Sunday, June 14, 2009

இந்தியாவின் அரசியல் தீர்வும் பாதுகாப்பு ஒப்பந்தமும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புதுடில்லி வருகையால் இலங்கை அரசு பீதியடையத் தேவையில்லையென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன முடிவெடுத்தாலும் அதனை இந்தியா உறுதியுடன் ஆதரிக்குமென்று ஒப்புதலும் வழங்கியுள்ளார்.

இந்தியஇலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாகும்வரை, சகல விட்டுக் கொடுப்புகளையும் சமரசங்களையும் இந்தியா மேற்கொள்ளுமென்பதை சிவ்சங்கர் மேனனின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தென்னிலங்கையில் சீனா முன்னெடுக்கும் நகர்வுகளை, இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் முறியடிக்க உதவுமென்பது இந்தியாவின் கணிப்பு.

இவை தவிர, வேறெந்த நகர்வுகளையும் இந்தியாவால் முன்னெடுக்க முடியாது.

அந்த ஒப்பந்தம் ஏற்படும் வரை இலங்கையும் தனது இராஜதந்திரச் செயற்பாடுகளை இந்தியாவினூடாக கையாள முயற்சிக்கும். அதேவேளை சர்வதேசம் முன்வைக்கும் யுத்தக் குற்றச் சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் பேருதவி இலங்கைக்குத் தேவை.

பரஸ்பர தேவைகளின் அடிப்படையில் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளும் தாயக மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து அக்கறையுடன் செயற்படுவதாகக் கருத முடியாது.

வன்னியிலுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சில நகர்வுகளை, இந்தியா மேற்கொள்வதாக இந்தியப் பத்திரிகைகள் கூறுகின்றன.

அகதி முகாம்களுக்கு, 13 ஆவது திருத்தச் சட்டம் எவ்வாறு பொருந்துமென்பதை இந்தியாவின் சமூகவியல் அறிவியலாளர்களே கூற வேண்டும். அந்த முகாம்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சாயத்து அரசியல் தீர்வினைத் திணிக்க இவர்கள் முற்படலாம்.

விடுதலைப் புலிகளோடு அரசு நடத்திய ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ரணில் விக்கிரம சிங்க கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் வடக்கு கிழக்கு மக்களின் இயல்பு வாழ்வு நிலை நிறுத்தப்பட வேண்டிய முதன்மைச் செய்தியே முன்னிறுத்தப்பட்டது.

அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமென்ற காலக்கெடு விதிக்கப்பட்ட செய்தி அரசால் புறந்தள்ளப்பட்டது.

புதுடில்லி சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதனையே இன்றும் வலியுறுத்துகின்றனர். இயல்பு வாழ்க்கை நிலைநாட்டப்படாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லையென்பதை இந்தியா உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்வினை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைத்துள்ள காந்தி தேசம், அவலப்படும் மக்களின் இயல்பு வாழ்வு குறித்த தீர்வினையும் அவரிடமே ஒப்படைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் அரசியல் தீர்வு குறித்து தலையிடுவோமென்று கூறிய இந்தியா இன்று தலைகீழான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது பற்றி கொழும்பு, தமிழ் நாடு, புதுடில்லி என்னும் அரசியல் கோட்டினை வரையும் அறிவாளிகள் விளக்க வேண்டும்.

பிராந்திய ஆதிக்க விரிவாக்க தலையீட்டிற்கான ஓர் ஆயுதமாகத் தமிழ் மக்கள் பிரச்சினை இந்தியாவால் பயன்படுத்தப்படுகிறது என்னும் சூத்திரத்தை புரிந்து கொண்டால் தற்போதைய பின்னடைவுகளை புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை, அரசியல் தீர்விற்கான குறைந்தபட்ச கோரிக்கைகளை நாம் முன்வைக்க வேண்டுமெனவும் அவ் வேண்டுதலை இந்தியாவினூடாக முன்வைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லையெனவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மறுபடியும் இனப்பிரச்சினையை இந்திய எல்லைக்குள் முடக்கி, சர்வதேசத் தலையீட்டினைப் புறந்தள்ள மேற்கொள்ளும் நகர்வாகவே இந்தியச் சரணாகதி அரசியலை புரிந்து கொள்ளலாம்.

திம்பு பேச்சுவார்த்தை காலத்தில் இந்தியக் கைகளுக்குள் முடங்கிக் கிடந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை, தற்போது சர்வதேச விவகாரமாக மாறி விட்டது. ஆயினும், இலங்கை அரசியலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக மீண்டெழக் கூடாதென்பதில் இவ்விரு நாடுகளும் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது.

சீமெந்துத் தொழிற்சாலை, திருமலை எண்ணெய்க் குதங்கள், வன்னி நிலப்பரப்பு போன்றவற்றை தம்வசமாக்கி, பொருண்மிய ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்த திட்டமிடும் இந்திய அரசு, தீர்வுத்திட்ட விவகாரங்களிலோ அல்லது தமிழ் மக்களின இயல்பு வாழ்வு குறித்தோ அதிக கரிசனை கொள்ளுமென்று கருத முடியாது. வன்னி நிலப்பரப்பில் பௌத்த சின்னங்களைத் தேடும் அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென பிக்குகள் முன்னணி விடுக்கும் செய்தியில் தாயகக் கோட்பாட்டினை மறுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு கால யுத்தத்தில் வன்னி மண்ணில் புதைக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கவலை கொள்ளவில்லை.உயிரற்ற சடலங்கள் பாதுகாப்பு வலயத்திலும் உயிருள்ள நடைப் பிணங்கள் வவுனியா முகாம்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.

யுத்தக் குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் மூடிமறைக்க இந்தியா வழங்கும் ஆதரவு குறித்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழினம் விசனமடைந்திருப்பதை சிவ்சங்கர் மேனன் போன்றோர் புரிந்து கொள்ளவில்லை.
வாழ்வõதாரங்களைச் சிதைத்து, அடக்குமுறை வடிவங்கள் விரிவடைந்து செல்லுமாயின் போராட்டங்கள் முனைப்படைவதை தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.

பிராந்திய நலனுக்குள் ஒரு பூர்வீக தேசிய இனத்தின் விடுதலை உணர்வு நசுக்கப்படுமென்கிற தவறான வரலாற்றுப் பதிவினை இந்தியா நிறுவ முற்படுமாயின் இலங்கைத் தமிழினத்தின் பாதையும் வேறு திசை நோக்கி பயணிக்கும்.

புலம்பெயர் தமிழ் மக்களை பிரித்தாள இந்தியா மேற்கொள்ளும் ""அவர் இருக்கிறாரா, இல்லையா'' என்கிற இடைச் செருகல் விளையாட்டும் முறியடிக்கப்படும்.
சி.இதயச்சந்திரன்

0 Comments: