Tuesday, June 23, 2009

அதிகாரப் பகிர்வுத் திட்டம் "அவுட்"?

தெற்கிலிருந்து எழுந்துள்ள மூன்று குரல்கள் கருத்துக்கள் இன்று அவசரமாகவும், அவசியமாகவும் நோக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

ஒன்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமர சிங்க கூறியது. "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் அது தமிழர்களை யும், முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் தனித் தனியே பிரித்து மீண்டும் அத்தரப்புகள் இடையே போராட்டம் ஒன்றுக்கேவித்திடும். அதனால் அந்தத் திட்டத்தை முழு மூச்சாக எதிர்ப்போம்." என்கிறார் அவர்.அடுத்தது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் வண. தம்பர அமில தேரர் கூறிய கருத்து. "பிரிவினைக்கு இடமளிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு முனையுமானால் முயலுமானால் எமது உயிரைப் பணயம் வைத்து, எந்தத் தியாகத்தையும் செய்து, அத்துரோகத்தனத்தை முறியடிக்கத் தயங்கமாட்டோம்"என அமில தேரர் கூறியிருக்கின்றார்.

மூன்றாவது கருத்து விடுதலைப் புலிகள் இயக் கத்தை அழிப்பதில் வெற்றிகண்ட "மாவீரர்"எனத் தென்னிலங்கையால் போற்றப்படும் இராணுவத் தள பதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியது."வடக்கு மாகா ணத்திற்கு விசேட அரசியல் தீர்வு ஏதும் அவசிய மில்லை. படையினர் தியாகம் செய்து பெற்ற வெற்றியை அரசியல் தீர்வு என்ற பெயரில் காட்டிக் கொடுக்கக் கூடாது."என்று உபதேசம் செய்திருக்கின்றார் அவர்.

அவர் கூறிய இந்தக் கருத்து, அரசியல் தலைவர் களுக்கான ஆலோசனையா, உபதேசமா, வழிகாட்டலா அல்லது பணிப்புரையா என்பது தெரியவில்லை.ஆனால் அரசியல் தலைமைத்துவம் கையாள வேண்டிய விவகாரங்களை இராணுவத் தலைமை தனது கையில் எடுக்கும் இந்தப் போக்கு ஆரோக்கிய மானதல்ல என்பது மட்டும் உண்மை.இராணுவத் தளபதியின் இந்தக் கருத்து சில சமயங் களில் அரசுத் தலைமையின் கருத்தைப் பிரதிபலிப் பதாகவும் இருக்கலாம். சில சமயம் முரண்படுவதாக வும் இருக்கலாம்.

ஆனால் விடுதலைப் புலிகள் இயக் கம் என்ற எதிரியை அழிப்பதற்காகக் கட்டுமட்டில்லாத அளவுக்கு வலுப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை யின் இராணுவக் கட்டமைப்பின் தலைமையிடமிருந்து தமிழ் மக்களுக்குத் தீர்வு ஒன்று அவசியமா, இல்லையா என்ற சர்ச்சை கிளப்பப்படுவது நல்ல சகுனம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது பொருத்தம்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு அற்ப, சொற்ப அதிகாரங்கள் பெயரளவிலெனும் வெறும் சட்டக் கடதாசிகளிலேனும் பகிரப்பட்டுள்ளன என்பது உண்மைதான். அவை, தமிழர்களின் நீதி, நியாயமான எதிர்பார்ப்பாக அமையும் அபிலாஷைகளை நிறைவு செய்யாவிட்டாலும் கூட, அவற்றில் அதிகாரப் பகிர்வு குறித்து பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது மறுக்கப்படக் கூடியதல்ல.

அரசமைப்பின் இந்த 13 ஆவது திருத்தம் ஒன்றும் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு விடயமும் அல்ல. இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை யின் உயர் சட்டம் என மதிக்கப்படும் அரசமைப்பில் உரிய சட்ட வழிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்ட திருத்தமேஅது.அந்த உயர் சட்டத்தில் இருப்பதை நடைமுறைப் படுத்தாமல் இருப்பதன் மூலம் அரசமைப்பையே கேலிக்கு உள்ளாக்கி, மிதித்து வந்துள்ளன இதுவரை ஆட்சிக்கட்டில் இருந்து வந்த அரசுகளும், அதிகார மையங்களும்.

நாட்டின் உயர் சட்டத்தில் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசுகளின் முக்கிய கடமையும் பொறுப்புமாகும்.

அத்தகைய அரசமைப்பு ஏற்பாடுகளை அமுலில் உள்ள யாப்பின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்கிறார் ஒரு கட்சித் தலைவர். உயிரைத் தியாகம் செய்தாவது அதை நடைமுறைப்படுத்துவ தைத் தடுப்போம் எனச் சூளுரைக்கிறார் ஒரு மதத் தலைவர்.அந்த யாப்பில் உள்ள அதிகாரப் பரவலாக்கலை, யாப்புக்கு அமைய நடைமுறைப்படுத்துவதைக் கூட இராணுவத் தளபதியின் கருத்து எதிர்க்கின்றது. இந்தவகையில் பார்த்தால் இராணுவத் தளபதியின் கருத்து அரசமைப்பு ஏற்பாடுகளுக்கு விரோதமானது என்றும் கூட அர்த்தப்படுத்தக்கூடியதாகும்.விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர், தெற்கில் அதன் அரசுத் தலைமையிடமிருந்து வடக் கின் அபிவிருத்தி பற்றியே அதிகம் பேச்சு வெளிப்படுகின்றது. அதிகா ரப் பரவலாக்கம், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவுசெய்தல், தீர்வு யோசனைகள் போன்றவை குறித்தெல்லாம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மறுபக்கத்தில் பௌத்த சிங்களத் தீவிர அமைப்புகள் மற்றும் இராணுவத் தலைமைகளி டமிருந்து அதிகாரப் பரவலாக்கம் என்ற விடயமேஅர்த்த மற்றது, அபத்தமானது என்ற சாரப்பட முன்வைக்கப் படும் தீவிரப் போக்குக் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பேச்சு பகிரங்கமாக வெளிப்படு கின்றது.
இவை, விடுதலைப் புலிகளின் அழிவு பற்றிய அரசின் அறிவிப்போடு சிறுபான்மையினரான தமிழர் களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் திட்டமும் எண் ணமும் கூட செத்துப்போய்விட்டன என்ற கருத்தில் தென்னிலங்கை இருக்கின்றமையையே எடுத்துக்காட் டுகின்றன.
நன்றி
உதயன்

0 Comments: