Sunday, June 14, 2009

வரலாறு திரும்பாமலிருக்க வகை செய்யப்படுமா?

வன்னியில் முல்லைத்தீவில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற வேளை, மிகக் குறுகிய இடப்பரப்பில் லட்சக் கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த போது, போர் நடை பெற்றால் நிச்சயமாக ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தொழிவர் என்ற நிலையிலும் அதனைத் தடுப்பதில் முனைப்பாகவும் மனிதாபிமானத்தோடும் தமக்குரிய பதவியைப் பயன்படுத்தாமல் இருந்தவர்களில் ஒருவர் பான் கீ மூன்.

அப்போது அவர் தமது பதவி நிலையைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், உண்மையான சரியான வழிமுறைகளை உகந்த விதமாகக் கண்டிப்புடன் செயற்பட்டிருந்தால், இறுதிச்சம ரில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சர்ச்சையே எழுந்திருக்காது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பெருப்பித்துச் சொல்வதாக இலங்கை அரசும், அதனை வெளிப்படுத்த ஐ.நா. தயங்குவதாக சர்வதேசதரப்புகளும் நடத்தும் சர்ச்சைஎழுந்திருக்காது.

இறுதிப் போர் நடைபெற்றால் பொதுமக்களின் அழிவு நினைத்துப்பார்க்க முடியாதளவு இருக்கும் என்று களத்தில் பணிபுரிந்த தொண்டர் நிறுவன அதிகாரிகள் முன்னெச்சரிக்கை செய்த போதிலும், மனிதா பிமானப் போர் இடை நிறுத்தத்தைக்கூட இலங்கை அரசைக் கொண்டு, அதற்கு உரத்த குரலில் அழுத்தம் கொடுத்து ஆரம்பத்திலேயே அமுலாக்க வழிசெய்ய வக்கற்று இருந்த பான் கீ மூன் இப்போது சற்று விழித்திருப்பதாகத் தோன்றுகிறது.

மக்கள் அழிவு நடந்து முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறை யில் செயற்படுத் தவில்லை என்று தமது ஆதங்கத்தை ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சற்றுக் கடுமையான தொனியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அவர்.

இராணுவ நடவடிக்கைகள் முடிந்த கையோடு, அர சாங்கம் தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற் படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை அரசிடம் இப்போது மீண்டும் வலியுறுத்தி உள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலா ளர் நாயகம்.

கடந்த மாதம் 22, 23 ஆம் திகதிகளில் இலங்கைக்கு தாம் விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட கூட்ட றிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக் கொண்ட கடப்பாடு களை நிறைவேற்றத் தொடங்க வேண்டும் என்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் தெரி வித்திருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் உரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்றும் மூன் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அசமந்தப் போக்கு, அல்லது தாமதம் குறித்து அவருக்குக் கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பி இருப்பதாகவும் மேலும் ஒரு கடிதத்தை வரை யப்போவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித் திருக்கிறார்.

மோதலுக்கு பிந்திய கட்டத்தில் இலங்கை இப்போது உள்ளது. ஆகையால் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, மீள் இணக்கப்பாடு, நிவாரணம் ஆகியவற்றைச் சீராகவும், சரியாகவும், நேர்மையாகவும் செய்யவேண்டிய உடனடித் தேவை அவசர தேவை உருவாகி உள்ளது. இவற்றை சர்வதேசசமூகத்தின் ஆதரவுடன், உதவியுடனேயேசெய்துமுடிக்க இயலும்.

ஆனால், இந்த விடயங்களில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த முக்கிய பணிகளில் அரசதரப்பினர் வழமைபோன்று மந்தகதியிலேயேசெயற்படுகின்றனர். தமிழர்கள் சம்பந்தமான விடயங்கள், விவகாரங்களில் எல்லாம் இலங்கை அரசுபேச்சுப்பல்லக்கு தம்பி கால் நடையில் என்ற நிலைதான்...!

இதனை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மிகத் தாமதமாகவே கண்டு பிடித்திருக்கின்றார். அதனாலேயே அவர் இலங்கை ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதம் ஒன்றை எழுதவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என நம்பலாம்.

"மீள் இணக்கப்பாட்டுச் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். வரலாறு மீண்டும் நிகழா மல் இருக்கவேண்டுமானால் தமிழ்ச் சிறுபான்மையின ரோடும் ஏனைய மக்களோடும் இலங்கை அரசாங்கம் கைகோர்க்க வேண்டும்.

"மீண்டும் சொல்கிறேன் மீள் இணக்கம் தொடர்பாக முதல் காலடிகள் கட்டாயமாக இப்பொழுதே, உடனடி யாகவே எடுத்துவைக்கப்படவேண்டும்." என்று ஐ.நா. தலை மையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அழுத்திக் கூறியிருக்கிறார் பான் கீ மூன்.

அவரது இந்த இடித்துரைப்பு, அறிவுறுத்தல் இலங்கை அரசின் காதில் ஏறுமா? அதன் பிரகாரம் தமக்குள்ள பொறுப்புக்களை, கடமைகளை உரிய வீச்சுடன் செயற்படுத்துமா என்பன பொறுத்திருந்திருந்து பார்க்கப்பட வேண்டியவையே.

மோதல்களின் இறுதிக்கட்டத்தில் சர்வதேசசட்டங்கள் மீறப்பட்டிருக்கக் கூடிய தன்மைகள் குறித்து வெளிப் படையாகவும் பொறுப்பேற்கும் தன்மையோடும் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் தமது அடுத்த கடிதத்தில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதுவிடயத்தில் இலங்கை அரசுதனது நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பது சந்தேகமே....!
நன்றி - உதயன்

0 Comments: