Wednesday, June 10, 2009

"வணங்கா மண் "பொருள்களுக்கு நேர்ந்த கதி!

போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென உணவுப் பொருள்கள், மருந்துப்பொருள்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு உதவி உபகரணங்கள் என்பவற்றை எடுத்து வந்த கப்டன் அலி என்ற "வணங்கா மண் "கப்பல், இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

போரினால் நிர்க்கதியற்று நிற்கும் தமது உறவுகளுக்கு, தொலைதேசத்தில் வாழ்ந்தாலும் உதவ வேண்டும் என்ற பாசஉணர்வுடன் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வழங்கிய பொருள் களையே "வணங்கா மண் "கப்பல் ஏற்றி வந்தது. உறவினர்கள் என்று மட்டும் இல்லாமல் உணவுக்கும் மருந்துக்கும் வழியின்றி தமது சொந்தங்கள் செத்து மடிந்துவிடக்கூடாது என்ற மனித உணர்வுடன் அனுப்பப்பட்ட உதவிப் பொருள்கள் அவை.

முல்லைத்தீவில் போர் பெருமெடுப்பில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்கள் சேகரித்த உதவிப் பொருள்கள் அவை. அல்லல் உற்று ஒரு நேரக் கஞ்சிக்கும் வசதியின்றி இருந்த தமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுடன், வாஞ்சையுடன் புலம் பெயர் தமிழ் மக்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருள் களுடனேயே "வணங்கா மண் "பிரான்ஸிலிருந்து இலங்கை நோக்கிப் பயணமானது.

வன்னித் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கான உணவு, மருந்து மற்றும் பொருள்கள் பிரிட்டன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி என்ற பெருவரிசைநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களால் உதவிப்பொருள் களென இரகசியமாக அன்றிப் பரகசியமாக வே சேகரிக் கப்பட்டன. அதுதொடர்பான தகவல்கள் உலகளாவியரீதியில் ஊடகங்களில் பிரசித்தப்பட்டிருந்தன.

"வணங்கா மண் "ஏற்றி வந்தபொருள்கள் இரகசியமாக வோ சட்டவிரோதமாக வோ திரட்டப்பட்டவை அல்ல. அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் பெருந்தன்மை யோடும் தாராள மனதுடனும் அனுமதியோடும் அவை சேகரிக்கப்பட்டன. மிகக்குறிப்பாகப் பாதிக்கப்பட்ட வேற்று நாட்டு மக்கள் மீது கொண்ட இரக்கம், தாராள மனதுடன் அந்நாட்டுப் பிரசைகளும் தாமாக பரோப காரம் செய்தனர்.

ஆனால், தமிழ் மக்களைத் தனது சொந்த மக்க ளென்று உரிமைகொண்டாடும் இலங்கை அரசாங்கம், மனித நேயத்துடன் சேகரிக்கப்பட்ட பொருள்களை கப்பலில் இருந்து இறக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க மனம் இரங்கவில்லை.

இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, மனிதனால் தோற்றுவிக்கப்படும் செயற்கை அழிவுகளின் போதும் சரி, தேச, இன, மதம் பாராது, பாகுபாடு காட்டாமல் நிர்க்கதிக்கு ஆளாகி அந்தரிக்கும் மக்களுக்கு மனிதாபிமான இதயத்துடன் உதவுவது மனிதனுக்குள்ள இயற்கையான இயல்பு. அது வே மனிதத்துவ மும் விசேட குணாம்சமும் ஆகும். அதனைச் செய்யத் தயங்குபவர்கள் மனிதர்கள் என்ற வகுப்புக்குள் அடக்கப்பட முடியாதவர்கள். ஏனெனில், ஐந்தறிவு ஜீவன் கள் கூட அடுத்த ஜீவன் துடிப்பதை பொறுக்கமுடியாது அவலக்குரல் எழுப்பி மற்றவற்றை அழைக்கும் இயல்பு கொண்டவை.

புலம்பெயர் தமிழ் மக்கள் பாசஉணர்வோடும், மனித நேயத்துடனும் அனுப்பிய உதவிப் பொருள்களைக் கொண்டுவந்த கப்பல் அவற்றை மீண்டும் எடுத்துச் செல்கின்றது என்றால், இந்த நாட்டில் புத்தபெருமான் போதித்த தத்துவங்களும் மனித நேயமும் ஜீவ காருண்யமும் முற்றாகவே அற்றுப்போய்விட்டன என்பதற்கான குறியீடே எனக் கருதவைப்பதாகும்.
அதுவும், இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்க போதிய நிதி வளமும் ஏனைய வளங்களும் "கம்மி "என்று ஒப்பாரி வைக்கும் அரசு, பிறப்பால் இலங்கையரான புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பிய பொருள்களை திருப்பி அனுப்பியது எந்த வகையிலும் ஏற்கக்கூடி யதோ நியாயப்படுத்தவல்லதோ அல்ல!

நீண்ட நெடுந்தூரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட உதவிப் பொருள்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கமேஅதனை அகதிகளுக்கு விநியோகித்திருக்கலாம். வெளிநாட்டு அரசாங்கங்களிடமும் ஐ.நா.போன்ற சர்வதேசஅமைப்புக்களிடமும் நிதிக்கும் நிவாரணத் துக்கும் கையேந்தும், உதவிகளை எதிர்பார்க்கும் அரசு, புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை கப்பலுடன் திருப்பி அனுப்பியதை எந்த வகை மனித சமூக இயல்புக்குள் அடக்குவது என்பதனை தமிழர் களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் ஊடாக தமது உதவிப்பொருள்களை புலம்பெயர் மக்கள் உரிய வழி முறையில் நியமப்பிரகாரம் அனுப்பி இருந்தால், அதனை ஏற்று அகதிகளுக்கு விநியோகித்திருப்போம் என்று அரசாங்கம் நியாயம் கூறக்கூடும்.

எந்த விதிக்கும், நியமத்துக்கும் விதிவிலக்கு இல்லாமல் இல்லை. அது அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலை களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, மாற்றி அமைக்கப் படுவது உண்டு. புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது தாய் நாட்டில் உள்ள சொந்தங்களுக்கு, இரத்த உறவுகளுக்கு ஆபத்தான நேரத்தில், நிர்க்கதியான நேரத்தில் உதவும் பொருட்டு வழங்கிய பொருள் களைப் பெற்று இந்த அரசு வழங்குவதால் எந்த நெறி முறைக்கும் வழு வேறிவிடாது. அனுமதித்திருப்பின் அது மனித நேயத்தினதும் ஜீவகாருண்யத்தினதும் உச்சச் செயற்பாடாக அமைந்திருக்கும்.

போர் முடிந்துவிட்டது. வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் இங்கு திரும்பி, சொந்த நாட்டு வளர்ச்சிக்கு உதவலாம் என்று அறைகூவல் விடும் அரசுக்கு, புத்தபெருமான் போதித்த ஜீவகாருண் யம் புலம்பெயர் தமிழர்கள் சேகரித்த பொருள்களை ஏற்கும் விடயத்தில் எத்திசைமாறியது?

நன்றி
- உதயன் -

0 Comments: