Thursday, June 25, 2009

ஆபத்துக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்

நாட்டின் அரசமைப்பினால் எழுத்தில் உறுதிசெய் யப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் பிரதானமானது ஊடக சுதந்திரம்.
இக்கட்டான நிலையில் நாடு சிக்கித் தவிக்கும் இன்றைய கட்டத்தில், நாட்டில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி யுள்ள முக்கிய பிரிவாக ஊடகத் துறையே உள்ளது.
உலகில் ஊடகங்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் முன்னிலை இடம் இலங்கைக்கு கிடைத்திருக்கிறது.
ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை தொண்ணூறு களின் ஆரம்பத்தில் காணப்பட்ட இருண்ட யுகமே இன்று நாட்டில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது என்பது வெளிப் படையானது.
கடந்த மூன்றரை ஆண்டுகால இந்த ஆட்சியில் ஊட கங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறைகள் மிகவும் மோசமானவை. இக்கொடூரங்களைப் புரிந்த குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டனர் எனத் தகவல் இல்லை. ஊடகங்களையும் ஊடக வியலாளர்களையும் தாக்கி வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு சட்ட விலக்களிக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள நாடு இதுவோ என உலகம் இலங்கை யைப் பார்த்துப் பரிகசிக்கும் அளவுக்கு இங்கு ஊடக சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கின்றது(?).இந்த நிலையில், இப்போது ஊடக சுதந்திரத்துக்கு இறுதி ஆப்பு வைக்கும் எத்தனத்தை அரசு எடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஊடக வெளியீட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சிறை, அபராதம் போன்ற குற்றத் தண்டனைகளை விதிப்பதற்கு வழி செய்யும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்துக்கு (Press Council Law) மீள உயிர்கொடுத்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தலைமையிலான அரசு எடுத்திருக்கும் தீர்மானமே, இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் சவப்பெட்டிக்கு அறையப்படும் இறுதி ஆணியாகக் கருதப் படுகின்றது.ஊடக சுதந்திரத்துக்கு நிரந்தர வேட்டு வைக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியை இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகைகள் சமூகம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகங்களின் கட்டமைப்பு, முஸ்லிம் ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தெற்காசிய சுயாதீன ஊடக அமைப்பு (இலங்கைப் பிரிவு), சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்த்துக்குரல் எழுப்பி இருக்கின்றன.
ஊடகங்களின் குரல்வளையை முற்றாக நசுக்கி அடக்கும் முயற்சியின் ஆரம்பமே இந்தச்சட்டத்திற்கு மீள உயிர் கொடுக்கும் அரசின் தற்போதைய எத்தனம் என விசனத்தோடு அவை சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேற்படி அரசினால் மீள உயிர்கொடுக்கத் திட்டமிடப் படும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் முன்னைய அனுபவம் மிக மோசமானது. ஊடக சுதந்திரத்தில் அது ஏற்படுத்திய பயங்கரப் பட்டறிவு மறக்கற்பாலானதல்ல. இந்தப் பின்னணியிலேயே 1994 ஒக்ரோபரில் இந்த சட்டத்தை செயலிழக்கச்செய்யும் விதத்திலான புதிய ஏற்பாடு ஒன்றைக் கொண்டு வருவதற்கு அப்போதைய அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தது.
ஊடகவியலாளர்களையும், வெளியீட்டாளர்களையும் நெறிமுறைப்படுத்துவதற்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டங்களை விட, ஊடகவியலாளர்களையும் ஏனைய ஊடகத்தரப்புக்களையும் கொண்ட சுயகட்டமைப்பு முறையே சிறந்தது என அமைச்சரவை அச்சமயம் கருதியதால் அத்தகைய முறைமைக்கு வழி செய்யப்பட்டது. இதனடிப்படையில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (Press Complaints commission)) நிறுவப்பட்டு, அது வெற்றிகரமாக செயற்பட்டும் வருகிறது.
இதேசமயம், முன்னைய கொடூரமான போக்குடைய பத்திரிகைப் பேரவை சட்டத்தை செயலிழக்கச் செய்து மாற்று ஏற்பாட்டை முன்மொழியும் 1994 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டபோது அந்த அமைச்சரவையில் தற்போதைய அரசுத்தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும் மூத்த அமைச்சராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப்பின்னர், 2002 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக அவர்களைக் கிரிமி னல் குற்றப்பொறுப்பாக்கும் சட்டமுறைமை அடியோடு நீக்கப்பட்டு ஊடக சுதந்திரத்துக்கு மெருகூட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊடகத்துறையினராலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாலும் இந்த நடவடிக்கை விதந்துரைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டது.
இதற்கான சட்டத்திருத்தம் 2002 ஜுனில் நாடா ளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது அது அப் போதைய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பினால் ஏகம னதாக வரவேற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கி இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்தவர் இப்போதைய ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ஆதிக்கப் பதவியைக் கையில் எடுக்கும் வரை மனித உரிமைகளுக்காகவும் ஊடக சுதந்திரம் உட்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும் போராடிய "மனித உரிமைப்போராளி யாக" தன்னை உலகிற்கு இனங்காட்டிய இந்தத் தலைவரின், இப்போதைய நோக்கும் போக்கும் இப்போதுதான் மெல்லமெல்ல வெளிப்படுகின்றது போலும்....!
முன்னாள் மனித உரிமைப்போராளியின் ஆட்சி அதி காரத்தில் இப்படி மனித உரிமைகள் சவக்குழிக்குள் போவது வெளியாருக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தாலும் ஏனையோருக்கு எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான். கட்டுமட்டில்லாத அதிகாரம் கைக்கு வருவது இத்தகைய நிலையை நோக்கித்தான் யாரையும் நகர்த்தும் என்பது ஊகிக்கத்தக்கதே.
நன்றி
உதயன்

0 Comments: