிகர்கள் என்கின்ற அவதானிகளை எம் பெரியோர் கள்  அந்தக் கவிதைக் குழந்தையின் எத் தனத்தில் ஏமாற்றத் துணிந்தது எங்ஙனம் நியாயமாகும்?

இவ்வருடத்துத் தைப்பொங்கல் திருநாளின் அதிகாலை ஆறுமணி தொடக்கமான அரைமணிநேரத்துக்கு, இந்தியத் தொலைக்காட்சியும், உலகத்தமி ழர்களின் "ரிமோட்' விரல்களில் அதிகம் அடிபடும் அலைவரிசையுமான "சன் ரீவி' யில் நாதஸ்வர இசை பொழியும் அற்புதமான வாய்ப்பை அநாயாசமாக பெற்ற ஈழத்து இளம் மேதை ஒருவனின் அறச்சீற்றத்தை "அட!அதுக்கென்ன'' வென்று பூசிப் பொய் மெழுகியிருக்கின்றது எம் கலையுலகம்!

 துள்ளிசைப் பண்ணும், உச்ச தாளக் கூட்டமும், சாந்தத்தை மீறிய ஆரவாரமும் கொண்ட கேரளத்துச் செண்டை மேளமும், போர்முனையில் பயன்படும் பேரிகைக் குழல்களும், "போ' புறமென்று தள்ளியதை அருளொழுகும் விழிகளால் வேடிக்கை பார்த்தான் நல்லை நாயகனும் தன் வீதிகளில்!

"நாம சகஜம் ' கொண்ட எமக்கேயான கடல்கடந்த பெருமைகளை தன் விரல்களிலும், குரல்வளையிலும் சிறுகச் சிறுகச் சேமித்து இசைஞானம் பெற்ற மண்ணின் "பாலகனை' ஒதுங்கிநில் ஓரமாய் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் எம் பண்பாட்டுப் பொரி வாய்களுக்கு?

"சிங்காரி மேளம்' என்கின்ற புறப் பெயரினால் சுட்டப்படுகின்ற அவ்வகை வாத்தியங்கள் தமிழிசைக் கேற்ற சாந்த இயல்புடையவை அல்ல என்பதும், திருமுறை போற்றுகின்ற சைவப் பாரம் பரியத்திற்கு நேரெதிர்ப் பண்புள்ள ஆரியப் பழமைக்குரியவை என்பதும் தெரியாதவர்களா எம் பெரியவர்கள்?

தென்னிந்தியாவில் தமிழக இந்துக் கோயில்களின் மூன்றாம் வெளி வீதிகளுக்கு கூட அனுமதிக்கப்படாதவர்களை ஆரத்தழுவி ஆராதித்ததில் என்னென்ன "உள்குத்துகள்' என்பது ஆறுபடையப் பனின் பன்னிரு விழிகளின் மூடிய இமைகளுக்கும் சமர்ப்பணம். சுற்றுப்பிர காரம் முழுவதும் சற்றுக் கவனித்தவர்கள் நிச்சயம் இனங்கண்டிருக்க முடியும், செண்டை மேள இசையினது ஆரோகணமும், கலைஞர்களினது அசைவும் உடல் மொழியும், கண்டியச் சிங்கள நடன மற்றும் இசைக்கலைஞர்களினது இசைவையும் அசைவையும் இறுக ஒட்டியிருந்தமையை!

சென்னை விமான நிலையம் வரை வந்த மனோ "ஈழத் தமிழச் சகோதரர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்ற படி திரும்பியிருக்கின்றார். ஹரிகரனின் இசைநிகழ்வுக்கான மெகா விளம்பரங்கள், தவிர்க்க முடியாத காரணமென திருத்தி எழுதி நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடைய எவரையும் இலங்கை அரசாணைக்குள்ளான நிகழ்வுகளுக்கு இலகுவில் அனுமதித்து விடாமல், கண்ணுக்குள் எண்ணையூற்றிய தமிழக உறவுகளையும் மீறி, "உன்னி' எப்படி ஓரமாய் பாய்ந்து திரும்பியது? "நல்லூரின் ஆன்மிகப் பெருவிழா' என்கிற ஒற்றைச்சொல், எதிர்ப்புக் குரல்களை அடக்கியிருக்கும், அனுமதித்திருக்கும் என்பதே எம் எண்ணம்! உண்மையும் அதுதான்!

ஆனால் நல்லூரானின் பெயர் சொல்லி நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் தனித்த ஏற்பாட்டாளர்கள் "வடமாகாண சபையினர்' என்பதும், நல்லூர் திருவிழாவை காரணம் காட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியக்கலை விழாவொன்றின் அங்கமே, இது எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே."DIVINE ECSTASY''என்ற  தலைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே காணப்பட்டது.
 
திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதனை விநியோகிப்பதை கருத்தில் கொண்டு அச்சிடப்பட்டதே தவிர சாதா ரண இசை ரசிகர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படவில்லை.

"நிச்சயம் வருவார்கள்'' என்ற துணிச்சலுடன் அலர் மேல் வள்ளியையும், உன்னி கிருஷ்ணனையும், ரி.எம். கிருஷ்ணாவையும் அழகுறு புகைப்பட அழைப்பிதழில் அச்சிட்டவர்கள் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடம் நல்லூரின்  "சங்கிலியன் தோப்பு '

 ""புதிதாக ஏதாவது உருவாக்கி வைத்திருப்பார்களோ'' எனும் பிரமை பிடரியில் அறைய ஆர்வத்தோடு காத்திருந்தால், ஏற்பாடுகளின் போதே தெரிந்தது ""கிட்டுப்பூங்கா'' என்று அழைப்பதில் அவர்களுக்கு தொடரும் "தீட்டு'. அவ்விடத்தை "சங்கிலியன் தோப்பு ' என்று சிலாகிக்க வைத்திருக்கின்றது. எவனாவது எதிர்க் கேள்வி கேட்டாலும் கூட, "பாருங்கள் தமிழ் மன்னனான சங்கிலியனை மறுதலிக்கின்றார்கள்'' என்று முகாரியில் முடித்து நாவடக்கம் செய்யும் முன்னேற்பாட்டுடன் எம் தமிழ்த் தேசிய மூக்கில் குத்தியிருந்தார்கள்.

துப்புரவாக்குதல் என்கின்ற பெயரில் "இடித்துத் துடைத்தழிக்கப்பட்ட' கொவ்வைச் செவ்வாயும் குழந்தை மனமும் கொண்ட போராளியொருவனின் நினைவிடத்தையும், பூங்காவையும்  நீளமறந்து விட்டு நிலத்தில் அமர்ந்திருந்தோமா இல்லையா? கொஞ்சம் உண்மை சொல்லுங்கள் அன்பர்களே!

அன்றைக்கு உங்களை விழிமூடி வாய்திறக்க வைத்த "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! '' என்கின்ற வரிகள் அட்சர சுத்தப் பொய் இல்லையா?
யாழ்ப்பாணத்தின் சுவாசமாய், பல்லின உயிர்ப்பரம்பலோடிருந்த பழைய பூங்காவினை, இயற்கைச் சிதைவினுக்குள்ளாக்கி மனித நடமாட்டம் மிகுந்த "கொங்கிறீட்' கல்லறையாக வர்ணம் பூசி வைத்த ஏமரா மன்னனும், எடுப்பார் பாவை அமைச்சர்களும் , "உள்நோக்கம் எதுவுமே இல்லாத நல்லெண்ணத்துடனேயே, முத்திரைச் சந்தியில் இருந்த பூங்காவைத் துப்புரவுபடுத்தி கச்சேரி வைத்து எம் கலையார்வத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார்கள்'' என்பதை எத்துணை சுலபமாய் நம்பிவிட்டோம் நாம்.

பம்பாய் வெங்காயம் பாய்ந்திறங்கி உள்ளூர்க் காய்களை ஊசிப்போக வைத்தால், எதிர்க் கேள்வி கேட்கச் சம்மேளனம் இருக்கின்றது. ரம்புட்டானோ, மங்குஸ் தானோ வீதிகளில் நிறைந்து தேன் கதலியையும் ஊர் முந்திரிகையையும் விளை நிலத்திலேயே வெட்டிப்புதைக்க வைத்தால், மனுப்போட சங்கம் இருக்கின்றது. ஆனால் "பாலக்காடுகளின் படையெடுப்பி னால் இம்முறை மண்மூடிப் போன ஈழநல்லூரின் பண்டைத் தனித்துவத்தைப் பாதுகாக்க கலைக் குடும்பத்தின் எந்தச் சங்கமும் கதவைத் திறக்காத மர்மத்துக்குப் பதிலென்ன?

அளவுப் பிரமாணக் குறைவினால் ஐந்து மாதக் குதிரைக் குட்டியில் சங்கிலியனை ஏற்றி உட்கார வைத்து "செத்தும் மிருகவதை செய்யும் மாண்புறு மன்னனாய்' எம்முன்னோனை பழி சுமக்க வைத்த ஆர்வக் கோளாறுகளே நயினையின் கோபுர வாயிலில் கற்பனைக்கு மீறிய தொந்தி சுமக்கும் காவற் பெண்களின் தோற்றத்தால் திராவிடரெல்லோரும் அரக்கர்கள் என்று பூடகம் பேசும் கற்சிலைகள் இன்னும் பல கோயில்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பது, கண்ணிருக்குமிடத்தில் இரு புண்களை நீவிர் சூடியதால் வந்த வினைப் பயனே!

"இறக்குமதிச் சரக்கு'' எதுவுமே இல்லாமல் ஈழத்து இளைஞர்களின் தனி முனைப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் எண்கோண நீர்த்தடாகத்தை நோக்கி இன்னமும் பத்திரிகை வெளிச்சங்கள் பாயாதிருப்பது துர்ப்பயன்!

"யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள பண்பாடு, கலாசாரம், மரபுரிமை போன்றவற்றுக்கான வரைவிலக்கணங்களில் உள்ள "தேசிய இனம் ஒன்றினது' என்கின்ற சொற்களை எடுத்தெறிந்து விடுங்கள் தயவுடன். அர்ச்சனைக்கு சமஸ்கிருதம், ஆடலுக்கு மராட்டியம், பாடலுக்கு கர் நாடகம், பின்னணிக்கு மலையாளம் , தொழிலுக்கு ஆங்கிலம், ஆட்சிக்கு சிங்களம், அவலத்தில் "ஐயோ' வென்று அலற மட்டும் தானே ""தமிழ்'' எமக்கு?
மிக்க நன்றிகள் கவிஞர் இளையநிலா  ""அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா? ''

என்று உற்றுக் கவனித்து கேள்வி  கேட்காத ஈழத்தமிழனின் ஊமைக் குளத்தில் நீங்கள் தூக்கிப் போட்ட ஒற்றைக் கல்லுக்கு! அறுதுயில் கலையாயோ ஆண்ட என்னினமே?
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3909235230299092

Monday, August 27, 2012

தோற்றுப் போனவனின் தொடர் தூக்கம்


essay
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து பக்ஸில் பறந்து வந்தது அந்தக் கடிதம். தங்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள மாநாட்டின் பெயரில் ஈழம் என்கின்ற சொற்பதம் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. அதை நீக்கிய பின் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னெடுப்பதே உசிதமாகும்.


எனும் சாரப்பட ஆறேழு வரிகளுக்குக் குறைவான அம்மடல் "தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம்'' எனப்படும் டெசோவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. இந்தச் சலசலப்புகளின் பின் ஒரு வாரம் கழித்து இராணுவப் படைப்பிரிவொன்றின் வருடாந்த அணி வகுப்பு விழாவொன்றினையொட்டி உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி, ""ஈழத்துக்கான முன்னெடுப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.

 இது எம்மை ஓய்வெடுக்க விடும் செய்தியல்ல'' என்று உறைப்பாக உசுப்பேத்தினார். தன் வீரர்களை இந்தியாவோ, இலங்கையோ இரண்டு மத்திய அரசுகளையும் அவ்வப்போது அலறடிக்கும் இந்தச் சொல்லான "ஈழம்' உண்மையில் அர்த்தப்படுவது "இலங்கை'' என்பதையே!

முகமாலையின் தமிழ்ப் போராளிகளின் எல்லைக் காவலரண் ஒன்றின் முன்புறமாக அழகு படுத்தப்பட்டிருந்த, வெற்று ரவைக் கூடுகளினால் எழுதப்பட்டிருந்த "உ'' திடீரென ஒருநாள் காணமல் போனது எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த நிகழ்வுக்கு இன்றைக்கு அகவை பத்தினை அண்மிக்கின்றது. L.T.T என்று மட்டும் மீள் குறுவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக "தமிழ் ஈழம் என்று பகுத்துப் பாவிப்பதனை விடுத்து, ""தமிழீழம்'' என இணைத்து கையாள்வதனை உறுதிப்படுத்தவே அந்த "ஈ' எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

 இலங்கை என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்தாக SL என பரவலாகப் பாவிக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா என எழுதப்படும் ஆங்கில எழுத்துக்களிடையே "வலிந்த' இடைவெளி எதுவும் விடப்படுவதில்லை என்பதை நினைவூட்டுவது இவ்விடத்தில் சாலப் பொருந்தும்.

ஆக மேற்கூறிய சண்டப்பிரசண்டர்களின் மூலம் வந்தடையக்கூடிய தெளிவு ஈழம் எனும் சொல் இலங்கை முழுவதையும் அர்த்தப்படுத்தும் என்பதனாலேயே ""தமிழர்களின் இலங்கைப் பகுதிகள்'', தமிழர்களின் ஈழமாக "தமிழீழமாக' சொற்சுருக்கத்திற்கும், எண்ண விரிவுக்கும் உட்படுத்தப்பட்டன என்பதேயாகும். எண்பதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கப்பட்ட "டெசோ'' அமைப்பின் புத்துயிர்ப்பினை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி மீண்டும் கையிலெடுக்க ஏக காரணம் அவரது சுயநல அரசியல் சண்டித்தனம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லைத்தான்.

 ஆனால் தன் அரசியல் எதிரியான ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பற்றிப் பேச வைக்கும் அழுத்தத்தை மறைமுகமாக ஏற்படுத்திய சால்பு கருணாநிதியினுடையது.

"அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நிகழ்த்த திட்டமிட்டது'', ""மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் நேரில் கையளிக்கத் துணிந்தது'' போன்ற மிரட்டல் முடிவுகள், சிங்களப் பேரினவாதத்தின் இரத்த அழுத்தத்தை இன்னுமின்னும் எகிறவே செய்துள்ளன. இந்திய இலங்கை தமிழின உணர்வுகளில் மெல்லிதாக இழையோடிருக்கும் கருத்துவேற்றுமைகளில் அவ்வளவாக "ஊறித்திளைக்காத'' சர்வதேசங்களின் பார்வையில், இதுவும் கூட இன்னுமொரு இன விடுதலைக்கான எழுச்சித் தீர்மானமாகவே நோக்கப்படும்.

 உண்மையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மீது ""பனிக்கண்டனம் கொட்டும் மாயை'', ""சரிந்து போன மாநில வாரியாக செல்வாக்குக்கான புனரமைப்பு '', கட்சி மீது கண்டபடி பாய்ந்துள்ள ஊழல், நில அபகரிப்பு புகார்களுக்கான திசை திருப்பல் என பல்நோக்கங்களை உள்ளே பொதிந்திருப்பதே "டெசோ' சுக்கல் சுக்கலாக கிழிந்து போன தனது இறுதிக்கட்ட அரசியல் முகமூடியினை கோர்த்து மறு சீரமைக்கும் தனிப்பட்ட முயற்சிகளை மற்றவர்களின் உழைப்பினால் சாதிக்க எண்ணும் முதிர் சாணக்கியனின் எதுகை மோனை மிதக்கும் பேச்சுக்களுக்கு இலகுவில் மயங்கிவிடாத கூட்டம்  தமிழகத்தில் கருக்கொள்ளத் தொடங்கியிருப்பதும் தெட்டத்தெளிவு.

 தமிழீழக் கோரிக்கையைத் தீர்மானமாகக் கொண்டுவருவதில் இருந்து டெசோ அமைப்பினர் பின் வாங்கிய போது, " வடகிழக்குத் தமிழர் தாயகப் பூமிகளை தமிழரின் தேசிய வாழிடமாகவும், ஈழத்தமிழர்களை தனித்தேசிய இனமாகவும்' எண்பிக்கும் தீர்மானங்களையாவது நிறைவேற்றுங்கள் என உறுதியான எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுள் கொளத்தூர் மணி, சீமான், விடுதலை  இராஜேந்திரன், தி.இராம கிருஷ்ணன் ஆகிய உண்மை உணர்வாளர்கள் முதன்மையானவர்கள்.

 தமது எதிர்ப்புக் குரல்களை கருணாநிதி அசட்டை செய்வதைக் கண்டு தனியான "தமிழீழ மாநாடு' ஒன்றினை நடத்தும் நோக்கில் திரண்ட கூட்டத்தில் "ஈழத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகளாக எவர் "டெசோவுக்கு வந்தாலும் எதிர்ப்போம் ' என்று மிரட்டி வைத்தவர்களும் அவர்களே தான்.

இன்றைய தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வேகமாக நிராகரிக்கப்பட்டமைக்கு மேற்கூறிய தமிழக இன உணர்வாளர்களின் எதிர்ப்பினை சமாளிப்பதில் இருந்த சவால்கள் மட்டுமே காரணம் என்று நம்புவோமானால் எம்மைப் போல் முட்டாள்கள் வேறெவருமே இருக்கமுடியாது.

"தமிழீழம் கோரும் தீர்மானம்'' நிறைவேற்றப்படாது என்பது, அழைப்புக் கிடைக்கப் பெற்ற காலப்பகுதியில் தெரிந்திருக்குமேயானால் இந்த மாநாட்டிலும் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் எனும் பெயரிலான பொம்மைகளைப் புகைப்படங்களில் பார்க்கும் வாய்ப்பு யாவருக்கும் வாய்த்திருக்கலாம். டாக்டர் விக்கிரமபாகு கருணரட்ணவின் துணிச்சலின் மிகக் குறைந்த சதவீதமேனும் எம்மவர்களில் எவருக்கும் எழவில்லை என்பதற்கு டெசோவின் இந்த வருட மாநாடு முடிவடைந்த பின்னாலும் நீடிக்கும் அறிக்கை மௌனமே நேரிய சாட்சி!

"முந்தைய மாதம் கூட தமிழகத்துக்கு விஜயம் செய்தோமே? கருணாநிதியின் சுயநல அரசியல் மாநாடு என்பதால்தான் கலந்து கொள்ள மறுத்தோம் '' என்று நல்ல பெரிய இன செவ்வரத்தைப் பூ எடுத்து எம் காதுகளில் சொருகி விட எத்தனிப்பவர்களின் கால்களைக் கட்டிப் போட்ட இன்னொரு கயிறு "ராஜ பக்ஷே'க்களின் மீது அண்மை நாள்களாக வலுப்பெறத் தொடங்கியுள்ள குருட்டு விசுவாசமேயன்றி வேறில்லை.

தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பற்றினும் மீறிய பெரிய நம்பிக்கைகளை வெகு சுலபமாக போட்டுடைக்கும் அழுகுணித்தனம் எம்மவர்களால் இன்னுமின்னும் தொடர்கின்றது. நோய்வாய்ப்பட்டதனால் இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன்னிரு கண்களிலும் முற்றாக பார்வையிழந்த போதும், இன்றும் தமிழ் மாணவனாக தொடரும் தீவிர இன மொழிப் பற்றாளரான கோவை மாவட்டம் துடியலூர் வாசி தமிழறிஞர் "ஞானி' அவர்கள் செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இலங்கையின் இனவழிப்புத்துயர் இடம்பெற்ற சூட்டோடு இடம்பெறுவதைக் கண்டு மனம்வெதும்பி கருணாநிதிக்கு கைப்படக் கடிதம் எழுதிய பழுத்த தமிழுணர்வாளர். நடைப்பயிற்சி போகும் பொன்மாலைப் பொழுதொன்றில், "நாம் அவன் குடி! கூப்பிட்டால் போயே ஆக வேண்டும்.

ஆனால் ஈழத்திலிருந்து எவரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன். குறிப்பாக பேராசிரியர்.... அவர்கள் நிச்சயம் அழைப்பை நிராகரிப்பார்கள், உடல் நிலையை காரணம் காட்டியாவது!'' இன்றைக்கும் காதுகளில் மெல்ல மீளொலிக்கும் மேற்படி வார்த்தைகளை ""பாய்ஞ்சு விழுந்து'' பொய்யாக்கியது எம் அளவு கடந்த மொழிப்பற்று.

""அவர் வந்தார் குழுவோடு! வென்றார் திடலோடு! உண்டார் வெண்பொங்கலோடு'' என்று தனது டயரியின் அந்த ஜூன் மாதத்துப் பக்கங்களில் புளுகிவைத்திருக்கக் கூடும் கருணாநிதி.

முதல் மாநாட்டின் போது அழைப்பை ஏற்றுக்கொண்டமையிலும், நேற்றய மாநாட்டின் போது அழைப்பை நிராகரித்தமையிலும் எமது இயலுமைகளை மேவிய "இன எதிரியின் தலையீடுகளால் சூழப்பட்ட அசிங்க அரசியல்' மாற்றுக் காரணமாக மறைந்திருப்பது என்றாவதொரு நாள்  தமிழக உண்மை உணர்வாளர்களால் அறியப்படும் போது, எங்கே கொண்டு போய் வைக்க எம் முகங்களை? முடிந்துபோன தமிழனின் அவலங்களை காலகாலமாக தோண்டியெடுத்து தமது வாக்குப் பொக்கற்றுக்களை நிரப்பிவிட முடியும் என்ற மூடிய சிந்தனைக்குள் தேர்தல்களை சந்திக்கும் அசட்டுத் துணிச்சல், ""மக்கள் பிரதிநிதிகள்'' என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்பவர்களின் "களஉழைப்பை' களவாடித் தின்று விட்டது தான் நிஜம். நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதாகவும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களான எஞ்சியவர்கள் எல்லோரும், ""கடுமையான போட்டிப் பரீட்சைகள்"" மூலம் பதவிக்கு வந்தவர்கள் போலவும் வீம்புக்கு வாளாவிருப்பது, நிச்சயமாக இன்னுமொரு தெரிவில் "பழையன கழிந்து, புதியன புகவே' வழி செய்யும்.

"அடித்துக் கொலை செய்யப்பட்ட அரசியல் ஏதிலிகளின் சாவுக்கு எதிரான போராட்டங்கள்', "வாழ்வாதாரமான தமது சொந்த நிலங்களை மீட்க அந்தரிக்கும் வீதிப் போராட்டங்கள்', "சுயாதீனமான இயல்புவாழ்வுக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களை அறவழி எதிர்க்கும் நிகழ்வுகள்' உட்பட சாதாரணமாக பிரதேச மட்டத்தில் கூட மக்கள் கருத்தறியும் சிறு கூட்டங்களைக்கூட முன்னெடுக்கவோ, மக்களைத் திரட்டவோ, கருத்துக்களைக் கொண்டு சேர்க்கவோ, மாதமொரு முறையாவது கலந்து பேசவோ மறுக்கும் பிடிவாதக்காரர்களான மாகாண, மாநகர, பிரதேசசபை உறுப்பினர்களும் கூட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகுதிக்குள் வருபவர்கள் தானே?

"நேற்றய வெற்றி' எமதில்லை என்று தெரிந்த பின்னரும் உழைப்பில் குறைந்து, உறக்கம் நிறைந்தபடி தொடரும் எம் வரும் நாள்களின் வர்ணம் கருமை சூழ் இருள் தவிர வேறில்லை! ஆங்கில அரச ஊடகம் ஒன்றில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உரை முதன்மைச் செய்தியாக வார்க்கப்பட்டிருந்த வார்த்தைகள் எமக்கும் இறுகப் பொருந்துகின்றன. Eelam Proposals Still Alive We Are Not Suppose To Rest'
""ஈழத்துக்கான பரிந்துரைகள் இன்னும் உயிர்ப்புடன் ஓய்ந்தவர்களாக நாம் கருதப்படக்கூடாது'' ஆழ்ந்துறங்கும் தமிழன் ஒவ்வொரு வனையும் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவே படுகின்றன இவை.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7611934927454907

Sunday, August 26, 2012

உயிரோடு மலர்வளையம் வைக்கும் மகிந்தவின் கொலைக் கலாச்சாரம்!

 - தாயகத்தில் இருந்து எழுவான்
1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களத்தின் ஆட்சியாளர்கள் தமிழர்களை பணயம் வைத்துத்தான் ஆட்சியமைத்தனர். காலப் போக்கில் தமிழர்களின் போராட்டங்களை பணயம் வைத்து ஆட்சியமைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியாளர்களும் சரி ஒரே ஒரு விடயத்தைத்தான் மையப்படுத்தினர்.
இலங்கைத்தீவிலுள்ள சிறுபான்மையினரை அடிமைப்படுத்த அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளில் இன்று மதம், நிலம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மகிந்த அரசாங்கம் ஆட்சி செய்கின்றனர். திசைதெரியாது கரையதிங்கிய சிங்கள இனம் இன்று, பூர்விக நிலங்களில் வாழ்கின்ற மக்களை விரட்டுவதில் சாதனை படைக்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் பாலஸ்தீன மக்களை விரட்டுகின்றார்கள், ஒரு பகுதியில் தான். ஆனால் இலங்கைத் தீவில்  செறிந்து வாழும் தமிழர்களை விரட்டுவதில் கரையதிங்கிய சிங்கள இனம் தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட சிங்கள ஆட்சியாளர்களின் ஆதிக்கப் போட்டியினால், சிறுபான்மை இனத்தின் தமிழ் இளைஞர்கள் தமது உரிமையைப் பெற முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், சிறுபான்மை இனத்தின் போராட்ட வரலாறு தெரியாத வல்லரசுகள் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.
விடுதலையை நோக்கிப் புறப்பட்ட அமைப்பைப் பார்த்தார்களே தவிர, அந்த அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கு தயாராக இருக்கவில்லை. அதன் விளைவுகளை இன்று உலக நாடுகள் சந்திக்கின்றன. தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இன்று பல்வேறு நெருக்குதல்களை கொடுப்பதை இன்று அந்ததந்த நாடுகள் உணர்கின்றன. போர்க்காலத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வாறு கொலைகள், கொள்ளைகள் இடம்பெற்றதோ அதைவிடவும், மிகவும் மோசமான சூழ்நிலைகள் உள்ளதைக் காணலாம்.
பட்டப்பகலில் வீதியால் செல்லும் பெண்களை மறித்து கழுத்தை நெருக்கி கொள்ளையடிக்கின்றனர், சில வேளைகளில் பெண்களை கொலையும் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் எப்பாகத்தில் ஒரு கொலை நடந்தாலும் அதற்கு எந்த விசாரணையும் இல்லை. உடனே விடுதலைப் புலிகளின் தலையில் பழியைப் போட்டுவிடுவார்கள். இதற்கு சிறீலங்காவின் ஊடக அமைச்சு ஒரு அறிக்கையும் வெளியிட்டுவிடுவார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டால், நாட்டில் இடம்பெற்ற கொலைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று கொலைகள், கொள்ளை, சிறுவர் துஸ்ப்பிரயோகம் என அனைத்தும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடுநிசியில் தனிய ஒரு பெண் வீதியால் சென்று தனது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய காலம் இருந்தது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இன்று யாழ், குடாநாட்டில் உள்ள மக்களை சூழ சிறீலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. பயிரை வேலி மேய்வது போன்று, பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட படையினராலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கென்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை.
முன்னர் பர்மா என அழைக்கப்பட்ட மியன்மாரில் படையாட்சி இடம்பெறுவதினால் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பாகவும் படையினர் இரகசியமாக பதுங்கியிருப்பார்கள். இரவு நேரத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் காணாமல் போவதுதான் வழக்கம். அவ்வாறான சூழ்நிலை யாழ் குடாநாட்டில் ஏற்பட்டிருப்பது என்பது தற்போதைய நிலையில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் காட்ட அரசாங்கம் முற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரினதும் மனங்களில் தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்திய வங்ரோத்து அரசியல் ஆட்சியாளர்களினால் இன்று புலிகளின் பேச்சை எடுக்க முடியாத நிலையில், இரவு வேளையில் மலர் வளையங்களை வைத்து தமது ஏகாதிபத்திய ஆட்சியை நடாத்த மகிந்த அரசு முற்படுகின்றது.
கன்னியமான தொழில்களில் ஈடுபடும் நீதியரசர்கள், மருத்துவர்கள், தொழிச்சங்க வாதிகள் என அனைவருக்கும் இன்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. சிலரின் வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, இன்னும் சிலருக்கு கழிவு எண்ணை மற்றும் கல் வீச்சித் தாக்குதல் நடாத்தப்படுகிறது.
மன்னாரில் நீதிவானுக்குப் பாதுகாப்புயில்லை, கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொழிச்சாங்க வாதிகளுக்கு பாதுகாப்புயில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
சிறீலங்காவின் ஆட்சி இன்று மாபியாக்களின் கைகளில் சிக்கிவிட்டது. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிருந்த பகுதிகளை மீட்ட பின்னர் சிறீலங்காவின் அதிபர் மகிந்த தெரிவிக்கையில், இந்த நாட்டை மாபியாக்களின் கையில் விடமாட்டேன் என்றார். அந்த சொல் இன்று தனது குடும்பத்தினருக்கே பொருத்தமாக அமைந்துள்ளது.
சிறீலங்காவின் எந்த நிர்வாகத்துறையை எடுத்தாலும் கையூட்டல் தலைவிரித்தாடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடக்கம் ஓய்வூதியம் வரை நடைபெறுகின்றது. தனது குடும்பத்தினரும், சொந்தக்காரர் மாத்திரம் தான் இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதில் மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இவற்றுக்கெல்லாம் எந்த அரசியல் வாதியினாலும் சரி, எந்த நாட்டினாலும் சரி எதனையும் செய்து விட முடியாது. இனியாவது இனவேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாட்டால் மாத்திரம் இந்த வெறிபிடித்த ஆட்சியாளர்களை துரத்த முடியுமே தவிர வேறு எந்த சக்தியினாலும் எதுவும் செய்ய முடியாது என்பதில் மகிந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்கால மாற்றங்களை அவதானித்தால் புரியும், அங்கு மக்களின் சக்தி மிகப் பெரும் சவாலாக அமைந்தது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு. ஐம்பது வருட ஆட்சி கொண்ட லிபியா அரசாங்கத்தையே மக்கள் புறட்டியெடுத்தார்கள் என்றால் மக்கள் சக்தியின் முன் எதுவும் பொடிப்பொடியாகிவிடும் என்பதற்கு அதுதான் உதாரணம்.
இன்று அதன் ஒரு பகுதியைக் காணக் கூடியதாக இருக்கிறது. சிறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிழப்பக்கு பின்னர் இன வேறுபாடின்றி சில முற்போக்குவாதிகளும் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதை அவதானிக்கலாம்.
சிறீலங்காவில் பாமர மக்கள் தொடக்கம் கல்விமான்கள் வரைக்கம் தமது எதிர்ப்பினை மகிந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றனர். இதனை ஒவ்வொரு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மற்றும் தனியார் துறைகளின் அதிகாரிகள் ஊடாக அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க வெறியினால் அனைத்துத் துறைகளும் ஒழுங்கான வினைத்திறன்கள் பயன்படுத்தப்படாமையினால் படுநட்டத்தில் இயங்குகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக தொழிச்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மகிந்த அரசாங்கத்தின் அஸ்த்தமன் எதிர்வரும் மாதம் 8ம் நாளுடன் தெரிந்து கொள்ளலாம். அதாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஏற்படப் போகும் தோல்வி மகிந்த ஆட்சியின் முதற்கட்ட நகர்வாக அமையும் என்பதை அனைவரும் உணரலாம்.
நன்றி : ஈழமுரசு
http://www.pathivu.com/news/21799/57//d,article_full.aspx

Saturday, August 25, 2012

இனிமேல் இரணைமடு யாருக்கு?-வன்னிமகன்



Saturday, August 25, 2012, 4:56தமிழீழம்

இரணைமடு யாருக்கு? ஏழை விவசாயிகளுக்கா? சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கா? இத்தகைய கேள்விகள்தான்

தற்போது தமிழ் மக்கள் மனங்களெங்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய சொத்தில் யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்களுடைய சொத்தை யார் யாரோ தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சொத்துக்குரியவர்கள் மட்டும் வயிற்றில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு படுக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இரணைமடுக் குளத்தினதும், குளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயக் குடும்பங்களினதும் பரிதாபகரமான நிதர்சனம். இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள்ளே அமைந் துள்ளபோதும் அதன் பயன்பாடும், நிர்வக நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றது.

குளத்தின் உருவாக்கம், அதற்கான காரணம் குறித்தெல்லாம் பேச நாம் விரும்பவில்லை. தற்போது குளத்தை அடிப்படையாக வைத்து நடாத்தப்படும் அரசியல் குறித்தும், காரசாரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாதம் குறித்துமே நாம் பேச விளைகின்றோம். இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள செய்திகள் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.இதனையே முன்னிறுத்திக்கொண்டே கிளிநொச்சி மக்களுக்கே போதாமலிருக்கும் நிலையில் யாழ்ப்பாண மக்களுக்கு எப்படி நீரைக்கொண்டு செல்லமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. நியாயமான கேள்விதான். யாரும் மறுக்கமுடியாத கேள்வியும் கூட. ஆனால் அதை பிரதேசவாதமாக யாரும் முன்னெடுக்கவேண்டாம். அறிவியல் ரீதியாக நடைமுறைச்சாத்தியமான வழிகளுக்கூடாக அதனை அணுகலாம். அது பற்றி விரிவாகவும் பார்க்கலாம்.இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிகளாகும்.

இறுதியுத்தத்தின் போது எறிகணைத் தாக்குதலினால் நீர் வெளியேற்றுப் பாதையின் கதவு ஒன்று சேதமடைந்திருந்தது. மற்றொன்று அணைக்கட்டுகள் நீண்டகாலம் புனரமைக்கப்படாத நிலையில் தளர்வடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த முறை பருவமழையின் போது 32அடி தண்ணீரை சேமிக்ககூடியதான நிலையிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த உள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்குள் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்க, நீர்வரத்தும், நீர்மட்டத்தின் உயர்வும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்நிலையில் குளத்தின் ஒரு புறத்தில் தற்போது இராணுவ பயன்பாட்டிலுள்ள விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை மற்றும் இராணுவத்தினர் அமைத்திருக்கும் தங்குமிடங்களுக்கும் நீரினால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என இராணுவத்தலைமை அச்சங்கொண்டது.

இதன் தொடர்ச்சியாகவே குளத்தின் நீர் மட்டத்தை 5அடி தொடக்கம் 6அடி வரை குறைக்க வேண்டும் என இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர். ஏனெனில் குறித்த இரணைமடு தளமே தற்போது வன்னிக்கான கட்டளை மையமாகவும் இருந்து வருகின்றது.

வன்னி முழுமையாக கைப்பற்றப்பட்டதும் ஜனாதிபதி தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்ததும் இதே இரணைமடு தளத்திலேயேயாகும்.இங்கு தங்கியுள்ள இராணுவ அதிகாரிகளது உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பொறுப்புவாய்ந்த சிவில் அதிகாரிகள் பெருமளவு நீரைத்திறந்து விட்டனர்;. அந்த நீர் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பல இடங்களில் தேங்கி நின்றிருந்தமை மக்கள் அனைவரும் அறிந்தவொரு விடயமே. இதனை அதிகாரத்திலுள்ள சிலர் பூசி மெழுக முற்பட்டாலும் அதுவே மாற்றமில்லாத உண்மையாகும். மேலும் இதற்கு மக்களிடம் சாட்சிகளும் நிறையவே இருப்பதை அந்த அதிகாரிகள் புரிந்து கொண்டால் சரி.

இன்று 4ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை நிலம் எரிந்து கருகிப் போயுள்ளதற்கும் அதனை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக கண்ணீரோடு நிற்பதற்கும் குளத்துநீர் திறந்துவிடப்பட்டமையே காரணமாகும். நாங்கள் நாய்களைப் போல் எங்கு அடிவிழுந்தாலும் பின்காலை தூக்குவதில்லை. வீழ்கின்ற எச்சில் துண்டங்களுக்காக பொய்களை விற்பவர்களுமில்லை. துப்பாக்கி முனை ஆட்சியில் வேலிக்கு ஓணான் சாட்சியாக அதிகாரிகளை அழைத்து வந்து பொய்ச் சாட்சியமளிக்க அச்சுறுத்துபவர்களுமில்லை.

நடந்தது இதுதான் இதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் சாட்சிகளும் இருக்கின்றது என்பதை அவர்கள் அனைவரும்; புரிந்து கொண்டால் சரி.இந்த விவகாரத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கலாம் இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கென சுமார் 8ஆயிரம் ஏக்கர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இரணைமடுக் குளத்திலிருந்த 28அடி நீரை வைத்துக் கொண்டுதான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட 8ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமானளவு வயல்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி கூடுதலாக விதைத்தவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களும், பதவி நிலைகளில் உள்ளவர்களுமாவர். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியின் அரசியல் வாதிகளது துணையுடனேயே இவர்களால் இவ்வாறு பயிரிட முடிந்தது. இவ்வாறு மேலதிகமாக விதைக்கப்பட்டுள்ளமை பற்றி தாங்கள் அறியவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர்.

எனினும் விவசாய அமைப்புக்களது கடுமையான எதிர்ப்புக்கள் காரணமாக அதுபற்றி விசாரிப்பதற்கு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஆளுந்தரப்பு அரசியல் வாதிகளதும், ஆளுந்தரப்புக்கு எடுபிடிகளாக இயங்கும் கட்சி அரசியல் வாதிகளதும் அழுத்தங்களே காரணமாகும். இதனைப் பயன்படுத்தி அதிகாரிகளும் உரிய நடவடிக்களை மேற்கொள்ளாது அனுமதியின்றி நெல் விதைத்தவர்களிடம் எதையாவது பெற்றுக்கொண்டு அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்களா, கிளிநொச்சியில் முக்கியமான பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒன்றரை நீர்ப்பங்கை வைத்துக் கொண்டு அதிகளவு நிலத்தில் விவசாயம் செய்திருக்கின்றார்.

அதனை அறிந்து கொண்ட கமக்கார அமைப்பு மேலதிக விதைப்பிற்கான தண்ணீரை வழங்க மறுத்தபோது அந்த அதிகாரி ஒரு தொலைபேசி அழைப்புத்தான் கொடுத்தாராம், அடுத்த சில மணிநேரத்தில் போதுமானளவு தண்ணீர் மேலதிகமாக விதைக்கப்பட்ட நிலத்திற்கு வழங்கப்பட்டது. குறித்த அதிபர் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த நீரை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டார் என்பதே மறுக்க முடியாத உண்மை. இது ஒன்று மட்டுமல்ல இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அனுமதியின்றி நெற்செய்கையில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு கொள்வதுடன், அனுமதியுடன் நெற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு குளத்துநீர் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாறாக அங்கு தங்கியிருந்து கட்டைப்பஞ்சாயத்து அரசியல் செய்யும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்குப் பயந்து அல்லது அவர்களது கைப்பொம்மையாக இருந்தவாறு அனுமதியின்றி நெல்விதைத்தவர்களுக்கு நீர் வழங்குவதுடன், அனுமதிபெற்று நெற் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு நீர் வழங்காது அவர்களது வயல்கள் அழிவடையவும் காரணமாக இருந்துள்ளனர்.

கடந்தசில தினங்களுக்கு முன்னர் நீர்பாசனத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நிர்ணயிக்கப்பட்ட ஏக்கருக்கும் அதிகமானளவு நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஊடகமொன்றிற்குத் தெரிவித்த கருத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிரச்சினையொன்று வருகின்றபோது மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டு தான் தப்பிக்க முயன்றிருக்கின்றார். மக்கள் பொறுப்பற்று நடந்திருக்கின்றார்கள் என கூறியிருக்கின்ற அந்த அதிகாரி அதற்காக தமது தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கூற மறந்துவிட்டார் .

அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குளறுபடிகள் காரணமாக ஒட்டுமொத்தமாக 4ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த நெல் அழிந்து போயிருக் கின்றது. ஏற்கனவே 2010 ம் ஆண்டு சிறுபோக விதைப்பிற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை மக்கள் இன்னமும் மீளச் செலுத்தாத நிலையில் வங்கி அதிகாரிகள் பொலிஸாருடன் விவசாயிகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலையில் இவ்வாண்டும் சிறுபோகம் எரிந்து நாசமாகிப் போனால் அந்த விவசாயிகளின் நிலை என்ன? விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்யுமா? அல்லது பயிர் அழிவுக்கான நஸ்ட ஈட்டை வழங்குமா? எதுவுமே கிடையாது. எனவே வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு மக்களை குற்றம் சாட்டுவதை அதிகாரிகள் முதலில் கைவிடவேண்டும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி இருந்தபோதும், இவ்வாறான வறட்சியும், அளவுக்கதிகமான மழைவீழ்ச்சியும் இருந்தது. அப்போதும் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில்தானிருந்தது. ஆனால் அப்போது குளத்துநீரை மக்கள் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் முகாமை செய்தார்கள். இப்போதுபோல் வயல் வரம்புவரை அரசியல் வந்து நிற்கவில்லை. எனவே ஒட்டுமொத்த அதிகாரிகளினது பாராமுகமும், அரசியல் அதிகார மமதையும் சேர்ந்து ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்திருப்பதே உண்மையான கதை.

இவ்வாறாக ஒரு புறத்தில் இரணைமடுக் குளத்திற்கு மேற்பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இரகசியமான இராணுவமயமாக்கல் திட்டங்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக குளத்தின் பெரும்பகுதி நீர் திறந்துவிடப்படுவதனாலும், மறுபுறத்தில் அரசியல் வாதிகளதும், அதிகாரிகளதும் பொறுப்பற்ற செயற்பாடுகளாலும் அப்பாவி விவசாயிகளது நெற்செய்கை பாதிக்கப்படும்போது அதனை மூடி மறைப்பதற்காக பிரதேச வாதத்தை தூண்டி தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

எங்கள் மக்களுக்கே நீரில்லை அதில் யாழ்ப்பாண மக்களுக்கு வேறு நீரைக் கொண்டு செல்ல வேண்டுமா? என சிலர் பிழைப்பு வாதத்திற்கு பிரதேசவாதத்தை கிளப்பிவிடுகின்றார்கள்.மக்கள் ஒருவிடயத்தை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ளவேண்டும், நாங்கள் இன்று இவ்வளவு தூரம் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டு, அழிந்து இழிந்துபோயிருப்பதற்கு காரணம் எங்கள் மத்தியிலுள்ள சாதி, பிரதேசவாதம் போன்ற காரணங்களே.

இந்தப் பேய்களை நாங்கள் துரத்தும் வரையில் எங்களை அழிப்பதற்கு வேறுயாரும் தேவையில்லை. ஒரு கட்டத்தில் நாங்களாகவே அழிந்துபோவோம்.நாம் பிரச்சினைகளை சரியாகவும், யதார்த்தபூர்வமாகவும் அணுகவேண்டும். பிரச்சினைகளுக்கான காரணம் வேறு எங்கோ இருக்கின்றது. அதை நாங்கள் சரியாக புரிந்து கொண்டாகவேண்டும், குறிப்பாக பருவமழையின் போது மேலதிக நீரைத் திறந்துவிடும்படி இராணுவத்தினர் கேட்டதுங்கூட இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையில் ஒரு பிரச்சினையினை தோற்றுவிப்பதற்காக கூட இருக்கலாம். உண்மையில் இரணைமடு தமிழருக்கானதே.
http://www.tamilthai.com/newsite/?p=13736

Thursday, August 23, 2012

சிறிலங்காவை குறிவைத்து அக்னி ஏவுகணையை நிறுத்தியுள்ளது இந்தியா?

[ வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2012, 00:48 GMT ] [ தா.அருணாசலம் ]
அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க, இரத்மலானை, மற்றும் மத்தால விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல் மின்நிலையம். கரவலப்பிட்டிய- களனிதிஸ்ஸ மின்நிலையங்கள் உள்ளிட்ட பல கேந்திர நிலைகளை இலக்கு வைத்தே இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்த அக்னி ஏவுகணைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1000 தொடக்கம் 2000 கிலோ எடையுள்ள அணுவாயுதத்தை சுமந்து கொண்டு 1000 தொடக்கம் 8000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை விரிவாக்கப்பட்டுள்ளது.

அக்னி 5 ஏவுகணை மூலம் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கமுடியும்.

ஈரான், பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் வழியான சீனாவின் விநியோகப் பாதையை துண்டிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இரகசியமாக இணைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா விருத்தி செய்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
http://www.puthinappalakai.com/view.php?20120823106850

இந்திய - இலங்கை முறுகுநிலை மோசமடைவதற்கான அறிகுறி


essay
இந்தியா வாங்கவிருந்த காணி சீனாவுக்கு விற்கப்பட்டதின் எதிரொலி
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் காணித்துண்டு ஒன்றை வாங்குவதற்கு இந்தியா பேரம் பேசி முடித்திருந்த நிலையில் அது சீன இராணுவ நிறுவனத்துக்கு விற்கப்பட்டதால் இந்தியா பெரும் கடுப்படைந்துள்ளது. புதுடில்லியில் இலங்கை உயர் ஸ்தானிகர் வெளிநாட்டமைச்சுக்கு அழைக்கப்பட்டு ஆட்சேபம்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி விமரிசனத்திலிருந்து ஒரு பகுதி 
தொகுப்பு: கோகுலன்

இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையில் ஏற்பட்டுள்ள ஒருமுறுகல் விடயம் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம் பெற்ற இந்தியாவின் 65 ஆவது சுதந்திர தினவிழாவின் போது உரை நிகழ்த்துகையில் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கருத்து வெளியிட்டார்.

இலங்கை அரசுடன் எமக்கு பிரச்சினைகள் உண்டு. நாங்கள் நட்புரிமை கொண்ட அண்டை நாடுகள் என்ற முறையில் தீர்த்துக் கொள்ள முயன்று வருகிறோம் என்று உயர் ஸ்தானிகர் கூறினார். இந்திய சமூகத்தவர்கள், ராஜதந்திரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், இலங்கை பிரஜைகளான இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு ஊடகத்துறையினர் என்று பலரும் கூடியிருந்த நிகழ்வில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

முன்னரும் இப்படியான நிகழ்வுகளில் முன்னாள் இந்திய ஸ்தானிகர்கள் உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவை கடுமையானவையாகவும் சில சமயம் கருத்துச் செறிவுடையவையாகவும் இருந்ததுண்டு. ஆனால் காந்தா நாட்டின் சுதந்திர தின விழாவில் இந்தக் கருத்தை ராஜதந்திரமான முறையில் வெளியிட்டிருப்பதானது முன்னொரு போதும் நடைபெறாதது கவனத்துக்குரியதுமாகும்.

இந்திய ஸ்தானிகர் காந்தாவின் இந்தச் செய்தியானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசுக்கு மிகத் தெளிவாகவே உறைத்துள்ளது. அரசின் உயர்மட்ட அளவுக்கு அதன் பிரதிபலிப்புகள் சென்றுள்ளன. அதன் மீது ஆழமான பகுப்பாய்வு விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பற்றி என்னதான் வெளியில் நல்லவைகள் கூறப்பட்டாலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் புதிய மட்டத்திலான கீழ் நிலைக்குச் சரிந்துவிட்டன.

கடைசியாக ஏற்றப்பட்ட வைக்கோல் துண்டுதான் ஒட்டகத்தின் முதுகை முறித்தது என்று கூறப்படும் பழமொழிக்கு ஒப்பாகக் கொழும்பில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்காக இருந்த காணித்துண்டு ஒன்று இப்பொழுது சீனாவுக்கு வழங்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.

இது தொடர்பான இந்தியாவின் கடுமையான எதிர்ப்பு புதுடில்லியிலுள்ள எமது ஸ்தானிகர் பணிமனையில் மட்டுமன்றி கொழும்பிலும் வெளிநாட்டமைச்சிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

287 பேர்ச் காணித்துண்டு இப்பொழுது ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரியது. இது சொத்து அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமாகும்.

இது 162 வருடங்கள் பழமையான இந்த நிறுவனம் லீ ஹெட்ஜஸ் அன்ட் கொம்பனி லிமிட் நிறுவனத்தின் இணை நிறுவனமாக இருந்து வருகின்றது. புதுடில்லியிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சுக்குப் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம் அழைக்கப்பட்டு இதுபற்றிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு துண்டைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை வெளியுறவு அமைச்சு கால தாமதம் காட்டி வருவது தொடர்பாக இந்தியாவின் கடும் அதிருப்தி அவருக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இந்தியா எவ்வாளவு பாரதூரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது புதுடில்லியிலும் கொழும்பிலும் அந்த நாடு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருப்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

பல வாரங்களாக ஷோ வாலங் அன்ட் ஹெட்ஜஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிர்வாக சபை அதிபர் எஸ்.றிச்சார்ட் வாமதேவனுடன் ஸ்தானிகர் காந்தா குறித்த காணி குறித்து பேச்சு நடத்தி வந்துள்ளார். டுப்ளிகேஷன் வீதி முன்பக்கமாக இந்திய கலாசார மண்டபம் ஒன்று கட்டுவதற்காக ஒரு துண்டு காணியைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தப் பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நோக்கத்தில் இந்தக் காணியை ஒரு பேர்ச் ஏழு மில்லியன் ரூபா வீதம் பெற்றுக் கொள்வதற்குப் பேச்சு வார்த்தைகள் முடிக்கப்பட்டிருந்ததாக இந்தியாவின் வாதமாகும்.

 இவ்வாறு இலங்கையில் வெளிநாட்டு தூதரகம் ஒன்று காணி வாங்குவதானால் வெளியுறவு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதனால் இந்திய ஸ்தானிகரம் வெளியுறவு அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. நடைமுறையிலுள்ள வழக்கமான செயற்பாடுதான் இது என்று ராஜதந்திரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக வெளியுறவு அமைச்சு மௌனமாக இருந்து வந்துள்ளது என்று இந்தியா கூறுகிறது. எதுவித பதிலும் கிடைக்கவில்லை. அதேசமயம் சீன நிறுவனமான  சைனா நேஷனல் ஏரோ ரெக்னொலொஜி இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கேப்பரஷேன் என்ற நிறுவனம் அதன் பிரதான பணிமனையை இந்தக் காணியில் கட்டிக் கொள்வதற்கு வெளியுறவு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

டுப்ளிகேஷன் வீதியை நோக்கியுள்ள காணியில் 60 பேர்ச்சஸ் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இது சீனா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்றாகும் இது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட போரின்போது இராணுவ மற்றும் தொடர்புடைய உதவிகளை இந்த நிறுவனம் வழங்கியிருந்தது.

ஆனால் இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வித்தியாசமான விளக்கதைக் கொடுத்துள்ளது. ஷோவாலங் அன்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்துக்குரிய காணியில் ஒரு பகுதியை விற்பதற்கு எடுக்கப்பட்ட முடிவானது முழுக்கவும் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையாளர்களின் தீர்மானம் என்று பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 அதில் எந்த வகையிலும் அரசு பங்களிப்பு வகிக்கவில்லை. தனிப்பட்ட உரிமையாளர்களிடம் சீன நிறுவனம் அந்தக் காணியை வாங்கியிருப்பதால் அவர்கள் அதற்கு உரிமையாளராகிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால் இந்த விளக்கம் எதுவும் இந்திய கவலையைப் போக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா இன்னமும் கவலையிலேயே இருக்கிறது என்பதையே காந்தாவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியா கொழும்பிலும் புதுடில்லியிலுமாக ராஜதந்திர முறையில் இரு ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்திருப்பதன் பின் விளைவுகள் குறித்து அரசின் தலைவர்கள் கடந்த வாரம் முழுவதும் ஆலோசனைகள் நடத்தியிருந்தார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளைக் கையாளும் மூவர் குழு அங்கு செல்வதை தாமதப்படுத்துவதாகும்.

இந்தக் குழுவில் இருப்பவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியவர்களாவர். இவர்கள் மூவரும் அடுத்த மாதம் புதுடில்லிக்குச் செல்வதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அவர்களின் பயணம் தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகப் புதுடில்லியிலுள்ள இலங்கை ஸ்தானிகர், இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். நவம்பர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறவிருப்பதையொட்டி இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக இவர்களின் பயணம் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது உலக நாடுகள் தொடர்பான பருவகால ஆய்வுகள் நடைபெறவிருக்கின்றன.
இந்த ஆய்வுக் குழுவுக்கான உறுப்பு நாடுகளைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தன் விருப்பப்படி தெரிவு செய்து இருந்தார் என்பது தவறாகும்.

ஆய்வுக் குழுவுக்கான மூன்று உறுப்பு நாடுகளும் சீட்டிழுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றன. சபை இலங்கை தொடர்பாக நடத்தும் விவாதங்களை அவதானித்து அவர்கள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் என்பனவாகும். சபையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது இந்த அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் முறுகு நிலை அடைவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த ஒரு பேட்டியையும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் முதல் தடவையாக இந்தியா பற்றி ராஜபக்ஷ வாய்திறந்து குறை கூறியிருந்தார். அது இந்திய மத்திய அரசுக்கு ஒரு இறுக்கமான செய்தியை வழங்குவதாக இருந்தது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கி வந்திருக்குமானால் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானம் இலங்கைக்கு எதிராக வந்திருக்கமாட்டாது என்று அவர் கூறியிருந்தார். தீர்மான வாசகத்தை தணியச் செய்வதற்கு இந்தியா உதவி புரிந்துள்ளது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது தொடர்பான ரைம்ஸ் ஒப் இந்தியா கேள்விக்கு ஜனாதிபதி அளித்திருந்த பதில் வருமாறு:
அந்தத் தீர்மானத்திலிருந்து நாம் விலகிச் செல்வதுதான் இனி நல்லது. நல்லெண்ணங்களும் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவையே.
ஆனால், இந்தியா எம்முடன் இருந்திருக்குமானால் கால அவகாசம் வேண்டும் என்ற எமது கோரிக்கையை இந்தியா ஆதரித்திருக்குமானால் யாருக்குத் தெரியும் அப்படி ஒரு தீர்மானமே வந்திருக்காது. இந்தப் பிரதேசம் இந்தியாவை எதிர்நோக்கி நிற்கின்றது.

அண்டை நாடுகளுடன் தான் நடந்து கொள்ளும் முறை சரியா? இல்லையா? என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5148734623139749

Tuesday, August 21, 2012

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" - கொரட்டூரில் சீமான் முழக்கம்!


[Tuesday, 2012-08-21 11:20:05]

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,

http://www.youtube.com/watch?v=6mmwvp8lSmA&feature=player_embedded

Sunday, August 19, 2012

அடுத்து யாருக்கு படையலும் குளுத்தியும் வைக்கலாம்...



[Sunday, 2012-08-19 22:05:36]

ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது... எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான் (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள்.

எனவே அவர்களின் வாரிசுகளுக்கு நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அனுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின் கிடைப்பதை வைத்துக்கொண்டு நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று ஒருசாராரும் மற்றெரு சாரார் அமெரிக்கா பெரியபிரித்தானியா போன்ற வல்லரசுவுகள் பெரிய மனது பண்ணி எப்போதாவது விடுதலை பெற்றுத் தரும் போது நாம் இருகரம் நீட்டி வேண்டிக்கொண்டால் போதுமானது.

அது மட்டும் அவர்களுக்கு எதோ காரணத்தால் (என்ன காரணம் என்றும் அறுதியாக எவர்களுக்கு தெரியாது) எங்களின் போராட்டத்தை நசுக்கியதால் இனி போராட்டம் தமிழீழம் என்றெல்லாம் கதைப்பதோ அல்லது அதன் குறியீடுகளாக உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட சின்னங்கள் கொடிகள் எல்லாவற்றை பிடித்து அவர்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாவதோ இல்லாமல் அடிபெட்டிக்குள் வைத்து விட்டு வேண்டுமென்றால் இங்குள்ள (தமிழர்கள் மட்டுமே வரும்) கோயிலில் தாயகத்தில் உள்ள மக்களுக்காக (போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்காது பல்லின மக்களுக்கும் தெரியாத வகையில் தமிழ் இணைத்தளங்களில் மட்டும் படங்கள் தாரளமாக வரக்கூடிய வகையில்) சாந்தி பூசைகள் யாகங்கள் மற்றும் கூட்டுப்பிராத்தனை போன்றவற்றில் ஈடுபடுவது அவ்வல்லரசுகளுக்கு நல்ல படையல் வைப்பது போன்றது.

வல்லரசுகளை பகைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? நல்ல கேள்வி அதே நேரம் காலடியில் போய்நின்று பாதபூசை செய்து கொண்டிருப்போமேயானால் எங்களோடு கதைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் போகிறது அல்லவா. காலை நக்கிக்கொண்டிருப்பவர்களை யாராவது தட்டி எழுப்பி கதிரையில் இருத்தி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு தீர்த்து வைப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது. கொடுக்காவிட்டாலும் என்ன காலை நக்குவது என்ன குறையவா போகிறது?

ஒரு நாட்டுக்கும் பறந்து திரியாமல் ஒருவருடனும் தொலைபேசியில் அளவளவாத எங்கையே ஒரு உலகப்படத்தில் புள்ளி போல இருக்கும் நாட்டின் காட்டுக்குள் தனது மக்களும் அவர்களுக்கான போராட்டமும் என்று இருந்த எமது தேசிய தலைவனை காண ஆளுக்கு மேல் ஆள் என நாட்டுக்கு மேல் நாடு எனச் சொல்லப்பட்டவர்களும் அவர்களின் தூதுவர்களும் போய் சந்தித்தற்கு காரணம் என்ன?

மில்லியன் கணக்கில் அவர்களின் புலன்ஆய்வுத்துறைக்கு செலவழித்து எமது விடுதலை இயக்கத்தின் பலம் என்ன? பல்லாயிரக்கணக்கான வேறுவேறு நாடுகளில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் கூட அதிகம் இன்றி வாழும் ஈழத்தமிழ் மக்களை வாழ்க்கையில் ஒருதடவை கூட சந்தித்திராத மறைமுகமாக வாழும் ஒருவரின் பெயரை சொன்னதும் தெருவில் இறங்குகிறார்; பல லட்சம் பேர் ஒரு தொலைபேசி குறும் செய்தியில் கேள்வியின்றி அணிவகுக்கிறார்கள் அந்த கொடியை பார்த்துமே விடுதலை உணர்வும் தியாகமும் தன்மானமும் தூய்மை தன்னலமின்மை என்ன பல் உணர்ச்சிகளோடு தமிழன் என்ன ஒருமிக்கிறார்கள் என அதிசயம் இது எப்பிடி சாத்திமாகிறது.

படித்தவர்கள் படிக்காதவர்கள் பணத்தில் புரள்பவர்கள் ஒருநாள் கூலிக்கு வேலை செய்பவர்கள் தமிழ்ஈழத்தில் பிறந்தவர்கள் சிறீலங்காவில் கூட கால் பதிக்காத இங்கு பிறந்த அடுத்த தலைமுறை முதியவர்கள் இளைஞர்கள் ஏன் சிறுவர்கள் என எல்லோரும் இணைவதுவும் ஒரு கொடியின் கீழ் நிற்பதுவும் நடப்பதுவும் எப்பிடி சாத்தியமாகின்றது இந்த சிறிய பகுதி மக்களால் அதிசயத்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாத கொள்கைபற்றை பார்த்து பயந்தார்கள்.

விடுதலை அடையமுதலே இருக்கும் அரசியல் பொருளாதார இராணுவக்கட்டமைப்புகள் வெடிபொருள் கணிணி இலத்திரனியல் தொழில்பிரிவு போர்கருவி தொழிற்சாலை இராணுவ விஞ்ஞான கல்லூரி பரப்புரை பிரிவு பொறியியல் துறை விளையாட்டுத்துறை ஆங்கில கல்லூரி திரைப்படபுத்தக மொழிபெயர்ப்புத்துறை கல்வி மேம்பாட்டு கழகம் கலை பண்பாட்டு கழகம் சுகாதாரப்பபிரிவு சு10ழல் நல்லாட்சி ஆணையம் வனவள பாதுகாப்புப் பிரிவு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பொருண்மிய மதியுரைகம் காலநிலை அவதானிப்பு நிலையம் ஒளிக்கலைப்பிரிவு என ஜம்பத்தாறு வகையான பிரிவுகளால் எதிர்காலத்தை திடமாக திட்டமிட்டு நடத்தியதோடு போரும் புரித்தார்கள்.

அவர்கள் கதிரைக்கு ஆசையுள்ளவர்களாகவோ மதிநுட்பம் இல்லாது தன்னிறைவை நோக்கிய தூர நோக்கில்லாதவர்களாக இருந்திருந்தால் நாடுகடந்த அரசை வளர்த்தெடுத்தது போல அவர்களையும் வளர்த்தெடுத்து தாங்கள் சொல்லும் போது வாலாட்டுவதற்கெனவும் மக்கள்சக்தியை இரண்டாக உடைப்பதற்கெனவும் வைத்திருந்திருப்பார்கள். கருணாவை கொண்டு உள்ளாட்டிலும் வெளிநாட்டில் கேபி போன்றவர்களிலும் கண்வைத்தார்கள். வெளிநாட்டு அரசாங்களுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இல்லாதபோதும் எமது உறுதியையும் மக்கள் பலத்தையும் ஒருகுறியீடு ஓருகொடி என அவர்களைக்போல பகுத்தறிவுள்ள தேசியபற்றுள்ள இனமாக உள்ளதைப் பார்த்து பயந்தார்கள். இதை அழித்து விட்டு கொஞ்சம் அறிவு குறைந்த பதவி பட்டம் என ஆசைகள் உள்ள தமக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒன்றை கொண்டுவர எண்ணினார்கள்.

சில பயணங்களுக்கு ஒருவழி பாதை (one way) மட்டுதான். அதில் பயணம் செய்தால் சேரும் இடம் வரும் வரை பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும் இடையில் திரும்பமுடியாது ஏனெனில் அது போவதற்கு மட்டும் உரிய பாதை. விடுதலையை நோக்கிய பாதையும் அப்படித்தான். கிணறு தோண்டும் போது தண்ணி வருவது நிச்சயம் ஆனால் வருவதற்கு ஒரு அடிக்கு முன்னும் நாம் களைத்துப்போய் நிற்பாட்டி விடலாம். ஆனால் எம்மை தோண்டுவதற்கு உந்துசந்தியாக இருக்கும் சிங்கள பேரினவாதம் எம்மை நிற்கவிடாது. ஓன்றுமே இல்லாத வெளி நாட்டில் பயங்கரவாதம் என்று பயப்படுகிறார் உன்னுடைய மனைவியை அடுத்தவன் நடந்தை கெட்டவள் என்று சொன்னால் உடனே நீங்கள் தள்ளிவைத்து விடுவீர்களா? சொந்த புத்தி வேண்டாம்.

அவ்வளவு அடக்கமுறைக்குள்ளும் அங்குள்ள மக்கள் இந்த வெளிநாட்டில் இருக்கும் வியாக்கியானம் கதைப்பவர்களின் தங்கியிருக்காது அங்கு நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறைக்கெதிராக உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுக்கிறார்கள். அடக்குமுறையால் போராட்டம் வந்ததா? போராட்டம் இருப்பதால் அடக்கு முறை வந்ததா? சீறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாமரம் வீசுபவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் சிங்கள மக்களும் கூட தலைமுறையை போருக்கு அடகு வைக்காமல் சிந்திக்கும் நேரமிது.

வாழ்க சிங்கள பேரின அடக்கு வாதம்! வளர்க தமிழ் ஈழம்!!

ஒரு பேப்பருக்காக - சுகி
http://seithy.com/breifNews.php?newsID=65453&category=TamilNews&language=tamil

‘இசோ’வாகிய ‘டெசோ’… ‘சோ’வாக மாறும்:


 இதயச்சந்திரன்

டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது.

‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார்.

‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தபோது, சுப வீரபாண்டியனும், கனிமொழியும் அதனை எதிர்த்துள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய மத்திய அரசு, அரசியல் தீர்வாக முன்மொழியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கும்படி கூறினால், தி.மு.க. அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது தான்.

காங்கிரஸ்-தி.மு.க. உறவின் அடிமடியில் கைவைக்கும் விடயமல்லவா அது.

நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், பொதுவாகப் பார்க்கும்போது, கடுமையானவை போன்று காட்சியளிக்கலாம். இருப்பினும், போர்க்குற்ற விசாரணை, பொதுசன வாக்கெடுப்பு என்கிற விடயங்களை நடைமுறைப்படுத்த, இந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு என்ன வேலைத் திட்டத்தை வைத்திருக்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

தீர்மானங்களை நிறைவேற்றுவது அரசியல் சடங்காக நிகழும் இக்காலகட்டத்தில், இதற்காகப் போராட முன்வருபவர்கள் குறைந்தளவிலே காணப்படுகின்றனர்.

அரசியல் கோஷங்கள் ஊடாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றப் போடும் நாடகங்களாக இவை மாறிவிட்டன.

இந்திய முதலாளித்துவ ‘கார்ப்பரேட்’ வடிவமெடுத்துள்ள கருணாநிதியின் குடும்ப உயர்குழாம், இழந்துபோன அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கு, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் அவலப்படும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முனைகிறது.

அதேவேளை இந்திய மத்திய அரசின் அதிகார மையத்தோடு முரண்பாடுகளை ஏற்படுத்தாதவாறு, மிகக் கவனமாக தமது காய்களை நகர்த்துகிறார் கருணாநிதி.

இவை தவிர, கருணாநிதியா, இராஜபக்சேவா, தமிழ் மக்களின் எதிரி? என்கிற திராவிடக் கழகத் தலைவர் வீரமணியின் அனல்பறக்கும் உரையாடல்களும் அம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் நண்பராக இருந்து, எதிரியாக மாறியவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

நினைவில் இல்லாத கனவுகள் போல் ஆகிவிட்டது, கருணாநிதி குறித்தான தமிழ் மக்களின் பார்வை என்பது தான் நிஐமானது.

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலிற்கு முன்பாக, இன்னும் பல ‘இசோ’ மாநாடுகள் வரும்.

‘கார்ப்பரேட்’ சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்தாலும், மத்திய ஆட்சியிலாவது தமது பங்கு இருக்க வேண்டுமென கருணாநிதி குடும்பம் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

ஆகவே, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அதிகளவு எண்ணிக்கை தி.மு.க.விற்கு கிடைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எதிர்பார்ப்பு.

அடுத்த தேர்தலின் போது, வட மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியடையுமாயின், மாற்றுத் தெரிவான பாரதீய ஐனதா கட்சியோடு கூட்டுச் சேர முயற்சிப்பார்கள்.

ஏற்கனவே இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டவர்தான் கருணாநிதி.

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின், காங்கிரசோடு சேராமல், ஏனைய சிறிய கட்சிகளோடு இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அப்போது தமது சொந்த வாக்கு வங்கிலேயே தி.மு.க. தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை முன்கூட்டியே உணர்ந்துள்ள, தேர்தல் வியூகம் அமைப்பதில் கில்லாடியான கருணாநிதி, டெசோ ஊடாக தனது முதல் நகர்வினை மேற்கொண்டுள்ளார்.

தமது அரசியல் எதிரியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தாலும், 2009க்குப் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை இரண்டாவது எதிர்நிலையில் வைத்துப் பார்க்கின்றது தி.மு.க.

கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களுக்குச் சென்று, அதற்கெதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, அதன் படுமோசமான பின்னடைவிற்குக் காரணகர்த்தாவாக விளங்கினார் சீமான்.

தற்போது சீமானின் பார்வை கருணாநிதியின் பக்கம் திரும்பியுள்ளது.

இவைதவிர, ‘பெரியார்’ வழிகாட்டி, ‘பிரபாகரன்’ எனது தலைவன் என்கிற சீமானின் நிலைப்பாடு, ஈழ ஆதரவு திராவிடக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மத்தியில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தோடு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பிற்கு உதவிபுரிந்த காங்கிரசையும், அதற்கு ஆதரவளித்த கருணாநிதியின் தி.மு.க.வையும் தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிவது தான் தனது முதன்மையான தேர்தல் அரசியல் வேலைத் திட்டமென சீமான் கூறுகின்றார்.

ஆகவே, கருணாநிதியின் தேர்தல் வியூகத்தின் முதன்மைத் தெரிவாக, ஈழ ஆதரவுப் போராட்டங்களினூடாக இளைஞர்களைப் பெருமளவில் திரட்டும் சீமான் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.
ஈழ ஆதரவு நிலைப்பாட்டின் மூலம் அதனை உடைக்கலாமென்று மேற்கொள்ளப்படும் நகர்வு தான் டெசோ மாநாடு.

அதேவேளை, இம்மாநாடு, சர்வதேச அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விளக்கங்கள் எல்லாம் பொருத்தமானதல்ல.

கருணாநிதியின் அடுத்தகட்ட நகர்வு, தமிழகத்தை விட்டு விரிந்து செல்லப்போவதில்லை.

அவ்வாறு நகர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமேன விரும்புவொர், கருணாநிதியின் பலவீனமான அரசியல் நிலையையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர் போடும் ‘மனோகரா’ நாடகங்களையும் புரிந்து கொள்ளவில்லை என்று நம்பலாம்.

முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இணைந்து ஈழ ஆதரவு அரசியல் மையமொன்றினை உருவாக்க வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள்.

ஆயினும், தமிழக அடித்தட்டு மக்களின் போராட்டங்களையும், ஈழ மக்களின் விடுதலையையும், இணைத்து செயற்படும் அமைப்புகளின் ஒன்றியமே பலமாக இருக்கும்
http://www.puthinamnews.com/?p=34483

Saturday, August 18, 2012

தமிழீழ விடுதலைப் போர் அடைந்த இடைக்காலப் பின்னடைவு.!


தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான்.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.
அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது.
இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம் பென்ரகன் மீது மோதிக் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தியது. நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை நோக்கிப் பறந்தபோது ஒரு வனப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியது.
இந்த நான்கு விமானங்களும் சரியாக 102 நிமிடங்களில் 3000த்திற்கும் கூடுதலான உயிர்களைக் குடித்தன. அடுத்த மாதத்தோடு இந்தப் பேரழிவுச் சம்பவம் நடந்து பதினொரு ஆண்டுகள் முடிகின்றன. கி.மு.கி.பி. என்பதைப் போல் காலத்தை அளவிடும் எல்லைக் கோடாக 9 -11 மனித வரலாற்றில் பதிவாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் தாக்கம் உணரப்படுகிறது. பாதுகாப்பு ஒழுங்குகள் இறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலின் போது அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் டிபிள்யூ புஷ் (George W.Bush) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War Against Terror) என்ற கோசத்தை எழுப்பினார்.
பயங்கரவாதத்தை நசுக்கும் பொறுப்பை உலக நாடுகள் அனைத்தும் வகிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை அமெரிக்கா ஜநாவில் உலக நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியது. அத்தோடு ஈராக் ஆப்கானிஸ்தான். ஆகிய நாடுகளுக்கு எதிரான போரையும் அமெரிக்க அரசு நேற்ரோ (Nato) நாடுகளின் உதவியோடு முன்னெடுத்தது.
மேற்கூறிய இரு நாடுகளுக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது. இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசியல் நிபுணர்கள் ‘றெஷீம் சேஞ்ச்’ (Regime Change) என்று அழைக்கிறார்கள். பயங்கரவாதத்திற்குப் பரிகாரமாக ஆட்சி மாற்றம் என்று பொருள்படும்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் மிக முக்கியமான தாக்கத்தை தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்திய அமைப்புக்கள் உணர்கின்றன. முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகப் பெருமளவு உலக நாடுகளால் பிரகடனஞ் செய்யப்பட்டது. அதே நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்தன.
புலிகள் அமைப்பிற்கு உதவுதல், நிதி வழங்கல், சார்பாகப் பேசுதல் போன்றவை பாரதூரமான தண்டனைக்குரிய குற்றங்களாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமைவாக இயற்றப்பட்ட சட்டங்கள் கூறித் தண்டித்தன. இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உலக நாடுகள் பார்க்க மறுத்துவிட்டன.
நீண்ட தூரம் பறக்கக் கூடிய சக்தி வாய்ந்த சிலின் (Zlin) ரக செக் தயாரிப்பு தாக்குதல் விமானங்களைத் தமது விமானப் படையில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உலக நாடுகளின் கண்கள் திரும்பின. விமானப்படை வைத்திருந்த உலகின் ஒரேயொரு விடுதலை அமைப்பாகப் புலிகள் இடம்பெற்றனர்.
புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்த சிங்களப் பேரினவாத அரசிற்கு உதவ 40 வரையான உலக நாடுகள் முன்வந்தன. சலுகை விலையில் அந்த நாடுகள் இலங்கை அரசிற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்தன. ஆளணி உதவிகளைச் செய்தன. தமக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுகூடி அரசுக்கு உதவின.
எதிரும் புதிருமாக நின்ற இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தமிழீழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கக் கூடாது என்பதில் ஒற்றைக் கருத்து கொண்டிருந்தன. சமச்சீரற்ற போரில் விடுதலை புலிகள் இறுதி வரை தாக்குப் பிடித்தனர். தீராப் பகை கொண்டிருந்த நாடுகளை ஒன்றிணைத்த சிறப்பு புலிகளுக்கு உண்டு. இதற்காகவே அவர்களுக்குப் பரிசு வழங்க வேண்டும்.
இப்படி ஒன்று சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியான உள்நோக்கங்கள் இருந்தன. 21ம் நூற்றாண்டின் அதியுச்ச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பகுதியாக இந்து மாகடல் இடம் பெறுகிறது. உலகின் மொத்த எண்ணைத் தேவையின் 25 விழுக்காடு வளைகுடா நாடுகளில் இருந்து கிழக்கு நோக்கி இந்து மாகடல் ஊடாகச் செல்கின்றன.
மிக முக்கியமான ஆலைத் தயாரிப்புக்கள் இந்து மாகடல் ஊடாக மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. இந்து மாகடலின் மையப் பகுதியில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இந்து மாகடலில் ஆதிக்கம் செய்யத் திட்டமிடும் வல்லரசு கட்டாயமாக இலங்கைத் தீவில் கால்பதிப்பதோடு திருகோணமலைத் துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
1980 களில் தொடங்கி இன்றுவரை இலங்கைத் தீவில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் இந்து மாகடலின் முக்கிய கடல்,வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா, சீனா இந்தியா நாடுகள் இடையே ஆதிக்கப் போட்டி நடக்கிறது.
நான்காம் ஈழப் போர் 2006 ய+லை 26ம் நாள் தொடங்கியது. இலங்கையில் ஆழமாகக் காலூன்றிய சீனா, இராணுவ, பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தது. சிங்கள அரசுக்கு உதவுவது மூலம் சீனாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நப்பாசையில் இந்திய உதவிகள் குவிந்தன.
இலங்கையில் இடம் பிடித்தால் இந்தியாவின் தென் மாநிலங்கள் மீது தேவைப்படும் போது தாக்குதல் நடத்தலாம் என்ற திட்டத்துடன் பாக்கிஸ்தான் இலங்கை அரசின் அணியில் இணைந்தது. பாக்கிஸ்தான் விமானிகள் இலங்கை விமானப்படையின் கிபீர், மிக் விமானங்களில் ஓட்டியாக அமர்ந்து தமிழீழ இலக்குகளைத் தாக்கினர்.
ஏற்கனவே பூமத்திய ரேகைக்குத் தெற்கே இந்து மாகடலின் மத்திய பகுதியில் (Central Indian ocean) டீகோ கார்சியா தீவில் (Diego Garcia) அமெரிக்கா பாரிய குண்டு வீச்சு விமானங்கள் அடங்கிய இராணுவ தளத்தை அமைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் போhக் களங்களில் ஈடுபட்ட அமெரிக்காவால் நேரடியாக இலங்கைப் போரில் பங்கு பற்ற முடியவில்லை. 1987ல் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டது போல் இறுதிப் புலி இருக்கும் வரை அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போர் நடக்கும் என்ற அச்சத்தில் சிங்கள அரசிற்கு உதவுவது மூலம் புலிகளை அழிக்க முடியும் என்று அது திட்டமிட்டது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ருஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முனைப்பாகச் செயற்பட்டன. எத்தனை அப்பாவிகளை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவை உதவிகளை வழங்கின. வன்னியில் மனிதப் படுகொலை நடந்த போது உலக நாடுகளும் ஜநாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிறி லங்காவின் போர் குற்றங்களில் ஜநாவுக்கும் பங்கு உண்டு. பல்வேறு தருணங்களில் அது போர் குற்றங்களுக்கு இடமளிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளது. 2008 செப்ரம்பரில் ஜநா தனது வெளிநாட்டுப் பணியாளர்களை வன்னியில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது. இது மனிதப் பேரழிவுக்கு இடமளித்தது.
தமிழீழத்தில் நடந்தது தாய் மண்ணிற்கான போராட்டம். உலக அரங்கிலே தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டம் நடக்கிறது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழீழத்திற்கான இறுதிப் போர் தொடங்கிவிட்டது. தமிழகத்திலும் அது அரங்கேறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீழ்ச்சி என்று சொல்வதை தமிழ் உணர்வு உள்ள ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் பேச்சிலும் சிந்தனையிலும் ஈழப் போராட்டம் உயிர் மூச்சாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழீழம் என்ற உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. அதனால் தடங்கல்களை எதிர்கொள்ள முடியும். காலப் போக்கில்  தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்பட்டிருப்பது பின்னடைவே தவிரத் தோல்வி அல்ல. “ஒரு விடுதலைப் போரட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது. பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கின்றது.” என்று தேசியத் தலைவர் கூறியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டங்களை கொண்டது ஆபிரிக்க கண்டம். தெற்கு ஆபிரிக்காவில் வெள்ளை நிற வெறி அரசிற்கு எதிரான கறுப்பின மக்களின் போர் பல தசாப்தங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1954ல் தொடங்கிய ஆயுதப் போர் 1962ல் வெற்றிகரமாக முடிவுற்றது.
தெற்கு சூடான் மக்கள் முதலாவதாக ஜனநாயக முறையில் விடுதலைப் போர் நடத்தினார்கள். பிறகு ஆயுதம் தூக்கினார்கள். 25 வருட காலம் விடுதலைப் போராட்டம் வலிமையாக பல இழப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமாகிவிட்டது.
தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது. தளராத மனதுடன் சர்வதேச அரங்கில் ராஜதந்திர முயற்சிகளை நகர்த்தி நாம் விடுதலை பெற முடியும்.

Thursday, July 23, 2009

கறுப்பு ஜூலை கடுகு அளவுதான்! கடல் அளவு ஈழத் தமிழன் சோகத்தில்

இலங்கை அரசுக்கு எதிராக பல கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளேன் என ஐ.நா. பொதுச் செயலர் திரு. பான் கீ மூன் தனது பணியின் சாதனையாக அழுது வடித்துள்ளார். அதுவே அவரது பதவிக்கான அதிஉயர் தகுதியாக அவர் நினைத்திருப்பது போல் தெரிகிறது. அவரது சாதனைகளின் இறுதித் தொகுப்பாக எல்லாப் போர் விதிமுறைகளும் மீறப்பட்டு உடைந்து சிதிலங்களாகவும், பாதிப்பு அடைந்தோருக்கு நீதியும் மறுக்கப்பட்டுள்ள நிலையே நிலவுகிறது.

ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கு அதிகமான அப்பாவித் தமிழர் முட்கம்பி வேலிகள் போடப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போரின் போது இருந்த ஹிட்லரின் கொலைக்கூடங்களை ஒத்த முகாம்களுள் அன்றாடம் அல்லலில் அவதிப்பட்டு மடிந்து மறைகின்றனர்.

எனினும் அவர்களுக்கு நீதியும் நிவாரணமும் மனிதாபிமான உதவிகளையும் வழங்க வேண்டிய ஐ.நா.வின் கடமையை வற்புறுத்தவோ அல்லது செயலற்றுவிட்ட புலிகள் இயக்கத்தின் மீதான தடைகளை நீக்க முற்படவோ நினைக்காது நிலைமையை நியாயப்படுத்துவதுதான் பரிதாபமானது. புலம்பெயர் தமிழரின் கோரிக்கைகளும் கூட அவரது காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.

கொசோவாவில் நிகழ்ந்ததை விடப் பல நூறுமடங்கு அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் வன்னித் தமிழர் அனுபவித்த நிலையிலும் ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வாய் இருந்தும் ஊமைகளாகவும் கண் இருந்தும் குருடர்களாகவும் உள்ளனர். இது பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதத்து எடுக்கக்கூட முடியாது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு ஒப்பான பாரிய குற்றங்களை பாராட்டுவது போன்றும் அதனைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தீர்மானங்களை நியைவேற்றி உள்ளமை உலகில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிர்ச்சி போரின் இறுதி இரு நாட்களில் இருபதினாயிரம் தமிழர் படுகொலை ஏற்படுத்தில அதிர்ச்சியைவிடப் பெரிதாக தமிழரால் உணரப்படுகிறது.

இலங்கை அரசினால் 1983 இல் நடத்தப்பட்ட பயங்கர வன்செயல்களால் 3000 தமிழர் கொல்லப்பட்டு அவர்களின் 300 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு, 4 சரக்குக் கப்பல்களில் அரசு தமிழ் அகதிகளை வடக்கு - கிழக்குக்கும் இந்தியாவுக்கும் அனுப்பி வைத்தது. மேலும் 3 இலட்சம் வரையான தமிழர் உலகில் 45 நாடுகளில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர். அன்று மிகப் பெரும் நிகழ்வாக இன்றும் பார்க்கப்படும் கொடுமைகள் இன்று மிக அற்பமாக்கும் விதத்தில் அரசு நடத்திய மனிதாபிமானப் போரும் அதன் பின் இன்றும் நடக்கும் நிகழ்வுகளும் காட்டி நிற்கின்றன.

இந்திய அரசின் கருணையினால் சர்வதேச தரத்திலே ஈழத் தமிழருக்கு என ஒரு நீதி நியாயத் தரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. முதன் முதலாகச் சிங்களவர்கள் 1915 இல் நடத்திய இனவெறி வன்செயலால் 146 இஸ்லாமியர் கொல்லப்பட்டும் 405 இஸ்லாமியர் காயப்பட்டும் அவர்களின் 405 கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டும் 85 மசூதிகள் எரிக்கப்பட்டும் உள்ள நிலையிலும் அதனை எவரும் பயங்கரவாதம் எனக் குற்றம்சாட்ட நினைப்பதில்லை.

அதற்கும் மாறாக ஒரு தமிழரான சேர் பொன். இராமநாதன் பிரித்தானியா சென்று குடியேற்ற செயலரின் அலுவலகம் சென்று வாதிட்டு இந்த வன்செயலில் குற்றவாளிகளாகச் சிறைவைக்கப்பட்ட சிங்களவரின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்து ஆபத்பாந்தவராக அவதாரம் எடுத்தார். இப்படியாக சிங்களவரின் இந்த முதல் இன வன்முறை இப்படியாக பாவமன்னிப்புக் கொடுக்கப்பட்டு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு விட்டது.

எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து வந்த பூர்வீக தமிழ் மக்களை காடையரைக் குடியேற்றி இரகசியமாகத் தமிழரை விரட்டிச் செய்யப்பட்ட அரசின் திட்டமிட்ட சிங்களக குடியேற்றத் திட்டங்களை இனச் சுத்திகரிப்பு எனப் படித்த அறிஞர் சமூகமும் சுட்டிக்காட்டவில்லை என்பது புத்திஜீவிகளின் புலமைசார் தகமை பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது உலகப் போரின் போது மலேசியாவில் வேலை பார்த்துவந்த யாழ்ப்பாணத் தமிழர் தமது பணத்தில் போர் விமானம் வாங்கி அதனை பிரித்தானிய அரச விமானப்படைக்கு அன்பளிப்புச் செய்து தமது பிரித்தானிய அரசுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

அதே பிரித்தானிய அரசு மகிந்த அரசின் தமிழ் இன அழிப்புப் போரில் பங்களித்துத் தமிழரைப் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இதனைவிட ஆபத்துக் காலத்தில் உதவிய உண்மை நண்பனுக்குச் செய்யப்படும் சிறந்த பிரதி உபகாரம் எதுவும் இருக்க முடியாது. ஜூலியஸ் சீசருக்கு அவனது நண்பன் புறூட்டஸ் செய்ததுக்கு ஒப்பான அதே செயலையே இன்றைய பிரித்தானிய அரசும் செய்துள்ளது.

1956 இல் பண்டா அரசு தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை அமைதி வழியில் எதிர்த்து காலிமுகத் திடலில் தந்தை செல்வா தலைமையில் நடத்திய சத்தியாக்கிரகத்தை சிங்களக் கடையர் தாக்கித் தமிழ் தலைவர்களை ஏரியில் வீசி எறிந்தும் தமிழரின் கடைகளை எரித்தும் தாக்கியும் நடத்திய வன்செயலை அரசு மௌனம் காத்து காடையரின் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியது. இருந்தும் அடிவாங்கிய தமிழரே இன்றும் இனவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்களத்தின் இனவெறித் தாக்குதல் வரிசையில் 1958 கலவரமும் முக்கியமானதாகும். தமிழ் அகதிகளை அரசே கப்பல்கள் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பிவைத்தது. இதனால் வடக்கும் கிழக்கும் தமிழரின் பரம்பரை வாழிடங்கள் என்பதை அரசே மறைமுகமாக ஏற்று அங்கீகரித்தமை வெளியாகிறது. இதனை இன்று சிங்கள அரசு மட்;டும் அல்ல இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியும் பாகிஸ்தானில் பிறந்த மன் மோகன் சிங்கும் இலங்கைத் தனி அரசுகளைக் கொண்டிருந்த தமிழருக்கு தன்னாட்சி அதிகாரமும் இறைமையும் கிடையாது என வாதிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதே பேர்வழிகள் ஈழத் தமிழருக்கான சர்வதேச நீதி முறையைப் பயங்கரவாதமாக உலக அரங்கில் முன்னிறுத்தி வருகின்றனர். 'ஆட்சி மாற்றம்;" என்ற கொள்கையில் நின்று சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இன அழிப்பை ஊக்கத்துடன் பங்களித்து வழி நடத்தியதோடு ஐ.நா. சபையையும் ஒரு கேலிக்கூத்தாக்கி மனித உரிமைச் சாசனத்தையும் கருவழித்து அதனை மலடாக்கி விட்டனர்.

ஐ.நா. சபையும் பொதுச் செயலர் அலுவலகமும் சந்தேகப்படும்; நடவடிக்கைகளின் கூடமாக மாறி ஒரு சாமானியனின் புரிதலுக்குத் அப்பாற் பட்டதாக உள்ளது. பொதுச் செயலரின் நிர்வாகத் தலைமை அதிகாரி திரு.விஜய் நம்பியார் இலங்கைக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டார். அவரால் போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சும் மீண்டும் ஏற்படும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்ட்டது. அங்கு சென்றவர் தமது தம்பியாரும் இலங்கை அரசின் இராணுவ ஆலோசகர் சதீஸ் நம்பியாரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி சென்று திரும்பியவர் அது பற்றி ஐ.நா. சபைக்கே அறிக்கை கொடுக்காது மாயமாக இருந்தார்.

அவருக்கும் அவரது தம்பியார் மற்றும் புதுடில்லி அதிகார பீடத்துக்கும் இடையே என்ன நடந்தது என்பது எவரும் ஊகிக்கக் கூடிய விடையம்தான். அந்த அனுமானம் ஐ.நா.வின் நற்பெயருக்கும் அர்த்தமுள்ள செயற்பாடுகளுக்கும் கௌரவத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட சதியாகவும் கொள்ளப்படலாம். அய்யகோ! ஐ.நா. சபையே நீயுமா எமக்குத் துரோகி?

எண் இல.13 உலகத்தில் உள்ள எல்லா தரப்பினராலும் பயத்துடனும் பீதியுடனும் பார்க்கப்படும் அதிர்ஷ்டம் கெட்ட ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை முழு உலகமும் அதனை ஒரு சர்வரோக நிவாரணி என நம்ப வைக்க மந்திரம் போல் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர்.

1987 இல் அனைத்துத் தமிழர் தரப்பினராலும் வீசி எறியப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை 100,000 தமிழரின் உயிரைப் பறித்து 50,000 பேரை ஊனப்படுத்தி, கப்பம், கடத்தல், கற்பழிப்பு, கொலைகள், என 22 வருட அவலங்களையும் போரின் அழிவுகளையும் அனுபவித்து வரும் நிலையிலும் அதே ஒற்றை ஆட்சிக்குள் அடைபடும் நிலையே ஈழத் தமிழருக்கு அற்புதமான தீர்வு என நம்ப வைக்க ஆர்வமாக உள்ளனர். இத்தகைய இழிவான தீர்;வைப் பெறுவதை விடவும் இன்று உள்ள அவலமே மேலானது இல்லையா?

இன்று ஈழத் தமிழர் 1983 ஜூலைப் படுகொலைகளை மட்டுமே தம் வாழ்வில் பெரிதாக நினைக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. இனப்படுகொலைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனத் தமிழர் எம்மதத்தவராயினும் அன்றாடம் வதைபட்டு அழிந்து வருகிறார்கள். போரின் வெற்றிப் போதையில் மிதக்கும் சிங்கள இனம் முழு அளவில் எம் இன அழிப்பு நடவடிக்கைகளில் முற்றிலுமாக ஈடுபட்டுச் செயற்பட உறுதி கொண்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டு முதல் இருபத்தோராம் ஆண்டின் தொடக்கம் வரை ஒரு நூற்றாண்டுக் காலத்தை சிங்களம் தமிழின அழிப்பில் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வெற்றி கண்டும் உள்ளது. நடந்து முடிந்த போரில் உலகின் எல்லா அரசுகளும் ஸ்ரீலங்காவின் இன அழிப்புப் போருக்கு உதவித் தமிழரின் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் பத்து ஆண்டு காலச் சிறந்த ஆட்சி ஆளணிக் கட்டுமான அமைப்புகளையும் அரசையும் பொது மக்களையும் அழித்துவிட்டுள்ளன.

பகிரங்க விசாரணைகளில் இலங்கை அரசின் மனிதப் படுகொலைப் போர்க் குற்றங்களில் இந்த நாடுகள் வழங்கிய நேரடி மற்றும் மறைமுக ஆதரவுகளும் பங்களிப்பும் வெளியாக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிரான எவ்வித விசாரணைக்கும் இவர்கள் உதவமாட்டார்கள் என்பது தெரிகிறது.

எனவே இந்திய அரசின் நற்கருணையினால் உலகில் ஈழத் தமிழருக்கான புதிய குற்றவியல் நீதி விசாரணை நெறி முறை முன்னெடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் புலம்பெயர் மக்களுக்கு 1983 ஜூலை பற்றிப் பேசுவது இனிமேலும் அவசியமா? அல்லது அடுத்துச் செய்ய வேண்டியதைத் திட்டம் இட்டுச் செயற்படுவது அவசியமா? சொல்லுங்கள்!

உண்மை நிலையைப் புரிந்துகொண்டு விட்டால், வெற்றிக்களிப்பில் மிதக்கும் சிங்களத்தின் வெறியை வெற்றி கொள்ள தமிழர் நாமக்காகத் தேசம் கடந்த தமிழீழ அரசமைக்க ஒன்றுதிரளுவதே இன்று தேவையானது என்பது தெளிவாகி விடும். மானம் ரோசம் உள்ள தமிழராக வாழ விரும்பினால் உலக அதிசயங்களுக்காக, அவதார புருஷர்களுக்காகத் தவம் இருப்பதை விட்டுவிட்டு கே.பி.அண்ணாவும் உருத்திரகுமாரனும் செல்லும் வழியில் சேர்ந்து உழைக்க முன் வாருங்கள்.
நன்றி
- தமிழ்நாதம் -

Tuesday, July 7, 2009

அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுமா இலங்கை அரசு?

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது.புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கை அரசு இந்த விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பõடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவ ரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டி ருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.

அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
வீரகேசரி வாரவெளியீடு

Sunday, June 28, 2009

இந்தியா - சீனா - சிறிலங்கா: "ஆழமான பார்வை"

இந்தியா – சீன மறைமுக போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துகளையும் இரண்டு நாடுகளிடமும் அடகு வைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்த இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டு பெற்றுக்கொள்வதில் காட்டிய முனைப்பும் அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களும் சிங்களத்துக்கு சார்பாக நடைபெற்று முடிந்து இன்னமும் அதன் தூவானங்கள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்றுவருதை காணலாம்.
கடற்படை ஆதிக்கம், அணு ஆயுத போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டு போட்டி, அயல் நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக நடைபெற்று வருகின்றன.
இவற்றில் இலங்கையை மையமாக கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.
இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலை திட்ட உதவி, மன்னார் எண்ணெய் வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்ட நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக காணப்படுவது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம். இது சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்றும் அதன் ஏக சிந்தனையில் சிதறிய நீண்டகால கனவும் கூட.
சீனா தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திர பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களை தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்திவருகிறது.
அந்தவகையில் பாகிஸ்தானுடனான தனது உறவை பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் விழுத்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.
தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் இருந்த இலங்கை, இப்படியெல்லாம் கூட்டு சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.
ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திர போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.
உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் சீனா எப்போதுமே அதிரடியாக – சத்தம் சந்தடியின்றி – தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டி கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.
இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -
அப்படிப்பட்ட சீனா அயல் நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்று கொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச படை வலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -
சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.
படைவலு பரிசோதனை
இந்திய படைத்துறையை பொறுத்தவரை அதனிடம் உள்ள மிகத்திறமான படைக்கலம் என்றால் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.
~அக்னி, ~ப்ருதிவி என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறது.
அதேபோல, வான் படையை பார்க்கப்போனால் ~மிராஜ் எனப்படும் - ஈழத் தமிழர்கள் தமது வாழ்நாளில் மறக்கமுடியாத - போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான் கலங்களாக உள்ளன.
ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய உண்மை.
அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய சுமார் 20 கடற்கலங்கள் தரிக்கக்கூடிய இந்த தளம் ~ஜேம்ஸ் பொண்ட் படங்களில் வருவதுபோன்ற தோற்றப்பாடு கொண்டது என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான அணு ஆயுத ஏவுகiணை வலுக்கொண்ட கடற்கலங்கள் கடலுக்கடியில் நிறுத்திவைக்கக்கூடியவை மட்டுமல்லாமல் அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று வெடித்தால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வந்து தாக்கி ஒரு கண்டத்தையே துவம்சம் பண்ணக்கூடிய அணு ஆயுத ஏவுகணை கப்பல்களை சீனா இரகசியமாக தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் போரியல் நோக்கர்கள்.
இந்த அணு ஆயுத கப்பல்கள் கடலுக்கடியில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் இரகசியமாக பயணம் செய்து எந்த நாட்டின் துறைமுகத்துக்கு அடியில் வந்து நின்றாலும் உடனடியாக அவற்றை கண்டுபிடிப்பது மிகக்கடினம்.
இதனால்தான், சீனா இன்று இலங்கை பக்கம் தலைகாட்டி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் ~குய்யோ முறையோ என்று இந்தியா கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறது.
இலங்கை துறைமுகங்களில் கடலுக்கடியில் வந்து நிற்கக்கூடிய சீனாவின் அணு ஆயுத கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்துகொள்ளும் என்றும் -
அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இலங்கையிடம் சொல்லி அழுமளவுக்கு தற்போது இந்தியாவின் கதி அதோ கதியாகியிருக்கிறது.
சீனாவுடன் போட்டி போட்டு நீருக்கடியில் அணு ஆயுத போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் கடற்படை உள்ளதா என்று பார்த்தால், அந்த முயற்சியில் இந்தியா இப்போதுதான் அரிவரி நிலையிலிருக்கிறது.
1970-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணை கடற்கலங்கள் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள் இன்னமும் அந்த நிலையிலிருந்து பெரிதாக நகரவில்லை.
சீனாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டெழுந்து இப்போதுதான் சுதாரித்துக்கொண்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இந்திய கடற்படை வலு
இதன் ஆரம்ப கட்டமாக, தனது போர்க்கப்பல்களிலிருந்து ~கே-15 ஏவுகணையை ஏவி பரிசோதிக்கும் ~சாகரிக்கா என்ற பெயரிடப்பட்ட முயற்சியை இந்த ஆண்டு மேற்கொள்ளப்போவதாகவும், அதன்பின்னர் படிப்படியாக அணு ஆயுத ஏவுதிறன் குறித்த முயற்சிகளில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்காக, 650 மில்லியன் டொலர் செலவில் 12,000 தொன் எடையுள்ள ~அகுலா -2 என்ற அணு ஆயுத ஏவுகணை கப்பலை தனது உற்ற நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்க முன்னர் திட்டமிட்ட இந்தியா, தற்போது அதே இரகத்தில் புதிய வசதிகளுடன் கூடிய இன்னொரு கப்பலையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள பாரிய கடற்கலங்களை கணக்கிலெடுத்தால் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ~ஐ.என்.எஸ்.ஜலஷ்வா என்ற விமானம் தாங்கி கப்பல் சுமார் 36 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதை விட பெரிய விமானம் தாங்கி கப்பல் ~ஐ.என்.எஸ்.விராத். இவை இரண்டும்தான் குறிப்பிடக்கூடியவை
(தனது பழைய கப்பல்களை அமெரிக்கா இந்தியாவின் தலையில் கட்டிவிடுவதும் அதேபோல இந்தியா இலங்கையின் தலையில் கட்டிவிடுவதும் காலகாலமாக நடைபெற்றுவரும் ஒன்றுதான். தற்போது இலங்கையிடம் உள்ள ~எஸ்.எல்.என்.எஸ்.சயுர, ~சமுத்ரா, ~வரகா போன்றவை ஆளாளுக்கு மாறி மாறி பரிசளித்த பழைய சமான்கள்தான்)
இந்த பழைய தாரை தப்பட்டைகளை வைத்துக்கொண்டு சீனாவின் கடற்படையுடன் போட்டியிட முடியாது என்பதை புரிந்துகொண்ட இந்தியாவின் கடற்படை, தற்போது தன்னிடமுள்ள 23 பாரிய கடற்கலங்கள் கொண்ட படையை விரிவாக்கம் செய்ய பெருமெடுப்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அடுத்த 15 வருடங்களில் இந்திய கடற்படையில் 40 புதிய போர்க்கப்பல்களை இணைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு 12 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வழியிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முறியடிப்பதற்காக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீருக்கடியில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, 14 முதல் 16 பில்லியன் டொலர் செலவில் 24 நீரடி கண்காணிப்பு கலங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது.
அதேவேளை, தற்போதைக்கு தன்னிடமுள்ள சாதாரண ஏவுகணைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலுக்கு பதில் சொல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
கப்பலில் இருந்தும் தரையிலிருந்து ஏவக்கூடிய இந்தியாவின் ~பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான மேலதிக முன்னேற்றகர திட்டங்கள் தொடர்பான தனது முயற்சிகளிலும் முனைப்படைந்திருக்கிறது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அண்மையில் இந்தியா சோதனை செய்த ~அக்னி-3 என்ற தரையிலிருந்து ஏவும் ஏவுகணை 3,500 கிலோமீற்றர் பாய்ந்த சென்று தாக்குதல் நடத்தக்கூடியது. ஆனால், சீனாவிடமுள்ள ஏவுகணைகள் 11,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடியது.
சீனாவின் இந்த கன கடூரமான வளர்ச்சி மிக்க கடற்படை, இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை அதன் கைகளில் கொண்டுவருவதற்கு தாராளமாக போதும். ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக – ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் என்பதற்காக - இன்னமும் கனவை மட்டும் கண்டுகொண்டிருக்கும் இந்தியா, காரியங்களில் இறங்குவதில் காட்டியுள்ள தாமதம் அதன் பின்னடைவுக்கே வழிவகுத்திருக்கிறது.
அணில் ஏறவிட்ட.....
ஆகவே, தனது கடற்படையின் வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்பம் ஏற்படும்வரை, சீனாவின் ஆதிக்கப்பிடியை தனது இராஜதந்திரப் போரின் மூலம் முறியடித்து, தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கே இந்தியா அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.
இந்தவகையில், இலங்கை மீதான இந்தியாவின் கவலை முன்னர் குறிப்பிட்டதுபோல காலாவதியான ஒன்று. அன்று அன்னை இந்திராவுடன் முரண்டு பிடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் சென்று அது மறுக்க இஸ்ரேல் ஊடாகவும் இதர நாடுகள் ஊடகவும் ஆயுதங்களை உருவிக்கொண்ட ஜே.ஆரின் பாணியிலேயே, இன்று மகிந்த அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ~தேனிலவு கொண்டாடுகிறது.
கைமீறிப்போன இந்த நிலைவரத்தை மீண்டும் கையகப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம்தான் ஈழத்தமிழர் விவகாரம். அதில் தலையிட்டு தமிழருக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு நிலைமையை இந்தியா உருவாக்கி சிறிலங்காவை கொஞ்சமாவது தனது பிடிக்குள்ள வைத்திருக்ககூடிய சூழ்நிலை உருவானபோதும், புலிகளையும் அழிக்கவேண்டும் அதேவேளை சீனாவையும் எதிர்க்கவேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நின்று இந்தியா காண்பித்த அரைவேக்காட்டு இராஜதந்திர கொள்கை இன்று அதன் நிலையை அணிலை ஏறவிட்ட நாயின் நிலைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது.
முன்னமே கூறியதுபோல இது காலம் கடந்த கவலை. இனிமேல் கச்சதீவில் கடற்படைத்தளம் என்ன? தூத்துக்குடியில் தும்புத்தொழிற்சாலை கட்டப்போகிறோம் என்று சிறிலங்கா கூறினால் கூட இந்தியப் பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து - எமக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல - சிரித்துக்கொண்டே மகிந்தவுக்கு கைலாகு கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலைதான்.
நன்றி
ப.தெய்வீகன் -

Saturday, June 27, 2009

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் - சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம் என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளைக்கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ~ஈழம் என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவமான கட்சிகள் - அமைப்புக்கள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப்படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது.
இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும்.
சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ - இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இது போன்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததை மறந்துவிட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி - சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப்படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும், அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டுவந்துவிட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு – அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...?. நன்றி: ~நிலவரம்