Sunday, June 7, 2009

இலங்கை யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்வாங்கிக் கொண்டு யதார்த்தத்தை வெளிப்படுத்தாவிடின் இலங்கையில் வன் செயல்கள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் இது இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதிகள் வருகை தருவதற்கான காலத்தை பொறுத்த விடயம் மட்டுமே என இந்தியாவின் ஓய்வு பெற்ற கேணல் அனில் அக்தலே என்பவர் தெரிவித்திருக்கிறார்.
இது விடுதலைப்புலிகளின் முடிவா என்ற தலையங்கத்தில் ரெடிவ் கொம்மில் அவர் எழுதியிருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வமைப்பின் அநேகமான தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் இருப்பானது வட இலங்கையில் அரசாங்கம் போன்று செயற்பட்டது. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளின் முடிவானது தமிழ் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்து விடுமா என்பது பற்றியும் இலங்கைத் தீவில் அமைதி திரும்பி விடுமா என்பது தொடர்பிலும் தீர்மானமொன்றை எடுப்பது துரிதமான விடயமாக அமையும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பல கடுமையான தவறுகளை இழைத்துள்ளது. ராஜீவ் காந்தியின் படுகொலை அந்த அமைப்புக்கு எதிரான பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராயத்தை திசை திருப்பி விட்டிருந்தது. காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சியில் இல்லாத தருணத்திலும் கூட தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் புலிகளுடன் விடயங்களைக் கையால் துணியவில்லை.

1987இல் இலங்கை இராணுவத்தின் இன அழிப்பு உபாயங்களிலிருந்தும் தமிழர்களைப் பாதுகாக்கவே இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்றது. 1989 இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற போது, முறிவு ஏற்பட்டிருக்கவில்லை. இந்திய இராணுவத்துடன் அவ்வப்போது விடுதலைப்புலிகளின் உயர் மட்டம் உணவு உண்டதாக எனக்குக் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்தியாவின் நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டிருந்தது. இந்தியாவின் நோக்கம் தமிழர்களை பாதுகாப்பதற்கு மட்டுமேயன்றி தனி தமிழீழத்தை உருவாக்குவதற்கு அல்ல. இலங்கையின் ஐக்கியத்திற்கு இந்தியா உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழர்களுக்கு கௌரவத்தையும் அவர்களின் அடையாளத்துவம், கலாசாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான இடம் தமிழீழம் என்று புலிகள் கருதியிருந்தனர். அதன் அர்த்தம் முடிவுக்கு வந்து விட்டதை புலிகள் அச்சமயம் மறந்து விட்டிருந்தனர். "சகலதும் அல்லது ஒன்றுமில்லை' என்ற தந்திரோபாயத்திலேயே அவர்கள் கவனம் செலுத்தினர். அதனால், சகலவற்றையும் இழந்து யாழ்ப்பாண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னரான உலக நிலைமையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்ப்பதற்கு புலிகள் தவறிவிட்டனர். பிரிவினவாதம், பயங்கரவாதம் என்பவை தொடர்பான எந்தவொரு சகிப்புத் தன்மையும் இல்லாத நிலையில், உலக அபிப்பிராயம் ஏற்பட்டு உள்ளது. இலங்கையின் இராஜதந்திரமானது நன்கு தேர்ச்சி பெற்றதாகவும் தனது சொந்த கடும் போக்கை மறைத்து வைப்பதில் வெற்றிகரமாக செயற்படுவதாகவும் அமைந்ததுடன் சாத்தியமாளவுக்கு புலிகளை இருட்டுக்குள் தள்ளிவிட வைத்தது.

இறுதியில் கிளர்ச்சியின் அடிப்படை கொள்கைகளை மறந்து விடும் முயற்சியில் பிரபாகரன் கடுமையான விலையைச் செலுத்தியுள்ளார். விடுதலைப் புலிகள் தமது கெரில்லாப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தார்கள் என்பதும் அந்தப் போராட்டமானது இலங்கையின் ஒழுங்கமைப்புடன் கூடிய இராணுவத்துடன் பகிரங்கமாக மோதுவதற்குரிய ஆற்றலை கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மையாகும்.

ஆனால், சீனா மற்றும் பாகிஸ்தானியரின் உதவியுடன் இலங்கை தனது இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பியிருந்தது நட்புறவுகள் இல்லை என்பதை புலிகள் கண்டு கொண்டார்கள். இந்தியத் தேர்தல்களிடம் தமது நடவடிக்கையை புத்திசாலித்தனமான முறையில் இலங்கையர்கள் நேரப்பட்டியல் இட்டுக் கொண்டார்கள். தேர்தல் சமயம் இந்தியாவின் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டிருக்கும். அதனால், புலிகளை இராணுவ ரீதியில் முடிவு கட்டுவதற்கு இலங்கையர்களுக்கு கால அவகாசம் கிடைத்திருந்தது. அடுத்தது என்ன?

கிளர்ச்சியானது "அமீபா' போன்றது. அது வடிவங்களையும் அளவையும் மாற்றிக் கொள்வதையும் பெருக்கத்தையும் ஏற்படுத்தும். மேற்குலக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் நம்பிக்கைக்குரியவையாக இருந்தால் சுமார் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் தற்போதைய இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வட பிராந்தியம் முழுவதும் முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த அமைப்பானது பாலஸ்தீனிய "கறுப்பு செப்டெம்பர்' போன்று மீண்டும் பிறப்பு எடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடும். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஜோர்தானியர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் பின்னர் "கறுப்பு செப்டெம்பர்' தோற்றம் பெற்றது. அது விமானக் கடத்தல்கள் தொடக்கம் மத்திய கிழக்கில் பயங்கரவாதம் திடமாக உருமாற்றம் பெற ஆரம்பமாக அமைந்தது. இலங்கையின் கொடூரமான உபாயங்கள் இந்த விளைவை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக உண்மையான அச்சம் காணப்படுகின்றது.

இந்தியாவானது 6 சதாப்த காலங்களில் கிளர்ச்சிகளை எதிர் கொண்டுள்ளது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒருபோதும் இந்தியா ஆட்லறி அல்லது விமானப் பலத்தை பயன்படுத்தவில்லை. ஒருபோதுமே கனரக ஆயுதங்களைப் பிரயோகிக்கவில்லை. இங்கு பாகிஸ்தானிய சகோதரர்களை இலங்கையர் பின்பற்றியதாகத் தோன்றுகின்து. இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டிருந்த ஐரோப்பிய இராஜதந்திரி ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது இரு தரப்பும் கடும் போக்கை கடைப்பிடிப்பதாக அவர் கூறியிருந்தார். புலிகளின் ஈழக் கோரிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த அதேசமயம், சமஷ்டி கட்டமைப்பு முறைமையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை நேரடியாகவே நிராகரித்திருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரிடம் உரையாடிய போது இந்தியாவில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்து போன்று இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கினால் அநேகமான தமிழர்கள் திருப்தியடைவார்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இலங்கையிலுள்ள சிங்கள மக்களின் அபிப்பிராயமானது, ஒற்றை ஆட்சி முறையிலான அரசாங்கத்தின் மூலமே தேசிய ஐக்கியத்தை சமப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலான இந்த கடும் போக்கான அபிப்பிராயம் சமஷ்டி முறையிலான தீர்வு குறித்துப் பேசுவதை முழுமையாக நிராகரித்திருக்கிறது.

நீண்ட வரலாறு

சிங்கள, தமிழர் முரண்பாடானது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். கி.மு. 67இல் எல்லாள மன்னனுக்கும் இலங்கையின் துட்டகைமுனு மன்னனுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியாவைப் போன்று இலங்கையானது நன்கு முன்னேற்றமடைந்த அரசியல் கட்சிகளைக் கொண்டதாக இருக்கவில்லை. பௌத்த மதகுருமார் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கல்வி நிறுவனங்களில் பௌத்த மதகுமார் கொண்டிருந்த கட்டுப்பாடுகளின் ஊடாக இந்தச் செல்வாக்கு வலிமையாகக் காணப்பட்டது.

நேரடியாக அரசியல் ரீதியில் பங்களிப்பை அச்சமயம் பௌத்த மதகுருமார் வழங்க முன்வந்திருக்காத போதிலும் சுதந்திர இலங்கையானது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பௌத்த குருமாரின் கொள்கைகள் ஊடுருவிக் காணப்பட்டது. இதற்கான வாகனத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவும் அவரின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வழங்கியிருந்தன. சுதந்திரத்தின் போது இலங்கையிலிருந்த ஒவ்வொரு பாரிய குழுவினருமே பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக உணர்ந்து கொண்டனர். நாடு கடத்தப்படும். அச்சத்தை தோட்டத் தொழிலாளர்கள் கொண்டிருந்தனர். தமிழர்கள் பேசும் மொழியையே பேசும் முஸ்லிம்களும் அச்சப்பட்டனர். யாழ்ப்பாணத் தமிழர்களும் இணைந்து ஒன்றாகச் சேர்ந்து தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என சிங்களவர்கள் பயப்பட்டனர். பறங்கியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவில் இடம் பெயர்ந்தனர்.

சிங்களவர்கள் தமிழர்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிப்பதற்கான "நற்சான்றிதழ்' சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கின்றது. 1956இல் பௌத்த சிங்களவர்களில் அதிகளவுக்குத் தங்கியிருந்த பண்டாரநாயக்கா பல்லின தேசமாக இருந்த இலங்கையை பௌத்த சிங்கள தேசமாக மாற்றினார். அரச மதம் பௌத்தமாகவும் அரச மொழி சிங்களமாகவும் சட்டப்பூர்வமான பிரஜைகள் சிங்களவர்களாகவும் இதன் மூலம் மாற்றப்பட்டது.

இலங்கையின் தேசிய வாதமானது சிங்களவர்களுக்கு பிரத்தியேகமானதாக இருக்கின்றது என்பதால் பிரிவினைவாதமும் எதிர்ப்புணர்வும் தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்டது.

சிங்கள மேலாதிக்க வாதம் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்கள் மீதானதாக இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் மீதானதாகவே அது காணப்பட்டது. படிமுறையாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் நகர்த்தப்பட்டன. நாட்டைவிட்டுச் செல்லுதல் அல்லது நிறுவனங்களை மூடிவிடுதல் போன்ற நிலைமை கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.

அடுத்த இலக்காக 150 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்கள் காணப்பட்டனர். சிறப்பான முறையில் சிந்திக்கப்படாத சாஸ்திரி சிறிமாவோ ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் 100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது. சிங்களம் மட்டும் உத்தியோகப்பூர்வ மொழியானது தமிழ் மொழிக்கு உரிய இடத்தை வழங்கும் விடயம் மறுக்கப்பட்டது மாத்திரமன்றி அவர்களின் அடையாளத்துவத்தின் மீதும் நேரடியான தாக்குதலை கொண்டதாக அமைந்தது. இந்தியாவுக்கான தாக்கம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்வாங்கி யதார்த்தத்தை இலங்கையர்கள் வெளிப்படுத்தாவிடின் இலங்கையானது வன்முறையை நீண்ட காலத்திற்கு தழுவியதாகவே காணப்படும். இது இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதிகள் வருகைதரும் காலத்தைப் பொறுத்த விடயமாகும்.

இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறையானது உறுதியானதாக அமைந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை அதன் கொள்கையில் ஒரு பகுதி தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றிலும் பார்க்க இலங்கையானது இந்தியாவிற்கு எதிரான சீனா, பாகிஸ்தானுடன் தந்திரோபாயமாக நட்புறவை பேணும் விடயமும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

குறுகிய கால அடிப்படையில் இலங்கையர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்து சமுத்திரத்தில் ஏற்படக் கூடிய வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் இலங்கையர் சம்பந்தப்பட்டால் அவர்கள் துன்பப்பட நேரிடும். அப்போது இறைக்கைகளும் நீண்ட வாலும் கொண்ட நெருப்பைக் கக்கும் பிரமாண்டமான சீன பூதத்தை விட பாரியளவிலான இந்தியா அதிகளவிற்கு சிறப்பானது என்பதை இலங்கையர்கள் கண்டு கொள்ளக்கூடும்.

தினக்குரல்

0 Comments: