இந்தியா – சீன மறைமுக போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துகளையும் இரண்டு நாடுகளிடமும் அடகு வைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்த இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டு பெற்றுக்கொள்வதில் காட்டிய முனைப்பும் அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களும் சிங்களத்துக்கு சார்பாக நடைபெற்று முடிந்து இன்னமும் அதன் தூவானங்கள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்றுவருதை காணலாம்.
கடற்படை ஆதிக்கம், அணு ஆயுத போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டு போட்டி, அயல் நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக நடைபெற்று வருகின்றன.
இவற்றில் இலங்கையை மையமாக கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.
இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலை திட்ட உதவி, மன்னார் எண்ணெய் வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்ட நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக காணப்படுவது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம். இது சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்றும் அதன் ஏக சிந்தனையில் சிதறிய நீண்டகால கனவும் கூட.
சீனா தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திர பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களை தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்திவருகிறது.
அந்தவகையில் பாகிஸ்தானுடனான தனது உறவை பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் விழுத்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.
தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் இருந்த இலங்கை, இப்படியெல்லாம் கூட்டு சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.
ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திர போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.
உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் சீனா எப்போதுமே அதிரடியாக – சத்தம் சந்தடியின்றி – தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டி கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.
இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -
அப்படிப்பட்ட சீனா அயல் நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்று கொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச படை வலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -
சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.
படைவலு பரிசோதனை
இந்திய படைத்துறையை பொறுத்தவரை அதனிடம் உள்ள மிகத்திறமான படைக்கலம் என்றால் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.
~அக்னி, ~ப்ருதிவி என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறது.
அதேபோல, வான் படையை பார்க்கப்போனால் ~மிராஜ் எனப்படும் - ஈழத் தமிழர்கள் தமது வாழ்நாளில் மறக்கமுடியாத - போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான் கலங்களாக உள்ளன.
ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய உண்மை.
அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய சுமார் 20 கடற்கலங்கள் தரிக்கக்கூடிய இந்த தளம் ~ஜேம்ஸ் பொண்ட் படங்களில் வருவதுபோன்ற தோற்றப்பாடு கொண்டது என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான அணு ஆயுத ஏவுகiணை வலுக்கொண்ட கடற்கலங்கள் கடலுக்கடியில் நிறுத்திவைக்கக்கூடியவை மட்டுமல்லாமல் அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று வெடித்தால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வந்து தாக்கி ஒரு கண்டத்தையே துவம்சம் பண்ணக்கூடிய அணு ஆயுத ஏவுகணை கப்பல்களை சீனா இரகசியமாக தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் போரியல் நோக்கர்கள்.
இந்த அணு ஆயுத கப்பல்கள் கடலுக்கடியில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் இரகசியமாக பயணம் செய்து எந்த நாட்டின் துறைமுகத்துக்கு அடியில் வந்து நின்றாலும் உடனடியாக அவற்றை கண்டுபிடிப்பது மிகக்கடினம்.
இதனால்தான், சீனா இன்று இலங்கை பக்கம் தலைகாட்டி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் ~குய்யோ முறையோ என்று இந்தியா கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறது.
இலங்கை துறைமுகங்களில் கடலுக்கடியில் வந்து நிற்கக்கூடிய சீனாவின் அணு ஆயுத கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்துகொள்ளும் என்றும் -
அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இலங்கையிடம் சொல்லி அழுமளவுக்கு தற்போது இந்தியாவின் கதி அதோ கதியாகியிருக்கிறது.
சீனாவுடன் போட்டி போட்டு நீருக்கடியில் அணு ஆயுத போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் கடற்படை உள்ளதா என்று பார்த்தால், அந்த முயற்சியில் இந்தியா இப்போதுதான் அரிவரி நிலையிலிருக்கிறது.
1970-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணை கடற்கலங்கள் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள் இன்னமும் அந்த நிலையிலிருந்து பெரிதாக நகரவில்லை.
சீனாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டெழுந்து இப்போதுதான் சுதாரித்துக்கொண்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இந்திய கடற்படை வலு
இதன் ஆரம்ப கட்டமாக, தனது போர்க்கப்பல்களிலிருந்து ~கே-15 ஏவுகணையை ஏவி பரிசோதிக்கும் ~சாகரிக்கா என்ற பெயரிடப்பட்ட முயற்சியை இந்த ஆண்டு மேற்கொள்ளப்போவதாகவும், அதன்பின்னர் படிப்படியாக அணு ஆயுத ஏவுதிறன் குறித்த முயற்சிகளில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்காக, 650 மில்லியன் டொலர் செலவில் 12,000 தொன் எடையுள்ள ~அகுலா -2 என்ற அணு ஆயுத ஏவுகணை கப்பலை தனது உற்ற நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்க முன்னர் திட்டமிட்ட இந்தியா, தற்போது அதே இரகத்தில் புதிய வசதிகளுடன் கூடிய இன்னொரு கப்பலையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள பாரிய கடற்கலங்களை கணக்கிலெடுத்தால் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ~ஐ.என்.எஸ்.ஜலஷ்வா என்ற விமானம் தாங்கி கப்பல் சுமார் 36 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதை விட பெரிய விமானம் தாங்கி கப்பல் ~ஐ.என்.எஸ்.விராத். இவை இரண்டும்தான் குறிப்பிடக்கூடியவை
(தனது பழைய கப்பல்களை அமெரிக்கா இந்தியாவின் தலையில் கட்டிவிடுவதும் அதேபோல இந்தியா இலங்கையின் தலையில் கட்டிவிடுவதும் காலகாலமாக நடைபெற்றுவரும் ஒன்றுதான். தற்போது இலங்கையிடம் உள்ள ~எஸ்.எல்.என்.எஸ்.சயுர, ~சமுத்ரா, ~வரகா போன்றவை ஆளாளுக்கு மாறி மாறி பரிசளித்த பழைய சமான்கள்தான்)
இந்த பழைய தாரை தப்பட்டைகளை வைத்துக்கொண்டு சீனாவின் கடற்படையுடன் போட்டியிட முடியாது என்பதை புரிந்துகொண்ட இந்தியாவின் கடற்படை, தற்போது தன்னிடமுள்ள 23 பாரிய கடற்கலங்கள் கொண்ட படையை விரிவாக்கம் செய்ய பெருமெடுப்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அடுத்த 15 வருடங்களில் இந்திய கடற்படையில் 40 புதிய போர்க்கப்பல்களை இணைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு 12 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வழியிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முறியடிப்பதற்காக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீருக்கடியில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, 14 முதல் 16 பில்லியன் டொலர் செலவில் 24 நீரடி கண்காணிப்பு கலங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது.
அதேவேளை, தற்போதைக்கு தன்னிடமுள்ள சாதாரண ஏவுகணைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலுக்கு பதில் சொல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
கப்பலில் இருந்தும் தரையிலிருந்து ஏவக்கூடிய இந்தியாவின் ~பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான மேலதிக முன்னேற்றகர திட்டங்கள் தொடர்பான தனது முயற்சிகளிலும் முனைப்படைந்திருக்கிறது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அண்மையில் இந்தியா சோதனை செய்த ~அக்னி-3 என்ற தரையிலிருந்து ஏவும் ஏவுகணை 3,500 கிலோமீற்றர் பாய்ந்த சென்று தாக்குதல் நடத்தக்கூடியது. ஆனால், சீனாவிடமுள்ள ஏவுகணைகள் 11,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடியது.
சீனாவின் இந்த கன கடூரமான வளர்ச்சி மிக்க கடற்படை, இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை அதன் கைகளில் கொண்டுவருவதற்கு தாராளமாக போதும். ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக – ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் என்பதற்காக - இன்னமும் கனவை மட்டும் கண்டுகொண்டிருக்கும் இந்தியா, காரியங்களில் இறங்குவதில் காட்டியுள்ள தாமதம் அதன் பின்னடைவுக்கே வழிவகுத்திருக்கிறது.
அணில் ஏறவிட்ட.....
ஆகவே, தனது கடற்படையின் வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்பம் ஏற்படும்வரை, சீனாவின் ஆதிக்கப்பிடியை தனது இராஜதந்திரப் போரின் மூலம் முறியடித்து, தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கே இந்தியா அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.
இந்தவகையில், இலங்கை மீதான இந்தியாவின் கவலை முன்னர் குறிப்பிட்டதுபோல காலாவதியான ஒன்று. அன்று அன்னை இந்திராவுடன் முரண்டு பிடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் சென்று அது மறுக்க இஸ்ரேல் ஊடாகவும் இதர நாடுகள் ஊடகவும் ஆயுதங்களை உருவிக்கொண்ட ஜே.ஆரின் பாணியிலேயே, இன்று மகிந்த அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ~தேனிலவு கொண்டாடுகிறது.
கைமீறிப்போன இந்த நிலைவரத்தை மீண்டும் கையகப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம்தான் ஈழத்தமிழர் விவகாரம். அதில் தலையிட்டு தமிழருக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு நிலைமையை இந்தியா உருவாக்கி சிறிலங்காவை கொஞ்சமாவது தனது பிடிக்குள்ள வைத்திருக்ககூடிய சூழ்நிலை உருவானபோதும், புலிகளையும் அழிக்கவேண்டும் அதேவேளை சீனாவையும் எதிர்க்கவேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நின்று இந்தியா காண்பித்த அரைவேக்காட்டு இராஜதந்திர கொள்கை இன்று அதன் நிலையை அணிலை ஏறவிட்ட நாயின் நிலைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது.
முன்னமே கூறியதுபோல இது காலம் கடந்த கவலை. இனிமேல் கச்சதீவில் கடற்படைத்தளம் என்ன? தூத்துக்குடியில் தும்புத்தொழிற்சாலை கட்டப்போகிறோம் என்று சிறிலங்கா கூறினால் கூட இந்தியப் பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து - எமக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல - சிரித்துக்கொண்டே மகிந்தவுக்கு கைலாகு கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலைதான்.
நன்றி
ப.தெய்வீகன் -
Sunday, June 28, 2009
இந்தியா - சீனா - சிறிலங்கா: "ஆழமான பார்வை"
Posted by tamil at 7:46 PM 2 comments
Saturday, June 27, 2009
தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்
இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் - சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம் என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளைக்கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ~ஈழம் என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவமான கட்சிகள் - அமைப்புக்கள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப்படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது.
இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும்.
சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ - இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இது போன்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததை மறந்துவிட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி - சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப்படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும், அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டுவந்துவிட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு – அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...?. நன்றி: ~நிலவரம்
Posted by tamil at 9:45 PM 1 comments
Thursday, June 25, 2009
ஆபத்துக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்
நாட்டின் அரசமைப்பினால் எழுத்தில் உறுதிசெய் யப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் பிரதானமானது ஊடக சுதந்திரம்.
இக்கட்டான நிலையில் நாடு சிக்கித் தவிக்கும் இன்றைய கட்டத்தில், நாட்டில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி யுள்ள முக்கிய பிரிவாக ஊடகத் துறையே உள்ளது.
உலகில் ஊடகங்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் முன்னிலை இடம் இலங்கைக்கு கிடைத்திருக்கிறது.
ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை தொண்ணூறு களின் ஆரம்பத்தில் காணப்பட்ட இருண்ட யுகமே இன்று நாட்டில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது என்பது வெளிப் படையானது.
கடந்த மூன்றரை ஆண்டுகால இந்த ஆட்சியில் ஊட கங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறைகள் மிகவும் மோசமானவை. இக்கொடூரங்களைப் புரிந்த குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டனர் எனத் தகவல் இல்லை. ஊடகங்களையும் ஊடக வியலாளர்களையும் தாக்கி வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு சட்ட விலக்களிக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள நாடு இதுவோ என உலகம் இலங்கை யைப் பார்த்துப் பரிகசிக்கும் அளவுக்கு இங்கு ஊடக சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கின்றது(?).இந்த நிலையில், இப்போது ஊடக சுதந்திரத்துக்கு இறுதி ஆப்பு வைக்கும் எத்தனத்தை அரசு எடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஊடக வெளியீட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சிறை, அபராதம் போன்ற குற்றத் தண்டனைகளை விதிப்பதற்கு வழி செய்யும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்துக்கு (Press Council Law) மீள உயிர்கொடுத்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தலைமையிலான அரசு எடுத்திருக்கும் தீர்மானமே, இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் சவப்பெட்டிக்கு அறையப்படும் இறுதி ஆணியாகக் கருதப் படுகின்றது.ஊடக சுதந்திரத்துக்கு நிரந்தர வேட்டு வைக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியை இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகைகள் சமூகம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகங்களின் கட்டமைப்பு, முஸ்லிம் ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தெற்காசிய சுயாதீன ஊடக அமைப்பு (இலங்கைப் பிரிவு), சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்த்துக்குரல் எழுப்பி இருக்கின்றன.
ஊடகங்களின் குரல்வளையை முற்றாக நசுக்கி அடக்கும் முயற்சியின் ஆரம்பமே இந்தச்சட்டத்திற்கு மீள உயிர் கொடுக்கும் அரசின் தற்போதைய எத்தனம் என விசனத்தோடு அவை சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேற்படி அரசினால் மீள உயிர்கொடுக்கத் திட்டமிடப் படும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் முன்னைய அனுபவம் மிக மோசமானது. ஊடக சுதந்திரத்தில் அது ஏற்படுத்திய பயங்கரப் பட்டறிவு மறக்கற்பாலானதல்ல. இந்தப் பின்னணியிலேயே 1994 ஒக்ரோபரில் இந்த சட்டத்தை செயலிழக்கச்செய்யும் விதத்திலான புதிய ஏற்பாடு ஒன்றைக் கொண்டு வருவதற்கு அப்போதைய அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தது.
ஊடகவியலாளர்களையும், வெளியீட்டாளர்களையும் நெறிமுறைப்படுத்துவதற்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டங்களை விட, ஊடகவியலாளர்களையும் ஏனைய ஊடகத்தரப்புக்களையும் கொண்ட சுயகட்டமைப்பு முறையே சிறந்தது என அமைச்சரவை அச்சமயம் கருதியதால் அத்தகைய முறைமைக்கு வழி செய்யப்பட்டது. இதனடிப்படையில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (Press Complaints commission)) நிறுவப்பட்டு, அது வெற்றிகரமாக செயற்பட்டும் வருகிறது.
இதேசமயம், முன்னைய கொடூரமான போக்குடைய பத்திரிகைப் பேரவை சட்டத்தை செயலிழக்கச் செய்து மாற்று ஏற்பாட்டை முன்மொழியும் 1994 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டபோது அந்த அமைச்சரவையில் தற்போதைய அரசுத்தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும் மூத்த அமைச்சராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப்பின்னர், 2002 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக அவர்களைக் கிரிமி னல் குற்றப்பொறுப்பாக்கும் சட்டமுறைமை அடியோடு நீக்கப்பட்டு ஊடக சுதந்திரத்துக்கு மெருகூட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊடகத்துறையினராலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாலும் இந்த நடவடிக்கை விதந்துரைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டது.
இதற்கான சட்டத்திருத்தம் 2002 ஜுனில் நாடா ளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது அது அப் போதைய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பினால் ஏகம னதாக வரவேற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கி இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்தவர் இப்போதைய ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ஆதிக்கப் பதவியைக் கையில் எடுக்கும் வரை மனித உரிமைகளுக்காகவும் ஊடக சுதந்திரம் உட்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும் போராடிய "மனித உரிமைப்போராளி யாக" தன்னை உலகிற்கு இனங்காட்டிய இந்தத் தலைவரின், இப்போதைய நோக்கும் போக்கும் இப்போதுதான் மெல்லமெல்ல வெளிப்படுகின்றது போலும்....!
முன்னாள் மனித உரிமைப்போராளியின் ஆட்சி அதி காரத்தில் இப்படி மனித உரிமைகள் சவக்குழிக்குள் போவது வெளியாருக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தாலும் ஏனையோருக்கு எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான். கட்டுமட்டில்லாத அதிகாரம் கைக்கு வருவது இத்தகைய நிலையை நோக்கித்தான் யாரையும் நகர்த்தும் என்பது ஊகிக்கத்தக்கதே.
நன்றி
உதயன்
Posted by tamil at 9:03 AM 0 comments
